Followers

Sunday, July 02, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - ஆறு

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - ஆறு

இஸ்லாத்தின் அய்ந்து முக்கிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதைப் பற்றி குர்ஆன் பின் வருமாறு கூறுகிறது :

'முகம்மதே! வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக!தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். இறைவனை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை இறைவன் அறிவான்.' - குர.ஆன் 29 : 45

தொழுகை மனிதர்களை தவறான வழியிலிருந்து மீட்கும் என்று இறைவன் கூறுகிறான். மனிதனை படைத்ததன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காக என்று வேறொரு இடத்தில் இறைவன் கூறுகிறான். இந்த தொழுகை விஷயத்தில் இஸ்லாம்,இந்து என்ற இந்த இரண்டு மதங்களுக்கிடையேயான ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்களின் தொழுகையில் 'ஸூஜூது' என்ற நிலை உள்ளது. அதாவது மண்டியிட்டுதலையை பூமியில் வைக்கும் நிலை தொழுகையில் உண்டு. இந்த நிலையில் தன்னையே மனிதன் இறைவனிடம் அர்ப்பணிப்பதால் அந்த நேரத்தில் கேட்கப் படும் பிரார்த்தனைகளை இறைவன் உடன் அங்கீகரிக்கிறான் என்று முகமது நபியின் போதனை நமக்கு விளக்குகிறது. இந்த நிலையில்தான் பணக்காரனின் தலை ஏழையின் கால்களில் உரசும். இஸ்லாத்துக்கு வந்த ஒரு பிராமணின் தலை அவருக்கு முன் நிற்கும் இஸ்லாமான தலித்தின் கால்களில் உரசும். அதேபோல் வெள்ளையனின் தலையும் ஆப்ரிக்காவிலிருந்து வந்த கருப்பரின் கால்களில் உரசும். ஹஜ்ஜூக்கு வரும் ஒவ்வொரு நபரும் இதை கண் கூடாக பார்க்கலாம். சவூதி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்த பயிற்ச்சியை ஒவ்வொரு நாளும் அய்ந்து வேளை முஸ்லிம்கள் எடுக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது.

இதே நிலை இந்து மதத்திலும் உண்டு. இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் இந்து மதத்தில் பல நிலைகளில் அனுஷ்டிக்கப் படுகிறது. அதில் ஒன்று 'சாஷ்டாங்கம்'. இந்த வார்த்தையை பிரித்து பொருள் பார்ப்போம். சாஸ்த் - அங்க் என்று பிரித்துபொருள் பார்த்தால் சாஸ்த் - எட்டு அங்க் - உடல் என்ற பொருளில் வரும். அதாவது உடலில் உள்ள நெற்றி, மூக்கு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்,இரண்டு பாதம் ஆகிய எட்டு அவயங்களை பூமியில் படுமாறு இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவதால் இதை சாஷடாங்கம் என்று கூறுகிறோம்.

இதே நிலையைத்தான் சற்று மாறுதலாக முஸ்லிம்கள் செய்யும் போதும் உடலின் எட்டு பாகங்கள் பூமியில் படும். வித்தியாசம் என்ன என்றால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குகிறார்கள். இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் இந்து மதத்தில் பல தெய்வ வணக்கத்திற்கு உள்ள தடைகளையும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'

- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'

-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.

ஜகாத் (ஏழை வரி)

இஸ்லாத்தின் மற்றொரு முக்கிய கடமைகளில் ஒன்று ஜகாத் என்பது. 'ஜகாத்' என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல், வளருதல் என்ற பொருள் வரும். மனிதன் தான் சம்பாதித்த பொருள்களை இறைவன் சொன்னான் என்பதற்காக குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது ஜகாத் எனப்படும்.இப்படி செல்வந்தன் கொடுப்பதால் அவனின் செல்வம் தூய்மையடைகிறது. இறைவன் அருளால் மேலும் மேலும் பெருகுகிறது. இந்த முறை மட்டும் இஸ்லாமியரிடத்தில் சரி வர செயல் பட்டால் ஏழைகளையே இல்லாத சமுதாயமாக முஸ்லிம் சமூகம் மாறி விடும். நானும் தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று 50 பைசா, ஒரு ரூபாய் சில்லரைகளை மாற்றி வைத்துக் கொண்டு தினமும் வீட்டுக்கு வரும் பிச்சைக் காரர்களுக்கு போடுவதல்ல இறைவன் சொல்லும் தர்மம்.இது பிச்சைக் காரர்களை மேலும் ஊக்கப் படுத்தும். சோம்பேறிகளை அதிகம் உருவாக்கும்.

ஊர் நாட்டாண்மை, அல்லது நேர்மையான ஊர் பெரியவர் ஒவ்வொரு செல்வந்தனிடமும் வருமானத்தைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். பிறகு அவை குர்ஆனில் இறைவன் கூறும் எட்டு நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். தையல் மிஷின், கறவைமாடு, போன்றவை இலவசமாக வாங்கிக் கொடுத்தால் அடுத்த வருடம் அவன் தர்மம் கொடுக்க தயாராகி விடுவான். இது போன்ற அமைப்பு தமிழகத்தில் தற்போதுதான் தொடங்கப் பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். இப்படி ஒரு அமைப்பு எதற்காக என்ற காரணத்தையும் குர்ஆன் சொல்கிறது.

'உங்களில் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக இறைவன் இவ்வாறு பங்கிடுகிறான்.'

-குர்ஆன் 59 : 7

அனைவருக்கும் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.

இதே கருத்தில் இந்து மத வேதங்களில் வரும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம்.

'வறியவனைப் பார்த்து செல்வம் உள்ளவன் நிம்மதி அடைகிறான். இன்று பணம் உள்ளவன் நாளை ஏழையாகிறான். ஒரு வண்டியின் சக்கரம் சுழல்வது போல் இவர்களின் வாழ்க்கை சுழல்கிறது.'

-ரிக் வேதம் புத்தகம் 10 - துதிப் பாட்டு 117 - வசனம் 5

குர்ஆனின் கருத்தும் ரிக் வேதத்தின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.

பகவத் கீதையிலும் பல இடங்களில் தர்மத்தைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவை

-பகவத் கீதை - அதிகாரம் 17 - வசனம் 20

-பகவத் கீதை - அதிகாரம் 16 - வசனம் 3

நோன்பு

இஸ்லாத்தின் அய்ந்து கடமைகளில் ஒன்றாக நோன்பும் வருகிறது. இதைப் பற்றி குர்ஆன் சொல்வதாவது :

'இந்த குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப் பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாக கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான்.' -குர்ஆன் 2 : 185

ஒரு மனிதன் தனது நாவின் ருசியை கட்டுப் படுத்த பழகிக் கொண்டால் மற்ற பல இச்சைகளை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வருவது மிக எளிதானது. எனவே தான் மனிதர்களுக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சியாகவும், ஏழைகளின் பசியை உணர்த்துவதற்காகவும் இறைவன் நோன்பை கடமையாக்கினான். சிகரெட், மது போன்ற பழக்கத்திற்கு அடிமையான ஒரு சில முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் அந்த தீய பழக்கங்களை விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த நோன்பைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்து மத்தில் பல வழிகளில் விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 6 - வசனம் 24

-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 11 - வசனம் 204

ஹஜ்

இஸ்லாத்தில் அய்ந்தாவது கட்டாய கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப் பயணம் செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. வருடா வருடம் அமெரிக்கா,பிரிட்டன்,சைனா,அய்ரோப்பா,மலேசியா,இந்தியா,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 2;5 மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் குழுமுகின்றனர். உடம்பின் மேலே ஒன்றும் கீழே ஒன்றும் இரண்டு துண்டுகள் மட்டுமே அதுவும் தைக்கப் படாததை உடுத்திக் கொள்ள வேண்டும். அது வெள்ளை நிறமாகவும் இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன்,வெள்ளையன்,கறுப்பன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் 'இறைவா! உன்னையே அடி பணிந்தோம்' என்று ஒரு மித்த குரலில் சொல்வது காண கண் கொள்ளாக் காட்சியாகும்.

இந்து மத்திலும் புண்ணியத் தலங்கள் என்று பலவும் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் 'லாஸ்பாட்' என்று சொல்லப் படும் ஒரு புண்ணியத் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.

'லாஸ்பாட்' இந்த புண்ணிய தலம் நபா பிரிதிவியில் அமைந்திருக்கும்'

-ரிக் வேதம் -புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 4

லாஸ்பாட் என்ற சமஸ்கிரத வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இறைவனின் இடம் அல்லது இறைவனின் இல்லம் என்ற பொருள் வரும். பிரதிவி என்பதன் பொருள் பூமி. நபா என்பதன் பொருள் நடு மையம். இவை அனைத்தையும் ஒன்று சேருங்கள். 'பூமியின் மையத்தில் அமைந்த இறைவனின் இடம்' என்ற பொருள் வரும். பூமியின் மையத்தில் அமைந்துள்ளது கஅபா என்பது நமக்கு முன்பே தெரியும். எனவே மேலே உள்ள வரிகள் மக்காவில் உள்ள கஅபாவையே குறிக்கிறது.

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்கு அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா எனும் மக்காவில் உள்ளதாகும்.' - குர்ஆன் 3 : 96

'லாஸ்பாட்' என்ற வார்த்தை ரிக் வேதத்தில் மற்றோர் இடத்திலும் வருகிறது.

-ரிக் வேதம் - புத்தகம் 1 - துதிப்பாட்டு 128 - வசனம் 1

அடுத்து ரிக் வேதம் புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 11 ல் நரசன்ஸா என்ற நபரைப் பற்றி சொல்லப்படுகிறது. நரசன்ஸா என்பது முகமது நபி என்று முன்பே பார்த்தோம்.இதற்கு முன்னால் அதே ரிக் வேதத்தில் லாஸ்பாட்டைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. எனவே லாஸ்பாட் என்பது மக்காவில் உள்ள கஅபா என்பது மேலும் உறுதியாகிறது.

மேலும் பல அரிய தகவல்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் இறைவன் நாடினால்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

1 comment:

suvanappiriyan said...

Mr intelinside!

'குர்ஆனும் இந்து மத வேதங்களும்' என்ற தலைப்பில் சகோதரர் ஆர்டி அவர்களுக்கு ஷியா சன்னி சம்பந்தமான பதிலைக் கொடுத்துள்ளேன். அந்த தலைப்பில் சென்று பார்த்துக் கொள்ளவும். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.