Followers

Wednesday, October 04, 2006

நணபர் ஜோவுக்கு என்னுடைய பதில!

நணபர் ஜோவுக்கு என்னுடைய பதில!

//ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?//

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'

4 : 1 - குர்ஆன்

ஏசுவின் பிறப்பை விட எந்த தாய் தகப்பனும் இல்லாமல் சுட்ட களிமண்ணால் படைக்கப் பட்ட ஆதமின் படைப்பே ஆச்சரியப் படத் தக்கதாகும். அதிலும் அவரிலிருந்தே ஏவாளையும் படைத்தது அதைவிட ஆச்சரியத்திற்குரியதாகும். இவை எல்லாம் இறைவன் தன்னால் எதுவும் முடியும் என்று மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடுகள். அதே போல் உலகில் அவதரித்த தூதர்களிலிருந்து அனைத்து மக்களுக்கும் தந்தை என்ற சிறப்பான அந்தஸ்தையும் ஆதம் பெறுகிறார். இது போல்அந்தந்த காலத்தில் அவதரித்த தூதர்களுக்கு சில சிறப்புகளை இறைவன் வழங்குவான் இதை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளது. 'மற்ற தூதர்களை விட என்னை உயர்த்திப் பேச வேண்டாம்' என்ற தடையையும் முகமது நபி விதித்துள்ளார்.

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்டஇறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!.

61 : 6 - குர்ஆன்

'முகம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'

4 : 79 - குர்ஆன்.

இதன் மூலம் ஏசு நாதர் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் இறைத் தூதராக அனுப்பப் பட்டார். ஆனால் முகமது நபியோ உலக முடிவு நாள் வரை மனித குலத்துக்கு தூதராக அனுப்பப் பட்டுள்ளார். உலக முடிவு நாளன்று திரும்ப பூமிக்கு வரப் போகும் ஏசு நாதரும் முகமது நபியைப் பின் பற்றி அவரை தூதராக ஏற்றுத்தான் இறக்க இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் 'அவரை விட இவர் சிறந்தவர்' என்ற கருத்தும் அடிப் பட்டுப் போகிறது.

'எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது இறைவனுக்குத தகுதியானதன்று. அவன் தூயவன்.'

19 : 35 - குர்ஆன்

இறைவனின் மகன் ஏசு என்று எண்ணுவது இறைவனின் தகுதிக்கு இழிவு என்று இறைவனே பிரகடனப் படுத்துகிறான்.

'தன் முகத்தை இறைவனுக்குப் பணியச் செய்து நல்லறம் செய்து உண்மை வழியில் நின்ற இப்றாகீமின் மார்க்கத்தைப் பின் பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? இறைவன் இப்றாகீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.'

4 : 125 - குர்ஆன்

ஏசு என்னுடைய மகன் அல்ல என்று மறுக்கும் இறைவன் ஆபரஹாம் என்னுடைய உற்ற தோழர் என்று அழைக்கிறான். இதனால் ஏசுவை தாழ்த்தியும் ஆப்ரஹாமை உயர்த்தியும் பேசலாமா என்றால் அவ்வாறு பேசுவது தவறு என்று இஸ்லாம் கண்டிக்கிறது.

'இத்தூதர்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு பல தகுதிகளை உயர்த்தியிருக்கிறான்.'

2 : 253 - குர்ஆன்

இதன் மூலம் சில இறைத் தூதர்களுக்கு மற்ற தூதர்களை விட சிறப்புகளை அளித்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.தூதர் சாலமனுக்கு கொடுத்த ஆட்சி அதிகாரம்,மோசேயுடன் இறைவன் நேரிடையாகப் பேசியது, ஏசுநாதர் இன்றும் உயிருடன் இருப்பது, முகமது நபி இறுதி நபியாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இருப்பது, ஆப்ரஹாமை தன் தோழராக்கிக் கொண்டது போன்ற சிறப்புகளைக் கூறலாம். இந்த சிறப்புகளை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்ற தூதரைத் தாழ்த்தியும் விவாதிப்பது பாவம் என்று குர்ஆன் பின் வருமாறு போதிக்கிறது.

'இறைவனையும், எங்களுக்கு அருளப் பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப் பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப் பட்டதையும், ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் அவனுக்கே நாங்கள் கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுங்கள்.

2 : 136 - குர்ஆன்.

இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இறைவன் தடுத்துள்ளதால் அந்த தூதர்கள் எதைச் சொன்னார்களோ அதன்படி நடந்து இறைவனின் அன்பை நாம் அனைவரும் பெறுவதற்கு முயற்ச்சிப்போமாக.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

-பின்னூட்டமாக இட நினைத்துதான் எழுத ஆரம்பித்தேன். விளக்கங்கள் நீண்டு விட்டதால் தனிப் பதிவாகவே போட்டு விட்டேன்.

No comments: