Followers

Sunday, July 02, 2006

முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் கல்வியறிவு, அரசாங்க உத்தியோகம் போன்றவற்றில் மற்ற சமூகத்தவரை விட மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். சமூகத்தோடு ஒட்டாமல் எதிலும் தனித்து இயங்கி வருகிறார்கள். இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாமா? கணடிப்பாக இல்லை.

சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தியாகங்கள் செய்தனர்.சுதந்திர தாகம் முற்றி ஒரு படி மேலே போய் 'வெள்ளைக்காரன் தரும் பதவியும் வேண்டாம். அவன் தரும் படிப்பும் வேண்டாம். ஆங்கிலம் படிப்பது ஹராம் (தடுக்கப் பட்டது)' என்று மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினர். மொழிகளின் மூலங்களை உருவாக்கியவன் இறைவன். அப்படி இருக்க ஒரு மொழியை படிப்பது தடுக்கப் பட்டது என்று எப்படி இந்த மௌலானாக்கள் சொல்லலாம்? அன்று அவர்கள் எடுத்த தவறான முடிவால் பாதிக்கப் பட்டது என்னவோ முழு முஸ்லிம் சமுதாயமும்.

அடுத்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க ஊருக்கு ஊர் தோன்றியிருக்கும் மத்ரஸாக்களும் ஒரு காரணம். இந்த மத்ரஸாக்களை உருவாக்கிய செல்வந்தர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கு கல்வியறிவும் மார்க்க அறிவும் ஒருங்கே பெற்று சிறந்த சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நல் எண்ணமே! எங்கள் ஊரை எடுத்துக் கொண்டால் ஊரைச் சுற்றி அய்ந்து மத்ரஸாக்கள் உள்ளது. இங்கு ஏழு வருடம் படித்தால் அவருக்கு 'ஆலிம்'(மார்க்கஅறிஞர்) என்ற பட்டத்தை கொடுப்பார்கள். இந்த மத்ரஸாக்களில் மதுரை, தென்காசி,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நிறைய மாணவர்கள் எங்கள் ஊருக்கு படிக்க வருகிறார்கள். நல்ல வேளையாக உள்ளூர் மாணவர்கள் எவரும் இந்த மத்ரஸாக்களில் படிப்பதில்லை. உள்ளூர் மாணவர்களுக்கென்றே இருக்கவே இருக்கிறது ஆங்கில வழிக் கல்வி.

வெளியூர் மாணவர்கள் இந்த மத்ரஸாக்களில் படிப்பது எதனை? உலகக் கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் மார்க்க கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் நிலையைத்தான் மத்ரஸாக்கள் பாடத் திட்டங்களாக வைத்திருக்கின்றன. இது போன்ற பாடங்களைப் படித்து விட்டு வரும் மத்ரஸா மாணவன் வெளி உலகில் வந்து எந்த வேலையைப் பார்ப்பது? இன்றைய கணிணி யுகத்தில் மற்ற பள்ளிகளில் பாடத் திட்டங்கள் வருடா வருடம் மாற்றப் பட்டு மாணவர்களும் மாணவியரும் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள். மத்ரஸாக்களின் நிலை என்ன?

மொகலாயர்களின் ஆட்சியில் எழுதப்பபட்ட ஒரு சில புத்தகங்கள், மற்றும் ஒரு சில மார்க்க அறிஞர்களின் தனிப் பட்ட விளக்கங்கள் போன்றவையே பாடங்களாக போதிக்கப் படுகிறது. இவற்றைத்தான் இந்த மாணவர்கள் ஏழு வருடம் மத்ரஸாக்களில் ஓதி வருகிறார்கள். இது போன்ற பாடத் திட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸீக்கும் ஒத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குர்ஆன் ஒரு சட்டத்தை சொன்னால் துர்ருல் முக்தார் என்ற பாடப் புத்தகம் வேறொரு சட்டத்தைச் சொல்லும். முகமது நபி ஒரு சட்டத்தை போதித்தால் ஹிதாயா என்ற பாடப் புத்தகம் அதற்கு மாறான சட்டத்தைச் சொல்லும். இப்படி மார்க்க சட்டங்களைச் சொல்லுவதிலேயே குளறுபடிகள். இதில் இஸ்லாம் சொல்லித் தராத ஹனபி, ஷாபி,ஹம்பலி,மாலிக்கி போன்றோருக்கு தனித்தனியான சட்டங்கள். இப்படி இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லாதவைகளையெல்லாம் படித்து விட்டு 'இஸ்லாமிய அறிஞன்' என்ற பெயரில் மத்ரஸாவிலிருந்து வெளியேறுகிறான் அந்த மாணவன்.

சரி! ஆலிம் ஆனதற்குப் பிறகு அந்த மாணவனின் வருமானத்துக்கு என்ன வழி? இருக்கவே இருக்கிறது இஸ்லாம் காட்டித் தராத பாத்திஹாக்கள்(பிரார்த்தனைகள்). இறந்து போனால் மூன்றாம் நாள், ஏழாம் நாள்,நாற்பதாம் நாள், என்று முறை வைத்து பாத்திஹாக்கள். இவை அனைத்தும் முகமது நபி காட்டித் தராத நூதன பழக்கங்கள். அதிலும் பிறப்பு, இறப்பு,வீடு புது மனைபுகுவிழா,கல்யாணம் என்று அனைத்திற்கும் இந்த மௌலானா வந்துதான் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு நூறோ, நூற்றைம்பதோ அவருக்கு காணிக்கைத் தர வேண்டும். மார்க்க சொற்பொழிவுக்கு என்று வந்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசிக் கொண்டு வருவார்கள். அல்லது பள்ளி வாசல்களில் தொழுகை நடத்துவதற்காக இமாமாக பணியாற்றுவார்கள். இது தான் இவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் வேலைகள். இந்த ஆலிம்கள் செய்வது போன்ற வேலைகளைத்தான் முகமது நபியும் அவரின் தோழர்களும் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. தற்போது உள்ள நடைமுறைக்கு எதிராகத்தான் முகமது நபியின் போதனையும் குர்ஆனிய வசனங்களும் அமைந்துள்ளது.

'இறைவனின் வசனங்களைஅற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு.இறைவன் விரைவாக கணக்கெடுப்பவன்.' - குர்ஆன் 3 : 199

''அவர்கள் இறைவனின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர்.அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்' -குர்ஆன் 9 : 9

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை.' - குர்ஆன் 2 : 174

மேலே கூறப்பட்ட வசனங்கள் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துவது எந்த அளவு தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்குகிறது. அப்படியானால் முகமது நபி தன் வருமானத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்வி வரும். முகமது நபியிடம் 100 எண்ணிக்கை கொண்ட ஆட்டுப் பண்ணை இருந்தது. இந்த பண்ணையில் ஆடுகள் குட்டி ஈனும் போது அதை விற்று தன் குடும்பத்து தேவைகளை சரியாக்கிக் கொள்வார். நபியாவதற்கு முன்பே ஹத்தீஜா அம்மையாரோடு சேர்ந்து மிகப் பெரும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்தார்.

அதே போல் பள்ளியில் இமாமாக இருந்ததற்கும் முகமது நபியோ அவரின் தோழர்களோ சம்பளம் வாங்கியது இல்லை. என் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால் நான் இமாமாக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்கு பின்னால் என் சவூதி முதலாளியும்,அவரின் மகன்,எகிபது, பாகிஸ்தான்,மொராக்கோ நாட்டு முஸ்லிம்களும் அணிவகுத்து தொழுகிறார்கள். நான் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டால் என் முதலாளி தொழுகை நடத்துவார். இது தான் இஸ்லாம் காட்டும் வழியும் கூட. இதையெல்லாம் நாம் ஆதாரத்தோடு எடுத்து சொன்னால் நம்மைப் பார்த்து ஏசுவது,மிரட்டுவது,ஊர்விலக்கம் செய்வது என்ற ரீதியில் பொது மக்களை தூண்டி விடுகின்றனர் இந்த ஆலிம்கள்.

ஒரு முறை எங்கள் ஊரில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' இளைஞர்களாக சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்தோம்.பாதுகாப்புக்கு போலீசாரும் வந்திருந்தனர்.எங்கள் ஊர் ஆலிம் (பள்ளியில் தொழுகை நடத்துபவர்)பெரிய கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு நூறு பேரையும் திரட்டிக் கொண்டு ட்யூப் லைட்டுகளை உடைப்பது, மேடையை சேதப்படுத்துவது போன்ற ரௌடிகள் செய்யும் செயலை செய்ய ஆரம்பித்தார். இதற்கு அவர் வைத்த பெயர் 'ஜிஹாத்'. இதில் அந்த ஆலிமை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. மத்ரஸா கல்வி அவரை அப்படி மாற்றி இருக்கிறது. குர்ஆனையும், முகமது நபியின் வாழ்க்கையையும் மத்ரஸாவில் போதித்து ஒரு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்திருந்தால் இது போன்ற அராஜகங்களை அவர் அரங்கேற்றியிருக்க மாட்டார். காவலுக்கு நின்ற இந்து போலீஸ்காரர் 'ஏன்ய்யா! நிங்களெல்லாம் இந்தக் கூட்டத்தை இவ்வளவு எதிர்க்கிறீர்களே! அப்படீன்னா நீங்களெல்லாம் வரதட்சணை வாங்கக் கூடியவர்களா?' என்று அப்பாவியாக கேட்டது இன்றும் என் மனதில் நிற்கிறது. இது போன்ற அமைப்புகளில் அதிக அங்கத்தினர்கள் சேர்ந்தால் மௌலானாக்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படும். இது தான் முக்கிய காரணம். இதை மாற்றுவதற்கு என்ன வழி?

மதராஸாக்களின் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும். வேலை நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை. பிறகு 4 மணி முதல் இரவு 7 மணி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் தமிழ், ஆங்கிலம்,அரபி,கணிணி,குர்ஆன், ஹதீஸ்,போன்றவை கட்டாயப் பாடங்களாக்கப் பட வேண்டும். பாக்கி இரண்டு மணி நேரம் தொழிற் கல்வியில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பெண்டர், மெஷின் ஆபரேட்டர், போன்ற சிறு தொழில்கள் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மாதம் ஒரு முறை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவர்களோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.

அடுத்து மத்ரஸா மாணவர்களுக்கென்றுபிரத்யேக அடையாளங்கள் இருக்கும். தலையை மொட்டை அடித்தல், நீண்ட ஜிப்பா, மொட்டையை மறைக்க தலையில் தொப்பி.

தலையை மறைக்க வேண்டும், தொப்பி அணிய வேண்டும் என்று குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ நமக்கு காணக் கிடைக்கவில்லை. இங்கு சவூதியில் பள்ளியில் தொழுபவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு தலையில் தொப்பி இருக்காது.தொப்பி அணிவது என்பது துருக்கி நாட்டவரின் பழக்கம். அந்த பழக்கம் இந்திய முஸ்லிம்களிடத்திலும் தொற்றிக் கொண்டது. சவூதிகள் தங்கள் தலைகளை மறைப்பதன் காரணம் இங்குள்ள பாலைவனப் புழுதிக் காற்று. காற்று வேகமாக அடித்தால் தலையில் இருக்கும் துண்டைக் கொண்டு முகத்தையும் மூடிக் கொள்வார்கள். எனவே தலையை மறைத்து துண்டு அணிவது சவூதிகளுக்கு வசதி. நமக்கு எந்த வகையில் வசதியைத் தரும். ஆனால் கட்டாயப் படுத்தாமல் தாங்களாகவே விரும்பி யாரும் தொப்பி அணிந்து கொண்டால் அதை தடுக்கக் கூடாது. அதே போல் யாரும் தொப்பி அணியாமல் தொழுதால் அதை ஒரு பிரச்னையாகவும் ஆக்கக் கூடாது.


2) அடுத்து ஜிப்பா! இதுவும் இஸ்லாமியரின் ஆடை என்று பலரும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று முகமது நபி எந்தக் கட்டளையும் இடவில்லை. ஒரு மாணவன் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு மத்ரஸாவுக்கு வந்தால் அவனை வித்தியாசமாக பார்க்கும் மனப்பாங்கு நம்மவர்களிடமிருந்து மாற வேண்டும்.

அடுத்து மொட்டை அடிப்பது. முகமது நபி தன் வாழ்நாளில் ஹஜ்,உம்ரா போன்ற நேரங்களில் தான் தலையை முழுவதுமாக மழித்து இருக்கிறார்கள். முகமதுநபிக்கு அழகிய சுருள் முடி என்றும் நடு வகிடெடுத்து அழகாக அதனை சீவியும் இருப்பார்கள் என்று ஹதீதுகளில் நாம் பார்க்கிறோம். மத்ரஸாக்களிலோ சிறு வயது பையன்களுக்கெல்லாம் கட்டாயமாக மொட்டையடிக்கச் சொல்வார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் மத்ரஸாக்கள் தளர்த்தவேண்டும்.

முஸ்லிம் பெண்களுக்கும் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். எங்கள் ஊரில் செயல்படும் பெண்கள் மத்ரஸாவின் பணி ஓரளவு பாராட்டத் தக்கதாக இருக்கிறது. இங்கு அரசு கல்வியையும், மார்க்க கல்வியையும் இணைத்து கொண்டு செல்கிறார்கள். பெண்களுக்கு ஏற்ற தொழில்களான தையல் , கணிணி, கேடரிங் போன்ற பாடங்களையும் கூடுதலாக சேர்த்தால் பெண்களின் முன்னேற்றம் சிறப்படையும். இதனால் டிவி சீரியல்களின் முன்னால் உட்கார்ந்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கும் நம் பெண்களின் வாழ்க்கையும் ஒளி பெறும்.

போனமுறை விடுமுறையில் ஊருக்கு சென்றபோது எங்கள் ஊரில் மாலை நேரத் தொழுகைக்கு பள்ளிக்குச் சென்றேன். நான் சிறிது தாமதமாக சென்றதால் கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. என்னைப் போல் தாமதமாக வந்த ஒருவர் தனியாக தொழுது கொண்டிருந்தார். அவருக்கு சைகை செய்து அவரைத்தலைவராக ஏற்று அவருக்கு பின்னால் தொழுகைக்கு நான் நின்றேன்.இதே போல் சவூதியில் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் இரண்டு முன்று ஜமாத்துகள் (கூட்டுத் தொழுகை) சர்வ சாதாரணமாக நடக்கும். எனக்குப் பின்னால் தாமதமாக வந்த இன்னும் மூன்று பேர் எங்களோடு சேர்ந்து தொழுதனர். ஒரு வழியாக அந்த கூட்டுத் தொழுகையை முடித்தோம்.

தொழுகையை முடித்தவுடன் அந்த பள்ளியின் இமாமும், அங்கு செயல்படும் மத்ரஸாவின் முதல்வருமான மார்க்க அறிஞர் என்னைப் பார்த்து, 'தனியாக இரண்டாவது கூட்டுத் தொழுகை நடத்துவது ஹனபி சட்டத்தின் படி தடுக்கப் பட்டுள்ளது' என்று உரத்த குரலுடன் சப்தமிட்டார். தொழுக வந்தவர்கள் அனைவரும் எங்கள் இருவரையும் பார்க்க ஆரம்பித்தனர்.

'இப்படி கூட்டாக தொழக் கூடாது என்று குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எனக்கு நீங்கள் ஆதாரம் தர முடியுமா?' - சுவனப்பிரியன்

'லால்பேட்டை மத்ரஸாவின் 'பத்வா' (மார்க்க தீர்ப்பு) இரண்டாவது ஜமாத் தடுக்கப் பட்டது என்று கூறுகிறது' - மௌலானா

'முகமது நபி 'தனியாக தொழுவதை விட கூட்டாக தொழுவது 25 மடங்கு நன்மையைத் தரும்' என்று சொல்லியிருக்கிறார்களே! அதை நீங்கள் படிக்கவில்லையா மௌலானா?' - அமைதியுடன் சுவனப்பிரியன்.

'இதோ பார் தம்பி! விதண்டா வாதம் எல்லாம் பண்ணாதே! எனக்கு லால்பேட்டை 'பத்வா' தான் முக்கியம்' - மௌலானா

'முகமது நபிக்கு மாற்றமாக லால் பேட்டை 'பத்வா' இருந்தால் அதைத் தூக்கி குப்பையில் போடுங்கள்' -சற்று சூடாக சுவனப்பிரியன்.

பிரச்னை முற்றுவதைப் பார்த்த அனைவரும் 'பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று என்னை அழைத்து வந்து விட்டனர். 40 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு மத்ரஸாவின் முதல்வர் இந்த அளவு மார்க்கம் அறியாமல் இருந்தால், இவரிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் எந்த அளவில் இருக்கும். இப்படியே எல்லோரும் தொழுகை நடத்த ஆரம்பித்தால் அவரின் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம்தான் முதல் காரணம். புரோகித்தை விட்டால் தனக்கு உள்ள மதிப்பு போய் விடுமே என்ற பயம் மற்றொரு காரணம். இஸ்லாமிய இணைய தளங்களின் மூலம் நான் கற்றுக் கொண்ட அளவுக்குக் கூட இந்த முதல்வருக்கு ஞானம் இல்லை என்றால் இந்த மத்ரஸாக்களினால் என்ன பயன்? இது தான் இன்றைய மத்ரஸாக்களின், மார்க்க அறிஞர்களின் நிலை.



மேலும் திண்ணமாக அறிஞர்கள் இறைத் தூதரின் வாரிசுகளாவர்.அவர்கள் அறிவைத் தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவராவார். கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சுவர்க்கத்துக்குச் செல்லும் வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான். அல்லாஹ் சொல்கிறான் : 'நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தாம்' - (35 :28 ) மேலும் அல்லாஹ் கூறுகிறான் 'அதனை அறிஞர்கள் தவிர வேறெவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.' -(29 : 43)மேலும் சொல்கிறான் 'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' -(39 : 9)

-புகாரி முதல் பாகம் பாடம் 10

மேற் கண்ட ஹதீஸின் மூலம் ஒரு முஸ்லிமுக்கு கல்வி கற்பது எந்த அளவு முக்கியம் என்று விளங்கும்.ஆனால் கல்வி விஷயத்தில் இன்னும் நாம் அதிக சிரத்தை எடுக்காமல் இருந்து வருகிறோம்.


என் மனத்தில் பல நாள் உழன்று கொண்டே இருந்த எண்ணங்களை அப்படியே எழுதி விட்டேன். நான் சொல்வது தான் சரி என்றும் சொல்லவில்லை. என் கருத்தில் உடன் படாதவர்கள் பின்னூட்டமிட்டால் அதையும் பிரசுரிக்கிறேன். இனியும் நாம் மத்ரஸாக்களின் பாடங்களை மாற்றுவதில் மெத்தனமாக இருந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்.

4 comments:

Jafar ali said...

உங்களுடைய சொல் ஒவ்வொன்றும் முற்றிலும் உண்மை. அதிலும் தாங்கள் குறிப்பிடும் அந்த இரண்டாவது ஜமாத் தொழுகை குறித்தான விளக்கம்

//இப்படியே எல்லோரும் தொழுகை நடத்த ஆரம்பித்தால் அவரின் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம்தான் முதல் காரணம்//

மிக அருமை. அதுதான் உண்மையும் கூட. உண்மையை நாம் அல்லாஹ்வுக்காக சொல்லிக் கொண்டே இருப்போம். எம் சமுதாயத்துக்கு அல்லாஹ் ஒருநாள் அருள்பாலிக்கக் கூடும்.

suvanappiriyan said...

மத்ரஸா
வருகை புரிந்து கருத்துக்களைச் சொன்ன ஜாபர் அலி, மன்சூர் இருவருக்கும் நன்றிகள் பல.

நம் தமிழ்நாட்டில் இமாமாக நின்று தொழ வைப்பதற்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பது தொழுகை முடிந்தவுடன் அரபியில் ஓதப்படும் கூட்டுத் துவா. முகமது நபி தம் வாழ்நாளில் ஒரு முறை கூட தொழுகைக்கு பிறகு துவா ஓதி அதற்கு மற்றவர்கள் ஆமீன் சொன்னதாக நாம் ஹதீதுகளில் பார்க்க முடியவில்லை. மற்றவர்கள் தொழுகை வைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த கூட்டுத் துவாவே உருவாக்கப் பட்டிருக்கலாம் என்பேன்.

இடைத் தரகர் இஸ்லாத்தில் கிடையாது. எனக்கு எதுவும் தேவைப் பட்டால் என் தாய் மொழியில் என்னைப் படைத்த இறைவனிடம் நான் கேட்டுக் கொள்வேன். மொழிகளை உருவாக்கிய இறைவனுக்கு தமிழ் மொழி தெரியாதா? பிறகு எதற்கு பிரார்த்தனையில் கூட அரபி மொழி? தொழ வைக்கும் இமாமுக்கு ஒரு தேவை இருக்கும். பின் பற்றி தொழக் கூடியவருக்கு வேறொரு தேவை இருக்கலாம். எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாக ஒரு துவாவை அதுவும் மனனம் செய்து வைத்துக் கொண்டு (அதிகமான பேருக்கு அரபி துவாவுக்கு அர்த்தமும் தெரியாது) ஓதுவது யார் சொல்லிக் கொடுத்தது? இஸ்லாம் தோன்றிய அரபு நாடுகளில் ஏதாவது ஒரு பள்ளியில் இப்படி ஒரு கூட்டுத் துவாவை காட்ட முடியுமா?

இதை எல்லாம் நாம் சொல்லப் போனால் 'நீ என்ன பெரிய அறிவாளியா? மத்ரஸாவில் ஓதி பட்டம் வாங்கியிருக்கிறாயா? அரபி தெரியுமா?' என்ற வழக்கமான கேள்விகளைக் கேட்பார்கள். நம் பக்கம் உள்ள நியாயங்களை சிந்திக்கவும் மாட்டார்கள். மாற்றம் வரும் வரை சொல்லிக் கொண்டே இருப்போம். அது ஒன்று தானே நம்மால் செய்ய முடிந்தது.

suvanappiriyan said...

மெக்கா பயணம்!

நாளையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை மெக்காவில் இருப்பேன். எனவே பின்னூட்டம் இடுபவர்கள் சனிக்கிழமை வரை பொறுக்கவும்.

நன்றி!

suvanappiriyan said...

உம்ரா பயணம் இறைவன் அருளால் நலமுடன் முடிந்தது. நேற்று வெள்ளி இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இதன் அனுபவங்களை இனி வரும் ஒன்றிரண்டு பதிவுகளில் பார்ப்போம்.

அன்புடன்
சுவனப்பிரியன்