முகமது நபி காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது உயர் குலத்து பெண்ணொருத்தி திருடி விட்டார். எனவே அவருடைய குலத்தார் தண்டனைக்கு அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும் படி கோரி நபித் தோழர் ஜைத் அவர்களிடம் வந்தார்கள். ஜைத் அவர்கள் முகமது நபியிடம் அந்த பெண்ணுக்காக பரிந்து பேசியபோது முகமது நபி அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறியது. 'இறைவனின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்து அதைத் தளர்த்தி விடும்படி என்னிடம் நீ பரிந்தா பேசுகிறாய்?' என்று கேட்டார்.
மாலை நேரம் வந்தபோது முகமது நபி மக்களுக்கு உரையாற்ற எழுந்து நின்றார். 'உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம்மிடையேயுள்ள உயர்ந்தவன் திருடிவிடும் போது அவனை தண்டிக்காமல் விட்டு வந்ததும் பலவீனமானவன் திருடி விடும்போது அவனுக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். இறைவன் மீது ஆணையாக! என் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டியிருப்பேன்.' என்று அம்மக்களிடம் பிரசிங்கித்தார்.
அறிவிப்பவர் ஜூபைர். ஆதாரம் புகாரி.
சட்டத்துக்கு முன் பாகுபாடு காட்டப்படுவதை தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்ற போதனையை இதன் மூலம் நாம் பெறுகிறோம். இத்தகைய எண்ணவோட்டம் நமது அரசியல்வாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கிறதா என்றும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறோம். எத்தனை பொய்கள்! எத்தனை ஊழல்கள்! கொலையே செய்தாலும் கட்சித் தலைவரின் மகன் என்றால் தைரியமாக உலா வர முடிகிறது. நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் திரும்பவும் ஓட்டுக் கேட்டு மக்களிடம் வர முடிகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மதத் தலைவர் தண்டிக்கப்படாமல் தனது பணியை திரும்பவும் செய்ய முடிகிறது. இவை எல்லாம் சட்டம் எல்லோருக்கும் இந்நாட்டில் சமமில்லை என்பதையே காட்டுகிறது.
அடுத்து தேர்தல் கூத்து நமது நாட்டில் ஆரம்பமாகி விட்டது. பொருளாதார பலம் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றி பெறும் சூழ்நிலை. 500க்கும் 1000க்கும் ஓட்டுக்கள் விலை போவது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மேலும் என்ன என்ன தமாஷாக்கள் அரங்கேற்றப் படுகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
2 comments:
இங்கு ஜனநாயகம் பணநாயகமாய் மாறி காலம் பலவாகி விட்டது. இது ஒரு சரியான ஜனநாயக முறையா என்ற கேள்விதான் மனதில் தொக்கி நிற்கிறது.
திரு சுல்தான்!
//இங்கு ஜனநாயகம் பணநாயகமாய் மாறி காலம் பலவாகி விட்டது. இது ஒரு சரியான ஜனநாயக முறையா என்ற கேள்விதான் மனதில் தொக்கி நிற்கிறது.//
சரியாகச் சொன்னீர்கள்.
தேர்ந்தெடுக்கும் முறைதான் மாறி இருக்கிறதே யொழிய வாரிசுகள் தான் ஒவ்வொரு கட்சியிலும் அதிகாரத்துக்கு வருகிறார்கள். ஏறக்குறைய அரபு நாடுகளை ஒட்டியே நமது நாடும் சென்று கொண்டிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment