Followers

Saturday, April 11, 2009

4வது அணி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்



சென்னை: லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப் பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.

கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பரவலாக ஆதரவு உள்ளது. லோக்சபா தொகுதிகளில், கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் இக்கட்சி கணிசமாக ஓட்டுக்களை கொண்டுள்ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்தது. முதலில், தி.மு.க., வுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட் டது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தி.மு.க., இக் கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க., ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது.

இதையடுத்து, தங்கள் கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை ஒருங்கிணைத்து, லோக்சபா தேர்தலைச் சந்திக்க அக்கட்சி திட்டமிட்டது. இதன்படி, நடிகர் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள் ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், "பெரும்பாலான தேர்தல்களில் தி.மு.க.,விற்குத் தான் த.மு.மு.க., ஆதரவு அளித்து வந்தது. புதுச்சேரி உட்பட 40 லோக்சபா இடங்களை தி.மு.க., கூட்டணி பெறவும், தமிழ கத்தில் தி.மு.க., ஆட்சி ஏற்படவும் த.மு.மு.க., பெரும்பங்கு வகித்தது. பொதுவாக முஸ்லிம் ஓட்டுக்கள் தி.மு.க.,விற்குத் தான் அதிகம் கிடைக்கும். இந்நிலையில், அச் சமூகத்தினரின் அதிகமான ஓட்டுக் களை கைவசம் வைத்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிடுவதால், அதிக நஷ்டம் தி.மு.க.,விற்கு ஏற்படும். அதேவேளையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க.,விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.

நன்றி: தின மலர்

இவர்களால் தேர்தலில் எதுவும் சாதிக்க முடிகிறதோ இல்லையோ 'சிறுபான்மையினரை வார்த்தை ஜாலங்களால் மயக்கி விடலாம்' என்ற எண்ணத்தில் இனி கலைஞரோ ஜெயலலிதாவோ காய் நகர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இனி ஓட்டு வாங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இதை கலைஞரோ ஜெயலலிதாவோ உணர்ந்ததாக தெரியவில்லை.

பார்ப்போம் அரசியல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று.

3 comments:

பீர் | Peer said...

நிச்சயமாக பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தனித்து போட்டி என்ற முடிவு அவர்களுக்கு (ம ம க) பொதுமக்கள் மத்தியில் நல்ல உருவத்தை தோற்றுவித்துள்ளது என்பது உண்மையே...

Unknown said...

மக்கள் திமுகவுக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டு மமகவுக்கு ஓட்டளிக்க வேண்டும். இந்த முடிவு மக்கள் மத்தியில் மமகவுக்கு ஒரு நற்பெயரையே சேர்த்துள்ளது.
இனி பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் சரியாக சிந்திக்க முயற்சிக்கும்.

suvanappiriyan said...

நண்பர் பீர்!

பாட்டாளி மக்கள் கட்சியிடம் எப்படி அரசியல் நடத்த வேண்டும்: எப்படி தன் மக்களுக்கு அரசியல் ரீதியாக உரிமைகளை பெற முடியும் என்று நம்மவர்கள் பாடம் எடுத்துக் கொண்டால் நல்லது.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!