Followers

Friday, February 27, 2009

சூரியனின் செயல்பாடு ஒரு அற்புதம்! குர்ஆனின் விளக்கம்.



'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
-குர்ஆன் 31:29


இந்த வசனம் பூமியில் நடைபெறும் இரவு பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதாலும் இரவைப் பகலில் நுழைப்பதாலும் ஏற்படுவதாகும் என்று விளக்குகிறது. இதிலிருந்து இரவு பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாடு அல்ல என்றும் சூரிய மையக் கோட்பாட்டின் படிதான் இரவு பகல் உண்டாகிறது என்றும் ஒரு அறிவியல் அறிஞரைப் போல் குர்ஆன் பேசுகிறது.

புவி மையக் கோட்பாடு என்பது சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாக கொண்டு சுழல்கின்றன எனும் பிழையான தத்துவமாகும். இதைத்தான் பல அறிஞர்களும் உண்மை என்றும் நம்பி வந்தார்கள். இங்கு சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்? அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிட்டால் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுன்னுள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது. ஆனால் குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு துல்லியமாக சிறந்த கவனத்தோடு கையாளப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை. ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும்போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் கட்டுண்டு நிற்கும்போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்ச்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல மறுபக்கம் பூமியின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

'பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்' எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக் குர்ஆனின் மேற்கண்ட வசனம் மிகச் சாதாரணமாகச் சொல்லி செல்கிறது! படிப்பறிவில்லாத முகமது நபியால் இந்த உண்மைகளை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.

நன்றி ஏ.கே.அப்துல் ரஹ்மான்.

Monday, February 23, 2009

ஆஸ்கார் அவார்டும் சில எதிர்பார்ப்புகளும்!



பலரும் எதிர்பார்த்தபடி 'ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் 'பிங்கி' ஆகிய இரு இந்திய படங்களுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்து விட்டது. இந்தியர்கள் என்ற வகையில் அனைவரும் பெருமைப்படக் கூடிய நிகழ்வு இந்த வருட ஆஸ்கார் தெரிவு.

ஏ.ஆர்.ரஹ்மான்: திறமை இருந்தால் அங்கீகாரம் தானாக தேடி வரும் என்பதற்கு நல்ல உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். விருது வாங்கும் போது தமிழை மறக்காமல் தமிழிலேயே 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். தாய் மொழியின் மேல் அவருக்குள்ள பிடிப்பை நினைத்து நெகிழ்ந்தேன்.

இந்தி பேசும் மாநிலங்களில் பல இந்திக்காரர்கள் ரஹ்மானின் ஆள் உயர கட்அவுட்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழன் என்ற முறையில் நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் இது.

ரசூல் குட்டி: சவுண்ட் மிக்ஸிங்கில் சிறப்பாக பணியாற்றிய மற்றொரு இந்தியர் ரசூல் குட்டிக்கும் ஆஸ்கார் அவார்ட் கிடைத்துள்ளது. மனிதர் விருதை வாங்கும் போது உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஆனந்தத்தில் திளைக்கிறார். இவரைப்பற்றி அதிகம் நானும் படித்ததில்லை. பூர்வீகம் கேரளா என்று நினைக்கிறேன். மேலதிக விபரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

இந்த விருதுகளால் இந்தியர்கள் என்ற முறையில் நாம் பெருமைபட்டுக் கொள்ளும் இதே நேரம் இந்த படம் உருவான மும்பை தாராவி சேரிகளின் வாழ்க்கை முறைகளை நினைத்தால்தான் மனம் கனக்கிறது. நம் தமிழ் நாட்டிலும் பல சேரிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் ஏதும் இன்றி நாட்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தைப் பார்த்தாவது நமது அரசியல்வாதிகள் சேரி மக்களின் வாழ்க்ககையை முன்னேற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும். இங்கு வாழும் அந்த சிறுவர்களின் வாழ்க்கைத் தரம் இனியாவது உயர்ந்தால் அதுவே இப்படத்துக்கு உண்மையான அவார்டாக இருக்கும்.

Tuesday, February 17, 2009

குழந்தையும் தெய்வமும் ஒன்றாகி விடுமா?




'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!' என்றும் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்றும் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து கேட்டதாலோ என்னவோ குழந்தையை தெய்வத்துக்கு ஒப்பிடுவது நம்மிடையே பழக்கத்தில் வந்து விட்டது. குழந்தை கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் சிரிப்பில் மயங்கிப் போய் புகழ்கிறோம் என்ற பெயரில் தெய்வத்துக்கு ஒப்பாக்கி விடுகின்றோம்.

எக்காலத்திலும் மனிதன் மனிதன்தான். அவன் எந்த நிலையிலும் இறைத் தன்மையை அடைய முடியாது. இதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்வதால்தான் இறைக் கொள்கையில் பல குறைபாடுகளும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. எந்த நாட்டையும் விட நம் இந்திய நாட்டில்தான் ஆன்மீகத்தின் பெயரால் பலரின் பிழைப்பு அமோகமாக நடந்து வருகிறது. இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று இந்த சுரண்டல் எந்த மதத்தையும் விட்டு வைக்கவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற சித்தாந்தம்தான். முதலில் தெய்வத்தை குழந்தைக்கு சமமாக ஒப்பிடுகிறோம். சில காலம் கழித்து வளர்ந்த மனிதனுக்கும் இறைத் தன்மையை கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.

இதனால் குழந்தைகளிடம் பாசம் காட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்ற மதங்களில் குழந்தைகளைப் பற்றி எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ தெரியாது. இஸ்லாமிய பார்வையில் குழந்தைகளின் மீது பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டொரு உதாரணங்களைப் பார்ப்போம்.

'முகமது நபி தன் பேரன் ஹஸனை முத்தமிட்டார். அப்போது அவரின் அருகில் அமர்ந்திருந்த தோழர் ஹாபிஸ் அத் தமீமி 'எனக்கு பத்து குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை.' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த முகமது நபி 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்' என்றனர்.

ஆதாரம்: புகாரி 5997

ஒரு கிராமவாசி முகமது நபியிடம் வந்து 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு முகமது நபி 'இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழட்டி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்.

ஆதாரம்: புகாரி 5998

பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு இறைவனின் அருள் இல்லை என்பதை இந்த நபி மொழி நமக்கு உணர்த்துகிறது. அதே சமயம் அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் அந்த குழந்தையை கடவுள் நிலைக்கு உயர்த்துவதையும் இஸ்லாம் தடுக்கிறது.

இறைவனே மிக அறிந்தவன்.

Saturday, February 14, 2009

காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!


காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் தங்களின் ஜோடிகளோடு வலம் வந்தவண்ணம் உள்ளனர். இது தேவையான ஒரு விழாவா! நமது நாட்டுக்கு இது தேவைதானா என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.

நமது இந்துத்வா நண்பர்கள் அதாவது பஜ்ரங் தள் உஜ்ஜயினியில் ஒரு ஜோடியை பிடித்து அடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அழுது கொண்டே 'நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. இந்த பெண் என்னுடைய உடன் பிறந்த சகோதரி. நாங்கள் மாணவர்கள். ஆராய்ச்சிக்காக உஜ்ஜயினிக்கு வந்துள்ளோம்.' என்றனர். கேட்பதற்குதான் யாருமில்லை.

சிவசேனாவும் தன் பங்குக்கு ஆக்ராவில் ஒரு காதல் ஜோடியை பிடித்து காதலனின் தலை முடியை மழித்து பெண்ணை அடிக்கவும் செய்தனர். மற்றொரு ஜோடியை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்.

மற்றொரு ஜோடியை வழி மறித்து பஜ்ரங்தள் ராக்கி கட்டும் காட்சியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். காதலர் தின கார்ட் விற்பனை செய்த கடையையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் கொள்கைகளை விளக்க எத்தனையோ வழிகள் இருக்க காதலர்களை இம்சைபடுத்தும் இந்த செயல் சரிதானா! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. தவறாகவே இருந்தாலும் கண்டிக்கும் முறை சரிதானா?

'காமசூத்ரா' வை வழங்கியது இதே நமது நாடுதானே! கோவில்களில் உள்ள சிற்பங்கள் நமக்கு சொல்லும் செய்திகள் இதை விட அதிகமல்லவா! அதை பக்தி கண் கொண்டு பார்ப்பதில்லையா? பிறகு யார் மேல் இந்த இந்துத்வவாதிகளுக்கு கோபம்? விடை சொல்வோர்தான் யாருமில்லை.

Tuesday, February 10, 2009

யூதர்கள், அமெரிக்கர்களின் பங்கு இந்தியாவில் எத்தகையது?

யூதர்கள், அமெரிக்கர்களின் பங்கு இந்தியாவில் எத்தகையது?

ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக விளங்குவது நமது இந்தியா. பாகிஸ்தானும் ஓரளவு மனித வளங்களை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் தொழில் துறைகளில் நெருங்கி வர ஆரம்பித்தால் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறுவதில் நேரிடையாக பாதிக்கப்படுவது வேறு இரு நாடுகள். அவை முறையே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பது அமெரிக்காதான். பாகிஸ்தானுக்கு அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதும் அமெரிக்காவே! இராணுவத் தளவாடங்களை வளரும் நாடுகளான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதில்தான் அமெரிக்காவின் பொருளாதாரமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நாடு இஸ்ரேல். 2007 முதல் 2012 வரை இந்திய அரசு 50000 கோடி ரூபாயை இராணுவத் தளவாடங்களுக்கு செலவிட இருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தான் செல்ல இருக்கிறது.

இப்படி நமது நாடு ஏராளமான தொகையை ராணுவத்துக்கு செலவிடக் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைதான். உள் நாட்டு பிரச்னைகளை நமது காவல் துறையை வைத்தே சமாளித்து விடலாம். எனவே நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதில் நஷ்டத்திற்கு உள்ளாகும் நாடுகள் முதலில் அமெரிக்கா அடுத்து இஸ்ரேல் மூன்றாவது ரஷ்யா. மேலும் நமது நாட்டிலுள்ள வகுப்பு வெறி பாசிஸ்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.

தங்கள் நாட்டின் பொருளாதார வருவாயை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பல சூழ்ச்சிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத்தும் இந்தியாவில் முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொஸாத் மும்பைக்குப் பக்கத்திலுள்ள தானா என்ற இடத்தில் 770000 சதுர அடியில் 'ப்ளாஸா' என்ற பெயரில் தனது அலுவலகத்தை நிறுவி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

'முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.'

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இதை இங்கு குறிப்பிட காரணம் மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே!

இந்த பதிவின் மூலம் படிப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

எனது தாய்நாடு இந்தியாவை இந்த சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து அந்த எல்லாம் வல்ல இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

Saturday, February 07, 2009

ஆரம்பிச்சுட்டாங்கய்யா!- ராமர் கோவிலாம்...




நேற்று நாக்பூரில் பாஜக வின் இரண்டாம் நாள் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் 'ராமர் கோவிலை குறிப்பிட்ட இடத்தில் கட்டியே தீருவோம்' என்று பழைய அஸ்திரத்தை திரும்பவும் கையில் எடுத்திருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு நாள் குறிக்கும் செய்தி அரசல்புரசலாக வர ஆரம்பித்ததும் ராஜ்நாத்சிங்கிற்கு ராமர் பாசம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறது. ஆறு வருடம் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது ராமர் கோவிலைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. ஏனெனில் அப்போது ராமர் பாசத்தை விட பதவி சுகம் பெரிதாகத் தெரிந்தது.

பலவீனப் பட்டிருக்கும் இன்றைய நிலையில் இந்துக்களின் ஓட்டை மொத்தமாக அள்ள இன்றிலிருந்தே காயை கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. இதனால் எத்தனை தலைகள் உருண்டாலும் பரவாயில்லை, எத்தனை தாலிகள் அறுந்தாலும் பரவாயில்லை. தாங்கள் ஆட்சியில் அமர வேண்டும். ஆஹா.. என்ன ஒரு தேசபக்தி.

