Followers

Monday, June 29, 2009

சிலைகள் வைக்க மட்டும் ரூ. ஆயிரம் கோடியா?:



உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அவர் கூறியிருந்ததாவது: லக்னோ நகரின் பல இடங்களில், மாயாவதி தன் சிலைகளை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தையும் நிறுவியுள்ளார். இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக மாயாவதி, இவ்வளவு அரசுப் பணத்தை வீணடித்துள்ளார். உ.பி., மாநில கலாசாரத் துறையின் பட்ஜெட்டில், 90 சதவீதம் சிலைகள் வைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.

யானைச் சிலைகள்: லக்னோவில் 15 மீட்டர் சுற்றளவில் 60 யானைச் சிலைகளை நிறுவியுள்ளார். இதற்காகவும், அவரின் சிலைகளை நிறுவவும் மட்டும் 52.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயல். சிலைகள் அமைப்பதற்காக அரசு பணத்தை மாயாவதி செலவிட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். சிலை வைப்பதற்கு கோர்ட் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காகவும், சிலைகள் வைப்பதை எதிர்த்து வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அறிவித்ததாலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட பல சிலைகளையும் கடந்த 25ம் தேதி அவர் திறந்து வைத்துள்ளார்.

பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அல்லது உருவங்களை பெரிய அளவில் நிறுவக்கூடாது என, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயாவதி சார்பில் உ.பி., மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில அட்வகேட் ஜெனரலுமான எஸ்.சி.மிஸ்ரா ஆஜரானார். உ.பி., மாநில அரசு சார்பில் ஆஜரான வி.வி.லலித் கூறியதாவது: சிலைகள் வைப்பதற்காக மாயாவதி செலவிட்ட அனைத்து தொகைகளுக்கும் மாநில சட்டசபை அனுமதி அளித்துள்ளது என்றார்.

இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிலைகள் வைக்க அரசு பணத்தை ஏராளமான அளவில் செலவிட்டது தொடர்பாக, முதல்வர் மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நான்கு வாரங்களுக்குள் நோட்டீசிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். மேலும், உ.பி., அரசு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உ.பி., மாநிலத்தில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 5.9 கோடி பேர், தங்களின் ஜீவனத்தை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், குழந்தைகள் இறப்பு வீதமும் உ.பி., மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலைகள் வைப்பதற்காக பல 100 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டதை நியாயப்படுத்த முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிட வேண்டும். அந்தப் பணத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

சிதம்பரம் கண்டனம்: சிலைகள் வைப்பதற்காக முதல்வர் மாயாவதி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் சிலையையும், தன் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையும் மாயாவதி நிறுவியுள்ளதால் என்ன பயன்? இந்திய அரசியலில் இதை விட வெட்கப்படத்தக்க விஷயம் வேறு இருக்குமா என்ன?

சிலைகள் வைக்க செலவிட்ட 1,000 கோடி ரூபாயை, ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், கல்வி அறிவை மேம்படுத்தவும் செலவிட்டிருக்கலாம் என்றார்.
-பத்திரிக்கைச் செய்தி

இது போன்ற கோமாளிகளை எல்லாம் முதல்மந்திரியாக ஆக்கும் இந்த மக்களை சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ள ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் நமது அரசியல் அமைப்பின் மீதே கோபம் வருகிறது.

அரசு பணம் எந்த அளவு விரயமாக்கப்பட்டதோ அத்தனையையும் மாயாவதியின் சொத்திலிருந்து எடுத்து கோர்ட் சமன் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் மாயாவதியும் ஒரு தெய்வமாக்கப்படலாம். யார் கண்டது? :-))

2 comments:

Gokul said...

//இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் மாயாவதியும் ஒரு தெய்வமாக்கப்படலாம். யார் கண்டது? :-))//


இங்கேதான் நீங்கே தவறு செய்கிறீர்கள், மாயாவதி இப்போதே தன்னை வாழும் தெய்வம் (ஜிந்தா தேவி) என்றுதான் கூறிக்கொள்கிறார். நீங்கள் நம் அரசியல்வாதிகளை பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன், நாம் கிண்டலாக எழுதுவதை சீரியசாகவும் , சீரியஸாக எழுதுவதை கிண்டலாகவும் எடுத்துக்கொள்ளும் மாமனிதர்கள் அவர்கள்.

இதில் பாவம் உ.பி மக்கள்தான்.

suvanappiriyan said...

கோகுல்!

இந்தியாவிலேயே பின் தங்கி உள்ள மாநிலங்களில் உபியும் ஒன்று. இந்த வறிய மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுவதை நினைத்துதான் முண்டாசு கவி இப்படி பாடினானோ!

'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்'.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!