Followers

Monday, June 08, 2009

ஆகாய விமானமும், பறவைகளும் - சில விளக்கங்கள்



'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 16:79

'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-குர்ஆன் 67:19


பூமி தன்னைத்தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்த பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்க்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்த பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை இருப்பதால் அந்த பறவையை பூமி சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்த பூமி வேகமாக சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.

இதனாலேயே 'வசப்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையை குர்ஆன் பயன்படுத்துகிறது.

இதே வசனத்தை தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களோடு பொறுத்திப் பார்ப்போம்.

இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காக்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக் கேள்விக்கு 'ஆம்' என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். அதைத் தொடர்ந்து 'எவ்வாறு' என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் 'அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும் பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்' என்று பதில் கூறப்படும். இந்த பதில் முறையான பதிலாகாது. குறை உடைய பதிலாகும்.

பூமியின் மீது மேற் கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பதில்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பியவுடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்ச்சி விமானப் பயணத்தை பாதிக்க வேண்டும்.

உதாரணமாக டில்லி விமானம் ஹாங்காக்கை நோக்கி மணிக்கு 650 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்ச்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே டில்லியின் வான் பரப்பில் எங்கும் நகராமல் அந்தரத்தில் நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.

ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோ மீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க் கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.

விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்:

பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோ மீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (relative speed) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்-மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிருந்து 1025 கிலோ மீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்த்தோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோ மீட்டர் அதிக தூரத்துக்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.

இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோ மீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650 +1675) மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்ச்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.

அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காக்கில் தரை இறங்கி இறக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும். எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும் இந்த முடிவு? ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமான பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? அதுவும் இல்லை.

பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்குமாயின் இந்த பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்னைகள் ஏதுமின்றி விமானப் பயணங்களை சுலமாக நடததிக் கொண்டிருக்கிறோம்.

இதே போல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பூமியின் சுழற்ச்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்களில் பறக்கும் பறவைகளானாலும் விமானங்களானாலும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங்களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போன்று நடைபெறுகின்றன.

பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பொருட்களை நேரிடையாக ஈர்ப்பதுடன் அவை பறக்கும் இடத்தையும் காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத்திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறுகளில் இருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்தில் மிக சீரியஸான நினைவூட்டல் என்பதும் இந்த வசனங்களிலிருந்து நன்கு விளங்க முடிகிறது.

'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 16:79

'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.'
-குர்ஆன் 67:19


தகவல் உதவி
'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்'

வானியலைப் பற்றி இன்னும் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments: