முன்பு ஏர்வாடி தர்ஹாவில் தீ விபத்து ஏற்பட்டு பல நோயாளிகள் உடல் கருகி இறந்தது நினைவிருக்கலாம். பலர் மனநலகாப்பகத்தை குடிசைத் தொழிலாக அங்கு நடத்தி வந்தனர். கட்டிப் போடப்பட்டிருந்த பல நோயாளிகள் தப்ப வழியில்லாமல் பரிதாபமாக இறந்தனர். உடன் அரசு விழித்துக் கொண்டு ராமதாஸ் கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனின் உத்தரவுப்படி அரசே மனநல விடுதியை ஒரு பிரிவாக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ மனையில் தொடங்கியது. முறையான மன நல காப்பகம் இல்லாததால் மனநல பிரிவு மருத்துவ மனையில் தொடங்கியும் அதன் பலன் நோயாளிகளை சென்றடையவில்லை. தற்போது பழையபடியே தனியார்கள் குடிசை தொழிலாக மனநலகாப்பகத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரிடம் கொண்டு செல்லாமல் தர்ஹாவுக்கு ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதில் இந்து மதத்தவரும் அதிகம் வருவதுதான் விசேஷம். தர்ஹாவில் கட்டிப் போடுவதால் நோயாளிக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். படித்தவர் பாமரர் என்று எல்லோரும் தர்ஹாவில் வீழ்ந்து கிடப்பதுதான் விந்தை. முன்பு இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இன்று அனைத்து மன வியாதிகளுக்கும் மருத்துவர்கள் திறம்பட வைத்தியம் பார்க்கின்றனர். இன்றும் கூட வியாதியஸ்தர்களின் உறவினர்கள் பல ஆண்டுகள் தர்ஹாக்களில் தங்கி விமோசனம் கிடைக்காதா என்று ஏங்கி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்ஹாவில் விமோசனம் கிடைக்கும் என்று குர்ஆனிலோ, நபிமொழியிலோ ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்றால் அப்படியும் ஒன்றும் இல்லை. தர்ஹாவை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அங்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காக கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து பேயாட வைப்பார்கள். நாகூர் தர்ஹாவில் இப்படி பேயாடிவிட்டு நடுநிசியில் முல்லாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பல பெண்களை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலையில் ஏமாந்த பாமரர்கள் தங்கள் பணத்தையும் இழந்து நோயையும் அதிகப்படுத்தி விடுகிறார்கள். அரசு இது போன்று மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் தர்ஹா நிர்வாகத்தை கண்காணித்து இது போன்ற மூடப் பழக்கங்களை முடக்க முன்வர வேண்டும்.
முகமது நபி தனது மருமகன் அலியிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்ட எந்த சமாதியையும் இடித்து தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அறிவுருத்தியதை இங்கு நாம் நினைத்துப் பார்க்கிறோம். இஸ்லாம் வெறுக்கும் இந்த தர்ஹா வழிபாட்டை அனைத்து மக்களும் விட்டொழித்து மனநலம் பிறழ்ந்தவர்களை தக்க மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இது சம்பந்தமாக தினமலர் தரும் செய்தியை பார்ப்போம்:
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எட்டாக் கனியே. மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. தர்ஹா தலைவர் சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. உள்பிரச்னை காரணமாக தர்ஹா நிர்வாகம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதனால் நிர்வாகிகள் இன்றி தர்ஹா செயல்படுகிறது. இந்நிலை ஆறு மாதமாக தொடர்வதால், மனநோயாளிகள் சிதறிப்போக காரணமானது. இதைப்பயன்படுத்தி மீண்டும் குடிசைத்தொழில் மனநலகாப்பகங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. தர்ஹா உள்ளேயே மீண்டும் சங்கிலியால் மனநோயாளிகளை கட்டத்தொடங்கி உள்ளனர். மீண்டும் அடிமை நிலைக்கு திரும்பியுள்ள ஏர்வாடி தர்ஹா மனநோயாளிகளுக்கு, இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள்: முறையான கண்காணிப்பு இல்லாததால் மனநோயாளிகள் போர்வையில் நிறைய குற்றவாளிகள் தஞ்சம் அடைந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஏர்வாடி தர்ஹா யாத்திரிகர் நலப்பேரவை தலைவர் அம்ஜத் உசேன் கூறியதாவது: கண்காணிப்பு இல்லாமல் மனநோயாளிகள் போர்வையில் குற்றவாளிகள் அதிகம் தஞ்சம் அடைகின்றனர். கேரள போலீசார் பலமுறை வந்து இங்கு குற்றவாளிகளை கைது செய்து சென்றுள்ளனர். மனநோயாளிகளை மீண்டும் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்யத்தொடங்கிவிட்டனர். காப்பாகம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. தர்ஹா நிர்வாகம் செயல்பட்டால் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும், என்றார்.
விதிமுறையால் தாமதமாகும் காப்பகம் : அரசு தரப்பில் காப்பகம் அமைப்பதற்கான முறையான விதிமுறைகள் இல்லாததே தாமத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தர்ஹா நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் முகமது அமீர் ஹம்சா கூறியதாவது: காப்பாகத்திற்கு நிலம் வழங்குவதாக ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் அறிவித்துவிட்டோம். காப்பகம் அமைக்கும் விதிமுறைகள் கேட்டுள்ள நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தர்ஹாவில் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, என்றார்.
5 comments:
மன நோயாளிகளை உரிய முறையில் பரமாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உங்களின் இப் பதிவு சொல்லி நிற்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிருபன்!
எத்தனையோ கோடிகளை எதஎதற்கோ செலவு செய்யும் அரசு நீண்ட நாள் மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டிய இது போன்ற காரியங்களுக்கு ஏன் செலவு செய்வதில்லை? வறுமையின் காரணமாகத்தான் பலர் தர்ஹாக்களில் கொண்டு வந்து கட்டி போடுகின்றனர். இச் சேவையை அரசு முற்றிலும் இலவசமாக செய்தால நல்லது.
நல்லதொரு பதிவு ....... குறிப்பாக மருத்துவர்கள், அறிவியல் முறையில் பயிற்சிகள் இல்லாதோரால் நடத்தப்படும் எந்தவகை காப்பங்களும் குணப்படுத்துதல் நோக்கி செல்லாது. ஏர்வாடி மட்டுமில்லை, இன்னும் சில தர்காக்கள், கோவில்களில் காட்டுமிராண்டித் தனமாக மனிதர்களைக் கட்டிப் போடுகின்றார்கள்.......... இதனால் ஏற்பட்ட, ஏற்படும் விளைவுகளை பாமரர்களும், ஏழைகளும் அறிவதில்லை..
காப்பகம் கட்டினால் மட்டும் போதாது, அதில் மருத்துவ வசதியும், அங்குப் பணியாற்றுவோருக்கு மனநலம் குன்றியோரை கவனிக்க நல்லதொரு பயிற்சியும் அவசியம் .... காப்பகமும் போதிய வசதிகளோடு இருத்தல் வேண்டும் ............
//காப்பகம் கட்டினால் மட்டும் போதாது, அதில் மருத்துவ வசதியும், அங்குப் பணியாற்றுவோருக்கு மனநலம் குன்றியோரை கவனிக்க நல்லதொரு பயிற்சியும் அவசியம் .... காப்பகமும் போதிய வசதிகளோடு இருத்தல் வேண்டும் //.
ஊருக்கு ஊர் பல தலைவர்கள் பெயரில் மணிமண்டபங்களும், சிலைகளும் நிறுவுவதை விட்டு விட்டு கலைஞர் புதிய ஆட்சி யில் அமர்ந்த பிறகாவது இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்பினால் நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!...........//
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஏர்வாடியில் பெண் மனநோயளிகளை பாலியல் ரீதியாக மனநல காப்பக பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இது சம்பந்தமாக அக்கறை எடுத்து மனநல காப்பகங்களை மூட வேண்டும்
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
Post a Comment