Followers

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!



நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த வயதிலும் பதிவுகள் எழுதுவதிலும அதற்கு பதில் தருவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர். இவரிடம் எனக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னை மீனம்பாக்கத்தில் எனது தாத்தா ஹஜ் முடிந்து வந்தபோது அழைக்க சென்றிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் அழைத்து அவரோடு சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தாத்தாவைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தாத்தா சற்று அதிர்ச்சி அடைந்தார். 'மனிதனுக்கு மனிதன் இவ்வாறு காலைத் தொட்டு வணங்குவது தவறு என்று நீ உனது நண்பருக்கு சொல்லக் கூடாதா?' என்று கேட்டார். 'அது அவர்கள் கலாசாரம். இதை பெரிதுபடுத்தாதீர்கள்' என்று நான் சொன்னாலும் அவர் சமாதானம் அடையவில்லை. தாத்தாவிடம் ராகவன் சார் இறந்த செய்தியை இன்னும் சொல்லவில்லை.

இணையத்தில் போலி டோண்டு விவகாரத்தில் மிக உக்கிரமாக பணி புரிந்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததை பழைய பதிவர்கள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கலாம். திரு டோண்டுவை 'டோண்டு சார்' என்று கூப்பிட்டதற்காக போலி டோண்டுவிடமிருந்து காட்டமான அர்ச்சனைகளை பெற்றேன். :-). பிரஞ்ச்,ஜெர்மனி,ஆங்கிலம், தமிழ் என்று பல மொழிகளையும் சரளமாக எழுத வல்லவர். மொழி பெயர்ப்பு வேலைகளில் நிறைய சம்பாதிததார். எதையும் ஒளிவு மறைவின்றி போட்டு உடைத்து விடுவார். இதனால் பார்ப்பனர்களிலேயே பலருக்கு டோண்டு சாரை பிடிக்காது. பழகுவதற்கு மிக இனிமையான மனிதர்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"
-குர்ஆன் 62:8

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” -குர்ஆன் 21:35

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”
-குர்ஆன் 4:78

"அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் இதை உணர்வதில்லை."
-குர்ஆன் 23:55,56

"இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?"
-குர்ஆன் 26:129

இது போன்ற திடீர் மரணங்கள் எல்லாம் நமக்கு இறைவனைப் பற்றிய அச்சத்தை அதிகமாக்க வேண்டும். நமக்கும் ஒரு நாள் இது போன்ற மரணம் நிகழப் போகிறதே...அதற்கான நன்மையான காரியங்களை நாம் செய்திருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!


இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.

விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!

டோண்டு ராகவன் பற்றி முன்பு நான் இட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_04.html

-------------------------------------------------------------------

நான் இட்ட பதிவுக்கு பதிலாக டோண்டு சார் இட்ட பதிவு

முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.

ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.


எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html

10 comments:

வலையுகம் said...

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

மாற்றுக்கருத்தே ஆயினும் அவற்றை தம்மை எதிர்ப்போரிடம் நாகரிகமாக தெரிவித்த, தமிழ்ப்பதிவுலகில் நம்மால் மறக்க முடியாத நபர் திரு. டோண்டு ராகவன்.

அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...
ஏகன், அவர் குடும்பத்திற்கு அமைதியையும், பொறுமையையும் தந்தருள்வானாக!

சிராஜ் said...

அவர் இறங்கலுக்கு வருந்துகிறேன்...

மாற்று கருத்தை நாகரிகமாக சொல்லும் பண்பாளர்...

Cinema Virumbi said...

திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

Kalaiyarasan said...

அதிர்ச்சியான செய்தி. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Annu said...

Salam alaykum bhai.

Indeed it's a sad news. Couldn't believe that a blogger till yesterday is no more today.... I am very busy with india trip and power cut issues. Not able to post in my blog. My heartfelt condolences and prayers for his family to come over this turmoil.

Peace!

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோ ஹைதர அலி, சகோ ஆஷிக், சகோ கலையரசன், சகோ குலாம், சகோ சிராஜ், சகோ அன்னு, சகோ சினிமா விரும்பி அனைவருக்கும் நன்றி. வேலையில் கொஞ்சம் பிஸி. எனவே இணையத்தின் பக்கம் வருவது தாமதமாகிறது.

mohamed said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

அண்ணன் டோண்டு அவர்களை உங்கள் தளத்தின் மூலமாக தான் எனக்கு தெரியும்.செய்தியை படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டது.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saha, Chennai said...

சமீபத்தில் தான் அவரது தளத்தில் முதன் முதலில் எனது மாற்றுக்கருத்துக்களை மட்டுறுத்தலின்றி வெளியிடுவாரா என்ற சந்தேகத்துடன் பதிந்தேன், வெளியிட்டார், பதிலளித்தார். மாற்றுக்கருத்துக்களை மதிக்கும் பண்பாளர்.

அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் தருவானாஹா.