மதியம் 3 மணிக்கு (03-03-2012) சொகுசு வண்டியில் மெக்கா நோக்கி பயணப்பட்டோம். நாங்கள் வந்த பஸ்ஸில் 15 பேர்தான் இந்திய பாகிஸ்தான் மற்றும் எகிப்தை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் சவுதிகள். குடும்பம் சகிதமாக வந்திருந்தனர். எனது தாயார் உம்ரா பயணமாக தமிழகத்திலிருந்து வருவதால் அவர்களுக்கு உதவும் முகமாக எனது பயணம் அமைந்திருந்தது. இடையில் தொழுகைக்காக ஒரு இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. இரண்டு தொழுகைகளையும் சுருக்கி சேர்த்து தொழுது விட்டு இரவு உணவையும் ஹோட்டலில் கழித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.
இரவு இரண்டு மணி அளவில் உம்ராவுக்காக உடுத்தப்படும் சீருடையான இஹ்ராம் கட்டுவதற்காக ஒரு எல்லையில் நிறுத்தப்பட்டது. உலகின் பல பாகங்களிலிருந்து வருபவர்களுக்காக நான்கு புறமும் எல்லைகள் நிறுவப்பட்டுள்ளன.
1529. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி அவர்கள் மதீனாவ வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
புஹாரி Volume :2 Book :25
எங்களுக்குரிய எல்லை வந்ததும் அனைவரும் குளித்து விட்டு இஹ்ராம் துணியான வெள்ளை உடையை உடுத்திக் கொண்டோம். தைக்கப்படாத தூய வெள்ளை உடையான இந்த உடையையே உம்ரா பயணம் மேற் கொள்பவர் அணிய வேண்டும். பெண்கள் பழைய உடையிலேயே இருக்கலாம். அரபி, இந்தியன், பாகிஸ்தானி, மதராஸி, மலையாளி என்று மக்களை கூறு போடாமல் எல்லோரும் ஒரு தாய் மக்களே என்பதை உணர்த்தும் விதமாக இந்த தூய வெள்ளை உடுத்துவது உம்ரா ஹஜ் செய்பவர்களுக்கு கடமையாகும்.
பேண்ட் சர்ட், பஞ்சாபி ஆடை, சவுதிகள் அணியும் நீள அங்கி எல்லாம் மாறி பஸ் முழுக்க தூய வெள்ளைக்கு மாறியது.(ஒரு சில பெண்களைத் தவிர) பல மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த அனைவரும் 'லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக்' என்ற பிரார்த்தனையை மனதுக்குள் சொல்ல ஆரம்பித்தனர்.
'வந்து விட்டேன்! இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.'
என்ற பிரார்த்தனையை மனதுக்குள் சொல்லிக் கொண்டே வந்தோம். மெக்கா எல்லையை பஸ் அடைந்தவுடன் எங்களின் லாட்ஜூக்கு சென்று உடைமைகளை வைத்து விட்டு காஃபாவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பதினைந்து நிமிடத்தில் பள்ளியை அடைந்தோம். உலக மக்கள் அனைவரும் ஒரே உடை, ஒரே வாக்கியம், ஒரே மாதிரியான பிரார்த்தனைகளோடு பலரும் கஃபாவுக்குள் நுழைந்தனர். இப்படி ஒரு ஒற்றுமையை உலகில் வேறு எங்கும் நம்மால் பார்க்க முடியாது. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு மார்க்கம் இது என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெரிவிக்கிறது.
