Followers

Monday, August 04, 2008

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

ராசிதுல் கனூசி - துனிசியாவின் இஸ்லாமிய இயக்கமான 'ஹர்கத்துந் நஹ்தா' வின் தலைவர் ஆவார். இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர். அடக்குமுறை ஆட்சியாளர்களால் துனீசியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டவர். தற்போது இலண்டனில் வசித்து வரும் அவர் அண்மையில் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்காக கேரளா வந்திருந்த போது அளித்த நேர்காணல்.

கேள்வி : துனீசியாவில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள்? சிறைக்காலத்தில் துன்புறுத்தப்பட்டீர்களா?

ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். குறிப்பிடத்தக்க அளவிலான கொடுமைகள் எதனையும் அனுபவிக்கவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த அறைகளில் எனது சகோதரர்கள் துன்புறுத்தப்படுகின்ற அலறலைக் கேட்டுள்ளேன். எங்களின் இரு ஊழியர்களைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றனர். அதிபர் புர்கீபாவின் காலத்தில் இது நடைபெற்றது. முழுமையான இஸ்லாமிய விரோதியாக இருந்தார் அதிபர் புர்கீபா. புனித ரமளானில் வெளிப்படையாக மது அருந்திவிட்டு, நோன்பு நோற்பது நாட்டின் பொருளாதார பின்னடைவுக்குக் காரணமாகும் எனக் கூறிய தான்தோன்றி அவர். அரபி மொழியையும் ஹிஜாப் முதலான இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள் அனைத்தையும் தடை செய்த சர்வாதிகாரி.

ஆனாலும் கூட அக்காலத்தில் சிறையில் தொழுவதற்க்கும் வாசிப்பதற்க்கும் சுதந்திரம் இருந்தது. 'இஸ்லாமிய அரசில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள்' எனும் நூலை நான் சிறையில் இருந்தபோதுதான் எழுதினேன். ஆனால் இன்று சிறையில் அந்த சுதந்திரம் கூட இஸ்லாமிய இயக்கத்தினருக்கு மறுக்கப் பட்டுள்ளது. முப்பதாயிரம் இஸ்லாமிய இயக்கத்தினர் இன்றும் சிறையில் உள்ளனர். அவர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதும் கொல்லப்பட்டு ஷஹீதாவதும் சாதாரண நிகழ்வுகளாக மாறிப் போயுள்ளன.

கேள்வி: இப்போது உங்கள் மீதான துனீசிய அதிகாரிகளின் அணுகுமுறை எப்படி உள்ளது?

எனக்கு எதிராக உலகம் முழுவதும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால்தான் அமெரிக்காவுக்கும் பெரும்பான்மையான அரபு ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.

கேள்வி: பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள உங்களுக்கு அங்கு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா?

பிரிட்டன் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. சியோனிஸ்டுகளும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் சில சமயங்களில் எனக்கு எதிராக திரும்புவதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் பிரிட்டன் நீதிமன்றத்தை அனுகுவது என்னுடைய வழக்கம். நீதிமன்றம் எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்து குற்றம் சாட்டியவர்களிடம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கேள்வி: அண்மையில் காண்டர்பரி ஆர்ச் பிஷப் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் பிரிட்டனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சில சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பிரிட்டன் போன்ற ஒரு நவீன நாட்டிற்க்குத் தேவையான சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத்தில் உள்ளன எனும் எண்ணத்தை ஏற்ப்படுத்த, அதுவும் முஸ்லிம் அல்லாத ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தைப் பரவலாக்க அவரது அறிக்கை உதவியுள்ளது. இதற்க்காக தேவாலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பை அவர் எதிர்க் கொள்ள நேரிட்டது. ஆனாலும் அதனை அவர் திரும்பப் பெறவில்லை. சபையிலிருந்து அவரை வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதிலும் 160 பேரில் 62 பேர் மட்டுமே அதனை ஆதரித்தனர்.

இப்போது கூட சில இஸ்லாமிய சட்டங்களை பிரிட்டன் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய வங்கிகளை பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வருகிறது. வட்டி இல்லா இஸ்லாமியப் பொருளாதார முறையை அந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்க்கான ஆதாரம் தானே இது.

கேள்வி: அண்மைக் காலமாக முஸ்லிம் உலகில் வளர்ந்து வருகின்ற தீவிரவாத - பயங்கரவாத செயல்களைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? பிரிட்டனில் 7-07 தாக்குதல், செப்டம்பர் 11 தாக்குதல் ஆகியன சில உதாரணங்கள். செப்டம்பர் 11 தாக்குதலில் அல்காயிதா இல்லை எனும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரிட்டனில் நடைபெற்ற 7-07 தாக்குதல் ஒரு துயரம்தான். அல்காயிதாதான் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமாக இருந்தது. இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் அதன் மூலம் பெரிய இழப்புகள்தான் ஏற்பட்டன.

செப்டம்பர் 11 நிகழ்வும் வேறுபட்டதல்ல. இஸ்லாத்தின் நன்மதிப்பைக் களங்கப்படுத்துவதில் அந்த நிகழ்வு முக்கிய பங்கை வகித்துள்ளது.

கேள்வி: பாலஸ்தீன பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸின் எதிர்காலம் குறித்து...?

ஹமாஸ் காஸாவைக் கைப்பற்றிய நிகழ்வு பாராட்டத்தக்கது. அவர்கள் முன் வேறு வழிகள் இருக்கவில்லை. நிலை பெறத் தகுதியானவர்கள் அவர்கள். ஃபத்ஹின் கதை முடிந்து விட்டது. அவர்களின் தலைவர் தஹ்லான் அரண்மனையிலும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாஅகதி முகாமிலும் வாழ்கின்றனர். அதுதான் ஹமாஸின் அந்தஸ்து.

உடலில் சில வைரஸ் கிருமிகள் புகுந்தால் உடலை உசுப்பி விடும் என்பதைப் போல இஸ்லாமிய சமூகத்தை உத்வேகம் பெறச் செய்யக் கூடிய வைரஸ்தான் இஸ்ரேல். இஸ்ரேலின் பிறப்பும் அந்த நாடு நடத்திக் கொண்டிருக்கிற அடக்கு முறைகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாய் அமைந்துள்ளன. முஸ்லிம் உலகில் இஸ்லாமிஸ்டுகளையும் மதசார்பற்றவாதிகளையும் ஒருங்கினைத்த விஷயம்தான் பாலஸ்தீன பிரச்னை. இஸ்ரேல் இப்போது மரணப்படுக்கையில் கிடக்கிறது. மேற்குலகத்தால் அதனை அதிக காலம் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி: இந்தியாவில் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும்?

எட்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிறகும் இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே தேவையான விதத்தில் தங்களின் இலட்சியக் கொள்கையை எடுத்துரைக்க இயலாமல் போனது என்னை ஆச்சரியப் படுத்துகிறது. இது குறித்து மஸ்ஊத் ஆலம் நத்வி விளக்கமாக எழுதியதை நான் படித்துள்ளேன். பன்மைச் சமூகத்தில் வாழ்கின்றபோது இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்ப்படுத்த முஸ்லிம் சமூகத்தால் இயல வேண்டும்.

கேள்வி: பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றபோது பதிலுக்கு பதிலாக அதே போன்று எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அத்தகைய எதிர்த்தாக்குதல்கள் பாதிப்பையே ஏற்படுத்தும். முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால அதை அரசை நிர்பந்தம் செய்து அரசின் மூலமே சாதிக்க முயல வேண்டும். சுயமாகச் செய்யக் கூடாது. இந்தியா போன்ற வலிமையான ஜனநாயக நாட்டில் அந்த ஜனநாயத்தைப் பயன்படுத்தியே நம்மை நாம் தற்க்காத்துக் கொள்ள வேண்டும்.

சந்திப்பு : டாக்டர் அப்துல் சலாம்.

No comments: