ஒரு பெண்ணை மரியாதைக்குரியவளாக ஆக்குகிறது ஹிஜாப்!
ஹிஜாப் என்பது எப்படி பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிப்பவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும்போது அதை ஆண்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதிவிலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத்தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோநிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதைப் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும்.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்று சிலர் கேட்கலாம். இக்கேள்வி தவறாகும். இதனால் ஏற்படும் விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஆண்கள் பெண்களைப் பார்த்து ரசிப்பது போலவே, பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கிளர்ச்சியடையாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான – கிளர்ச்சியூட்டும் ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக, அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும்போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுவதை ஹிஜாபைக் குறை கூறுவோர் சிந்திப்பதில்லை.
நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து "இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்" என்று ஹிஜாபைக் குறை கூறுவோர் கூப்பாடு போடுகின்றனர்.
ஆனால் இந்த நிலைக்கு ஆண்களில் சிலரைத் தூண்டும் பெண்களின் உடையமைப்பும் முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்?
பெண்ணுரிமை இயக்கங்கள் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், போஸ்டர்களைக் கிழித்தல், சாயம் பூசி மறைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள்மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே சுதந்திரத்துடன் அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது எனும்போது, இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள்மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் எழலாம்.
நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவளை யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே அடையாளம் காண மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழிசெய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
பெண்கள் மட்டுமல்ல. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
இதனால் தான் இஸ்லாம் முகத்தை மறைத்துக் கொள்ளுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.
1 comment:
தங்களின் கருத்து எனக்கு சம்மதம்தான்.மிகச்சரியானது.உடைகளில் இலக்கணம் தேவை.மிக அவசியம். அதுதான் நமக்கு அடையாளம்.கௌரவம்.
தரமான கட்டுரை.பாராட்டுக்கள்.
Post a Comment