உண்மையான இந்து மத ஆர்வலர்களான விவேகானந்தர், காந்தி, நம்மூரில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றோர்களால் இந்துமதத்தின் பெருமை பல நாடுகளுக்கும் பரவியது. தற்போது இந்துத்துவ வாதிகளாகக் காட்டப்படும் மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் போன்றோரால் இந்து மதத்தின் வளர்ச்சி அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுக்க எத்தனையோ கோவில்கள் பாழடைந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் கவனம் செலுத்தி பூஜைகள் நடத்தி இந்துக்களின் ஓட்டைப் பெற இது வரை ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை. மேடையில் இருந்த பலருக்கும் ராமர் பிரச்னை அலுப்பு தட்டவே பலரும் தூங்க ஆரம்பித்து விட்டனர். யஸ்வந்த் சின்ஹா ரம்மியமான ஒரு தூக்கம் போட்டதை பல சேனல்களும் ஒலிபரப்பின. தலைவனுக்கே இந்த நிலை என்றால் தொண்டர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

இனியும் ராமர் பெயரால் ஓட்டு பொறுக்குவதை விடுத்து நாடு முன்னேற ஒரு பொறுப்புள்ள கட்சியாக பாஜக செயல்பட வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

அதற்கெல்லாம் வழியே இல்லை என்கிறீர்களா,,,,,, பார்ப்போம் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை கூத்துகள் அரங்கேறுகின்றன என்பதை........

Wednesday, February 04, 2009

அன்னை தெரஸாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!


“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”


மேலே நாம் படித்த வார்த்தைகள் அனைத்தும் அன்னை தெரஸா உதிர்த்த முத்துக்கள்.

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதை நான் இணையத்தில் படித்தபோது முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நான் படிக்கும் காலத்திலிருந்தே அன்னை தெரஸாவைப் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தேன். பரலோகத்தில் இருக்கும் ஏசு இதற்காகவெல்லாம் தன்னை ரட்சிப்பார் என்ற நம்பிக்கையில்தான் தெரஸா தனது வாழ்நாளை பொதுப்பணிக்காக அர்ப்பணித்தார். காலம் செல்லச் செல்ல அவருக்கு உண்மை விளங்கியிருக்கிறது. எனினும் உலகம் முழுவதும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். இனி திரும்பி செல்ல வாய்ப்பில்லை என்பதால் மனதுக்குள் வைத்தே ஒரு மௌன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். முடிவில் தன்னையும் மீறி தனக்குள் உள்ள ஆற்றாமையை பல கடிதங்களாக எழுதி அதை ரகசியமாகவும் வைத்து பரலோகத்துக்கு போய் சேர்ந்து விட்டார் அந்த புண்ணியவதி. தற்போதுதான் அவை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ஏசு தன்னை எக்காலத்திலும் வணங்கச் சொல்லி சொல்லவில்லை. தான் கடவுள் என்றும் சொல்லவில்லை. ஏசுவுக்கு பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக ஏசுவை கடவுளாக்குகிறார்கள். இந்த கருத்தே உலகம் முழுவதும் இன்றுவரை திணிக்கப்பட்டு வருகிறது. 'புதிய ஏற்பாடு' என்பது ஏசுவைப்பற்றி மத்தேயு மாற்கு யோவான் போன்றவர்கள் எழுதிய தொகுப்புகளே! இறைவனால் அருளப்பட்ட வேதமன்று. இப்படி மனிதர்களால் எழுதப்பட்டதை வேதவாக்கியமாக நம்பியதால்தான் தெரஸாவுக்கு முடிவில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றி திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்.' - (மத்தேயு 4:23)

'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' - (மாற்கு 1:14)

'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்' -(மாற்கு 1:15)

ஏசு சொன்னதுபோல் தேவனுடைய சுவிசேஷத்தை அன்னை தெரஸா பின்பற்றியிருந்தால் இத்தகைய ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். துரதிஷ்டவசமாக ஏசு பிரசிங்கித்த வேத வாக்கு மிஷினரிகளால் மறைக்கப்பட்டு விட்டது. ஏசுவுக்கு அருளிய அந்த வேத வாக்கு தற்போது நமக்கு கிடைக்குமானால் அது முற்றிலும் முஸ்லிம்களின் குர்ஆனையே ஒத்திருக்கும்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் முகமது நபியின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தையும் முடிந்தவரை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்ச்சிப்பவன். இருந்தாலும் அவரை கடவுள் நிலைக்கு உயர்த்தமாட்டேன். அவரை இறைவனின் தூதராகவே பார்க்கிறேன். அன்னை தெரஸாவும் என்னைப்போல் ஏசுநாதரை ஒரு தூதராக பார்ததிருந்தால் இது போன்ற ஒரு விரக்தி ஏற்பட்டருக்காது. அவரின் வாழ்க்கையில் ஒரு வெறுமையும் தோன்றியிருக்காது.

இறைவனே மிக அறிந்தவன்.