

'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!' என்றும் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்றும் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து கேட்டதாலோ என்னவோ குழந்தையை தெய்வத்துக்கு ஒப்பிடுவது நம்மிடையே பழக்கத்தில் வந்து விட்டது. குழந்தை கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் சிரிப்பில் மயங்கிப் போய் புகழ்கிறோம் என்ற பெயரில் தெய்வத்துக்கு ஒப்பாக்கி விடுகின்றோம்.
எக்காலத்திலும் மனிதன் மனிதன்தான். அவன் எந்த நிலையிலும் இறைத் தன்மையை அடைய முடியாது. இதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்வதால்தான் இறைக் கொள்கையில் பல குறைபாடுகளும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. எந்த நாட்டையும் விட நம் இந்திய நாட்டில்தான் ஆன்மீகத்தின் பெயரால் பலரின் பிழைப்பு அமோகமாக நடந்து வருகிறது. இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று இந்த சுரண்டல் எந்த மதத்தையும் விட்டு வைக்கவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற சித்தாந்தம்தான். முதலில் தெய்வத்தை குழந்தைக்கு சமமாக ஒப்பிடுகிறோம். சில காலம் கழித்து வளர்ந்த மனிதனுக்கும் இறைத் தன்மையை கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இதனால் குழந்தைகளிடம் பாசம் காட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்ற மதங்களில் குழந்தைகளைப் பற்றி எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ தெரியாது. இஸ்லாமிய பார்வையில் குழந்தைகளின் மீது பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டொரு உதாரணங்களைப் பார்ப்போம்.
'முகமது நபி தன் பேரன் ஹஸனை முத்தமிட்டார். அப்போது அவரின் அருகில் அமர்ந்திருந்த தோழர் ஹாபிஸ் அத் தமீமி 'எனக்கு பத்து குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை.' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த முகமது நபி 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்' என்றனர்.
ஆதாரம்: புகாரி 5997
ஒரு கிராமவாசி முகமது நபியிடம் வந்து 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு முகமது நபி 'இறைவன் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழட்டி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்.
ஆதாரம்: புகாரி 5998
பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு இறைவனின் அருள் இல்லை என்பதை இந்த நபி மொழி நமக்கு உணர்த்துகிறது. அதே சமயம் அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் அந்த குழந்தையை கடவுள் நிலைக்கு உயர்த்துவதையும் இஸ்லாம் தடுக்கிறது.
இறைவனே மிக அறிந்தவன்.
1 comment:
தங்கள் குழந்தைகளை கூட முத்தமிடுவதில்லை என்றால் முகம்மது நபிக்கு முன் இருந்த அரேபியாவை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது, உண்மையிலேயே அங்கே காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, நபி அவர்கள் மனிதர்களாக மாற்றி இருக்கின்றார்.
Post a Comment