ரியாத் தமிழ்ச் சங்க நண்பர்கள்
நடத்திய கடிதப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் எனது கடிதமும் தேர்வு செய்யப்பட்டு
பரிசும் அறிவித்துள்ளார்கள்.... தேர்வு செய்த குழுவுக்கு நன்றி.... இனி பரிசுக்காக
எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு....
'எழுதுகிறேன் ஒரு கடிதம்’
போட்டி
-சீஸன் 6
அன்புள்ள மகனுக்கு உனது
அம்மா எழுதிக் கொள்வது
...
நீயும் உனது மனைவியும் எனது
பேரக் குழந்தைகளும் நலமா?
உன்னை நேரில் சந்தித்து
கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாகிறது! அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? நமது குடும்ப கவுரத்தை
காப்பாற்றத்தானே நான் முயற்சித்தேன். உனது மனைவி ஆடம்பர செலவுகள் செய்வதையும், 'க்ளப் போகிறேன்' என்று மணிக்கணக்கில்
வெளியில் சுற்றுவதையும் கண்ட பெண்களோடு பார்ட்டி என்ற பெயரில் பொருளை
விரையமாக்குவதையும் தானே நான் கண்டித்தேன். நான் நடந்து கொண்ட விதம் உனக்கோ உன்
மனைவிக்கோ பிடிக்கவில்லை என்றால் அதனை பக்குவமாக என்னிடம் சொல்லியிருக்கலாமே...
உறவினர் வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லி என்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும்
முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாயே மகனே! உன் தந்தை இருந்திருந்தால் எனக்கு இந்த
நிலை வந்திருக்குமா?
ஒன்பது மாதம் நீ என்
வயிற்றில் இருந்தபோது நான் பட்ட துன்பங்களை எண்ணிப் பார்த்தாயா? சரியாக சாப்பிடாமல், சரியாக உறங்க முடியாமல், நடக்கவும் சிரமப்பட்டு உன்னை
பெற்றெடுத்தேனே... அதன் பிறகு இரண்டு வருடங்கள் உன்னை என் கண் போல் காத்து
வளர்த்தேனே மகனே!?
சிறு வயதில் நீ டைபாய்டு
காய்ச்சலில் கிடந்தபோது ஒரு வாரம் இரவு கண்முழித்து உன்னை என் கண் போல் காத்தேனே?
சைக்கிளிலிருந்து ஸ்கூட்டர்
வரை நீ கேட்ட போது அப்பாவிடம் சண்டையிட்டு உனக்கு வாங்கிக் கொடுத்தேனே?
அவ்வளவு பணக் கஷ்டத்திலும்
நீ விரும்பிய கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக அப்பாவிடம் போராடி எனது நகைகளை
விற்று உன்னை சேர்த்து விட்டேனே
'இந்த பெண்ணைத்தான் திருமணம்
செய்து கொள்வேன்'
என்று நீஅடம் பிடித்தாய்.
உன் தந்தையோ 'நம் குடும்பத்துக்கு இவள்
சரி வர மாட்டாள்'
என்று தடுத்தபோது 'மகனின் ஆசையை
நிறைவேற்றுங்கள்'
என்று அவரிடம் சண்டையிட்டு
உனது விருப்பப்படியே திருமணத்தை முடித்தேனே!
புதிதாக உனது அப்பா வாங்கிய
இரண்டு ஃப்ளாட்டுகளை என் பெயரில் பதிவு பண்ண முயன்றபோது 'பையன் வளர்ந்து விட்டான்:
அவனது பெயரிலேயே பதிவு பண்ணி விடுங்கள்' என்று கூறி உனது பெயரில் பதிவு செய்ய வைத்தேனே!
இவை எல்லாம் நீ என்னை
முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவதற்காகவா மகனே!
பரவாயில்லை... இங்கு என்னைப்
போல் நூற்றுக்கணக்கான வயதான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இனி என் உலகம்.
அவரவர் குடும்ப பிரச்னைகளை சொல்லி நேரத்தை போக்குவோம். ஒரு சில சகோதரிகள் 'என் மகனா இப்படி?' என்று குமுறி அழுகின்றனர்.
அவர்களை நான்தான் தேற்றுகிறேன். ஓராயிரம் சோகங்களை எனக்குள் சுமந்தவளாக
பலரும் என்னிடம்
சொல்கிறார்கள்... 'இன்று உனது மகன் உன்னை
முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளான். நாளை அவன் மகனும் தந்தையை இதே போன்று
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்' என்று.
ஆனால் நான் இறைவனிடம் வேண்டுவது எனக்கு ஏற்பட்ட இந்த நிலை என் மகனுக்கு ஏற்பட்டு
விடக் கூடாது என்பதுதான். நான் முதியோர் இல்லத்தில் இருப்பதால் உனக்கும் உனது
மனைவிக்கும் சந்தோஷம் கிடைக்கிறது என்றால் இறப்பு வரை நான் இங்கேயே இருந்து
விடுகிறேன் மகனே! ஆனால் மாதம் ஒரு முறையாவது பேரக் குழந்தைகளோடு வந்து என்னை
பார்க்க வருவாயா?
என்றும் உனது அன்புக்காக
ஏங்கும்
உனது தாய்....
No comments:
Post a Comment