//ஆனால் சந்தனம் பூசும் அதிகாலை நேரத்துக்கு முந்திய நாள் இரவு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கூடுகளும் அவற்றின் முன்னால் குத்துப்பாட்டுகளுக்கு நடனமாடிக்கொண்டே போகும் இளைஞர்களும் — பார்க்க சகிக்கவில்லை. அமைதியாக ஒரு கூட்டில் சந்தனத்தை எடுத்துக் கொண்டு வந்து பூசினால் என்ன? இஸ்லாத்தை அவமதிப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது கொடுக்கிறது. பாட்டும் பரதமும் நமது கலைதான். ஆனால் அந்த இடத்தில் அவை இருக்கக் கூடாது.
நான் கந்தூரிகளுக்குப் போவதே இல்லை. தர்ஹாவுக்கும் போவதில்லை. அங்கே அடக்கமாகியுள்ள இறைநேசரின் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாகத்தான். ஆனால் கந்தூரிகள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமூக நிகழ்வு அது. அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதே இல்லை.// -நாகூர் ரூமி
நாகூரில் நடக்கும் ஹந்தூரியைப் பற்றி திரு நாகூர் ரூமி ஒரு பதிவு இட்டிருக்கிறார். அங்கு சந்தனம் பூசும் நாளில் குத்தாட்டத்துக்கு நடனம் ஆடிச் செல்லும் இளைஞர்களை பார்க்க சகிக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார். இது எதனால் ஏற்படுகிறது? மார்க்கம் அனுமதிக்காத ஒரு காரியத்தை நாம் வணக்கம் என்று செய்ய ஆரம்பிக்கும் போது வேறு செய்கைகளும் தானாகவே புகுந்து விடும். நாகூர் தர்ஹாவில் நடக்கும் எந்த செயலுமே குர்ஆனோ நபி மொழியோ அனுமதிக்க வில்லை. மாறாக இவற்றை எல்லாம் விட்டு முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் தடுக்கிறது.
வணக்கம் என்று எதை நாம் செய்தாலும் குர்ஆனோ நபிமொழியோ நமக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும். கீழே வரக் கூடிய நபி மொழியைப் பாருங்கள். இதன்படி ஒருவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் வெற்றியடைந்து விட்டதாக நபி மொழி கூறுகிறது.
870. அலீ(ரலி) அறிவித்தார்.
"அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); 'ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் - வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியானவணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!
Volume :2 Book :29
2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)" என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்" என்றார்கள்.
Volume :3 Book :52
நபி மொழி இப்படி இருக்க நமக்கு எதற்கு தேவையில்லாத தர்ஹா வழிபாடு? சிலர் கூறலாம் இது போன்ற விழாக்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கிறது என்று. இது பொய்யான வாதம். ஏனெனில் முன்பு எங்கள் ஊரில் இதே தர்ஹா விஷேச நாளில் பல தகராறுகள் வரும். பெண்கள் கூட்டத்தில் சிக்குவதால் இதைப் பயன்படுத்தி பலர் தங்களது சில்மிஷங்களை ஆரம்பிக்கின்றனர். இதைப் பார்க்கும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தவரை அடிக்க போய் பெரும் சண்டையாக மாறிய காட்சிகளும் உண்டு. ஒவ்வொரு முறை தர்ஹா விஷேச நாள் வரும்போது ஏதாவது ஒரு தகராறு வந்து விடும். இது எதற்கு? யாரை திருப்திபடுத்த?
'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நாம் வாரந்தோறும் பார்த்து வருகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்து சகோதரர்கள் இஸ்லாத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளை களைய முற்படும். மீடியாக்களாலும், சினிமாத் துறையாலும் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகம் இன்று கேள்வி பதில் நிகழ்ச்சியினால் உண்மையை உணர்ந்திருக்கிறது. முன்பு போல் இந்து முஸ்லிம் கலவரங்களும் நடைபெறுவதில்லை. இது போன்ற வழிகளே இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும். அவர்களைப் போல் நாமும் நமது மத சடங்குகளை காப்பி அடித்தால் அதனால் குழப்பம்தான் மிஞ்சும். இந்து மதத்தின் பல கொள்கைகளை கடன் வாங்கிய கிறித்தவ சமூகம் இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாறி விட்ட கொடுமையை நாம் பார்க்கிறோம். தர்ஹா வழிபாடு தொடர ஆரம்பித்தால் இதே நிலை இஸ்லாத்திலும் ஏற்பட்டு விடும்.
//சந்தனம் பூசும் இரவு அன்று தர்காவுக்கு உள்ளே எப்போதும் இருக்கும் விஐபி-களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். அவர் இந்த ஆண்டு உள்ளே வந்தபோதுதான் நான் பார்த்தேன் (இன்னொருவர் எடுத்த செல்ஃபோன் வீடியோ மூலமாக). அவர் அணிந்திருந்த உடையும், தொப்பியும், பவ்யமாக அவர் அமர்ந்து கொண்ட விதமும் நமக்கு நிச்சயம் பாடம் கற்றுத் தருபவை. அவர் அதிகம் பேசுவதில்லை. அவருடைய நம்பிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். அவருடைய ஈமான் அசைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அவருக்கு நிச்சயம் காதிர் வலீ அவர்களின் அன்பு கிடைக்கும். அதனாலேயே அவர் மேலும் மேலும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.// -நாகூர் ரூமி
436. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
Volume :1 Book :8
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு புதிய முஸ்லிம். அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தவறாக விளக்கியிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் நாம்தான் அவரை திருத்த வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்துக்கு மாற்றமாக செய்யும் இது போன்ற செயல்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. இது பலரும் தவறான வழிக்கு செல்ல வழி வகுத்து விடும். ஏனெனில் ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்கள் அனைத்தும் உலகத்தோடு துண்டிக்கப்படுகிறது. அவரால் எந்த வொரு செயல்களையும் தனக்கோ பிறருக்கோ செய்ய இயலாது. இதைத்தான் குர்ஆனும் சொல்கிறது. தனக்கே எதுவும் செய்து கொள்ள முடியாத நாகூர் பாவா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதைச் செய்து விட முடியும்?
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3
ஏக இறைவனையன்றி வேறு தெய்வங்களையும், இறந்த மகான்களையும் தங்களின் பாதுகாப்பாக கொண்டவர்கள் நேர்வழியில் செல்ல மாட்டார்கள் என்று இறைவன் குர்ஆனிலே கண்டிக்கிறான். நாகூர் ரூமி போன்ற சிந்தனையாளர்கள் சமாதி வணக்கத்தை தூரமாக்கி ஏக இறைவனை மாத்திரம் வணங்கக் கூடியவர்களாக ஆகி இறைப் பொருத்தத்தை அடைய வேண்டும் என்று இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
4 comments:
very good
அஸ்ஸலாமு அலைக்கும்.
செமையாக பதிலளித்துள்ளிர்கள்.
இந்த நாகூர் ரூமி போன்ற அரைகுறைகள் இன்னும் நம்மில் உலவுவது ஆச்சர்யமே.
இவருக்கு குத்தாட்டம் மட்டும் இஸ்லாமிய அவமானமாக தெரிகிறதோ..? நமக்கோ... மொத்த நாகூர் தர்ஹாவே இஸ்லாத்துக்கு ஒரு அவமானச்சின்னமாக தெரிகிறது.
//லட்சக்கணக்கான(?) மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமூக நிகழ்வு அது. அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதே இல்லை.//---என்றவர்...
அதே அளவுகோலை குத்தாட்டத்தை ரசிக்க வந்த லட்சக்கணக்கான(?) ரசிகர்களின் மகிழ்ச்சியில் ஏன் பொருட்படுத்த மாட்டேங்கிறார்.
தன் கொள்கையிலேயே முரண்படும் இவர் ஒரு போலி..! இவரை எல்லாம் ஒரு பொருட்டாகவே நான் மதிப்பது இல்லை.
இப்போதெல்லாம் தவ்ஹீத் எழுச்சிக்கு பின் தர்ஹா பிசினஸ்கள் ஈ ஒட்டுகின்றன. ரூமி போன்ற அரைகுறைகள் என்னதான் ஆக்சிஜன் சிலின்டர் மாட்டி பிழைக்க வைக்க முனைந்தாலும்... 'உண்டியல் கருப்புப்பணம்' மீது அரசு நடவடிக்கை எடுக்குமானால்... இன்ஷாஅல்லாஹ் அனைத்து தர்ஹாகளும் தரை மட்டம் ஆவது உறுதி..!
அப்போது இந்த ரூமிக்களும் ரஹ்மான்களும் காணாமல் போய்விடுவார்கள்..!
வஅலைக்கும் சலாம்!
//இவருக்கு குத்தாட்டம் மட்டும் இஸ்லாமிய அவமானமாக தெரிகிறதோ..? நமக்கோ... மொத்த நாகூர் தர்ஹாவே இஸ்லாத்துக்கு ஒரு அவமானச்சின்னமாக தெரிகிறது.//
இதை உணர்த்துவதற்க்காகத்தான் இவர்களைப் பற்றி செய்திகளை அவ்வப்போது பதிய வேணடியது அவசியமாகிறது. ஏனெனில் பிரபலமான ஓரிருவர் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் செய்கைகள் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றோ என்று மாற்று மதத்தவர் எண்ண வாய்ப்புள்ளது. எனவேதான் அவர்களின் செயல்களை உடனுக்குடன் விமரிசிக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஆஷிக்!
//very good//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி!
Post a Comment