Followers

Sunday, April 16, 2023

தோள் கொடுத்த தொப்புள்கொடி உறவு

 தோள் கொடுத்த தொப்புள்கொடி உறவு:நெஞ்சம் நெகிழ்ந்திடச் செய்த நிகழ்வு:


TNTJ குனியமுத்தூர் கிளை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் அருகாமையில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு Gated Community எனும் காலனி குடியிருப்புகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் குடியேறினார்கள்.


நமது பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கு, உரைகள், அறிவிப்புகள் என அனைத்தையும் கேட்கும் வண்ணம் மிக அருகாமையில் இந்த குடியிருப்புகள் அமைந்து இருக்கிறது.


இந்நிலையில் நேற்றைய தினம் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிற மத சகோதரர் ஒருவர் தனது முஸ்லிம் நண்பரான நமது பள்ளிக்கு வரும் நபரை அழைத்து இருக்கிறார்.


'பள்ளிவாசலில் அடிக்கடி செய்யப்படும் அறிவிப்பு குறித்து பேச வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்.


 இதைக்கேட்ட அந்த சகோதரருக்கும், கேள்வி பட்ட நமக்கும் அவ்வளவு ஏன் இதை வாசிப்பவர்களுடைய உள்ளத்தில் கூட "எங்கே... பள்ளிவாசல் ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொந்தரவாக இருக்கிறது" என குற்றம் சாட்ட கூப்பிட்டு இருப்பாரோ என்கிற எண்ணம் தான் நிச்சயம் மேலோங்கும்.


அப்படி நினைத்து தான் அந்த நண்பரும் சென்று இருக்கிறார்.


ஆனால் அழைத்த அந்த பிற மத சகோதரர் "இந்தப் பள்ளிவாசலில் தினந்தோறும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க நாளொன்றுக்கு 6000 ரூபாய் செலவாகிறது என்று அறிவிப்புச் செய்யப்படுவதை நான் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


 அதனால்...

அதனால்...

அதுவந்து..." 


என்று தயங்கியவாறே "நானும் அதற்காக வேண்டி என் சார்பில் 6000 ரூபாய் தரலாமா? அதை ஏற்றுக் கொள்வீர்களா எனத் தயக்கத்துடன் கேட்டார்.


அதுவரை புருவம் சுருங்கி அவர் என்ன சொல்லப் போகிறாரோ என சிறு கலக்கத்துடன் அவரது வாயசைவை கவனித்துக் கொண்டிருந்த அந்த இஸ்லாமிய நண்பருக்கு அவர் சொல்லி முடித்தும் ஆச்சரியத்தில் புருவம் விரிந்தவராக, நெஞ்சத்தில் நெகிழ்வு நிறைந்தவராக "இதற்கா இவ்வளவு தயக்கமும் பீடிகையும்.? தாராளமாக நீங்களே பள்ளிவாசலுக்கு வந்து உங்களது பங்களிப்பைத் தரலாம்" என்று கூறி இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு அழைத்து வந்தார்.


கிளை நிர்வாகம் சார்பாக அந்த பிற மத சகோதரரை வரவேற்று பள்ளியில் அமர்ந்து அவரோடு பேசியபோது அவர் கூறிய வார்த்தைகள் மேலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


"நான் இங்கு குடியேறியது முதல் இந்த பள்ளிவாசலில் ஆற்றப்படும் உரைகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். மனிதர்கள் நற்பண்புகளோடு வாழ்ந்தால் சொர்க்கம் செல்லலாம். தீமைகளைச் செய்தால் நரகம் எனும் தண்டனையைப் பெற நேரிடும் என தங்களது பள்ளியில் உரைகள் மூலம் சொல்லப்படும் அறிவுரைகள் வெகுவாக என்னைக் கவர்ந்தது.


அதே போன்று ஒரு வழிபாட்டுத்தலத்தை பிறருக்கு உதவும்தலமாக ஆக்கி அவ்வப்போது மருத்து உதவி வழங்குவதற்கான அறிவிப்புகள், இரத்த தானம் சம்பந்தமான அறிவிப்புகள், வாழ்வாதார உதவி குறித்த அறிவிப்புகள் ஆகியவை சொல்லப்படுவதைக் கேட்டு உங்கள் மீதான நன்மதிப்பு மேலும் கூடியது.


இந்நிலையில் தான் முஸ்லிம் சகோதரர்கள் நோன்பு திறப்பதற்கு எனது பங்களிப்பைத் தர வேண்டும் என்கிற எண்ணம் வந்தது" என்று அவர் சொல்லி முடித்து அந்தப் பொருளாதாரத்தைத் தருகின்ற பொழுது மனம் நெகிழ்ந்து போய் உணர்ச்சிப் பெருக்கில்  கண்கள் நீரைச் சிந்தும் நிலை நமக்கு ஏற்பட்டது.


அதைத் தொடர்ந்து இஸ்லாம் குறித்த சிறு அறிமுகத்தை அவருக்கு எடுத்துரைத்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.


வடமாநிலங்களில் ராமநவமியின் பெயரில் பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்ட செய்திகளின் வலியோடு இருந்த நமக்கு இந்தத் தொப்புள் கொடி உறவின் சந்திப்பு ஒரு ஆறுதலாக இருந்ததோடு மட்டுமல்லாது அவரது புரிந்துணர்வு நமக்கு புத்துணர்வை அளிப்பதாகவும் இருந்தது.


அதிலும் கோவை போன்ற சென்ஸிடிவான மண்ணில் இது போன்ற பாஸிட்டிவான நல்லிணக்க நிகழ்வை அனைவருக்கும் அறியத் தர வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து இதைத் தெரியப்படுத்துகிறோம்.


அல்லாஹ் அந்தச் சகோதரருக்கு அருள் செய்திடவும் ஹிதாயத் வழங்கிடவும் பிரார்த்திப்போம்.


 உண்மையான இஸ்லாம் ஆகிய குர்ஆன்- ஹதீஸ் ஆகியவற்றை மட்டும் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்தால் அது எந்த அளவிற்கு உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்நிகழ்வு கண்முன் கண்ட சாட்சியாக அமைந்தது.


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!!

No comments: