
"என் மகன் தேச விரோதியும் அல்ல; தீவிரவாதியும் அல்ல. அவரைப் பற்றி மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும், பண்டாரு தத்தேத்ரயாவும் சொன்னவை அனைத்தும் அப்பட்டமான பொய்" என்று ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, "என் மகன் தேச விரோதியும் அல்ல; தீவிரவாதியும் அல்ல. அவரைப் பற்றி மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும், பண்டாரு தத்தேத்ரயாவும் சொன்னவை அனைத்தும் அப்பட்டமான பொய். ஸ்மிருதி இரானி அவரது நடிப்பு முகத்தை துறக்க வேண்டும். என் மகன் ரோஹித்தின் மரணத்துக்கு "காரணமான" இரானி, தத்தாத்ரேயா போன்றவர்கள் மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக அழிவை சந்திக்கும்.
மோடி இந்நாட்டின் பிரதமராக நடந்துகொள்ள வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்காரரைப்போலவோ, சாதிப் பிரதிநிதி போலவோ நடக்கக்கூடாது" என்றார்.
ரோஹித்தின் நண்பர் தொந்தா பிரசாந்த் கூறும்போது, "ரோஹித்தின் தற்கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கலை சினிமா வசன வாக்கியங்களைப் போல் அலங்கரித்துப் பேசியிருக்கிறார் ஸ்மிருதி இரானி" என்றார்,
ரோஹித்தின் சகோதரர் ராஜ சைத்தன்யா கூறும்போது, "ரோஹித் தற்கொலை செய்தி கிடைத்தவுடனேயே நான் அவரது அறைக்குச் சென்றேன். நான் அங்கு சென்றபோது ஏற்கெனவே போலீஸாரும், மருத்துவர்களும் ரோஹித் சடலத்தின் அருகே இருந்தனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, "ரோஹித் அருகே மருத்துவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது சடலத்தை அரசியல் ஆயுதமாக சிலர் பயன்படுத்தினர்" எனக் கூறியிருக்கிறார். இரானி சொன்னதை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மைய மருத்துவரே மறுத்துள்ளார்" என்றார்.
'திட்டமிட்டே மறைத்தார்'
டிசம்பர் 18-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ரோஹித் வெமுலா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், பல்கலைக்கழத்தில் தலித் மாணவர்களை அனுமதிக்கும்போதே அவர்களுக்கு 10 மில்லிகிராம் சோடியம் அசைடு வேதிப்பொருளும், ஒருதூக்குக் கயிறும் தந்துவிடுங்கள் எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் குறித்த விவரத்தை ஸ்மிருதி இரானி திட்டமிட்டே மறைத்துள்ளார் எனக் குற்றம்சாட்டினார் ரோஹித்தின் நண்பர் தொந்தா பிரசாந்த்
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
28-02-2016
No comments:
Post a Comment