கிஷோர் பட் - இப்படியும் ஒரு மனிதர்!
பிசியான மும்பை நகரத்தில் தினமும் பரபரப்பாக ஓடியாடும் மக்களுக்கு யார் இருக்கிறார்கள் யார் செத்தார்கள் என்ற நின்று நினைத்துப் பார்க்கக் கூட நேரமோ அக்கறையோ இருப்பதில்லை. வழியில் பிணம் கிடந்தால் கூட அதைத் தாண்டி மின்சார ரயிலில் இடம் பிடிக்க ஓடுவார்கள். ஆனால் மும்பை பிசினஸ்மேனானகிஷோர் பட், வயது 51, என்பவருக்கு இதை எல்லாம் நினைக்க நேரமும் உதவ பணமும் இருக்கிறது.
இவர் நடத்தும் சப்னா ஆர்ட்ஸ் கேலரியில் நெடுங்காலத்திற்கு முன் இறந்தவர்களின் படங்கள் தொங்குகிறது.அவற்றின் நடுவே அமர்ந்திருக்கும் கிஷோரின் கண்கள் வீதியில்தான் இருக்கிறது. எந்த எமர்ஜென்ஸியையும் எதிர் கொள்ள கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது டெலிபோன்.
கிஷோர் காத்துக் கொண்டிருப்பது ஸ்டீல் பர்னிச்சர்கள் மற்றும் திரைச்சீலைகள் தரை விரிப்புகளைக் கேட்கும் இன்டீரியர் டெக்கரேட்டர்கள், கட்டடக் கலை நிபுணர்கள் போன்றோரின் அழைப்புகளுக்காக மட்டும் அல்ல. அனாதையாக கிடக்கும் பிணங்கள் பற்றி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மருத்துவ மனைகளிடமிருந்து தகவல் வந்தால் உதவவும் காத்துக் கொண்டிருக்கிறார். ஆப்ரிக்க நாட்டு போதை மருந்து அடிமைகளிலிருந்து எய்ட்ஸ் நோயாளிகள் விபத்துகளில் உயிரிழந்தோர் வரை பல பிரேதங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி இருக்கிறார்.எப்படி இவற்றை இவரால் செய்ய முடிகிறது?
'மனதும் உடலும் எனக்கு ஒத்துழைக்கிறது. இப்படி உதவுவதன் மூலம் என் மனதுக்கு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது.' என்கிறார் பட்.
மும்பையில் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளில் கிட்டத் தட்ட ஆயிரத்து இருநூறு உடல்களை எரித்திருக்கிறார்ஈ புதைத்திருக்கிறார் கிஷோர் பட். இதற்கு இவர் கணக்கு வைத்துக் கொண்டதில்லை. அதே போல உடல்களை புதைக்கவோ, எரியூட்டவோ ஆகும் செலவுக்கு பட் கணக்கும் பார்ப்பதில்லை. 'அதைப் பற்றி கவலைப் படாமல் என் கடமையை நான் செய்கிறேன்' என்கிறார் அவர். ஒரு பிணத்தை எரியூட்ட சுமார் ரூ ஆயிரம் செலவாகும். நகரில் இருக்கும் அரை டஜன் இடுகாட்டில் கடன் வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். தேவையான மத சடங்குகள் செய்த பிறகே அனாதைப் பிணங்களை எரியூட்டுகிறார். இந்துக்களின் பிரேதம் என்றால் மாலை போடுகிறார். கிறித்தவ முஸ்லிம் மதத்தவரின் சடலங்களுக்கு அவர்களது வழக்கப்படி புதைக்கிறார்.
கிஷோர் பட்டின் குடும்பத்தினரும் இவருக்கு அதரவாக இருக்கின்றனர்.பட்டின் அம்மாவுக்கு என்பது வயது. இருந்தும் நடு இரவில் போன் அழைப்புகள் வந்தால் அவரை அவசர அவசரமாக எழுப்புவார்.
பட்டுக்கு பிணத்துடனான சந்திப்பு 1968 -ல் முதன் முதலாக நடந்தது. அப்போது குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டு சூரத் படு சேதமடைந்திருந்தது. 17 வயதான பட் அப்போது மும்பை மகாலட்சுமி தியேட்டரில் செய்தித் தாள்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். ஒர பிசினஸ் மேன் குஜராத்துக்கு நிவாரண உதவிகளை மூன்று டிரக்குகளில் அனுப்பி அதை மேற் பார்வையிடும் பொறுப்பை பட்டிடம் ஒப்படைத்தார். உடனே பட் ரயிலேறினார். இறந்து கிடந்த கால்நடைகளுக்கு மத்தியில் மனிதப் பிணங்களும் கிடந்தது. இந்த சம்பவம் பட்டின் வாழ்க்கையையே மாற்றியது.
மும்பையில் 1993 மார்ச்சில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது சாலையோர வியாபாரி ஒருவர் மற்றும் அவரின் மகனின் சடலத்தைக் காணோம் என்று அந்த வியாபாரியின் உறவினர்கள் பட்டை அணுகினார்கள். அப்போது அவர் பல உடல்களைத் தாண்டி புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது. முகத்திற்கு நேராக சாவைப் பார்த்ததும் அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
'பிணத்திற்குப் போர்த்தும் துணியில் பணத்துக்கென பாக்கெட் இருக்காது. மரணம் லஞ்சம் கேட்பதில்லை.' என்கிறார் பட். இவ்வளவு நாட்கள் பிணங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் சாவு பற்றிய பயம் இல்லை. பிணங்கள் மீது ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. 'அவை நன்றியுள்ளவை. அவை குறை சொல்லிக் கொண்டிருப்பதுமில்லை.' என்கிறார் பட். இறந்தோர் குடும்பத்தினருக்கும் உதவி செய்கிறார்.
பட்டின் சேவையைப் பாராட்டி பல விருதுகள் பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு வெளிநாட்டு இந்திய முஸ்லிம் தனது உயிலில் பட்தான் தனது உடலைப் புதைக்க வேண்டும் என்றுஎழுதியிருந்ததைத்தான் தனது சேவைக்கான பெரிய அங்கீகாரம் என்று பட் கருதுகிறார். பிஸினஸில் வரும் லாபம் அவர் செய்யும் சேவைக்கே சரியாக இருக்கும் என்று நண்பர்கள் ஜோக் அடிப்பதுண்டு. அவரது தர்மத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோதனை வந்தது. மும்பை - புனே நெடுஞ்சாலையில் பயணிகளுக்கு ஹோட்டலும் விபத்துகளில் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் சர்வீஸீம் நடத்தலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள். ஆனால் ஹோட்டலில் மதுவும் மாமிசமும் இல்லாததால் பிசினஸ் படுத்து விட்டது. பிறகு மீண்டும் சப்னா ஆர்ட்ஸ் காலரிக்கே திரும்பி விட்டார்.பிணத்துக்கு சேவை செய்யும் பெரிய மனசுக்காரரும் பிழைக்கணும் இல்லையா?
- நன்றி இந்தியா டுடே
பழைய செய்திதான்! படித்தவுடன் மனதை என்னவோ செய்தது. சொந்த பிள்ளைகளே வயதான தாய் தகப்பனை சரியாக கவனிக்காமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆஸ்ரமத்திலும் விட்டு விடடு தங்கள் வேலைகளை பார்த்து வரும் போதுசெத்த பிணங்களின் மேல் பாசத்தைப் பொழியும் கிஷோர் பட்டைப் போன்றவர்கள் உண்மையில் மனிதருள் மாணிக்கங்களே!
என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்
5 comments:
//"கிஷோர் பட் - இப்படியும் ஒரு மனிதர்!" //
அவருக்கு மரணத்தின் மகத்துவம் தெரிந்திருக்கிறது....... மிக நல்ல பதிவு
Hats-off to him.
திரு கோவிக் கண்ணன்! வருகைக்கு நன்றி!
ஒரு பக்கம் மும்பையில் மனித காட்டுமிராண்டிகள் அப்பாவி மனிதர்களை குண்டு வைத்து கொல்கிறார்கள். மற்றொரு பக்கம் அதே மும்பையில் சாதி மதம் பார்க்காமல் அனைத்து அனாதைப் பிணங்களையும் தன் செலவிலேயே புதைக்க ஏற்பாடு செய்கிறார் கிஷோர். ஒரு முஸ்லிம் தன் உடலை கிஷோர்தான் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார். இதுவல்லவோ மனித நேயம்!
சென்னையிலும் - திருவல்லிக்கேணியில் இப்படி ஒருத்தர் இருக்காரு...
பெயர் மறந்துபோச்சு...
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி மற்றும், Seenu
-suvanappiriyan
Post a Comment