Followers

Saturday, December 24, 2022

திருவாங்கூரில் நாடார்கள்

 மலர்மன்னன் அவர்கள் விமர்சனம் செய்த புத்தகம் திருவாங்கூரில் நாடார்கள் எப்படி நடத்தப்பட்டனர் எனபதைப்பற்றியதே. சிவகாசி நாடார், கொங்கு நாடார், வடமாவட்ட நாடார்கள் போன்றோரை இங்கு தொடர்பு படுத்திப் பேசக்கூடாது. திருவாங்கூர் நாடார்கள் என்போர் கன்யாகுமரி நாடார்கள், மற்றும் நெல்லை, தூத்துக்குடியும் வரும். இம்மக்களின் பெரும்போலோர் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயர் அவர்கள் இடையங்குடியைத் தலைமையிடமாகக்கொண்டு தேவ வார்த்தைகளை எங்களிடையே பரப்பினார். இடையங்குடி கன்யாகுமரியிலிருந்து முக்கால் மணினேரம்தான்.

கிருத்துவம் வருவதற்குமுன் நடந்த செயல்களே இப்புத்தகத்தில் பேசப்படுகிறது. அப்போது திருவாங்கூர் நாயர்கள் எங்களையும் தலித் சகோதர்களையும் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்; எங்கள் பெண்களையும் மார்பை மறைக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தினார்கள். இது வரலாறு. தலித்துப்பெண்களின் மானத்திற்காக கேரள தலித்து தலைவரான ஐயன் காளி நாயர்களோடு போராடினார். அவர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருவாங்கூரை மறைமாவட்டமாகக் கொண்டு வெள்ளைக்கார கிருத்துவ தலைவர்களாலேயே முடிந்தது.

இன்றும் இம்மாவட்டங்களில் இந்து நாடார்கள் வறுமைப்பிடியில்தான் வாழ்கிறார்கள் பனையேறி நாடார்களாக. மேலும் இவர்களே இந்துத்வாவினரின் பிடிக்கு ஆளாகி, உரோமன் கத்தோலிக்க மீனவர்களோடு மோதினார்கள். இன்றளவும் அம்மோதல் தொடர்கிறது.

கிருத்துவ நாடார்களிடையே கல்வியறிவு, மற்றும் வாழ்க்கைத்தர உயர்வு என்றாகி பலர் உன்னாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயரவர்கள், மறைத்திரு போப்பையரவர்கள், மறைத்திரு மர்காஷியஸ் ஐயரவர்கள் போன்றோரின் தேவ ஊழியமே இதற்குக்காரணமென்றால் மிகையாகாது. இவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்கள். இவர்கள் இல்லாதிருந்தால் நாங்களும் பிராமணர்களுக்கு அடிமைகளாகத்தான் வாழ்ந்து மீனவர்களோடும் தலித்துகளோடும் மோதிக்கொண்டிருப்போம்.

இம்மாவட்ட நாடார்களை விடுத்துப்பார்த்தால், மதுரை மீனாட்சி கோயிலுக்குள் ஏன் நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை? உயர்திரு வைத்தியநாத ஐயர் அவர்கள் அக்கோயிலில் உள்ளுழைவு போராட்டம் நடத்திய போது, தலித்து இளைஞர்களையும் நாடார் ஜாதி இளைஞர்களையும் சேர்த்துத்தானே தன்னுடன் அழைத்துச்சென்றார். இல்லையா ? இது மற்ற மாவட்டங்களிலும் அன்று நாடார்கள் தீண்டத்தகாதவராகவே பிராமணர்கள் வைத்த‌ நீதியில் நடத்தப்பட்டார்கள் என்று காட்டுகிறது.

-ஜெபசிங் ஞானதுரை

No comments: