எனது இனத்தை நேசிப்பது இனவெறி ஆகுமா?
தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல் ராஜ், உடுமலை சங்கர். இந்த மூன்று பேரும் சாதி மாறி திருமணம் புரிந்ததால் கொல்லப்பட்டுள்ளனர். இவை எல்லாம் சமீபத்தில் நடந்தவை. கடந்த ஐம்பது ஆண்டுகளை கணக்கிட்டால் இந்த கவுரவக் கொலைகளின் பட்டியல் மிக நீளும். இஸ்லாமியனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும், கிறித்தவனாக இருக்கட்டும் யார் தவறு செய்தாலும் அவனை கண்டிக்கும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளவரசன் கோகுல்ராஜ் கொல்லப்பட்ட போதே சம்பந்தப்பட்ட சாதிக்காரர்கள் கொன்ற கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்று நாம் உடுமலை சங்கரை இழந்திருக்க மாட்டோம். கொன்ற கொலையாளிகளை மானமுள்ளவன், வீரமுள்ளவன் என்று கொம்பு சிவி விடுவதாலேயே இது போன்ற கொலைகள் தொடர்கின்றன.
இது பற்றி நபிகள் நாயகம் சொன்ன ஒரு அறிவுரையை இங்கு நாம் நினைவு கூர்வோம்.
ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியாகுமா” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி ஆகாது. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
- நூல்: அஹ்மத்
என்ன ஒரு அருமையான விளக்கம். இதனை ஒவ்வொரு சமூகமும் கடைபிடித்தால் இது போன்ற தவறுகள் சிறிது சிறிதாக மறைந்து போகும். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?
No comments:
Post a Comment