Followers

Monday, March 18, 2013

மரங்களை வெட்டுங்கள்!


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.




இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.



உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன. ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!

அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

நன்றி: ஆனந்தராஜ் பி.எஸ்.ஸி

12 comments:

Unknown said...

சரி .. வெற்றிரலாம் ..

Unknown said...

சரி .. வெட்டிவிடலாம் ...

அஸ்மா said...

சலாம் சகோ.

கருவேல மரங்களை தோட்டங்களுக்கு முள்வேலி அடைக்கவும், விறகுக்காகவும் சிலர் வெட்டாமலே வளரவிடத்தான் செய்கிறார்கள். மக்களின் குடியிருப்பைச் சுற்றியும், விலைநிலங்களின் அருகிலும் வளரவிடாமல் வெட்டிவிட்டு, எதற்கும் பயன்படாத புறம்போக்கு பகுதிகளில் மட்டும் வெட்டாமல் வளரவிடலாம். ஏனெனில் அல்லாஹ் எதையும் வீணுக்காக படைக்கவில்லை அல்லவா? :) வேலி, விறகு அல்லாத.. இதுவரை நமக்குத் தெரியாத அதிலுள்ள பலன்கள் பிற்காலத்தில் தெரிய வரலாம், இன்ஷா அல்லாஹ்.

Anonymous said...

சுவனப்பிரியன்,

எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறீர்கள். சற்று இலக்கணத்தையும் கவனித்து எழுதலாமே. பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும் வசனங்களைக் காணும் போது எரிச்சல் உண்டாகிறது. இதை நான் ஆலோசனையாகத்தான் கூறுகிறேன். உங்களைக் குறை சொல்வதற்காகவல்ல.

- உங்கள் சகோதரன்

suvanappiriyan said...

சகோ அஸ்மா!

//கருவேல மரங்களை தோட்டங்களுக்கு முள்வேலி அடைக்கவும், விறகுக்காகவும் சிலர் வெட்டாமலே வளரவிடத்தான் செய்கிறார்கள். மக்களின் குடியிருப்பைச் சுற்றியும், விலைநிலங்களின் அருகிலும் வளரவிடாமல் வெட்டிவிட்டு, எதற்கும் பயன்படாத புறம்போக்கு பகுதிகளில் மட்டும் வெட்டாமல் வளரவிடலாம். ஏனெனில் அல்லாஹ் எதையும் வீணுக்காக படைக்கவில்லை அல்லவா? :) வேலி, விறகு அல்லாத.. இதுவரை நமக்குத் தெரியாத அதிலுள்ள பலன்கள் பிற்காலத்தில் தெரிய வரலாம், இன்ஷா அல்லாஹ். //

ஆராய்ச்சி முடிவுகள் அந்த மரத்துக்கு எதிராக இருக்கும் போது அதனை வெட்டுவதுதானே சிறந்தது. விஷ ஜந்துக்களை படைத்ததும் நமது இறைவன்தானே!

suvanappiriyan said...

//எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறீர்கள். சற்று இலக்கணத்தையும் கவனித்து எழுதலாமே. பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும் வசனங்களைக் காணும் போது எரிச்சல் உண்டாகிறது. இதை நான் ஆலோசனையாகத்தான் கூறுகிறேன். உங்களைக் குறை சொல்வதற்காகவல்ல.//

எந்த இடம் என்று சொன்னால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

suvanappiriyan said...

//சரி .. வெற்றிரலாம் ..//

//சரி .. வெட்டிவிடலாம் ... //

எப்படியோ அந்த மரங்களை வளர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

********** singular ending ***
இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது

suvanappiriyan said...

//********** singular ending ***
இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது //

நன்றி. திருத்தி விட்டேன்.

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியனுக்கு,

இலக்கணப் பிழைகளைப் பற்றிக் கூறியபோது எங்கே என்று கேட்டீர்கள். இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

//இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.//

மேற்படி வசனங்களைக் கவனியுங்கள். இவை ... வளரக்கூடியது என்று பன்மையில் தொடங்கி ஒருமையில் முடித்துள்ளீர்கள். அவ்வசனம், இவை ... வளரக்கூடியன என்றோ, இது ... வளரக்கூடியது என்றோதான் வர வேண்டும்.

அவ்வாறே, இவை கவலை படாது என்று எழுதியுள்ளீர்கள். அதுவும் தவறு. இவை கவலைப்படா என்றோ, இது கவலைப்படாது என்றோதான் எழுத வேண்டும்.

- உங்கள் சகோதரன்

Ebrahim Ansari said...

தலைப்பு: மாறும் தொன்மம்.
தெற்கத்திச் சீமையை தெம்பாக்க
மரம் வளர்ப்புத் திட்டம் தந்த
மகராசரே !
“கல்விக்கண் திறந்தவரு
கண்மாய்குலம் கண்டவரு” னு
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக்
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன்
காமராசரே!
நீ தந்த திட்டத்தால்
நாங்க படும் பாட்டையும்
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு!

வருணபகவானுக்கு வழிதெரியாத
எங்கஊருக் காடு கழனியில்
வேலை எதுவும் இல்லாம
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த
கெட்டிக்காரரே!
ஆமா.....
நீ தந்த கருவேலவிதைகள்
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
‘ ஒய்யாரமா ’ வளந்திருக்கு
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல
கருவேலரும் தான். !

வெறகு வெட்டி மூட்டம் போட்டு
வருமானத்தை பெருக்கச் சொல்லி
நீதந்த வெதைவித்துக்களை
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது
இடைவேளை கேட்டு!

அண்ணா தந்த அரிசி கூட
அள்ள அள்ளக் குறையுது
ஆனா-
நீ தந்த அட்சய மரம் ...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம்
“வெட்ட வெட்ட
வேகமாத் தழையிறது
வாழைமரம் மட்டுமில்ல
நீ தந்த
வேலமரமும் தான்!”

நீதந்த அதிசய மரங்கள்
என்னைக்காவது ஏமாந்ததனமா
வழிதவறிப் பெய்யுற
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு
அப்பவே சாப்பிட்டுருதே..!

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட
சொத்துக்களைக் காப்பாத்த-
வறட்சியத் தாங்குற
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ
என்னைக்குமே எங்களுக்குக்
‘கர்மா வீரர்’ தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ‘ K Plan ’ ஐ
ஆட்சியில மாறிமாறி
அமருறவங்க நினைவுல
இருக்கோ இல்லையோ
நீ தந்த இந்த ‘ K Plan ‘ ஐ
மாத்தி- எங்க
மண்ணைக் காக்குற திட்டம்
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி
ஒருவேளை – உன்
நெனவுக்கு அடையாளம்னு
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு
கேட்டிருக்கேன் – ஆனா
என்னைக்காவது
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச
பாண்டியனார் தேசத்துக்கு
இப்போ
‘ தண்ணியில்லாக்காடு’னு
பேருவாங்கித் தந்த
பெருமையெல்லாம்
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு
சங்கத்தைக் கூட்டி சிலபேரு
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட

Ebrahim Ansari said...

தலைப்பு: மாறும் தொன்மம்.
தெற்கத்திச் சீமையை தெம்பாக்க
மரம் வளர்ப்புத் திட்டம் தந்த
மகராசரே !
“கல்விக்கண் திறந்தவரு
கண்மாய்குலம் கண்டவரு” னு
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக்
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன்
காமராசரே!
நீ தந்த திட்டத்தால்
நாங்க படும் பாட்டையும்
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு!

வருணபகவானுக்கு வழிதெரியாத
எங்கஊருக் காடு கழனியில்
வேலை எதுவும் இல்லாம
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த
கெட்டிக்காரரே!
ஆமா.....
நீ தந்த கருவேலவிதைகள்
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
‘ ஒய்யாரமா ’ வளந்திருக்கு
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல
கருவேலரும் தான். !

வெறகு வெட்டி மூட்டம் போட்டு
வருமானத்தை பெருக்கச் சொல்லி
நீதந்த வெதைவித்துக்களை
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது
இடைவேளை கேட்டு!

அண்ணா தந்த அரிசி கூட
அள்ள அள்ளக் குறையுது
ஆனா-
நீ தந்த அட்சய மரம் ...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம்
“வெட்ட வெட்ட
வேகமாத் தழையிறது
வாழைமரம் மட்டுமில்ல
நீ தந்த
வேலமரமும் தான்!”

நீதந்த அதிசய மரங்கள்
என்னைக்காவது ஏமாந்ததனமா
வழிதவறிப் பெய்யுற
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு
அப்பவே சாப்பிட்டுருதே..!

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட
சொத்துக்களைக் காப்பாத்த-
வறட்சியத் தாங்குற
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ
என்னைக்குமே எங்களுக்குக்
‘கர்மா வீரர்’ தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ‘ K Plan ’ ஐ
ஆட்சியில மாறிமாறி
அமருறவங்க நினைவுல
இருக்கோ இல்லையோ
நீ தந்த இந்த ‘ K Plan ‘ ஐ
மாத்தி- எங்க
மண்ணைக் காக்குற திட்டம்
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி
ஒருவேளை – உன்
நெனவுக்கு அடையாளம்னு
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு
கேட்டிருக்கேன் – ஆனா
என்னைக்காவது
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச
பாண்டியனார் தேசத்துக்கு
இப்போ
‘ தண்ணியில்லாக்காடு’னு
பேருவாங்கித் தந்த
பெருமையெல்லாம்
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
‘ இவன் ஏதோ
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ‘ னு
சங்கத்தைக் கூட்டி சிலபேரு
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட