Followers

Friday, January 26, 2007

ரத்தம் குடித்து வளர்ந்த அமெரிக்கா!

பஹாமாஸின் ஆதி குடிகளான அராவக்கியர்களை 'இந்தியர்கள்' என்று அழைத்த கொலம்பஸ் 'கட்டுடலும் அழகிய தோற்றமும் கொண்ட மனிதர்கள் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை: ஆயுதங்களை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.... நம்மிடம் ஐம்பது பேர் இருந்தால் போதும் அவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி விடலாம்' என்று குறிப்பிட்டார்.

அதை அவர் செயல்படுத்தியும் காட்டினார். ஆற்றங்கரைகளில் இருந்து தங்கத்தைத் தேடி எடுத்து வருமாறு அரவாக்கியர்களுக்கு ஆணையிடப்பட்டது. எங்கிருந்தாவது தங்கத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு கழுத்தில் செப்பு வில்லைகள் கட்டித் தொங்க விடப் பட்டன. சிறிது காலம் கழித்து யாருக்கெல்லாம் கழுத்தில் செப்பு வில்லைகள் இல்லையோ அவர்கள் எல்லாம் கைகள் வெட்டப்பட்டு ரத்தம் வற்றிச் சாகடிக்கப் பட்டனர்.

பஹாமாஸ் ஒன்றும் தங்கச் சுரங்கம் அல்ல. எனவெ உள்ளூர் மக்களைக் கொல்வது ஐரோப்பியர்களுக்கு விரைவிலேயே அலுத்து விட்டது. அதைத் தொடர்ந்து புதிய எஸ்டேட்டுகளுக்கு அரவாக்கியவர்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர். அங்கே அவர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். 1515 ஆம் ஆண்டில் இந்தியர்கள் எனப்பட்ட 50000 அரவாக்கியர்கள் மட்டுமே விட்டு வைக்கப்பட்டனர். 1550 ஆம் ஆண்டு வாக்கில் எஞ்சியவர்கள் எண்ணிக்கை 500 ஆகக் குறைந்து விட்டது. 1650 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை பஹாமாஸில் அராவக்கியர்கள் என்ற பழங்குடியினரோ அவர்களது வழி வந்தவர்களோ எவரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் செய்திகளையும் இன்னும் பல உண்மைகளையும் வரலாற்று ஆசிரியரும் நாடக ஆசிரியரும் சமூக ஆர்வலருமான ஹோவர்ட்ஸின் 'அமெரிக்காவின் மக்கள் வரலாறு' (A Peoples History Of United States) என்ற நூலில் விவரித்துள்ளார். 1980-ல் வெளியான இந்த நூல் 2005-ல் புகழ் பெற்ற பேரிலக்கியமாக மீண்டும் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பழங்குடிகள் திட்டமிட்டு அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி அவரது விரிவான ஆராய்ச்சி விளக்கியிருக்கிறது.

புதிய நாட்டைக் கண்டு பிடித்த அந்த ஆரம்பகால கண்டுபிடிப்பாளர்களின் ரத்த வெறியாட்டத்துக்குப் பிறகு வரலாறு எபபடித் தொடர்ந்தது? அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை எழுச்சி மிக்க சொற்களால் வர்ணித்த தாமஸ் ஜெபர்ஸன் (எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்...) பல நூறு அடிமைகளுக்கு எஜமானர். இந்தியர்களை அப்புறப்படுத்துதல் என்ற கொன்கையால் பெரிதும் பயன் அடைந்தவர் பின்னாளில் அமெரிக்க அமெரிக்க அதிபரான ஆண்டரூ ஜாக்ஸன்தான். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிப்பதற்கு அக்கொள்கை அவருக்கு மிகவும் உதவியது.

நம் காலத்தில் இந்த வரலாற்றில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?வியத்நாம் மீதான அமெரிக்க யுத்தம் 1969-ல் தோல்வியுறப் போகும் லட்சியமாகத் தோன்றியபோது கிஸ்ஸிங்கருக்கு ஓர் அபார யோசனை உதித்தது. நடுநிலை நாடான கம்போடியா மீது சல்லடைக் கண்கள் போலத் துளைக்கும் விமான குண்டு வீச்சுக்கு அவர் ஆணையிட்டார். கண்மூடித்தனமான அந்த விமானத் தாக்குதல் 14 மாதங்களுக்குத் தொடர்ந்தது. பதிவான கணக்குப்படி அதில் 6 லட்சம் பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கோ அமெரிக்க மக்களுக்கோ தெரியாமல் அதை கிஸ்ஸிங்கர் மறைத்து விட்டார். இதுதான் 'பேரரசுக்காக பொய் சொல்வது எப்படி? எந்த சலனமும் இன்றி போர்க் குற்றங்களை இழைப்பது எப்படி? (Lying for Empire: How tp commit War Crimes With a Straight Face)என்ற நூலை 2005-ல் டேவிட் மாடல் எழுதி வெளியிடக் காரணம் ஆயிற்று.

கடைசி நிமிடத்தில் கொலைவெறியாட்டம் ஆடியும் வியத்நாமில் கிஸ்ஸிங்கர் தோற்றுப் போனார். ஆயிரக்கணக்கான விவசாயிகளை விரட்டி அடித்ததன் மூலம் அவர்கள் தலைமறைவு கெமர் ரூஜ் கம்யுனிஸ்ட் இயக்கத்தில் சேர்வதற்கும் அமெரிக்காவின் கைப்பாவை அரசை அவர்கள் தோற்கடிப்பதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாக இருந்தார். இதன் மூலம் கம்போடியாவையும் இழந்தார் கிஸ்ஸிங்கர்.

கொலம்பஸால் எது தொடங்கி வைக்கப் பட்டதோ அமெரிக்காவின் ஸ்தாபகர்களும் அமெரிக்க அதிபர்களும் எதைத் தொடர்ந்து செய்தார்களோ அது இன்றும் மாறாமல் தொடர்வதை நாம் பார்க்கிறோமா இல்லையா? கொரியாவைத் தாக்கினார்கள்: வியத்நாம்,கம்போடியா,லாவோஸைத் தாக்கினார்கள்: தலைவர்களைப் படுகொலை செய்தார்கள். (உதாரணம் சிலி அதிபர் ஆலண்டே) ராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினார்கள்.(உதாரணம் இந்தோனேஷpயா) தற்போது ஹை-டெக் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.(உதாரணம் ஈராக்)

சதாம் ஹீசைன் தூக்கிலிடப்பட்டு அவரது சடலம் அவமதிக்கப்பட்டபோது நம் காலத்தின் மிகவும் அநியாய யுத்தம் கடைசியில் முடிவுக்கு வரப் போகிறது என்று உலகம் நினைத்தது. ஆனால் ஏற்கெனவே 130000 அமெரிக்க வீரர்கள் இராக்கில் இருக்கும் நிலையில் மேலும் 20000 அமெரிக்க வீரர்களை அங்கு புஷ அனுப்ப இருக்கிறார்.

இறந்தவரின் சடலத்தை அவமதிப்பது என்பது தூக்கிலிடப்பட்டவரின் மதத்துக்கும் அவரைத் தூக்கிலிடக் காரணமாக இருந்தவரின் மதத்துக்கும விரோதமானது. இதன் மூலம் மதத்தை மீறி செயல்பட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர். இராக் போரைத் தீவிரப் படுத்துவதன் மூலம் உலக மக்களின் கருத்தை மீறி அமெரிக்க மக்களின் எண்ணத்தை மீறி அமெரிக்க ராணுவ நிபுணர்கள் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் பலரின் ஆலோசனைகளை மீறி ஜார்ஜ் புஷ செயல்பட்டிருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றின் ரத்தம் தோய்ந்த தடத்தை விட்டு ஜார்ஜ் புஷ விலகவில்லை. அதுதான் ஆபத்து நமது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்.

நன்றி
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
தினமணி 21-01-2007

4 comments:

Unknown said...

குலை நடுங்க கொலை செய்யும் கொலை வெறியர்கள், சிலரது கண்களுக்கு மட்டும் இன்னும் ஆபத்பாந்தவான்களாக எப்படித் தெரிகிறார்கள்.

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன் has left a new comment on your post "ரத்தம் குடித்து வளர்ந்த அமெரிக்கா!":

மனிதத்தன்மையற்ற கொடூர செயல்கள்தாம் சுவனப்பிரியன். அமெரிக்கா மட்டுமல்ல காலனி விரிவாதிக்கத்தை எய்த ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய கொடுமைகளை செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்பிரிக்கா என ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் கொடுமைகள் நடந்திருக்கின்றன. ஆனால் அரேபிய தேசங்களும் ஆப்பிரிக்க நாடுகளில் நடத்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் ஒரு காலகட்டத்தில் பொதுவாகவே காஃபிர் என அழைக்கப்பட்டனர். ரத்தம் குடித்து வளர்ந்தது அமெரிக்கா என்பது உண்மையே. அது ஐரோப்பிய அரேபிய நாடுகளுக்கும் பொருந்தும். 'தமது கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை மற்ற மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்காதவர்கள் பாரத மக்களே' என அப்துல்கலாம் கூறியதை இத்தருணத்தில் நீங்கள் நினைவில் கொள்ளலாம்.

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

உங்கள் கருத்தைப் பிரசுரிக்கும்போது பிளாக்கர் ஒத்துழைக்க மறுத்தது. எனவே உங்கள் கருத்தை என் பெயரில் வெளியிட்டுள்ளேன்.

ஆதிக்க சக்திகள் காலகாலமாக வறியவர்களை அடக்கி ஒடுக்கி வந்துள்ளன. மற்ற நாடுகளை விட ஆரம்பத்தில் இருந்து ரத்தம் குடித்து வளருவதில் அமெரிக்கர்கள் கை தேர்ந்தவர்கள்.

//ஆனால் அரேபிய தேசங்களும் ஆப்பிரிக்க நாடுகளில் நடத்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் ஒரு காலகட்டத்தில் பொதுவாகவே காஃபிர் என அழைக்கப்பட்டனர்.//

முகமது நபி காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக பல நபித் தோழர்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பப் பட்டது உண்மையே! இதை அந்த மக்களே விரும்பி ஏற்றுக் கொண்டனர். கொலை கொள்ளை மலிந்திருந்த அந்த சமூகம் இஸ்லாத்தின் வரவால் புத்துயிர் பெற்றது. காபிர் என்ற வார்த்தைப் பிரயோகம் இஸ்லாத்தை ஏற்காத மக்களுக்கு அடையாளப் பெயராக உபயோகப்படுத்தப்பட்டது. இது சம்பந்தமாக நான் முன்பே விரிவாக விளக்கியுள்ளேன்.

பாரத நாடு அன்று முதல் இன்று வரை நாடு பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கவிலலை என்பதில் இந்தியனான எனக்கும் பெருமையே! ஆனால் மற்ற நாடுகளை விட தீண்டாமைக் கொடுமை இன்று வரை நாடு முழுக்க நீக்கமற நிறைந்திருப்பது நம் பாரத நாட்டில்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அந்த நிலை மாறி எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலைக்கு நம் நாட்டைக் கொண்டு வர நாம் அனைவரும் பாடுபடுவோம்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சுல்தான்!

//குலை நடுங்க கொலை செய்யும் கொலை வெறியர்கள், சிலரது கண்களுக்கு மட்டும் இன்னும் ஆபத்பாந்தவான்களாக எப்படித் தெரிகிறார்கள்.//

அதுதான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!