Followers

Thursday, April 09, 2009

பாதை திரும்பிய பகுத்தறிவாளர்!

பாதை திரும்பிய பகுத்தறிவாளர்!

'எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில்தான் பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் தம் குழந்தைகளை இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ மாற்றி விடுகின்றனர்.'

-முகமது நபி ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபு ஹூரைரா

திருவாரூர் அருகிலுள்ள அடியக்க மங்கலத்தில் பிறந்தவர் கலிக்குஸ்ஸமான். பிறப்பால் இவர் முஸ்லிமானாலும் இஸ்லாத்தின் கொள்கைகளை சரியாக விளங்காததனால் நாத்திகத்தை இவர் மனம் நாடுகிறது. தி.க வில் சேர்ந்து திரு வீரமணிக்கும் நெருக்கமாகிறார். நாத்திக பிரச்சாரத்தை வீரமணியோடு தமிழகமெங்கும் செய்து வந்தவர்தான் கலிக்குஸ்ஸமான்.

இந்த நிலையில்தான் 2007-ல் பி.ஜெய்னுல்லாபுதீன் என்ற அறிஞர் நாத்திகம் சம்பந்தமாக எழுதிய ஒரு புத்தகம் இவரது கைக்கு கிடைக்கிறது. அந்த புத்தகம் இவரின் பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியில் எழுப்பப்டும் கேள்விகளும் அதற்கான அறிவுசார்ந்த பதில்களும் இவரது சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் பிறகு குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் இவரை ஆட்கொள்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் இவரது மகளார் தந்தையை அமெரிக்காவிற்கு வருகை தர அழைக்கிறார். 'அமெரிக்காவில் வீட்டில் இருக்கும் போது அதிகமாக போரடிக்கும். அதனால் வரும் போது புத்தகங்கள் வாங்கி கொண்டு வாருங்கள்.' என்று மகளார் அவரிடம் தெரிவித்திருந்தார்.

எனவே அவர் சென்னையில் மண்ணடிக்குச் சென்று பி.ஜே எழுதிய நூல்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுகின்றார். பறக்கின்ற விமானத்துடன் அவரது சிந்தனை விமானமும் சிறகடித்துப் பறக்கின்றது.

குர்ஆனின் வானம் தொடர்பான வசனங்கள் வானத்தில் பறக்கும் அவரது மனதில் படுகின்றன. அடுக்கடுக்கான அகன்ற வானங்களைப் பற்றிய பல அறிவியல் உண்மைகள் எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபியால் எப்படி சொல்ல முடிந்தது? என்று ஆச்சரியப்படுகிறார்.

இந்த குர்ஆன் மனிதனால் இயற்றப்படவில்லை. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆற்றல், சக்திதான் இந்த குர்ஆனை அருளியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்.

அதுவரை நோன்பு பிடித்திராத அவர் கடந்த ரமளானில் முப்பது நோன்புகளை நோற்று முடித்தார். 'மேற்கு நோக்கி வணங்குபவர்களே! கஃபாவை நோக்கி தொழுபவர்களே! விமானம் கஃபாவிற்கு மேல் பறக்கும் போது எதை நோக்கித் தொழுவீர்கள்?' என்று வினா எழுப்பி விடைத்தவர் இன்று விடை கண்டு ஏக இறைவனை வணங்குகிறார்.

தெருத் தெருவாக நாத்திகப் பிரச்சாரம் செய்த அவர் இன்று வேலூரில் தெருத் தெருவாக ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்கிறார். இவர் இந்த கொள்கையிலேயே நிலைத்து நிற்க நாமும் பிரார்த்திப்போமாக!

தகவல் உதவி ஏகத்துவம் வார இதழ்.

'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!' - என்ற பாடல் வரிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39: 5

No comments: