
PJ என்ற ஈரெழுத்து வித்தகர்!
இன்று தமிழக முஸ்லிம்களிடையே மிகப் பெரும் மாறுதலை தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் PJ என்று அனைவராலும் அழைக்கப்படும் பி.ஜெய்னுல்லாபுதீன். புரோகிதம், மூடப்பழக்கம், தர்ஹா வணக்கம், வரதட்சணை, தீவிரவாதம் என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் இவை எல்லாம் இஸ்லாத்தில் இல்லாத தீமைகள் என்று தைரியமாக எடுத்துச் சொல்லி இதனால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டவர். இன்று இளைஞர்கள் கூட குர்ஆனையும் முஹமது நபியின் வாழ்க்கையையும் தங்களது வாழ்க்கையில் முடிந்தவரை கடைபிடிக்க முயல்வது இவரின் கடந்த 25 ஆண்டுகால பிரச்சாரம் என்றால் மிகையாகாது.
இந்துத்வவாதிகள் எத்தனையோ முயற்சி செய்தும் இன்று வரை தமிழகத்தில் கலவரம் வராமல் தடுத்ததில் பெரும் பங்கு இவர் தமிழகம் முழுதும் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியாகும். எவரின் மனமும் கோணாமல் இவர் அளிக்கும் பதில் பல இந்து நண்பர்களை இஸ்லாமியர்களை வெறுக்கும் நிலையிலிருந்து மாற்றியிருக்கிறது.
இவரால் சமீபத்தில் துவக்கப்பட்ட TNTJ என்ற 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' அமைப்பு இன்று பட்டி தொட்டிகளெல்லாம் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு அரசாங்கத்தைப் போல் நடத்தப்படுகிறது. இந்த இயக்கம் இரத்த தானத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு தர காரணமாயிருந்தது, பெண்களையும் வீதிக்கு அழைத்து வந்து போராட வைத்தது என்று இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது புத்தகங்கள் பலவற்றை சவூதி அரேபிய அரசு பல மொழிகளில் மொழியாக்கம் செய்து இலவசமாக விநியோகித்து வருவதில் இருந்தே இவரின் திறமையை அறிந்து கொள்ளலாம்.
இவரை சமீபத்தில் கல்கி இதழ் பேட்டி எடுத்தது. அவற்றை கீழே தருகிறேன்.
கல்கி -14-12-2008
'தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பு தமிழக இஸ்லாமியரிடையே செல்வாக்கு பெற்றது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் இந்த இயக்கச் செயல்பாடுகளில் பெருமளவு பங்கு கொள்கிறார்கள்.இந்த அமைப்பின் உயிரோட்டமாக இருப்பவர் பீ.ஜெய்னுல் ஆபிதீன். அவருடன் ஒரு சந்திப்பு....
கல்கி: 'இந்து மதம் சார்ந்தது' என்று சொல்லி மலேஷிய அரசு யோகாசனத்தைத் தடை செய்திருக்கிறதே?
பீஜே: அடிப்படையில் யோகாசனம் நல்ல உடல் மற்றும் மனப்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை பிரச்னை எங்கே வருகிறது என்றால் மதம் சார்ந்த விசயங்கள் அதில் கலக்கப்படும் போதுதான். உதாரணமாக பிராணாயாமப் பயிற்ச்சியைச் சொல்லலாம். 'ஓம்...ஓம்' என்று சொல்லி இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று சில யோகாசன ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
இது தவிர புராண விஷயங்களையும் மிக்ஸ் செய்கிறார்கள். 'இறைவன் ஒருவனே' என்ற ஏகத்துவ தத்துவத்தைக் கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு யோகாசனத்தில் மதத்தைக் கலக்கும் போது அதைக் கடைபிடிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. நாலைந்து ஆசனங்களில் இப்படி மதத்தைக் கலப்பது நடக்கிறது. மற்ற ஆசனங்கள் ஒரு பிரச்னையும் இல்லை. யோகாசனம் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் செல்லும் இஸ்லாமியர்கள் பின்வாங்கக் காரணம் இதுதான்.
கல்கி: ஒழுக்கக் கேடுகள் நிறைந்த மைக்கேல் ஜாக்சனை இஸ்லாம் மதத்தில் சேர்த்துக் கொண்டது சரியா?
பீஜே: மைக்கேல் ஜாக்ஸன் ஒழுக்கக் கேடாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் ஒரு மனிதன் திருந்தி வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா மதங்களிலும் இது நடக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன் புகழ் பெற்றவராக இருப்பதால் அவரைப் பற்றித் தெரிகிறது. பாப் பாடகர் கேட் ஸ்டீவன்ஸன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, எழுத்தாளர் கமலாதாஸ் ஆகியோர் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்து நல்ல வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அது போல தான் மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாமில் சேர்ந்து மீகாயீல் ஆகியிருக்கிறார்.
கல்கி: ஒபாமா தன்னை இஸ்லாமில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மதவாதிகள் சொல்கிறார்களே?
பீஜே: நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். ஒபாமாவின் தாயும் தந்தையும் சட்டபூர்வமான திருமண வாழ்க்கை மேற்கொண்டவர்கள் அல்ல. அவர்கள் கம்பேனியனாக வாழ்ந்து பிறந்தவர்தான் ஒபாமா. அவரது அப்பா அம்மாவை விட்டு பிரிந்தபின் அம்மா மீண்டும் மறுமணம்(அவரும் இஸ்லாமியர்) செய்து கொண்டார்.ஆனால் ஒபாமா தாய் வழிப் பாட்டியால் ஒரு கிறித்தவராகவே வளர்க்கப்பட்டவர். கிறித்தவ மிஷினரிகளிலும் வேலை செய்திருக்கிறார்.
பிறப்பின் அடிப்படையில் ஒருவர் தன்னை முஸ்லிம் என்று உரிமை கொண்டாட முடியாது. அவரே தன்னை கிறித்தவர் என்று சொன்ன பிறகு யாரும் அவரை கட்டாயப் படுத்தக் கூடாது.
கல்கி: பெருகி வரும் தீவிரவாதச் சூழலில் முஸ்லிம்களின் பொறுப்பு என்ன?
பீஜே: அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத்தான் பொறுப்பு வேண்டும்.நாங்கள் பொறுப்போடுதான் இருக்கிறோம். தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்துக்கோ நாங்கள் சிறிதும் இடம் கொடுப்பது இல்லை. நம் தென்காசியிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் மீது குண்டு வீசி மாட்டிக் கொண்ட குமார் பாண்டியன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் மீது பழி போட பார்த்தார்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு எந்த முஸ்லிம் இயக்கமும் சட்ட உதவி செய்யவில்லை. ஆனால் மாலேகான் விவகாரத்தில் இந்து அமைப்புகள் கைது செய்யப் பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றன. இது சரியா?
அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நடைமுறை வாழ்க்கையில் இன்னல்களை அனுபவித்து வரும் நாங்கள், தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியை இழப்போமா? நாங்கள் அகிம்சையின் அமைதியை விரும்புகிறோம்.
No comments:
Post a Comment