Followers

Saturday, July 08, 2006

குர்ஆன் பைபிளைத் தழுவியதா? - சிறு விளக்கம்

குர்ஆன் பைபிளைத் தழுவியதா? - சிறு விளக்கம்

மேலை நாட்டவர்களில் பல பேர் குர்ஆனும் பைபிளும் ஒரு சில விஷயங்களில் ஒத்துப் போவதை வைத்து, முகமது நபி பைபிளைக் கற்றுக கொண்டுதான் குர்ஆன் என்று கூறுகிறார் என்று சொல்கின்றனர். அதற்கு உதாரணமாக ஒரு சிலரையும் கூறுகின்றனர். அவர்கள் யார் என்பதையும், இந்த கூற்று எத்தகைய இட்டுக் கட்டல் என்பதையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முகமது நபி அவரின் மனைவி ஹத்தீஜாவின் உறவினரான வரகா என்பவரிடமிருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார்.

முகமது நபியின் மாற்று மதத்தவர்களின் தொடர்பு என்று பார்த்தால் குர்ஆன் இறக்கப் படுவதற்கு முன்பு ஒரு சிலரே. மேலே சொன்ன வரகா என்பவரை ஒரு சில தினங்கள் தான் பார்த்து பேசி இருக்கிறார். ஒரு முறை குர்ஆன் அருளப் படுவதற்கு முன் ஒரு நாள் காபாவில் முகமது நபியை அழைத்து அவரின் நெற்றியில் முத்தமிட்டுள்ளார். அடுத்து குர்ஆன் அருளப்பட்ட அன்று முகமது நபி வரகாவை சென்று பார்த்து நடந்த விபரங்களைக் கூறியுள்ளார்.வரகாவுக்கு ஓரளவு பைபிளைப் பற்றிய ஞானம் இருந்திருக்கிறது. அதிலும் இவர் கண் தெரியாதவர்.குர்ஆன் அருளப்பட துவங்கிய மூன்று வருடங்களில் வரகா இறந்து விடுகிறார். அதன் பிறகும் ஒவ்வொரு அத்தியாயமாக 23 வருடங்கள் குர்ஆன் அருளப் பட்டது. எனவே இது விஷயத்தில் வரகாவை சம்பத்தப் படுத்துவது பிழையான செய்தியே.

2. முகமது குர்ஆனை கிறிஸ்தவரான ரோமாபுரியைச் சேர்ந்த கொல்லன் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

முகமது நபி இந்த கிறிஸ்தவ கொல்லரை ஒரு சில சமயங்களில் மாத்திரமே பார்த்து பேசி இருக்கிறார். இப்படி இட்டுக் கட்டுவதை மறுக்கும் முகமாகவே அதே குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

'ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. -குர்ஆன் 16;103

எப்படி ஒரு மனிதரின் தாய் மொழி வேறாக இருக்க, அதிலும் சில வார்த்தைகளே அரபியில் பேசத் தெரிந்த ஒரு கொல்லரால் இலக்கண சுத்தமான, அழகிய உயர் தரமான இலக்கிய நடையில் பாமரர்க்கும் விளங்கும் விதமாக கொடுக்க முடியும்.

3. முகமது நபி யூத கிறிஸ்தவ மக்களிடம் அதிகம் நட்பு கொண்டு பைபிளை கற்றுக் கொண்டு குர்ஆனை உண்டு பண்ணினார்.

மதினாவில் தங்கியிருந்த யூத கிறிஸ்தவ மக்களை முகமது நபி அடிக்கடி சந்திதிதது உண்மைதான். எதற்காக? அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களை தெளிவு படுத்துவதற்காக! பல தெய்வ கோட்பாடு உடைய அவர்களை ஒரே தெய்வ வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்காக மார்க்க போதகர் என்ற ரீதியில் அடிக்கடி சந்திதிதுள்ளார்.

4. வெளியூர்களுக்கு சென்ற போது அங்குள்ள கிறிஸ்தவ யூதர்களை சந்தித்து விளக்கங்களைப் பெற்று குர்ஆனைத் தந்தார்.

இதுவும் தவறு. அனைத்து வரலாறுகளும் தற்போது பாதுகாக்கப் பட்டுள்ளது. முகமது நபி குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பு மூன்று முறை தான் வெளியூர்களுக்கு சென்றுள்ளார்.

அ.ஒன்பது வயதாக இருக்கும் போது அவருடைய தாய் ஆமினாவுடன் மதினா நகருக்கு சென்றுள்ளார்.

ஆ.ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குள் ஒரு முறைஉறவினர் அபூ தாலிபுடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்றுள்ளார்.

இ.இருபத்தைந்து வயதில் கதீஜா அம்மையாரின் வியாபார கூட்டத்தில் ஒரு முறை சிரியா சென்றுள்ளார்.

மூன்று முறையே வெளியூர் பயணத்தில் அதுவும் வியாபார நிமித்தமாக செல்லும் ஒருவர் எதைக் கற்றுக் கொள்ள முடியும்? முகமது நபியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். கிறிஸ்தவர்கள் சொல்வது போல் யாரையும் பார்த்து பேசி எதையும் கற்றுக் கொண்டிருந்தால் அது வரலாற்றில் பதியப் பட்டிருக்கும். அப்படி எந்த ஒரு குறிப்பும் காணப்பட வில்லை.

மேலும் குறைஷிகளில் மிகவும் திறமை வாய்ந்த அறிவாளிகளில் பல பேர்இஸ்லாத்தை உடன் ஏற்றுக் கொண்டனர்.அவர்களில் ஒருவருக்காவது இது போன்று யூத கிறிஸ்தவர்களிடம் இருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார் என்று தெரிந்திருந்தால் அதை உலகுக்கு தெரிவித்து இருப்பார்கள். இஸ்லாத்தை விட்டும் சென்றிருப்பார்கள். அப்படி எதுவும் நிகழவில்லை.

முகமது நபியின் எதிரிகள் அபூஜஹீல் போன்றவர்கள் முகமது நபியை கூர்ந்து கவனித்து வந்தனர்.எப்படியும் முகமது நபியை கவிழ்க்க பல திட்டங்களும் தீட்டினர். ஆனால் அனைத்தும் இவர் உண்மையாளர் என்பதால் தோல்வியில் முடிந்தது.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் பைபிள் அரபி மொழியில் மொழி மாற்றம் செய்யப் பட வில்லை. பழைய ஏற்பாடு முதன் முதலில் அரபியில் வந்தது முகமது நபி இறந்து 250 வருடங்களுக்குப் பிறகே! புதிய ஏற்பாடு அரபியில் எர்பினியஸால் 1616 ல் தான் வெளியிடப் பட்டது. அதாவது முகமது நபி இறந்து 1000 வருடத்துக்குப் பிறகு அரபுலகுக்கு கிடைத்தது.

5. குர்ஆனும் பைபிளும் ஒன்று போல் இருக்கிறதே!

முதலில் குர்ஆன் என்பது கடைசியாகவும் இறுதியாகவும் இறக்கப் படட வேதம் தானே ஒழிய இதற்கு முன்னும் பல நபிகள் பல வேதங்கள் வந்துள்ளதை குர்ஆன் மெய்ப்பிக்கிறது. மோசேவுக்கு அருளப் பட்டதையும், ஆப்ரஹாமுக்கு அருளப் பட்டதையும் , தாவீதுக்கு அருளப்பட்டதையும் மேலும் ஏசுவுக்கு அருளப் பட்டதையும் முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும். இவை அனைத்தையும் அனுப்பியது ஒரே இறைவன்தான். எனவே தான் பைபிளில் உள்ள பல வரலாறுகள் குர்ஆனிலும் வந்துள்ளது. பல வரலாறுகள் சில மாறுபாடுகளோடும் வந்துள்ளன. மாறுபாடு வருவதற்கு காரணம் ஏசு உபதேசித்த பைபிள் தற்போது உலகில் இல்லை. ஏசுவுக்கு பிறகு வந்தவர்களால் எழுதப் பட்ட வரலாறுகள் தான் தற்போது நம் கையில் இருக்கும் பைபிள்.ஏசுவின் மரணச் செய்தியும் பைபிளில் சேர்ந்தே வருவதை வைத்து இதை நாம் அறியலாம்.எனவே தான் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் குர்ஆனிலும் பைபிளிலும் காணப் படுகின்றன. எந்த எந்த இடங்களில் எல்லாம் மாற்றங்கள், ஒற்றுமைகள் இரண்டிலும் காணப்படுகின்றன என்பதை நேரம் கிடைக்கும் போது பார்ப்போம். இறைவன் நாடினால....

1 comment:

சுவனப்பிரியன் said...

உம்ரா பயணம் இறைவன் அருளால் நலமுடன் முடிந்தது. நேற்று வெள்ளி இரவு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இதன் அனுபவங்களை இனி வரும் ஒன்றிரண்டு பதிவுகளில் பார்ப்போம்.

அன்புடன்
சுவனப்பிரியன்