தெலுங்கானாவில் ஜோதிராவ் பூலேவின் சிலையை இடிக்க முயன்ற
சங்பரிவாரத்தினர்
பூலே மாகாராஷ்டிரா
மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் கட்கன் என்கிற கிராமத்தில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் பிறந்தார். ஓரளவுக்கு வசதியான
குடும்பத்தில் பிறந்தவர் காய்கறிகளும் பழங்களும் இவர்களது 35 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு அவை சந்தைகளில் விற்கப்பட்டன. ஆரம்பத்தில்
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகிறார். அவர்கள் வீட்டுக்கு அடுத்து வசித்து
வந்த கிருத்துவ, இசுலாமிய குடும்பத்தினர் பூலேவின்
அறிவுக்கூர்மையை கண்டு வியந்து, அவர் தொடர்ந்து படிக்க பணிக்கின்றனர்.
தனது 13வயதில் ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்
ஜோதிராவ்.
பள்ளியில் படிக்கும்போது சமூகத்தில் நிலவும் அவலங்களைக்
கண்டு மனம் வெதும்புகிறார். தனது வயதினையொத்த பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று
படிப்பதற்கு சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் விரோதமாக இருப்பதைக் கண்டு
கோபப்படுகிறார்.
1848ஆம் ஆண்டு பார்ப்பன நண்பர் வீட்டுத்
திருமணத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு அவர் வாழ்க்கையைத் திருப்பிப்போட்ட
நிகழ்ச்சியொன்று நடந்தது. நண்பனோடு இணைந்து திருமண வீட்டு ஊர்வலத்தில் நடந்து
செல்லும்போது, உறவினர்கள் பூலே பார்ப்பனர் அல்லாதவர் என்று அறிந்தவுடன்
கேவலமாகப் பேசி அவமானப்படுத்திவிடுகின்றனர். கண்களில் நீர் தளும்ப வீடு
திரும்புகிறார். இந்த நிகழ்ச்சி அவரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதி
அமைப்பினை ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுகிறது. அன்றிலிருந்து, சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள்
மேம்பாட்டிற்கு பாடுபடுவதையே தனது இலட்சியமாகக் கொள்கிறார். தந்தைபெரியார்
அவர்களைப் போன்று சுயமாகவே பலவற்றைக் கற்று அறிந்துகொண்டார் . அமெரிக்க எழுத்தாளர்
தாமஸ் பெயின் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்கிற புத்தகம் சமூக நீதி குறித்த விழிப்புணர்வையும்
தாக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது.
எந்தச் சமூக மாற்றமும் முதலில் வீட்டிலேயே தொடங்க வேண்டும்
என்று நம்பினார். தனது மனைவி சாவித்திரியைப் படிக்க வைத்தார். இவர்கள் இருவரும்
சேர்ந்து 1848இல் பெண்களுக்கான பள்ளியையும் விதவைப்
பெண்களுக்கான ஆதரவு இல்லத்தையும் தொடங்கினார்கள். பள்ளிக்கூடம் நடத்துவதற்கு
ஆதிக்க சாதியினரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
சேர்க்கப்பட்டதால் அச்சத்தின் காரணமாகப் பாடம் சொல்லித்தர எந்த ஆசிரியரும்
முன்வரவில்லை. தனது மனைவி சாவித்திரியையே ஆசிரியராக நியமித்துப் பாடம்
நடத்தவைத்தார். தனியாகப் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்லும்போது சாவித்திரி
கற்களால் தாக்கப்பட்டார். சாணி, தக்காளி, சேறு
போன்றவைகளை தண்ணீரில் கலந்து ஊற்றினார்கள் . மாணவிகள் முன்பு அசிங்கமான சேலையுடன்
நிற்பதற்கு அவருக்கு சங்கடமாக இருந்தது. தனது கணவரிடம் இது குறித்து
முறையிடும்போது, பூலே, ‘போகும்போது பழைய புடவை ஒன்றைக்
கட்டிக்கொண்டு செல். பள்ளிக்கு போனவுடன் புடவையை மாற்றிக்கொள்’ என்று இயல்பாக
நடைமுறைக்கு ஏதுவாக அறிவுரை கூறினார்.
கொள்கையில் உறுதியாகவும், பெரியார்
போன்று “குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்” என்று
வாழ்நாள் முழுவதும் தொண்டறம் புரிந்தவர். பூலேவின் தந்தை இத்தனை ஆபத்துகளுடன்
பள்ளிக்கூடம் நடத்திட வேண்டாம், மூடிவிடுங்கள் என்ற போதும், தம்பதியினர்
சிறிதும் மனம் தளராது தங்கள் தொண்டறத்தைத் தொடர்ந்தனர். இந்தியாவில் பெண்களுக்கென்று
முதல் பள்ளிக்கூடத்தைத் தொடங்கியவர் என்கிற கூடுதல் சிறப்பும் இருவருக்கு உண்டு.
அவரது கல்விப் பணி இடையில் சிறிது தடைப்பட்டாலும் பின்தொடர்ந்து நடைப்பெற்றது.
மேலும் இரு பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் கல்விக்கான செலவு முழுவதையும்
பார்ப்பனர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கே செலவிடுகிறது. ஏழைசூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு
எதுவுமே அரசாங்கம் செய்வதில்லை என்று ஆதங்கப்பட்டார். கல்வி பெறாதமையால் மக்கள்
தொடர்ந்து வறுமையில் உழல்கின்றனர். இதனால், அவர்கள்
தங்கள் வாழ்வாதாரத்திற்காக படித்த உயர்சாதியினரை நம்பியிருக்கவேண்டியுள்ளது.
தம்மக்கள் இதனால் அடிமை வாழ்கை வாழ்கின்றனர் என்று வருந்தினார். இந்நிலையை மாற்றிட
அவருக்கு அரிதான வாய்ப்பு, சில ஆண்டுகள் கழித்து 1876இல்
கிடைத்தது
1873ஆம் ஆண்டு நண்பர்களோடு இணைந்து சத்தியசோதக்
சமாஜம் அதாவது உண்மை தேடுவோர் சங்கம் ஒன்றினைஉருவாக்கினார். இவ்வமைப்பின் முக்கிய
நோக்கம் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரிடையே
கல்வியைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. ஆயிரம் ஆண்டுகளாக இம்மாபெரும்
சமூகம், சதுர் வர்ணம், சனாதன
தர்மம் என்கிற அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டு இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கல்வியைப் பெறுவதன் மூலமாக மட்டுமே இத்தனை காலமாக மதத்தின் பெயரால் மூளைச்சலவை
செய்யப்பட்டு உள்ளேற்றப்பட்ட மூடக்க ருத்துக்கள் நீங்கும். அடிமை விலங்கு நீங்கி
சுதந்திரச் சிந்தனையாளர்களாகத் திகழ்வர் என்று பூலே கருதினார்.
பூலேவின் சேவைகளை
அங்கீகரிக்கும் வகையில் 1876ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை
நகராட்சிமன்ற உறுப்பினராக்கியது. அப்பதவியினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், தனது கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார். சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பதற்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டுமென்றார்.
இந்நாட்டின் பிரதிநிதிகளாகவும் வரலாற்றை சுமப்பவர்களாக வாழ்பவர்கள்
சூத்திரர்களாகிய விவசாயிகளே; மேலும், அம்மக்களே
இந்தநாட்டில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள்; பார்ப்பனர்கள் அல்ல என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் தயைகூர்ந்து உணர வேண்டும்
என்று வேண்டுகோள் வைத்தார். பூலேயின் ஆலோசனையின் பேரில் அவருடைய சத்தியசோதக் சமாஜ்
அமைப்பு, சூத்திரர்கள் என்கிற இழிவைச் சுமந்துகொண்டிருக்கும் விவசாய பெருங்குடி
மக்களின் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம்
வேண்டுகோள் விடுத்தது.
பார்ப்பனர்களை வைத்து சடங்குகளை நடத்துவதைப் புறக்கணிக்க
செய்தார். சாஸ்திரங்கள் பெயரால், மக்களை மூடநம்பிக்கையாளர்களாக்கி
அவர்களைச் சுரண்டுகின்றனர். இவை குறித்துத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.
1873ஆம்
ஆண்டிலேயே பார்ப்பனர்கள் இல்லாத சுயமரியாதை திருமணங்களை நடத்தியவர் இவர்.
பார்ப்பனியத்தை எதிர்த்த பூலே தனிப்பட்ட எந்த
பார்ப்பனரையும் வெறுக்கவில்லை. பள்ளி காலத்துப் பார்ப்பனத் தோழர் சதாசிவ்பல்லால்
கோவிந்த் வாழ்நாள் முழுவதும் இவரது உற்ற தோழராக இருந்தார்.
அவரது சமூகச் சீர்திருத்தச் செயல்பாட்டின் காரணமாக 1888இல்
பூனாவில் நடந்த கூட்டத்தில் அவருக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டது. அந்த
வகையில் அண்ணல் காந்தி அவர்களுக்கு முன்பே அப்பட்டதை பெறக்கூடிய சிறப்பினை பூலே
பெற்றிருந்தார்.
1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம்நாள்
அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகளைத் தானே செய்தார் சாவித்திரிபாய். இந்திய
வரலாற்றிலேயே ஒரு பெண் இறுதிச் சடங்குகளைச் செய்தது அதுவே முதன்முறை.
No comments:
Post a Comment