எங்களது பள்ளிவாசலில் இயங்கி வரும் #இமாம்_அபுஹனீஃபா_படிப்பகத்திற்கு தினமும் நாளிதழ் கொண்டு வரும் சகோதரர் இவர்.
பெயர் காமேஷ்,
சொந்த ஊர் வேலூர்.
படிப்பிற்காக சென்னையில் தங்கி இருக்கிறார். பகுதி நேரமாக காலை,
மாலை நாளிதழ் போட்டுக் கொண்டு இருக்கிறார்..
இன்று காலை எமது பள்ளிக்கு வந்தவர் அண்ணா நா இந்த மசூதிக்கு உள்ள வரலாமா?
என்றார்.
ஏன் தம்பி இப்படி கேக்குற?
தாராளமாக வரலாம் வா தம்பி என்றேன் ..
இல்லநா கோயிலுக்கு நாங்க போறோம்,
சர்ச்க்கும் கூட உள்ள போய் பாத்து இருக்குறேன்.
ஆனா ரொம்ப நாள் ஆசை மசூதி உள்ள போய் பாக்கனும்,
தினம் தினம் மசூதி வாசல் வந்து நிப்பேன்,
இந்த உயர்ந்த கோபுரம் போன்றத (மினாரா) பார்ப்பேன் எக்கத்தோட போய்டுவேன்.
அவரை அழைத்து வந்து பள்ளி முழுவதையும் சுற்றி காண்பித்தேன்.
இது என்னணா?
இது என்னணா?
என்ற அவருடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னேன்.
அவன் வியந்து கேட்ட ஒரு கேள்வி ...
அண்ணா எல்லாரும் ஒன்னா,ஒரே வரிசையிலே நின்னு தான் வழிபடுவீங்களா ? இங்க ஸ்பெஷல் லைன்,
ஸ்பெஷல் தரிசனம் எதுவுமே கிடையாதா ? என்றார்.
இந்த கேள்வியின் ஊடாக
இன்னும் இன்னும் இந்த மண்ணில் விரவிக் கிடக்கும் ஆதிக்க மனம்,
ஏற்றத்தாழ்வு, உயர் குலம்,
பாகுபாடு போன்றவை நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை புரிய முடிந்தது.
அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் நிதானமாக பதில் சொன்னேன்,
கடைசியாக அவர் போகும் போது நான் நன்றி தம்பி என்றேன்.
அண்ணா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது,
நாமளாம் மசூதிய பாக்க முடியுமா என்ற என்னுடைய ஏக்கம் தீர்ந்தது.
என்று சொல்லி விட்டு போகும் போது காமேஷ் என்ற சகோதர சமய தோழருக்கு இறையில்லத்தை சுற்றிக் காண்பித்து விட்டோம் என்ற திருப்த்தியை விட ...
எத்தனை எத்தனை காமேஷ்களுக்கு இந்த ஆசை மனதை துளைத்து கொண்டிருக்குமோ?
ஏன் நான் இன்னும் என்னை சுற்றியிருக்கும் காமோஷ்க்கும்,
சசிக்குமாருக்கும் தாமஸ் க்கும் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து காண்பிக்க வில்லை என்று கேள்வி எழாமல் இல்லை..
பள்ளிவாசலை வந்து பாருங்கள் என்று உளமார உங்களை அழைக்கின்றோம் என்று இனிவரும் நாட்களில் ஒவ்வொரு பள்ளியிலும் அதனை சுற்றியுள்ள சகோதர சமய தோழர்களை அழைப்பதும்,
பள்ளிவாசலுக்கு உள்ளே என்ன இருக்கிறது?
என்ன நடக்கிறது?
என்று தெளிவுபடுத்தும்,
பள்ளிவாசல் பற்றி ஒரு சிறந்த புரிதலை தருவதற்கும்,
அதன் கண்ணித்தை சகோதர சமய தோழர்களின் உள்ளங்களில் ஏற்றி வைக்கவும் இது உதவும் என்று நான் நம்புகிறேன்..
முயற்சி செய்வோம்...
1 comment:
விளம்பரத்தினாலே கட்டிய மாளிகை காத்துக்கு நிற்காது.
அழகாக இருக்கும் காஞ்சிரப்பழங்கள் சந்தையில் விற்காது. .
அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன். . ..
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து- குறள் (தொழுவதையும் அழுவதையும் தம் உள்நோக்கம் மறைப்பதற்காகப் பயன்படுத்துவர் பகை நெஞ்சம் கொண்டோர்.
தம்மை தொழுவது போன்று காட்டிக்கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் கொலைக் கருவி மறைந்திருத்தல் கூடும்; அவர் அழுவது போன்று விடும் கண்ணீரும் அத்தன்மையதே.
மனதில் வஞ்சத்தையும் பகையையும் வைத்துக்கொண்டு நட்புறவாடுபவர்கள் நண்பரைக் கொலைசெய்யவும் அஞ்சமாட்டார்கள். உள்ளத்தில் வெறுப்பை வளர்த்து வைத்து முகத்தில் புன்னகையுடன் நடமாடும் அவர்கள் கும்பிடுவதற்குக் கூப்புகின்ற கைக்குள்ளேயும் கொலைக் கருவி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல் வஞ்சகமனம் கொண்ட அக் கூடாநட்பினர் பாசாங்கு செய்து அழும் கண்ணீருக்குப் பின்னால் உயிர்க்கு இறுதி செய்யும் எண்ணமும் இருக்கும். அக்கண்ணீரை நம்பி விடக்கூடாது; அதில் கொலைக்கருத்து மறைந்திருக்கும். உயிர் நீப்பதற்காகப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம், முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும், மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' எனப்பட்டது.)
இது போன்ற சினிமா பாடல்வரிகளும் குறள் வரிகள் என் நினைவிற்கு வந்தது.
Post a Comment