Followers

Wednesday, April 06, 2011

நமது ஓட்டு யாருக்கு? - தேர்தல் களம்

தமிழ்நாடு முழுவதும் தற்போது விழாக் கோலம் பூண்டிருக்கிறது. தேர்தல் என்ற பெயரில் நடக்கும் காமெடிகளை தினமும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்த்து வருகிறோம். 'இந்த படை போதுமா?- இன்னும் கொஞ்சம் வேணுமா?' 'பனை மரத்துல வவ்வாலா' என்ற கோஷங்கள் இன்னும் ஒரு வாரத்துக்கு விண்ணைப் பிளக்கும். ஒரு குவார்டருக்கும் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் 100 200 ரூபாய் பணத்துக்கும் நாள் முழுக்க 'வாழ்க, வாழ்க, ஒழிக ஒழிக' என்று கத்தி ஓய்ந்து விடும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களைத்தான் இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுக்க உடை இந்த மூன்றுக்கும் அல்லாடிக் கொண்டு ரோட்டோரத்தில் கிடக்கும் இந்த சாமான்யன்களின் முன்னேற்றத்துக்கு எந்த முயற்ச்சியும் எடுக்கப்படவில்லை.

இலவசங்களை அள்ளி வீசுகிறார்கள். இதனால் ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஒரு நாட்டில் ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரிப்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாக முடியும்.

கருணாநிதி: இவருடைய ஐந்து ஆண்டு கால ஆட்சி பல குறைகள் இருந்தாலும் ஓரளவு சிறப்பாகவே நடத்தினார். சாதி மத சண்டைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டது. கல்வி உதவித் தொகை, இலசவ மருத்துவ சேவை, கிலோ ஒரு ரூபாய் அரிசி என்று ஏழைகளை கணக்கிலெடுத்து செயல்படுத்தினார். இடையே வண்ண தொலைக்காட்சி பெட்டி என்ற கோமாளித்தனமான அறிவிப்பையும் செய்யாமல் இல்லை. சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். திரும்பவும் வந்தால் 3.5 சதவீதத்தை 5 சதமாக உயர்த்துகிறேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை தவிர்த்து விட்டு பார்த்தால் அடுத்த முதல்வராக கலைஞரும் நிழல் முதல்வராக ஸ்டாலினும் வருவது சிறந்தது என்பது எனது அபிப்ராயம்.

ஜெயலலிதா: இத்தனை வருடம் போனபின்னரும் இவருடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை - குறள்

ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிப்பவரது ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். சான்றோர் தம் பகைவரைத் தம துணைவராக மாற்றுவதற்க்குக் கையாளும் கருவியும் பணிவே என்கிறார் வள்ளுவர்.

வைகோவை வெளியாக்கியதிலிருந்து எல்லோரையும் கலக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது என்பது வரை எதிலும் இவர் பணிவு கலந்தாலோசிப்பு என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஆட்சிக்கு வரும் முன்பே இந்த நிலை. வந்த பின்னால் இன்னும் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றப் போகிறதோ தெரியவில்லை. ஊழலில் திமுக வுக்கு இவர் சற்றும் சளைத்தவரல்ல. நீதி மன்றத்தால் முதல்வர் பதவியை பிடுங்கும் அளவுக்கு அசிங்கப்பட்டார். அங்கு ஸ்டாலின் கனிமொழி என்றால் இங்கு சசிகலாவும் நடராஜனும்.

அடுத்து இவர் ஆட்சிக்கு வந்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.(இப்ப மட்டும் என்ன வாழுதாம்) இந்துத்வாவாதிகளின் ஆதிக்கமும் அதிகரிக்கும். இது பிறபடுத்தப்பட்ட மக்களையும், சிறுபான்மையினரையும் அச்சத்திற்கு உள்ளாக்கும்.

விஜயகாந்த்: 'டைரக்டர் எங்கு பம்பரம் விடச் சொல்கிறாரோ அங்கு நான் விடுவேன். அதைக் கேட்க நீ யார்?' என்று அரசியல் பேசும் இவரிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? பிரச்சாரத்துக்கு குடித்துவிட்டு வந்து தனது வேட்பாளரையே அடிப்பதும், வேறொரு கூட்டணி கட்சிக் கொடி பறப்பதை சகித்துக் கொள்ளாததும் குணத்தில் ஜெயலலிதாவை ஒத்தே இருக்கிறார். 'ஜாடிக்கு ஏத்த மூடி'

காங்கிரஸ்: 'தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர்: விடுதலைப் புலிகள் தோல்வியடைய காரணமாக இருந்தனர். எனவே இவர்களுக்கு ஓட்டளிக்கக் கூடாது' என்பது சீமான் போன்றவர்களின் கோரிக்கை. சிங்களர்களின் கொடுமையை தட்டிக் கேட்டு அவர்களை பயத்தில் ஆழ்த்திய வரை ஓகே! பிற் காலங்களில் தன்னை எதிர்த்த தமிழர்களை எல்லாம் விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் போட்டுத் தள்ளியதை வசதியாக மறந்து விடுகிறோம். நிரந்தர தீர்வுகாண விரும்பிய ராஜீவ் காந்தியை கொடூரமாக கொன்றனர். இதனால் அப்போது கலைஞர் தனது ஆட்சியையும் இழக்க நேர்ந்தது. சோனியாவை இளம் வயதிலேயே விதவையாக்கினர். நடுநிலை வகித்த இலங்கை தமிழ் முஸ்லிம்களை பெரும் கோடீஸ்வரர்களை கையில் 500 ரூபாயை கொடுத்து மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பினர். காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொன்றனர்.

'தனி ஈழம்' என்பதே பூகோள அடிப்படையில் சரியான தீர்வாகாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். உள்ளுக்கள் புகைந்து கொண்டிருக்கும் சாதி வேற்றுமை வேறு பிரபாகரனின் தலைமைக்கு பெரும் இடைஞ்சலாக முன்பு இருந்திருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கையில் அதிகார பகிர்வு செய்து கொண்டு இந்தியாவின் உதவியோடு அமைதியான ஆட்சியை பிரபாகரன் முன்பு கொடுத்திருக்கலாம். எவரது பேச்சையும் மதியாத அவரது குணமே இத்தனை லட்சம் சகோதர தமிழ் மக்கள் உயிர் இழக்க காரணமாக இருந்தது. புலிகளை ஒழிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை காலமானாலும் இலங்கை பிரச்னை ஓயப் போவதில்லை. அதே சமயம் சிங்கள அரசு சகோதர தமிழ் மக்களை கொன்றதும் மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை மத்திய அரசு தலையிட்டு உரிய பரிகாரம் காண வெண்டும். வன்னியில் அகதி முகாம்களில் சிரமபபடும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு தாராள உதவிகளை வழங்க வேண்டும். எனவே தமிழர்களுக்கு இந்த வகையில் காங்கிரஸ் நன்மையே செய்திருக்கிறது என்பேன். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுமானால் இது கசப்பாக தெரியலாம்.

மன்மோகனுக்கு அடுத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஆளாக ராகுல்காந்தியை நான் பார்க்கிறேன். ராகுலின் நிர்வாகத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என்பது எனது கணிப்பு.

கருத்துக் கணிப்பு: 5000 பேரில் 500 பேர் என்ன கருத்தில் உள்ளார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்டுவது இது. கருத்து கணிப்பு எடுப்பவர் எந்த கட்சியை சேர்ந்தவரோ அதற்கு சாதகமாக முடிவை வெளியிடுவார். இதன்படி பார்த்தால் தற்போது ஜெயலலிதாவுக்குத்தான் ஆட்சி எனபது போல் கணிப்புகள் சொல்கின்றன.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்து சாதி மத மக்களும் சகோதர பாசத்தோடு பழக வேண்டும். தமிழகம் மேலும் முன்னேறி வேலை இல்லா திண்டாட்டம் களையப்பட வேண்டும். நமது நாடு முன்னேறிய நாடுகளுக்கு சமமாக உலக அரங்கில் கோலோச்ச வேண்டும். இத்தனையையும் கொண்டு வரும் ஒரு நல்லாட்சியை இறைவன் நமது தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

22 comments:

vasanth, erode said...

ஜெயலலிதா கூட்டத்தை புறக்கணித்த விஜயகாந்து - பதிலுக்கு திருத்துறைபூண்டி விஜயகாந்து கூட்டத்தை புறக்கணித்தனர் அ தி மு க வினர்

வலிப்போக்கன் said...

எல்லாரும் மாதிரி நீங்களும் ஒன்ன மறந்திட்டிங்க இந்த ஓட்டினால் வாக்காளர்க்கு என்ன அதிகாரம் இருக்குன்னு சொல்லலியே சார்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
சகோ.சுவனப்பிரியன்,

பொதுவாக எல்லா தேர்தலிலும் 'கருத்துக்கணிப்பு' என்ற பெயரில் 'கருத்துத்திணிப்பு' நடக்கிறது. அதனால்தான் அதற்கு கோர்ட் தடை விதித்தது.

//கருத்துக் கணிப்பு: 5000 பேரில் 500 பேர் என்ன கருத்தில் உள்ளார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்டுவது இது.//--Exactly--அந்த 5000 பேரிடமும்(100%) ஒருவர் 'கருத்து' கேட்டுவிட்டால் அவர் அதை 'கணிப்பு' என்று வெளியிட முடியாது. அதில் கணிப்பே இல்லை. அதற்கு பெயர் தேர்தல் முடிவு.

அதேநேரம், அந்த 5000 பேரில் தம் கருத்துக்கு ஒத்த ஒருவரை கண்டுகொண்டு, அந்த ஒரே ஒருவரை மட்டும் கேட்டுவிட்டுக்கூட மீதி 4999 பேரின் கருத்தையும் கணித்து 'கருத்துக்கணிப்பு' வெளியிடலாம்..!

இதற்குப்பெயர்தான் கருத்துத்திணிப்பு.

//"நமது ஓட்டு யாருக்கு? - தேர்தல் களம்"//--வெளிநாட்டில் இருக்கும் நம் ஒட்டை பார்சல் அனுப்பும் வசதி எப்போது வரும்..?
:)

Sketch Sahul said...

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.
‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கன.

suvanappiriyan said...

வசந்த்!

//ஜெயலலிதா கூட்டத்தை புறக்கணித்த விஜயகாந்து - பதிலுக்கு திருத்துறைபூண்டி விஜயகாந்து கூட்டத்தை புறக்கணித்தனர் அ தி மு க வினர்//

இரண்டு பேரையும் இதையே தொடரச் சொல்லுங்கள். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

திரு சுவனப்பிரியன் அவர்களே உங்கள் பதிவு மிக அருமை.விஜயகாந்த்ன் கோமாளித்தனமான அரசியல் காமெடியால் கருணாநிதி அவர்கள் 6வது முறை முதல்வர் ஆவது உறுதி .தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்

suvanappiriyan said...

வழி(லி)ப் போக்கன்!

//எல்லாரும் மாதிரி நீங்களும் ஒன்ன மறந்திட்டிங்க இந்த ஓட்டினால் வாக்காளர்க்கு என்ன அதிகாரம் இருக்குன்னு சொல்லலியே சார்//

வாக்குச் சீட்டின் அருமையை உணராத வாக்காளரிடம் எதைச் சொன்னாலும் புரியாதே! கேரளாவில் ஒரு மம்முட்டியோ ஒரு மோகன்லாலோ வேட்பாளராக நிற்க முடியுமா? அந்த மக்கள் அடித்து விரட்டி விடுவார்கள். ஆனால் தமிழகத்தில் முடியும். கேரளாவில் படித்த மக்கள் அதிகம் இருப்பதால் அங்கு அந்த நிலை. அதே நிலை இங்கும் வர மக்களுக்கு கல்வி அறிவு அவசியம்.

உழைதத காசுக்கு ஆறு மணியானவுடன் ஒரு குவார்டடடரை தள்ளிவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் இலவச வண்ண தொலைக்காட்சியில் மிட்நைட் மசாலாவை பார்த்து விட்டு அவ்வளவுதான் உலகம் என்று தனது வாழிநாளைக் கழிக்கும் பெரும்பான்மை தமிழர்கள் அவர்களை உணர்வது எப்போது?

'என் கை சுத்தமானது. கலைஞர் ஊழல் பெர்வழி' என்று பேசும் இதே விஜயகாந்த் தான் நடித்த படங்களுக்கு வெள்ளையாக எத்தனை கோடிகள் வாங்கினார். கறுப்பாக எத்தனை கொடிகள் வாங்கினார்: என்று பொது மேடையில் விவாதிப்பாரா? வரி ஏய்ப்பு செய்த அந்த பணமெல்லாம் சாமான்யனுக்கு சேர வேண்டிய பணமல்லவா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Mohd said...

//
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.
‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கன.
//

அவருக்கு மாற்று வேறு யார்? ஜெ. அம்மையாரா? அரசியலில் அதிகாரம் முக்கியம்தான், ஆனால் அதைவிட மக்களுக்கு மதசுதந்திரம் முக்கியம். மத மாற்ற தடை சட்டம் நினைவிருக்கிறதா? ஆடு, கோழி தடை சட்டம் நினைவிருக்கிறதா? மத துவேஷத்தை வளர்த்து, முஸ்லிம்களை கொன்று குவித்து முதலமைச்சராக வெற்றி பெற்ற மோடியின் பதவி ஏற்ப்பு விழாவில் கலந்துகொண்டவர் யார் என்று தெரியுமா? அதிகார ஆசைக்காக முஸ்லிம்களை பகடை காய் ஆக்காதீர்கள்.

சுதந்திர இந்தியாவில் இத்துனை ஆண்டுகளில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை தந்தவரை நாம் மறக்கலாமா? அந்த அம்மையாருக்கு இவர் எவ்வளவோ மேல்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!

//"நமது ஓட்டு யாருக்கு? - தேர்தல் களம்"//--வெளிநாட்டில் இருக்கும் நம் ஒட்டை பார்சல் அனுப்பும் வசதி எப்போது வரும்..?//

'என் ஓட்டு யாருக்கு' என்று சொல்லவில்லை. 'நமது ஓட்டு யாருக்கு?' என்றால் நம் குடும்பமும் நம் உறவினர்களும் நண்பர்களும் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் நாம் விளக்கி யாருக்கு நமது குடும்பத்தின் வாக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் அந்தந்த நாட்டு தூதரகங்களிலேயே வாக்களிக்கலாம் என்ற ஏற்பாடு பரிசீலிக்கப்பட்டது. அப்படி ஏதும் அரசு சார்ந்த விபரம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். பலருக்கும் உபயோகமாக இருக்கும். பார்சல் ஓட்டு இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. வெளிநாடுகளில் தொடங்கப்பட்டு விட்டதா என்ற விபரம் தெரியவில்லை. யாராவது தெரிவியுங்களேன்.

suvanappiriyan said...

திரு ஸ்கெட்ச் சாஹூல்!

//கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். //

தனி நபர்களுக்கு இரண்டு மூன்று எம்.எல.ஏ, எம்.பி சீட்டுகளைத் தவிர்த்து வேறு என்ன விசேஷ பலனைப் பெற்றோம். தராசு சின்னத்தில் தனித்துவத்தோடு போட்டியிட்டு முஸ்லிம் லீக் இந்த சமுதாயத்துக்காக என்ன சாதித்தது என்று சொல்ல முடியுமா? தேர்தலில் போட்டியிடாமலேயே முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் பெற்று தந்த தவ்ஹுத் ஜமாத்தை மறந்து விட்டீர்களே! இந்த தேர்தல் அறிக்கையில் அந்த இடஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்துவதாகவும் கலைஞர் தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருக்கிறாரே!இதற்கு தூண்டகோலாக இருந்தது தேர்தலில் போட்டியிடாத தவ்ஹூத் ஜமாத் என்பது தெரியுமா? சமீபத்தில் நடத்திய வாழ்வுரிமை மாநாடு நடந்து மறுநாளே சோனியாவும் மன்மோகனும் பி.ஜே. யை அழைத்து டில்லியில் வாக்குறுதி கொடுத்ததையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன். மத்தியிலும் இதே போன்ற இட ஒதுக்கீடு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. பிரார்த்தியுங்கள்.

//‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கன.//

அதற்க்குத்தான் இந்த இட ஒதுக்கீட்டை போராடி பெற்றிருக்கிறோம். இனியும் 10 ஆவது படித்தவுடன் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் பிள்ளைகளை படிக்க வைப்பதில் ஆர்வம் செலுத்துவோம். படித்த பிள்ளைகளை குறைந்த சம்பளமாக இருந்தாலும் அரசு வேலைகளில் அமர்த்துவோம். இது நடந்தால் நீங்கள் கேட்கும் அதிகாரம் தானாக நமது கைக்கு வரும்

தலித்துகளுக்கு உள்ளதுபோல் முஸ்லிம்களுக்கும் தனி தொகுதி ஒதுக்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். கூடிய சீக்கிரம் அதையும் பெறுவோம். பிரார்த்தியுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

baleno said...

=தன்னை எதிர்த்த தமிழர்களை எல்லாம் விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் போட்டுத் தள்ளியதை வசதியாக மறந்து விடுகிறோம்.=
மறந்தா!! அப்படி ஏதாவது நடந்ததா என்பார்கள். புலிகளின் இப்படியான கொடுமைகளை எப்போதாவது கண்டித்திருப்பார்களா?
=புலிகளை ஒழிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை காலமானாலும் இலங்கை பிரச்னை ஓயப் போவதில்லை.=
மிக சரியான கருத்து. மக்கள் உயிர் இழப்புக்கள் பொருளாதார அழிவுகள் விதவைகள் பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றிருக்கும்.
=புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுமானால் இது கசப்பாக தெரியலாம்.=
புலம் பெயர்ந்த தமிழர்களை விட்டு தள்ளுங்கள். இலங்கை தமிழர்களின் துன்பம் அவர்களுக்கு வசதி. அவர்களின் பிள்ளைகள் நல்லாக படித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் இலங்கையில் உள்ளவனது பிள்ளைகள் சண்டைக்கு போக வேண்டும்.

suvanappiriyan said...

//விஜயகாந்த்ன் கோமாளித்தனமான அரசியல் காமெடியால் கருணாநிதி அவர்கள் 6வது முறை முதல்வர் ஆவது உறுதி .தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்//

திரு அன்வர்! உங்கள் வாக்கு பலிக்கட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

//சுதந்திர இந்தியாவில் இத்துனை ஆண்டுகளில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை தந்தவரை நாம் மறக்கலாமா? //

சகோ.முகமது! சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//புலம் பெயர்ந்த தமிழர்களை விட்டு தள்ளுங்கள். இலங்கை தமிழர்களின் துன்பம் அவர்களுக்கு வசதி. அவர்களின் பிள்ளைகள் நல்லாக படித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் இலங்கையில் உள்ளவனது பிள்ளைகள் சண்டைக்கு போக வேண்டும்.//

பலேனோ! இலங்கை தமிழர்கள் பலரின் எண்ணத்தை சரியாக வெளிப்டுத்தியிருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Pradeep said...

எல்லாத்துக்கும் மத கண் கொண்டு பார்க்கும் மூடர்களே ! புலிகளை எதற்க்காக எதிர்க்கிறாய் ? மதம் தான காரணம் ? உனக்கெல்லாம் சினிமா விமர்சனம் எழுத கூட தகுதி கிடையாது.

suvanappiriyan said...

பிரதீப்!

//எல்லாத்துக்கும் மத கண் கொண்டு பார்க்கும் மூடர்களே ! புலிகளை எதற்க்காக எதிர்க்கிறாய் ? மதம் தான காரணம் ? உனக்கெல்லாம் சினிமா விமர்சனம் எழுத கூட தகுதி கிடையாது.//

சரியாக சொன்னீர்கள்! என் அறிவுக்கு, எனக்கு சினிமா விமரிசனம் எழுத தகுதியில்லைதான்.

ஒன்றை மறந்து விடுகிறோம். இன்று இலங்கைத் தமிழர்கள் இவ்வளவு சிரமங்களை அனுபவிக்க மூல காரணமே விடுதலைப்புலிகளின் பிடிவாதம்தான். ராஜீவ் காந்தி கொடுத்த சமரச திட்டத்தை ஏற்று ஒன்றுபட்ட இலங்கையில் அதிகார பகிர்வுக்கு சம்மதித்து இருந்தால் இத்தனை மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டிருப்பார்களா? இதனால் நான் ராஜபக்ஷேயை தூக்கி பிடிக்கவில்லை.இலங்கை அரசு செய்த கொடுமைகளையும் நான் மறைக்கவில்லை. அவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அதே இனப்படுகொலையை தன் பேச்சைக் கெட்காத தன் இனத்தை ஆயிரக்கணக்கில் அழித்த புலிகளை ஆதரிக்க என் மனது எப்படி இடம் கொடுக்கும? எவருடைய பேச்சையும் கேட்காத புலித் தலைமை செய்த தவறுதான் இத்தனைக்கும் காரணம்.

இனியாவது இந்திய அரசு உதவியோடு அல்லல்படும் அந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். தமிழினத்திற்கு சோனியா தலைமை நன்மைதான் செய்திருக்கிறது. இதன் பலனை அனுபவிக்க இலங்கை தமிழர்களுக்கு சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை பொறுப்போம்.

suvanappiriyan said...

தருமி!

//7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை.//

அதாவது கட்டுரை ஆசிரியர் சொல்ல வருவது முகமது நபி குர்ஆனை இறைவனிடமிருந்து பெறவில்லை. பைபிள், தோரா போன்ற வேதங்களிலிருந்து காப்பி அடித்து குர்ஆனை தந்து விட்டார் என்கிறார். சரி... அடுத்த இரண்டு பாராக்களில் அவர் சொல்வதை அவரே மறுக்கும் விந்தையையும் பார்ப்போம்.

//கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை; இரண்டும் தனித்தனியே பார்க்கப் படுவதில்லை. முகமது ஒரு சேனைத் தலைவர்; சண்டையுமிட்டார்; சமாதானமும் செய்வித்தார்; சட்டங்களை இயற்றினார்; தண்டனைகளை அளித்தார். அவர் காலத்திலிருந்தே இஸ்லாமியர் ஒரு குழுவாக, சமூகத்தையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்திருந்தவர்களாக இருந்தனர்.//

மேலே சொன்ன கருத்திலிருந்து இங்கு முற்றிலும் மாறுபடுகிறார் ஆசிரியர். எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள். ஒரு மனிதரிடமிருந்து ஒரே புத்தகத்தில் ஒரே பக்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள். எந்த அளவு குழம்பியிருக்கிறார் என்பது தெரியவில்லையா?

எசக்கியேல் 23 ஆம் அதிகாரத்தில் நான் எழுதவே கூசக் கூடிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இதை குடும்பத்தவர் மத்தியில் நம்மால் அமர்ந்து படிக்க முடியுமா? அதே போல் உதாரணத்திற்கு மீன்கள் கிடைத்த அற்புதத்தை ஏசுநாதரின் வாழ்நாளிலேயே நடந்ததாக லூக்கா சொல்கிறார்.ஆனால் இந்த அற்புதமோ ஏசு உயிர்த் தெழுந்த பின்னரே நடந்தது என்று யோவான் கூறுகிறார். இதில் யார் சொல்வதை நம்புவது. இது போன்று எண்ணற்ற உதாரணங்களை என்னால் பைபிளிலிருந்து எடுக்க முடியும். முகமது நபி இதே பைபிளை வைத்து குர்ஆனை காப்பி அடித்திருந்தால் இதில் உள்ள தவறுகள், ஆபாச கதைகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். ஆனால் பைபிளில் சொல்லப்படும் சம்பவங்களும், குர்ஆனில் சொல்லப்படும் சம்பவங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. சொல்லப்படும் நபர்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்களின் வரலாறு முற்றிலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில்தான் கட்டுரை ஆசிரியர் குழம்பிப் போய் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.

மேலும் விளக்கமறிய

எனது பழைய பதிவை பார்வையிடுங்கள்.

Pradeep said...

பாலஸ்தீனம் இன்று வரை அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு ,பாலஸ்தீனிய போராளி குழுக்களே காரணம்.இஸ்ரைல்-அமெரிக்க செய்த படுகொலைகளை , இந்த போராளிகளால் இறந்த மக்கள் அதிகம். ஒத்து கொள்கிறீர்களா.?

suvanappiriyan said...

//பாலஸ்தீனம் இன்று வரை அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு ,பாலஸ்தீனிய போராளி குழுக்களே காரணம்.இஸ்ரைல்-அமெரிக்க செய்த படுகொலைகளை , இந்த போராளிகளால் இறந்த மக்கள் அதிகம். ஒத்து கொள்கிறீர்களா.?//

பாலஸ்தீனில் மக்கள் தினமும் கொல்லப்படுவது இஸ்ரேலிய படைகளினால். போட்டிக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டாலும் பொது மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்துவதில்லை. மேலும் பேச்சுவார்த்தைக்கு அன்றிலிருந்து முட்டுக்கட்டையாய் இருப்பது இஸ்ரேலின் பிடிவாதம்தான். பேச்சுவார்த்தைக்கு இன்று வரை தயாராக இருப்பது பாலஸ்தீனர்களே!

புலிகள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்களே! அதுபோல் பாலஸ்தீனர்கள் தங்கள் மக்களை போராளிகள் கேடயமாக என்றாவது பயன் படுத்தியது உண்டா? புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப் போன எத்தனையோ தழிழர்களை குருவி சுடுவதைப் போல் சுட்டார்களே! இதை நியாயப்படுத்துகிறீர்களா?

Pradeep said...

//புலிகள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்களே! அதுபோல் பாலஸ்தீனர்கள் தங்கள் மக்களை போராளிகள் கேடயமாக என்றாவது பயன் படுத்தியது உண்டா? புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப் போன எத்தனையோ தழிழர்களை குருவி சுடுவதைப் போல் சுட்டார்களே! இதை நியாயப்படுத்துகிறீர்களா?//

அப்படியா. சிங்கள அரசின் பிரச்சாரம் ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம். அதே போல் , அமெரிக்க அரசின் பிரசாறபடி, பாலஸ்தீனிய தீவிரவாதிகள் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொள்வதால் தான் பாலஸ்தீனியம் மீது தாக்குதல் நடத்தபடுகிறது . சரியா.???

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

//வெளிநாட்டில் இருக்கும் நம் ஒட்டை பார்சல் அனுப்பும் வசதி எப்போது வரும்..? //

அந்த வசதி இந்தமுறை அமலில்தான் உள்ளது,நமக்கு அந்த செய்தி சரியாகவந்து சேரவில்லை..

அதற்க்கு சில நடைமுறைகளை தூதரகம் மூலம் செய்தாக வேண்டும்..

வெளிநாட்டு வாழ்தமிழர்கள் ஓட்டுப்போட வசதிகள் செய்து இருந்தும் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்...

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//வெளிநாட்டு வாழ்தமிழர்கள் ஓட்டுப்போட வசதிகள் செய்து இருந்தும் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்...//

எப்படி விண்ணப்பிப்பது? என்ற விபரங்களை பதிவாக இட்டால் நலமாக இருக்கும். தெரிந்தவர்கள் முயற்ச்சிக்கலாமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ரஜின்.