நான் மெக்கா வருவதற்கு முன்பே எனது தாயார் முன்பே ஜெத்தாவிலிருந்து மெக்கா வந்து விட்டார். எனவே அந்த குரூப்போடு சேர்ந்து உம்ரா கடமையை நிறைவேற்றி விட்டார். நானும் எனது குரூப்பும் உம்ராவை முடித்து விட்டு ரூமுக்கு திரும்பி விட்டோம்.. அதன் பிறகு குளித்து விட்டு தாயாரின் ஹோட்டலை தேடினேன். ஆச்சரியமாக நாங்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் வித்தியாசத்தில் எனது தாயாரின் ரூமும் இருந்தது. நெகிழ்ச்சியான சந்திப்பு. பிறகு தாயாரோடு மதிய உணவு அருந்தி விட்டு 4 மணி அளவில் கஃபாவுக்கு சென்றோம். தொழுதுவிட்டு சேர்ந்தே வலம் வந்தோம். பல பிரார்த்தனைகள். உலக அமைதிக்காகவும், எனது தாய் நாட்டின் அமைதிக்காகவும், உலக முஸ்லிம்களின் அமைதிக்காகவும், எனது குடும்பத்தின் அமைதிக்காகவும் எனது தாயாரோடு சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.
இங்கு புரோகிதர் யாரும் கிடையாது. அவரவர் தொழுது விட்டு தங்களது தாய் மொழியில் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். இங்கு கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் உடன் அங்கீகரிக்கப்படுவதால் பலரும் அழுது பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
“கூட்டம் குறைவாக இரவு இரண்டு மணிக்கு இருக்கும். அப்பொழுது வரலாம்” என்று எனது தாயார் சொல்லவே ரூமுக்கு திரும்பினோம். இரவு இரண்டு மணிக்கு திரும்ப வந்தால் அதே கூட்டம் தான் கொஞ்சம் கூட குறையவில்லை. ஹஜ் நேரம் இல்லையாதலால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஹஜ்ஜைப் போலவே நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. உலக முஸ்லிம்களுக்கு இறை பக்தி அதிகமாகி விட்டதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் கூட நாகூர் தர்ஹாவுக்கு கூட்டம் வருவது இல்லை என்றும் இந்த வஹாபிகள் வந்து அனைவரையும் சந்தனக் கூடு வைபவத்திலிருந்து தூரமாக்குவதாகவும் ஒரு பதிவர் கூட வயிறெறிந்து பதிவிட்டிருக்கிறார். அந்த அளவு தூய்மையான இஸ்லாமிய ஆர்வம் சமீப காலங்களில் மக்களிடம் வந்துள்ளது. அந்த ஆர்வம் தமிழகத்தையும் விடவில்லை. தர்ஹா வணக்கம், சூஃபியிசம் எல்லாம் மறைந்து ஏகத்துவவாதிகளாக தமிழக முஸ்லிம்களும் மாறி வருகின்றனர். மகிழ்ச்சிக்குரிய விடயமல்லவா!
முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மார்க்கங்களில் நாத்திகம் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த நவீன உலகில் நாத்திகனாக இருப்பது அறிவு ஜீவிக்கு அடையாளமாக பொய்யான தோற்றத்தில் காட்டப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களைப் பொருத்த வரையில் படித்தவரிலிருந்து பாமரர் வரை இறை பக்தியில் திளைப்பதை பார்க்கிறோம். நாத்திகம் இங்கு மிகவும் குறைவு. அதற்கு காரணம் மனித கரம் புகாத இறை வேதமான குர்ஆன் என்றால் மிகையாகாது.
வரும் கூட்டத்தை சமாளிக்க கஃபாவை விஸ்தரிக்கும் பணியில் சவுதி அரசு ஈடுபட்டுள்ளது. அருகில் இருக்கும் பெரும் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்படும் காட்சியை பார்த்துக் கொண்டே சென்றோம். 2020 வாக்கில் புதுப் பொலிவுடன் காஃபா மிளிரும் இன்ஷா அல்லாஹ்.
காஃபாவில் ஆப்ரஹாம் நபி நின்று பிரார்த்தனை செய்த இடத்தில் நாமும் நின்று பிரார்த்தித்தால் இறைவன் உடன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு எப்போதுமே கூட்டமாக இருக்கும். தொழுது துவா கேட்டனர் பலர் அந்த நெரிசலிலும். அங்கு நின்ற ஒரு பெண் போலீஸ் என் தாயார் அதிக நேரம் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்கு வழி விடச் சொன்னார். ஆனால் என் தாயாரோ நகருவதாக இல்லை. தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அந்த பெண் போலீஸோ என்னிடம் சொல்லி அழைத்து செல்லுமாறு சொன்னார். என தாயாரோ அந்த பெண் போலீஸிடம் 'இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம். எங்களுக்கு கொஞ்சம் அதிக நேரம் கொடுத்தால் என்ன?' என்று தமிழிலேயே சற்று சூடாக அந்த பெண் பொலீஸிடம் பேச ஆரம்பித்தார். 'ஆஹா...நமக்குக் கூட இவ்வளவு தைரியமாக பேச வராதே!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவர்கள் நாட்டில் வந்து: நேற்று வந்த எனது தாயாருக்கு: இந்த இடத்தின் மீது அவர்கள் எடுத்துக் கொண்ட உரிமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அந்த பெண் போலீஸோ புன்முறுவலோடு அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே மற்ற பக்கம் சென்று விட்டார். சில பெண்கள் அருகில் இருக்கும் கருப்புக் கல்லை தொட்டு விட வேண்டும் என்று ரொம்பவும் முயற்ச்சிக்கின்றனர். முடியாதவர்கள் தூரத்திலிருந்தே சைகையின் மூலமாக கைகளை உயர்த்தினாலே போதுமானது. அந்த நன்மை கிடைத்து விடும். இது பலருக்கு விளங்காதலால் அந்த இடத்தில் பெரும் தள்ளு முள்ளு. அங்கு ஒரு இரும்பு வேலி அமைத்து ஒவ்வொருவராக விட்டால் பல வயதானவர்கள் சிரமப்படுவது குறையும். இதை சவுதி அரசு ஆவண செய்ய வேண்டும். இங்குள்ள தாவா சென்டரிலும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்..
அடுத்த நாள் கஃபாவில் வலம் வரும் போது நானும் தாயாரும் பிரிந்து விட்டோம். கூட்டத்தில் எங்கு தேடுவது? சுற்றை முடித்து விட்டு தாயாரை செல் போனில் தொடர்பு கொண்டேன். அவர்களோ மர்வா குன்றுக்கு பக்கத்தில் உள்ள வெளி வாயிலில் காத்திருக்கிறேன் என்று அழகான வழியை சொன்னார்கள். மற்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு அந்த இடத்தை சென்று அடைந்தேன். மெக்காவில் அவர்களுக்கு வழி காட்ட நான் ரியாத்திலிருந்து போக முடிவில் எனக்கு அவர்கள் வழி காட்டினார்கள். :-) எப்படியோ நல்லமுறையில் மூன்று நாட்கள் மெக்காவில் தாயாரோடு தங்கி விட்டு அலுவலகத்தில் ஆள் இல்லாததால் ரியாத் திரும்பினேன். எனது தாயாரோ இன்னும் நான்கு நாட்களில் மெதினா சென்று விட்டு அங்கிருந்து ஜெத்தா பின் மெட்ராஸ் செல்வார்கள் இறைவன் நாடினால்.
ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)
''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)
டிஸ்கி: உம்ரா முடிந்து விட்டது. திரும்பவும் ஊருக்கு சென்று சன் டிவி ராஜ் டிவி குடும்ப சீரியல்களை பார்த்துக் கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்காமல் செய்திகள், உலக நடப்புகள், தவ்ஹீத் புரோக்ராமகள் அதிகம் பாருங்கள் என்று மறைமுகமாக சொன்னேன். ஒத்துக கொண்டார்கள். அப்பாடா....சீரியல்களுக்கு கொஞ்சம் விடுதலை. :-)
22 comments:
//நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது//
இங்கிருந்து உம்ரா சென்றுவருபவர்களும் இதையேச் சொல்கின்றனர். சுப்ஹானல்லாஹ்!!
//அதிக நேரம் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்கு வழி விட//
நிறைய பேர் ஆர்வத்தினாலும், இனி எப்போது வருவோமோ என்ற ஆதங்கத்தினாலும் இவ்வாறு செய்கின்றனர். ஆனால், அங்கு வந்திருக்கும் மற்றவர்களும் அப்படித்தானே என்று உணர்ந்து அதிக நேரம் நிற்காமல் நகர்வதே நல்லது.
//இங்கிருந்து உம்ரா சென்றுவருபவர்களும் இதையேச் சொல்கின்றனர். சுப்ஹானல்லாஹ்!!//
ஆம் சகோ! அவர்கள் எந்த அளவு பள்ளியை விரிவுபடுத்துகிறார்களோ அந்த அளவு கூட்டமும் சேர்ந்தவண்ணமே உள்ளது.
//அங்கு வந்திருக்கும் மற்றவர்களும் அப்படித்தானே என்று உணர்ந்து அதிக நேரம் நிற்காமல் நகர்வதே நல்லது.//
இதை பலரும் உணராததால்தான் பல சிக்கல்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ....
சீக்கிரம் செய்ய அல்லாஹ் நாடவேண்டும்....எனக்கும்....நம் சகோதரர்களுக்கும்
alhamthulillaah!
nalla pathivu-
ungal pakirvu!
ellaam valla iraivan-
enakkum ellaa maakkalukkum-
umra haj pontra kaariyangal seyya arul purivaanaaka!
ameen!
சலாம் சகோ சுவனப்பிரியன்,
உம்ராவை நல்லபடியாக முடித்ததற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் இருந்து வந்து பெண் போலீசிடம் தைரியமாக பேசியதும், உங்களுக்கே வழி சொன்னதும் ஆச்சரியமான விஷயம் தான்.
உங்கள் அம்மா உண்மையிலே தைரிய சாலி தான்.
சலாம் சகோ ஹாஜா மைதீன்!
//சீக்கிரம் செய்ய அல்லாஹ் நாடவேண்டும்....எனக்கும்....நம் சகோதரர்களுக்கும்//
இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்கள் நாட்டத்தை பூர்த்தி செய்வானாக!
சகோ சீனி!
//ellaam valla iraivan-
enakkum ellaa maakkalukkum-
umra haj pontra kaariyangal seyya arul purivaanaaka!
ameen!//
உங்கள் பிரார்த்தனையை இறைவன் எற்றுக் கொள்வானாக!
சலாம் சகோ சிராஜ்!
//உம்ராவை நல்லபடியாக முடித்ததற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் இருந்து வந்து பெண் போலீசிடம் தைரியமாக பேசியதும், உங்களுக்கே வழி சொன்னதும் ஆச்சரியமான விஷயம் தான்.
உங்கள் அம்மா உண்மையிலே தைரிய சாலி தான்.//
அந்த பெண் போலீஸூக்கு விளங்குகிறதோ இல்லையோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழில் சராமாரியாக பேசியது எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சுப்ஹானல்லாஹ், அருமையான விஷயத்தை ப்கிருந்து உள்ளீர்கள். அல்லாஹ் உங்கள் இருவரின் உம்ராவையும் பொருந்தி கொள்வானாக.
டிஸ்கி சூப்பர் சகோ
சலாம் சகோ ஹாஜா மைதீன்!
//சுப்ஹானல்லாஹ், அருமையான விஷயத்தை ப்கிருந்து உள்ளீர்கள். அல்லாஹ் உங்கள் இருவரின் உம்ராவையும் பொருந்தி கொள்வானாக.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ungal umravai allah porunthi kollattum
உங்களின் பிராத்தனைகளில்
உலக மக்களின் அமைதியையும் வேண்டிகொள்ளவும்
சலாம் பாய், உம்ராஹ் சிற்பக முடிந்தது சந்தோஷம. முன்பாவது சிறிது கூடம் குறைய வாய்பிருக்கும். இப்போது கொஞ்சம் குட கூடம் குறைவது போல தெரியவில்லை. நல்ல வெயிலில் லுஹருக்கு மேல போனால் சிறிது கூடம் குறையலாம். பெண் போலீஸ் தான் முழுவதுமாக கண்ணையும் சேர்த்து மறைத்து இருப்பார்களே. apparum எப்படி உங்களால் அவர்கள் புன்முறுவலை பார்க்க முடிந்தது!
முன்பு பக்கதில் நிறைய சிறிய ஹோட்டல்கள் இருக்கும் மிடில் கிளாஸ் மற்றும் எளியர்வர்கள் தங்க வசதியாக. இப்போது அதை இடித்து பெரிய பெரிய ஹோட்டல் கட்டுகிறார்கள் பணம் உள்ளவர்கள், வசதியானவர்கள் அருகாமையில் தங்குவதற்கு.
சகோ ஷர்புதீன்!
//உங்களின் பிராத்தனைகளில்
உலக மக்களின் அமைதியையும் வேண்டிகொள்ளவும்//
ஏதோ நான் உலக மக்களைப் பற்றி கவலைப்படாதது போலவும் நீங்கள் சொல்லி இனி பரந்த மனப்பான்மைக்கு இனி வர வேண்டும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது. கீழே உள்ள வாக்கியம் நான் பதிவில் எழுதியது.
//உலக அமைதிக்காகவும், எனது தாய் நாட்டின் அமைதிக்காகவும்,//
உலக அமைதி என்றால் அங்கு வாழும் மக்களும் வந்து விடுகிறார்களே! இதை நான் விளக்க வேண்டுமா? :-)
சகோ ஸாதிகா!
//தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.//
வருகைக்கும் அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி!
சகோ அப்துல்!
//ungal umravai allah porunthi kollattum//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ கலீல்!
//பெண் போலீஸ் தான் முழுவதுமாக கண்ணையும் சேர்த்து மறைத்து இருப்பார்களே. apparum எப்படி உங்களால் அவர்கள் புன்முறுவலை பார்க்க முடிந்தது!//
கண் திறந்துதான் இருந்தது. சவுதிகள் அணிவது போல் முழு அங்கியை அந்த பெண் அணியவில்லை. கண்ணின் பார்வையை வைத்தே ஒருவரின் இயல்பை யூகிக்க முடியும். நம் ஊர் ஸ்கௌட் போல அங்கும் தன்னார்வ அமைப்புகள் மூலமாக இவர்கள் வந்திருக்கலாம்.
//முன்பு பக்கதில் நிறைய சிறிய ஹோட்டல்கள் இருக்கும் மிடில் கிளாஸ் மற்றும் எளியர்வர்கள் தங்க வசதியாக. இப்போது அதை இடித்து பெரிய பெரிய ஹோட்டல் கட்டுகிறார்கள் பணம் உள்ளவர்கள், வசதியானவர்கள் அருகாமையில் தங்குவதற்கு.//
தவறான புரிதல். கஃபாவுக்கு அருகில் இருக்கும் மன்னருடைய வீடும் இன்னும் சில நாட்களில் இடிக்கப்படப் போகிறது. மக்களின் நெரிசலை தவிர்ப்பதற்காக பள்ளியின் தொழும் இடத்தை அரசாங்கம் அதிகரிக்கிறது. உலக மக்களின் வசதிக்காக செய்யும் ஒரு செயலிலும் தவறு சொல்லலாமா?
நண்பர் சு.பி.
மெக்காவை இன்னும் விவரித்திரிந்தால் எங்களை போன்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். எம் போன்றவர்கள் சுற்றிப் பார்க்க கூட வாழ்நாளில் அங்கு வர முடியாது பாருங்கள்.
உங்கள் உம்ரா பயணம், சபரிமலை பயணம் செய்பவர்களை நினைவுப் படுத்தியது. அங்கும் எந்த வித பாகுப் பாடும் இல்லாமல் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இலட்சகணக்கான பக்தர்கள் ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு மறந்து வருடா வருடம் அதிக பகதர்கள் செல்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
திருப்பதி போன்ற கோயில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாளுக்கு அதிகமாகின்றது என்று சொல்கிறார்கள்.
மனக்கோட்டைகளை விட்டுவிடுவோம், விஷயத்திற்கு வருவோம்.
1529. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி அவர்கள் மதீனாவ வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
புஹாரி Volume :2 Book :25
மேலே உள்ள அதீஸை படித்தால், இஸ்லாம் அரேபியர்களுக்கு மட்டுமே ஏற்படுத்திய மதமாகவே படுகின்றதே. மற்றவர்களும் இதில் வருவார்கள் என்ன எப்படி விளங்குவது? நீங்கள் ஷாம் வாசியா யமன் வாசியா என்று போகிற திசையை வைத்து விளங்குவீர்களா?
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
உம்ரா மப்ரூக். தங்கள் துவாக்களை கபூல் செய்ய பிரார்த்திக்கிறேன்.
அன்னையுடன் உம்ரா. நிச்சயமாக மிக இனிய அனுபவம். பதிவை படிக்கும்போதே தெரிகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
சென்றவருடம் தங்கள் அன்னையின் ஹஜ், ட்ராவல்ஸின் சில குளறுபடிகளால் பூர்த்தியாக முடியாமல் போனதை சொல்லி இருந்தீர்கள். இச்சமயத்தில் இந்த உம்ரா நல்லதொரு ஆறுதல். இன்ஷாஅல்லாஹ், ஹஜ்ஜும் நிறைவேற துவா செய்கிறேன்.
சலாம் சகோ ஆஷிக்!
//சென்றவருடம் தங்கள் அன்னையின் ஹஜ், ட்ராவல்ஸின் சில குளறுபடிகளால் பூர்த்தியாக முடியாமல் போனதை சொல்லி இருந்தீர்கள். இச்சமயத்தில் இந்த உம்ரா நல்லதொரு ஆறுதல். இன்ஷாஅல்லாஹ், ஹஜ்ஜும் நிறைவேற துவா செய்கிறேன்.//
பிரார்த்தனைகளுக்கு நன்றி! இன்ஷா அல்லாஹ் பிறகு ஹஜ் செய்வதற்கு இது ஒரு டிரெய்னிங்காகவும் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ நரேன்!
//மெக்காவை இன்னும் விவரித்திரிந்தால் எங்களை போன்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். எம் போன்றவர்கள் சுற்றிப் பார்க்க கூட வாழ்நாளில் அங்கு வர முடியாது பாருங்கள்.//
ஏன் முடியாது. நமது முன்னோர்களின் வழி முறையான ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற முடிவுக்கு வந்து விட்டால் நீங்களும் வரலாமே!
//உங்கள் உம்ரா பயணம், சபரிமலை பயணம் செய்பவர்களை நினைவுப் படுத்தியது. அங்கும் எந்த வித பாகுப் பாடும் இல்லாமல் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இலட்சகணக்கான பக்தர்கள் ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு மறந்து வருடா வருடம் அதிக பகதர்கள் செல்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.//
நாத்திகம் ஒழிந்து ஆத்திகம் வளர்ந்தால் சந்தோஷமே!
//மேலே உள்ள அதீஸை படித்தால், இஸ்லாம் அரேபியர்களுக்கு மட்டுமே ஏற்படுத்திய மதமாகவே படுகின்றதே. மற்றவர்களும் இதில் வருவார்கள் என்ன எப்படி விளங்குவது? நீங்கள் ஷாம் வாசியா யமன் வாசியா என்று போகிற திசையை வைத்து விளங்குவீர்களா?//
ஒரு இடத்தை மையப்படுத்துவதற்கு நான்கு திசைகள் தேவை. உலகோடு தொடர்பு கொள்ள இன்றும் நாம் நான்கு திசைகளையே அளவாகக் கொள்கிறோம். எனவே கஃபாவிலிருந்து சுற்றிலும் நான்கு திசைகளை நிர்ணயித்து இருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த எல்லை பொதுவானது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த நான்கு எல்லைக்குள்ளேயே அடங்கும். இந்த எல்லைகளுக்கு உள் இருப்பவர்கள் குறிப்பாக மக்காவுக்கு அருகில் உள்ளவர்களுக்கு எல்லை அவர்கள் இருக்கும் வீடுகளே எல்லையாகும். இதில் அரபுகள் எங்கு வந்தார்கள்?
'இந்த குர்ஆன் ரமலான் மாதத்தில்தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.'
-குர்ஆன் 2:185
எனவே இந்த இஸ்லாம் மார்க்கமானது உலக மக்களுக்கு சொந்தமானது. உங்களுக்கு சொந்தமானது.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்னையுடன் தங்களின் உம்ரா பயணத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
Post a Comment