Followers

Monday, April 27, 2009

இலங்கை பிரச்னை ஒரு இடியப்ப சிக்கல்!



இன்று கலைஞரும் தன் பங்குக்கு உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து விட்டார். இவரின் உண்ணாவிரதத்தாலோ அல்லது சோனியாவின் நெருக்குதலாலோ தற்போது மேலிருந்து தாக்குதல் நடத்துவதை ஸ்ரீலங்கா படைகள் நிறுத்தி வைத்துள்ளன. ஏதோ ஒரு வகையில் அந்த அப்பாவி பொதுமக்களுக்கு விமோசனம் கிடைக்கட்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மேலும் மக்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். நமது நாடும் இந்த மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் 100 கோடி தருவதாக சொல்லியிருப்பதை வரவேற்போம். இந்த உதவி மேலும் அதிகரிக்க வேண்டும். அந்த மக்களின் சுகாதாரம் பிள்ளைகளின் படிப்பு தற்கால குடியிருப்புகள் போன்றவற்றிற்கு இந்த பணமெல்லாம் மிக சொற்பமே! பொது மக்களிடமிருந்தும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்தும் வசூல் செய்யலாம். அந்த மக்களுக்கு இந்த உதவிகள் முறையாக போய் சேருகிறதா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்திலாவது நமது மரம் வெட்டி ராமதாஸூம், வாய்ச்சவடால் வைகோவும், கூத்தாடிகளான ஜெயலலிதா விஜயகாந்த் போன்றோர் காழ்ப்புணர்ச்சிகளை தூரமாக்கி அந்த மக்களுக்கு உதவுவதில் அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதில் எல்லோருக்கும் கோபம் வருவது இயற்கை. இதனால் இலங்கை அரசாங்கத்தையும் அதை கண்டிக்காத சோனியா, கலைஞர் போன்றோரையும் எப்படி எல்லாம் திட்ட வேண்டுமோ அத்தனை வசை மொழிகளையும் போட்டு பதிவர்களாகிய நாம் திட்டி தீர்த்து விட்டோம். இங்கு ஒன்றை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். அந்த அப்பாவி மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை நாம் யாருமே கண்டிப்பதில்லை. ஏனென்றால் கண்டிக்கும் அனைவருக்கும் 'தமிழின துரோகி' என்ற பட்டம் கிடைத்து விடுமே என்ற பயம் தான். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வந்து பலரும் '12, 13 வயது என் பிள்ளளைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களை மீட்டுக் கொடுங்கள் அய்யா!' என்று கதறி அழுதது என் கண்ணில் நீரை வரவழைத்தது. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதரை அரியணையில் ஏற்றுவதற்காக இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோம்?

பத்மனாதன், அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி, ஆயிரக்கணக்கில் தமிழ் முஸ்லிம்கள், இன்று அரணாக பலி கொடுக்கப்படும் வன்னி பகுதி மக்கள் என்று இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைத்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் ஈழம் உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்படியே உருவானாலும் சர்வாதிகாரியான பிரபாகரனை தலைவனாக தமிழ் முஸ்லிம்கள் என்றுமே ஏற்க்கப் போவதுமில்லை. தமிழர்களிலேயே பாதிக்கு மேற்பட்டவர்கள் பிரபாகரனை தலைவனாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலையில் இவர் எந்த காலத்தில் தமிழ் ஈழத்தை உருவாக்கப் போகிறார்? எனவே எஞ்சியுள்ள மக்களை காப்பாற்றவாவது புலிகள் சரணடைந்து இலங்கைப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

அகதி முகாம்களில் தங்கியுள்ள அந்த மக்களுக்கு சாதி மத பேதமின்றி உதவிகள் போய்ச் சேர வேண்டும். அந்த மக்களுக்கு சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவனை இந்நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.

4 comments:

Unknown said...

வயது முதிர்நத ஒரு தலைவரைப் பற்றி பேசுகிறோம் என்ற எண்ணமில்லாமல் அவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்தவற்றை எல்லாம் மறந்து அல்லது பின் தள்ளி விட்டு என்னென்ன அசிங்கமான வார்த்தைகளை உதிர்க்க வேண்டுமோ அத்தனையும் உதிர்த்து தங்களைப பலர் பறைசாற்றிக் கொண்டுள்ளனர்.

//அப்பாவி மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை நாம் யாருமே கண்டிப்பதில்லை. ஏனென்றால் கண்டிக்கும் அனைவருக்கும் 'தமிழின துரோகி' என்ற பட்டம் கிடைத்து விடுமே என்ற பயம் தான்//

சரியாகச் சொல்லி உள்ளீர்கள்.

அதே அவர்கள் இப்போது உங்களைப் பற்றியும் அதைப் போன்றே பின்னூட்டத்தில் திட்டத் தொடங்குவர். பின்னூட்ட மட்டுறுத்தலை சரிவர பாருங்கள்.

suvanappiriyan said...

திரு சுல்தான்!

நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் ஒரு வாசகர் 'நீங்கள் ஏன் இலங்கை பிரச்னையைப் பற்றி ஏதும் எழுவதில்லை?' என்று கேட்டார். அதற்கு சாரு 'என் மேல் ஏன் இந்த கொலை வெறி. நான் உயிரோடு இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என் மனத்தில் எழும் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல இதனால் இங்குள்ள சிலர் என்னை கொல்லவும் செய்யலாம். எனக்கெதற்கு வம்பு' என்கிற ரீதியில் பதில் சொன்னார். பிரபலமான எழுத்தாளருக்கே இந்த நிலை.

சமீபத்தில் அமைதியாக நடந்த மீலாது விழாவில் தற்கொலை குண்டுதாரி தாக்கி பல உயிர் இழப்பு. அமைச்சர்கள் படுகாயம். இதையும் எவரும் கண்டிக்கவில்லை. அந்த அளவு அனைவரையும் மிரட்டி வைத்துள்ளனர்.

நமது மக்களை அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

Anonymous said...

//இங்கு ஒன்றை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். அந்த அப்பாவி மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை நாம் யாருமே கண்டிப்பதில்லை. ஏனென்றால் கண்டிக்கும் அனைவருக்கும் 'தமிழின துரோகி' என்ற பட்டம் கிடைத்து விடுமே என்ற பயம் தான்.//

உண்மையை கூறிய உங்களை பாராட்டுகிறேன்.

Anonymous said...

கொழும்பு: "முன்னாள் பிரதமர் ராஜிவைக் கொலை செய்ததற்கான சதித் திட்டத்தை விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் மிக ரகசியமாகத் தீட்டினர். புலிகள் அமைப்பைச் சேர்ந்த மற்ற யாருக்கும் இது குறித்து எந்த விவரமும் தெரியாது' என, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா தெரிவித்துள்ளார்.




விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா, தற்போது இலங்கை அமைச்சராக உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம். இதை பிரபாகரன் ஏற்கவில்லை. முன்னாள் பிரதமர் ராஜிவைக் கொலை செய்வதற்கான சதித் திட் டம் மிகவும் ரகசியமாகத் தீட்டப் பட்டது. பிரபாகரனும், புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தான் இந்த கொடூர சதித் திட்டதைத் தீட்டினர்.




இதுகுறித்த எந்த ஒரு தகவலும், இந்த இருவரைத் தவிர புலிகள் அமைப்பைச் சேர்ந்த வேறு யாருக்கும் தெரியாது. ராஜிவைக் கொலை செய்தது புலிகள் இயக்கம் செய்த பெரும் தவறு. இதுபோன்ற கொடூரத் திட்டங் களை நிறைவேற்றுவதற்கு எப்போதுமே நான் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன். வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்ற என் கோரிக் கையை பிரபாகரன் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் அவமதிக்கப்பட்டேன். பாலசிங்கமும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையும் பிரபாகரன் ஏற்க மறுத்துவிட்டார். இவ்வாறு கருணா கூறியுள்ளார்.