Followers

Sunday, April 12, 2009

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்- இலங்கையும் கலைஞரும்!

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

தமிழர்கள் பேரணியில் பேசிய கருணாநிதி, அலெக் சாண்டருக்கு நிகரான ஒரு மன்னனை போல் பிரபாகரனை நடத்த வேண்டும் என்றும், போர் முடிந்த பின் இலங்கையில் அதிகாரப் பகிர்வு மூலம் சம சுதந்திரத்தோடு வழிவகுக்க வேண்டுமென்றும் குறிப் பிட்டதை, இங்குள்ள நெடுமாறன் கும்பல் திசை திருப்பிப் பேசி வருவதை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கேள்வி யுற்று நெடுமாறன் கும்பலைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார் களாமே, உண்மையா?

வரலாறு படிக்காதவர்கள் அல்லது படித்தவர்கள் சொல்லி காதில் வாங்காதவர்கள் வேண்டுமானால் நெடுமாறன் கும்பலைப் பாராட்டி மகிழலாம். பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற ஜெயலலிதாவுக்கு நன்றி கூட தெரிவிக்கலாம். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இப்படி தவறான பேர்வழிகளின், தவறான பேச்சைக் கேட்டு, தவறான முறைகளைக் கடைபிடித்ததால் தான், இலங்கைத் தமிழர்களின் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமலேயே இருக்கிறது என்பதை இலங்கைத் தமிழர் கள் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள நடுநிலையாளர் கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த நடுநிலையாளர்களில் நானும் ஒருவன்.

அ.தி.மு.க.,வில் கூட்டணி தர்மம் உள்ளது என்றும், தி.மு.க., கூட்டணியில் அது இல்லை என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

அ.தி.மு.க., கூட்டணியில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், ம.தி.மு.க.,வுடனும் உடன் பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வந்தது. அதனால் தான், 3ம் தேதி மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில், அ.தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண்பதற்கும், உடன்பாடு எட்டாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யவும் கட்சியின் மாநில செயற்குழுவுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதில் ஏற்பட்ட சிக்கலால் காத்துக் காத்துக் களைத்துப் போன வைகோ விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, "கூட்டணி பற்றியோ, தேர்த லைப் பற்றியோ சிந்திக்கக் கூடிய மனநிலையில் இல்லை' என்று மனம்நொந்து பேசினார்.

இப்படி நம்பி வந்தவர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு, மனம் நைந்து போகும் அளவுக்கு இழுபறி நிலையை வேண்டுமென்றே நீட்டித்து வேடிக்கை பார்ப்பதைத் தான் கூட்டணி தர்மம் என்று ராமதாஸ் கூறுகிறாரோ என்னமோ?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் அரசு ஏதும் செய்யவில்லை என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

ஐந்தாண்டு காலம் தொடர்ந்து மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்து, இரண்டு முக்கிய இலாகாக்களின் அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்திலும், கூட்டணியில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில் பிரதமர் மன் மோகன் சிங், சோனியாவை சந்தித்து தனக்குத் தேவையானதைப் பற்றிப் பேசிய போதும், ராமதாஸ் அவரது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால், அவரது நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டியிருக்கலாம்.

கடைசிக்கணம் வரை பதவிச் சுகத்தை கரும்பாகச் சுவைத்து விட்டு, இப்போது காங்கிரஸ் அரசு மீது புழுதிவாரித் தூற்றுவதை, தமிழகத்து மக்கள் நிச்சயம் பதம் பிரித்துப் பொருள் புரிந்து கொள்வர். லோக்சபா தேர்தலையொட்டி, அவர் ஓதுவதையெல்லாம் "வேதம்' என்றா ஒத்துக்கொள்ள முடியும்?

இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையா?

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் நன்றாகவே அறிவர். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும், இலங்கையில் ஒன்றுபட்ட அமைப்புக்குள், அங்கு வாழும் அனைத்துத் தரப்பினரும் சம உரிமைகளைத் துய்க்க உறுதி செய்யப்படும் வகையில், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அடிப்படையாக அமைந் துள்ள இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் குறிப் பிட்டுள்ளபடி, சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்பந்தத்தை எட்ட காங்கிரஸ் உதவிடும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கபட நாடகம் என்று ராமதாஸ் போன்றவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். அதையும் வெளியிட இங்கே சில எரிச்சல் ஏடுகள் தயாராகவே இருக்கின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு கலைஞர் முன்பே வந்திருந்தால் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாதல்லவா!

இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங் களை முன்னிட்டு, இலங்கை அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்புப் பகுதியில் புலிகள் வசம் சிக்கியுள்ள அப்பாவி மக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக 48 மணி நேர போர் நிறுத்தம் செய்யப்படும். இந்த போர் நிறுத்தம் இன்று(நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புத்தாண்டு போன்ற கொண் டாட்ட காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் இதற்கு முக்கிய காரணம். இந்த வாய்ப் பை புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு உடனடியாக சரணடைய வேண்டும். தங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ள தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் சம்மதம் உண்டா? இதற்கிடையே, பாதுகாப்புப் பகுதியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசு சார்பில் வெளியாகும், "சண்டே அப்சர்வர்' பத்திரிகையில், "புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் சண்டையில் பலியாகி விட்டனர். பொட்டு அம்மான், சூசை போன்ற சிலர் தான் தற்போது பிரபாகரனுடன் உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், பாதுகாப்புப் பகுதியிலுள்ள அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு, பிரபாகரன் சம்மதம் தெரிவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் வசம் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அங்கிருந்து வெளியேற வசதியாக, கடந்த ஜனவரியில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதற்கு பின், தற்போது தான் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஐ.நா., கருத்தின்படி போர் நடக்காத பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவித் தமிழர்கள் ஒரு லட்சம் பேர், இப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டுமென அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இப்போர் நிறுத்தத்தை அரசு அறிவித்திருக்கிறது. இப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை சத்தம் வரக்கூடாது என்பதை அமைதி காண விரும்பும் இந்த நாடுகள் வலியுறுத்தியதுடன், மக்கள் மீட்பு முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளன. இதற்கிடையே, புதுக்குடியிருப்பு அருகே நடந்த சண்டையில் 20 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாவது அப்பாவி தமிழர்கள் போர் பகுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

போர்... போர்... போர்.... என்று தங்களின் வாழ்நாளைக் கழித்த அந்த மக்கள் இனியாவது அமைதியான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.

4 comments:

Unknown said...

//வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாவது அப்பாவி தமிழர்கள் போர் பகுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

போர்... போர்... போர்.... என்று தங்களின் வாழ்நாளைக் கழித்த அந்த மக்கள் இனியாவது அமைதியான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்//

இதை மனமாற நான் வழி மொழிகின்றேன். போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது முற்றாக தடை பட வேண்டும்.

சவுக்கடி said...

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் நன்றாகவே அறிவர்////

ஆம்!
நடுதிலையாளர்கள் நடுவணரசின் நடவடிக்கைகளை அறிவர்!

'ராடார்' முதல் நச்சுக்குண்டு வரை அனைத்து ஆய்த உதவிகளையும் இனவெறிச் சிங்களருக்கு தந்து வருகிறது.

வட்டியில்லாமலும் வட்டிக்கும் நிதியை பல்லாயிரங்கோடி வாரிக் கொடுக்கிறது.

'ராடார்' முதலான கருவிகளை இயக்க தேவையானவர்களை அனுப்பி வைக்கிறது.

படை நடத்த போர்த்தோழில் நுட்பந் தெரிந்த படை அதிகாரிகளை அனுப்பு உள்ளது.

ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரையே ஈழப் போர்க்களத்தில் இறக்கி யிருக்கிறது.

உளவு ஊர்தி, இரவில் காணுங் கருவி, இருட்டில் படமெடுக்கும் கருவி போன்ற பலவேறு முன்னேற்றமான கருவிகள் வழி புலிகளிடம் உளவறிந்து சிங்களனுக்குப் பரிவாய்ச் சொல்லிக் கொடுக்கிறது.

உலகநாடுகள் எல்லாம் போரை நிறுத்த வலியுறுத்திய போதும் நேரடியாகச் சிங்களக் கொலை வெறியரிடம் போர்நிறுத்தம் தொடர்பாக வாய் திறக்காதிருக்கிறது.

போர் நிறுத்தத்திற்குத் தாங்கள் ஒப்புவதாக புலிகள் தெளிவாக அறிவித்ததைத் தெரியாத்து போல நடித்துக் கொண்டு இரு பிரிவாரும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நம்மிடம் கூறி வருகிறது.

ஐ.நா.வும் அனைத்து நாடுகளும் இன அழிப்பைக் கண்டுக் கவலைப்பட்டு இலங்கையை எச்சரித்தாலும் சிங்களரின் வலுவான துணையாயிருந்து போரை நடத்துகின்றது.

நோம்சாம்சுகி போன்ற அறிஞரெல்லாம் நிலையான தீர்வுக்கு நாட்டுப் பிரிவினையையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி வந்தாலும், இறையாண்மைச் சனியனான சுமக்கமுடியாத பாறாங்கல்லை,ஈழத்தமிழர் தலையில்
இருந்து இறக்கவே கூடாதென அழிச்சாட்டியம் செய்கிறது.

பட்டியல் இன்னும் தொடரும். தட்டச்சு செய்ய கைவிரல் வலிக்கிறது!

suvanappiriyan said...

திரு சவுக்கு!

//ஆம்!
நடுதிலையாளர்கள் நடுவணரசின் நடவடிக்கைகளை அறிவர்!

'ராடார்' முதல் நச்சுக்குண்டு வரை அனைத்து ஆய்த உதவிகளையும் இனவெறிச் சிங்களருக்கு தந்து வருகிறது.

வட்டியில்லாமலும் வட்டிக்கும் நிதியை பல்லாயிரங்கோடி வாரிக் கொடுக்கிறது…..//

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதிலும் என் இன மக்கள் அங்கு தினமும் செத்துப் பிழைப்பதையும் காண சகிக்காமல்தான் இந்த பதிவையே இட்டேன்.

இவை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர முதலில் மக்களை கேடயமாக பயன்படுத்துவதை விட்டொழிக்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கை விட்டு இந்திய அரசும் தமிழக அரசும் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுகிறோம் என்ற நிலைக்கு இறங்கி வர வேண்டும். பிரபாகரனும் தனக்கு எதிராக பேசும் எவரையும் அது தமிழர்களாக இருந்தாலும் போட்டுத் தள்ளும் வன்முறை வழி முறையை விட்டொழிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் பிரபாகரன் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் 'உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இனி தமிழகத்திலிருந்தோ, இந்திய அரசிடமிருந்தோ எந்த சலுகையையும் எதிர்பார்க்காதீர்கள்' என்று இலங்கைப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழகமும் காப்பாற்றப்பட இது ஒன்றுதான் வழி. அரசியல்வாதிகளும் 'இலங்கை பிரச்னையை மேலும் குழப்பாமல் இருக்க அறிக்கைப் போர்களையும் நிறுத்த வேண்டும்'. இவை எல்லாம் நடை பெறாத பட்சத்தில் 'தமிழின துரோகி' என்ற பட்டத்தை சகட்டு மேனிக்கு எல்லோருக்கும் கொடுத்து கொண்டு தன் குடும்பத்தை மட்டும் வளமாக்கிக் கொள்ளும் கூட்டங்கள் அதிகரிக்கும். அப்பாவி மக்கள் வழக்கம்போல் சிரமத்தை அனுபவிப்பர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suvanappiriyan said...

திரு சுல்தான்!

//இதை மனமாற நான் வழி மொழிகின்றேன். போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது முற்றாக தடை பட வேண்டும்.//

உங்கள் கருத்தே என் கருத்தும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!