Followers

Saturday, September 11, 2021

நெகிழ வைத்த பதிவு

 

Viruthagiri A பதிவு இது. நெகிழ வைத்தது

 

சில நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கின்றன.... நம்ப முடியாமல் இருக்கின்றன... ஆனால் உண்மை....

 

நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு...

 

பந்தர் தெரு அக்பர்அலி ஸ்டோர் காரர் பேசினார்

 

சார்... கடையை காலி செய்யச் சொல்கிறார்கள்... காலி செய்கிறேன்... நாளைக்கு வந்து சிரமம் பாராமல் உங்கள் மீதி சரக்கை எடுத்துக் கொண்டு கணக்கை முடியுங்கள்..

 

என் வியாபார அனுபவத்தில் இப்படிச் சொல்பவர்கள் மிகவும் அபூர்வம்... சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்து விட்டுப் போய் விடுவார்கள். ஆள் அட்ரஸ் இருக்காது.... கொடுத்த சரக்கிற்குப் பணம அம்பேல்தான்...

 

இன்று விரைவாகவே பந்தர் தெரு போய்விட்டேன். கடை காலி செய்து கொண்டிருந்தார்கள்... எங்கள் பேப்பர் பிளேட்டுகளை எடுத்து கணக்குப் பார்த்தோம்... அவர் 3 பில்கள் 12000/- ரூபாய்.. எடுத்தது போக 9900/- அவர் கொடுக்க வேண்டியிருந்தது....

 

எங்கே வரப் போகிறது என்று நினைத்தேன்....

 

சார் 4 மணிக்கு வாங்க... எனக்கு வர வேண்டிய பார்ட்டி வர்றதா சொன்னாங்க... எனக்கு அவங்க பத்தாயிரம் தரணும்... அது வந்தவுடன் மொத்தமாக தந்து விடுகிறேன்.... என்றார்...

 

சரி என்று சொல்லி விட்டு மலைய பெருமாள் தெரு ஆண்டர்சன் தெரு வசூலை எல்லாம் முடித்து விட்டு 4 மணிக்குப் போனேன்.... என்ன அதிர்ச்சி... கடையில் ஸ்டுல் போட்டு 2 நரிக் குறவர்கள் அம்மா பெண்ணுமாக உட்கார்ந்து கொண்டு சப்தமாக கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்....

 

நான் வெளியில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்...(எப் சி கடை முதலாளி கூட ஆளை விட்டு அனுப்பி கடையில் வந்து உட்காரச் சொன்னார்) பரவாயில்லை என்று சொல்லி விட்டு நின்று கொண்டிருந்தேன்... ஒரு மணி நேரம்.... அந்த நரிக்குறவ அம்மா பெண்ணும் சுருக்குப் பையில் இருந்து ரூபாயை எடுத்துக் கொட்டினார்கள்...

 

கடைக்காரர் என்னை அழைத்து ரூபாய் எண்ணி கொடுத்தார் - மொத்த தொகை 9900/- ரூபாய்...

 

நம்புங்கள் நண்பர்களே... எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை...

 

அக்பர் அலி கடைக்காரர் சொன்னது இன்னும் அதைவிட ஆச்சரியம்

 

வருடா வருடம் அந்த நரிக்குறவர்கள் அவரிடம் பிள்ளையார் சதுர்த்தி குடை வந்து வாங்குவார்களாம்... விற்று ரூபாய் கொண்டு வந்து கொடுப்பார்களாம்... நரிக்குறவர்கள் அட்ரஸ் எதுவும் தெரியாமல் கொடுத்து வியாபாரம் செய்திருக்கிறார்.... அவர்களும் நாணயமாக திருப்பி கொடுக்கிறார்கள்....

 

அக்பர் அலி கடைக்காரர் சொன்னததுதான் நெகிழ்ச்சியாக இருந்தது...

 

சார் உங்களை இன்னைக்கு நான் ஏமாத்தி விடலாம்..

 

ஆனால் நாளை அல்லாவிற்கு பதில் சொல்ல வேண்டும் நாம் நாணயமாக இருந்தால் நம் கடன் தானாக திரும்பி வரும்...

 

கோடி கோடியாக கடன் வாங்கி டிமிக்கி கொடுத்து நாட்டை விட்டுச் சென்று மறையும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு நாணயஸ்தர்களை காண்பது பிரமிப்பாக இருந்தது.... அவர்களை குறைவாக எடைபோட்ட என் மனது தன்நெஞ்சே தன்னைச் சுட்டது.....

 

படம் பிடிக்கும் போது நல்லா பிடிப்பா என்று குழந்தைத் தனமாக வேண்டுகோள் விடுத்தது மகிழ்வாக இருந்தது..

 

இந்தப் பதிவு சாதாரணமானததுதான்... ஆனால் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்....

 

எளியோரைத் தாழ்த்தி... வலியோரை வாழ்த்தும்...

 

உலகே உன் செயல்தான் மாறாதா....?


--------------------------------------------------

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: சவ்பான் (ர­லி) நூல்: இப்னுமாஜா (2403)





 

1 comment:

Dr.Anburaj said...


இப்படிப்பட்ட பரிபுரண நோ்மையாளா்கள்

ஹிந்து சமுகத்தில் பல ஆயிரம் பேரைப் பார்த்திருக்கின்றேன். பழகியிருக்கின்றேன்.

நல்ல செய்தியை படிப்பது நல்லது.