முகமன் கூறுதல்
(4)
ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.
இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.
பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
(திருக்குர்ஆன்:60:4)
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார்.
(திருக்குர்ஆன்:19:47)
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.
முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.
உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.
ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.
மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ஸலாம் எனக் கூறுவார்கள்.
(திருக்குர்ஆன்:25:63)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம் எனவும் கூறுகின்றனர்.
(திருக்குர்ஆன்:28:55)
என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர் என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன்:43:88,89.)
மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6258
வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.
வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.
யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927
யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.
No comments:
Post a Comment