Followers

Sunday, June 28, 2026

!!சூத்திரர்கள் யார்? !! - திரு.ஜே.எஸ்.கண்ணப்பர்


 



சூத்திரர்கள் யார்? எனும் நூலானது திரு.ஜே.எஸ்.கண்ணப்பர் அவர்களால் எழுதப்பட்டு தமிழ் பல்கலைக் கழகப் பதிப்பு வெளியிட்ட அருமையான நூலாகும்.(1923 பதிப்பு) இந்நூலில் உள்ளவற்றை கீழே தருகிறேன்,

 

!!சூத்திரர்கள் யார்? !!

 

நம் தமிழ் நாட்டிற் பிராமணரொழிந்த ஏனையோரெல்லாம், அறிவில்லாதாராயினும், கற்றுத் துறைபோய பேரறிஞராயினும், கூலிக்காரர்களாயினும், அறத்துறைச் செல்வர்களாயினும் சூத்திரர் என்ற சொல்லால் அழைக்கப் படுகின்றனர். இச் "சூத்திரன்” என்ற சொல் வட சொல்லாம். இவ்வடசொற் பெயர் நமக்கு எவ்வாறு வழங்கப்பட்டது? அதன் பொருளென்னை? அவ்வாறு நாம் அழைக்கப்படுதற்கு உரியவர்களா? என்பவைகளை ஆராய்ச்சிசெய்து முடிவுகீட்டலே இக் கட்டுரையின் கருத்தாம். இச்சொல் நம்பழந்தமிழ் நூல்களில் யாண்டும் காணப்படுகின்றதன்று; நம் அறநூல்களிலும் இதனைக் கண்டிலோம். ஆகலான் இதைக் குறித்து வடமொழி நூல்களிலிருந்தே தெரிந்து கோடல் வேண்டியிருக்கின்றது. இஃது எங்கிருந்து தோன்றிற்று என்று ஆராய்வதற்கு முன் இதன்பொருளை அறிந்துகோடல் நன்றாம்.

"வள்ளுவர் செய் திருக்குறளை மனுவற நன் குணர்ந்தோர்கள், உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்துக் கொருநீதி" என்று காலஞ்சென்ற பெருங்கணக்காயர் பி. சுந்தரம்பிள்ளை எம். ஏ. அவர்களால் இகழப்படும். மனுதரும சாத்திரத்தில் எட்டாம் பகுதியில்,

 

"பிராமணன் சம்பளங் கொடுத்தேனும் கொடாம லேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம் (413) ...

 

"யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலைசெய்கிறவன், தன்னுடைய வைப்பாட்டி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாகத் தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலைசெய்கிறவன் எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்." ... ... (415)

 

"பிராமணன் சந்தேகமின்றி எழுவிதத் தொழி லாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம்.

 

எஜமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளுடைய அந்தச் சூத்திரர் தம் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல" ... (417)

 

என்ற இச் சுலோகங்கள் காணப்படுகின்றன. ஆகவே, சூத்திரன் என்ற சொல்லுக்கு அமர்க்களத்திற்(போர்க்களம்) சிறையாளனாகக் கொள்ளப்பட்டானும் (War-Prisoners), அன்போடு வேலை செய்கின்றானும், ஒருவன் கணிகை மகனும் (a prostitute's son), விலைக்குப் பணம் கொடுத்துக் கொள்ளப்பட்டானும் (Serfs who were bought), ஒருவனாற் கொடுக்கப்பட்டானும், குலவழியாகத் தொன்று தொட்டு வேலை செய் கின்றானும் (Hereditary serfs), குற்றத்திற்காக வேலை செய்கின்றானும் (Criminals), என்பன பொருள்கள். இனி, இச் "சூத்திரன்” என்ற சொல் முதன் முதல் எவ்விடத்துக் காணப்படுகின்றது என் பதை யெழுதுவாம்.

 

நான்கு வேதங்களில் இருக்குவேதமே பழமையானதாம். அதன்கண் முதல் 9 மண்டிலங்களினும் இச்சொற் காணப் படுகின்றிலது. ஆனாற் பிற்காலத்து இணைக்கப் பட்ட பத்தாம் மண்டிலத்தின்கண் புருட சூக்தம் என்று விளிக்கப்படும் 90-ஆஞ் சுலோகத்திற் சூத்திரன் என்ற சொல் முதன்முறையாகக் காணப்படுகின்றது. இம் மண்டிலமோ

பின்னாற் சேர்க்கப்பட்டது. இதற்கு வேதங்களைக் கரைகண்டுணர்ந்த பேராசிரியர் பலர் சான்று பகர்கின்றனர். ஆனால் இச்சொல் இருக்குவேதத்தில் ஓர் இடத்தில்தான் தென்படுகின்றதென வாளா இருத்தல் கூடாது. ஏனெனின் இவ்வேதத்தை நுணுகி ஆராயப்புகுங்காற் சில உண்மைகள் கிட்டுகின்றன. இதனுள் ஆரியர்களும், தாசர் என்று அழைக்கப்படுகின்ற தஸ்யூக்களும் ஆகிய வழக்கம், ஒழுக்கம், நிறம் முதலியவற்றான் வேறுபட்ட இருவகை இனங்களைச் சார்ந்த மக்கள் குறிப்பிடப் படுகின்றனர். இவ்விரு திறத்தாருக்கும் நடந்த சண்டையும், இறுதியில் ஆரியர் வெற்றி பெற்றதுமே சுருங்கக் கூறுங்கால் இருக்கு வேதத்தின் சாரமாகும். இனி இத் தஸ்யூக்கள் யாவர் என்பதை ஆராய வேண்டியது நம் கடனாய் உள்ளது. அதன் பொருட்டு நாட்டின் வரலாற்றை நோக்குதல் வேண்டும். "தாசர்கள்," "தஸ்யூக்கள்” என்ற சொற்கள் ஒரு இனத்தார் பெயரல்ல. 'வேலைக்காரர்கள்', 'திருடர்கள்' என்று முறையாய்ப் பொருள்படக்கூடிய இச்சொற்கள் ஒரு இனத்தார் தம்மால் வெறுக்கப்படும் பிறிதொரு இனத்தாருக்குக் கொடுத்திருத்தல் வேண்டும். ஆகவே ஆரியர்கள் முதன்முதல் இவட் போந்தவுடன், தங்களொடு வேறுபட்ட இனத்து மக்களைக் கண்டிருக்கின்றனர். அவர்கள் பெருஞ் செல்வ முடையராய் இருந்திருக்கின்றனர். அவர்களுள் சம்பாரா என்பான் 100 கோட்டைகளும், விருத்திரா என்பான் ஏழு கோட்டைகளும் பெருஞ் செல்வமு முடையாராய் இருந்திருக்கின்றனர். இவைகட்கு இருக்கு வேதமே சான்று பகர்கின்றது. ஆகவே இவர்கள் இத்துணை செல்வமுடையராய் இருந்தமையான், பிறர் பொருள் வைத்திருக்கப் பொறாத ஆரியர்கள் இவர்கள் பொருளைக் கொள்ளையடிக்கப் புகுந்தனர். கட் குடியன் கட்குடிக்காதவர்களை "குடியர்கள் " என்று கூறுதல் உலக வழக்காகலின், அதைப் போன்றே கொள்ளையடிக்கப் புகுந்த ஆரியர்கள் செல்வ முடையாராய் இருந்தவர்களைத் திருடர்கள் என்று பொருள் படும்படியான

 

"தஸ்யூக்கள்" என்று அழைத்திருக்கின்றனர். பண்டைக்காலத்திற் கிரேக்கர்களும், உரோமர்களும், தங்களை யொழிந்த மற்றையோரை "அநாகரிக முடையோர்" (Barbarians),என்றழைத்தல் வழக்கம். அதைப்போன்றே ஆரியர்கள் மற்றையோர்களை "மிலேச்சர்" என்று பெயரிடுதல் உண்டு. நிற்க.

 

இனி, ஆரியர்களால் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்டார் யாவரென நோக்குதல் வேண்டும். ஆரியத்தைச் சாராத 139 மொழி கட்கு அகராதி எழுதி விடுத்த ஹண்டர் என்பார் (Mr. Hunter),

 

இந்தியா கணக்கற்ற இனத்தாரின் காட்சிசாலை (India forms a great museum of races) என எழுதுகின்றார். இஃது உண்மையே. எனினும் இத்துணை இனத்தாரையும் ஆரியர், ஆரியரல்லாதார் என்ற இரண்டு பெரும் பிரிவுக்குள் அடக்குதல் செய்யலாம். செய்யவே மறித்தும் ஆரியரல்லாதார் கோலர்கள், திராவிடர்கள் என்ற இரு பெரும் பகுப்புக் குளடங்குவர். இவர்களுள் முற்கூறப்பட்டோர் கீழ்த்திசையிலே பிரமபுத்திராநதியின் பள்ளத்தாக்கு வழியாக ஆரியர்க்கு முன் இந்தியாவிற்குப் போந்து அஸ்ஸாம், வங்காளம் முதலிய இடங்களிலே குடியேறினார்கள். பிற்கூறப்பட்ட திராவிடர்களே ஆரியர்க்குமுன் மேற் கணவாய் வழியாய்ப்போந்து தென்னாட்டிற் குடியேறினர். இன்னும் சிலர் இவர்கள் மலேயா நாட்டினின்றும் ஈண்டுக்குடியேறினர் எனவுங் கருதுகின்றனர். அஃது எவ்வாறாயினுமாகுக. பிற்பட்டுவந்த ஆரியர்கள் முதன் முதற் கண்டு சண்டையிட்டுத் தஸ்யூக்களென்று அழைத்தது இக் கோலர்களையே. இவர்களை வெல்வதற்கு

ஆரியர்கள் பெரிதும் முயற்சி யெடுத்திருக்கின்றனர். தங்கட்கு உதவி செய்வதற்காக " இந்திரன் ", "அக்கினி' முதலியோர்க்கு இவர்கள் யாகங்களும், தோத்திரப்பாக்களும் செய்துள்ளனர். இறுதியாக இந்திரன் உதவியால் இத்தஸ்யூக்களை வென்றுவிட்டனர்.

 

ஆகையினாற்றான் சில இடங்களில் "தஸ்யூக்களைக்கொன்று ஆரியர் ஆக்கத்தை நிலை நிறுத்தினான் " எனவும்,

"ஆரியர்களைக் காத்து வம்பர்களை மனுவின் ஆட்சிக் குளடக்கி,கறுப்புத்தோலைவென்றான்", எனவும். இந்திரன் வேதப் புலவர்களால் பல இடங்களிற் புகழப்பட்டுள்ளான். இவ்விதங் கோலர்களை அடக்கி, தஸ்யூக்களென்றும், பிறகு தாசர்களென்றும், இறுதியாக "சூத்திரர்கள்” என்று ஆரியர்கள் இக்கோலர்களை அழைத்துள்ளார்கள். இவ்விதமே சூத்திரன் என்ற சொல்வந்ததென

" வேத இந்தியா " என்ற புத்தகத்தின் ஆசிரியரான மிஸ்டர் ஜிநாய்தே அ. ரகோஜின் (Mr. Zenaide A. Ragozin), அபிப்பிராயப்படுகின்றனர். மற்றும் சூத்திரன் " என்ற சொல் இருக்கில் 9 மண்டிலங்களிலுந் தென்படாது, இறுதி மண்டிலத்தில் மட்டும் காணப்படுவதை நோக்குமிடத்து, நாம் மேற் கூறிய உண்மை செவ்விதிற் புலப்படும். இனி, மனு கூறியுள்ள "யுத்தத்திற் செயிக்கப்பட்டவன் சூத்திரன்" என்ற பொருளும் நாம் மேலே விளக்கியுள்ள உண்மையோடு பொருத்தமுறுதலைக் காண்க. ஆகலான், இதுகாறுங் கூறியவாற்றால் 'சூத்திரன்" என்றசொல் அமர்க்களத்தில் வெல்லப்பட்ட கோலர்க்குக் கொடுக்கப்பட்ட தென்பது வலி யுறுத்தப்பட்டதாம். இனிக் கோலர்களை அடக்கவே, இவர்கள் ஆரியர்களுடன் கலக்கநேரிட்டது. அப்பொழுது, ஆரியப்பெண்களைக் கோலர்கள் புணரவும், மணஞ் செய்யவும் நேரிடவே, பல பிள்ளைகள் பிறக்கலுற்றனர். இவ்வழக்கம் மனுவின் காலத்து மிகுதியாகப் பெருகிக்கிடந்தது. ஆகையினால்தான் மனு இங்ஙனம் கலப்பு வகையாற்பிறந்த சங்கர ஜாதி, அநுலோம ஜாதி, பிரதிலோம ஜாதி, அந்தராள ஜாதி, விராத்திய ஜாதி, பாகிய ஜாதி, முதலிய புதிய சாதிகளைக் குறிப்பிட்டார். இவ்வாறாக ஆரியப் பெண்களைக் கோலர்கள் புணரும் வழக்கம் மிகுந்துவிடவே, அதனை நிறுத்தவே மனு கீழ்க்கண்ட,

 

"சூத்திரன் வலிமையால் மற்ற மூன்று வருணத் தாரின் மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர் போகிறவரையில் தண்டிக்க”...(8 அ. 359 சு.)

 

"சூத்திரன் காக்கப்படாத துவிஜாதிகளின் மனை வியைப்புணர்ந்தால் பீஜம், சிசிநம் முதலியவை களை அடியோடு அறுக்கவேண்டியது. காக்கப் பட்ட ஸ்திரியைப் புணர்ந்தால் தேகம் முழுவதும் வெட்டி அவனுடைய எல்லாப்பொருளையுங் கவருக" (8 அ. 374 சு.) முதலிய கொடிய சட்டங்களை விதிக்க நேரிட்டதென கொள்ளக் கிடக்கின்றது. இவ்வாறே கோலர்களோடு புணர்ந்த ஆரியப் பெண்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில பார்ப்பனப் பெண்கள் தங்கட்கு இவ்விதமாய் நேர்ந்த குற்றத்திற்காக தண்டனைக்கு அஞ்சி, நந்தமிழ் நாட்டின்பால் குமரி யாட வந்திருக்கின்றனர்.பலர் வந்த இடங்களில் மறைவாக பிள்ளைகளையும் பெற்றிருக்கின்றனர்.

இவ்வுண்மை

 

"வார ணாசியோர் மறையோம் பாள

னாரண வுவாத்தி யபஞ்சிக னென்போன்

பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்ட மஞ்சித் தென்றிசைக் குமரி, யாடிய வருவோள்

சூன்முதிர் பருவத்துத் துஞ்சிரு ளியவிடை

யீன்ற குழவிக் கிரங்கா ளாகித்

தோன்றாத் துடவையி னிட்டன ணீங்க"

என்ற மணிமேகலை அடிகளால் வலியுறுத்தப்படும். ஆகவே இவ்விதம் கலப்பு வகையாற் பிறந்தவர்களை ஆரியர்கள் ஒதுக்கிவைத்துச்" சூத்திரர்” என்று அழைத்திருக்கின்றனர்.

 

தன் கணிகை மகன் " சூத்திரன்” என்று மனு கூறியுள்ளதும் இதனோடு பொருந்துதல் காண்க. ஆகவே, வெல்லப்பட்ட கோலர்களும், பின்றைக் கோலர்களுக்கும் ஆரியர்களுக்கும் பிறந்த பிள்ளைகளும் சூத்திரர் என்று அழைக்கப்பட்ட னரென்பது செவ்விதில் விளங்குவதொன்றாம். அதற்கேற்ப மனுவும் பத்தாம் பகுதியில் 45 ஆம் சுலோகத்தில்,

 

 

"உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கரஜாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்சபாஷை யுள்ளவர்களாயும், சிலர் சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆயினும் அனைவரும் தஸ்யூக்களென்று சொல்லப்படுவர்" என்று கூறுகின்றார். இதுகிடக்க, இச்சூத்திரன் என்ற சொல் நம் தமிழ் நாட்டிற்கு எவ்வாற்றான் போந்தது என்பதை ஆராய்வாம்.

 

 

வட இந்தியாவில் ஆரியர்கள் நிலைபெற்ற பின்னர் அவர்களுள் பிராமணர்கள் நம் தென்னாட்டிற்கு வந்தனர். அவர்கள் சோதிடஞ்சொல் வோராகவும்,மந்திரவாதிகளாகவும் (Sorcerer), இவட் போந்தார்கள், என புரபசர் இலக்குமணநரசு அவர்கள் கூறுகின்றனர். ஆரியர்கள் தென்னாட்டிற்கு வந்து தமிழ் அரசர்கட்கு "இராஜா" முதலிய ஆரிய பட்டங்களை நல்கி, அவர்களைச் சூரியகுலம்,சந்திரகுலம், அக்கினிகுலம் முதலி யவைகளைச் சார்ந்தவர்களெனப் புகழ்ந்துபேசி பிராமணக்குருக்களாக மாறினர் எனக் கால்ட் வெல் எழுதுகின்றார். இனி மாக்ஸ்முல்லர் ''பிராமணர்கள் வடநாட்டில் ஆக்கம்பெற்றதற்கும்,தென்னாட்டில் ஆக்கம் பெற்றதற்கும் பெரிய தொரு வேற்றுமையுள்ளது. தென்னாட்டிற்குச் சண்டையிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவர்கள் வந்தார்களல்லர். வடநாட்டு அரசர்கள் பலர் உதவியாற் சமாதானமாய் தங்கள் நாட்டை விரிவுசெய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் வந்தனர். வந்து, தென்னாட்டு மொழிகளைக்கற்றுத் தங்கள் மதத்தையும் சட்டங்களையும், வழக்க ஒழுக்கங்களையும் நிலைநிறுத்திவிட்டனர். இறுதியாக, மகம்மதியர்களால் வட இந்தியாவினின்றும் பிராமணர் நூல்களெல்லாந் தள்ளப்பட, அவைகளெல்லாம் தென்னாட்டிலே வேரூன்றப்பட்டன”, எனக் கூறுகின்றார்.

 

 ஆகவே பார்ப்பன ஆரியர்கள் தென்னாட்டிற்குப் பிழைக்கவந்தன ரென்பதே உயர்ந்தோர் பலர் கொள்கையாம். பிழைக்கவந்தார் தமிழ் அரசர்களைத் தம் வயப்படுத்தித் தமிழ்நாட்டு மாபெரும் வீரர்களையும், வேளாளர்களையும், அறிஞர்களையும், புலவர் பெருமக்களையும் ஒரு பெற்றித்தாகச் "சூத்திர" ரென்று அழைத்துவிட்டனர். நம் அரசர்களை இப்பிராமணர் சூரியகுலத்தார்,சந்திர குலத்தார், எனப் புகழ்ந்தனரன்றி "க்ஷத்திரியர்" என்ற பெயரால் விளிக்காது இருந்தது ஈண்டு நோக்கற்பாலதாம். இதை நினைக்குங்கால், பிராமணர் வெளிப்படையாக நம்மைப் புகழ்ந்து, தம் மனத்தினுள் வெறுத்தே எழுவகை இழிந்த பொருள்களைக் கொடுக்கின்ற "சூத்திரன் " என்ற சொல்லால் அழைத்திருக்க வேண்டுமென்று எண்ண இடமேற்படுகின்றது.

 

எனினும் முதன் முதல் இச்சொல்லை நம் மக்களுக்கு ஏற்றுங்கால், இது பெருமையான சொல்லென்றே பிராமணர்கள் சொல்லி யிருத்தல்வேண்டும். நம்மவர்களும், இச்சொல் வட சொல்லாகலின், முதன் முதல் பொருள்தெரியாது, பிராமணர்கள் சொற்களை நம்பி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கலாம். இவ்வாறே கால்ட்வெல்லும் அபிப்பிராயப் படுகின்றனர். எனவே இதுகாறுங் கூறியவாற்றால் பிழைக்கவந்த ஆரியர் ஏமாற்றிச் "சூத்திரர்” என்ற பெயரைத் தமிழ் மக்கட்கு இட்டு விட்டனர் என்பது வலியுறுத்தப்பட்டது.

 

 

குறிப்பு: சனாதனத்தை குறை கூறுவதாக எண்ண வேண்டாம்… தவறுகளைத் திருத்தினால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

 

இவ்வாறு மனிதனை கீழ் சாதிகளாக பார்த்ததால்தான் சுய மரியாதையுடைய எனது பெற்றோர் சனாதன மதத்தை விட்டு இஸ்லாத்தை நோக்கி ஓடினர். குர்ஆனை படித்து அவர்கள் மாறவில்லை. இன இழிவு நீங்க இஸ்லாத்தை ஏற்றனர். குர்ஆனை விளங்காமல் மாறியிருந்தாலும் அவர்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதே. இல்லை என்றால் நானும் ஒருதமிழகத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' 'பாரத் மாதா கீ ஜே' 'மோடி வாழ்க' என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பேன். அத்தகைய நிலையிலிருந்து எங்களை மீட்டெடுத்த எனது முன்னோர்களுக்கும் அதற்கும் மேலான இறைவனுக்கும் நன்றிகள்

 

No comments: