Followers

Tuesday, December 09, 2008

இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!


இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!

பெயரைச் சொல்லும்போதே நம் இதயங்களில் ஒரு நெகிழ்ச்சி...! நம்மையும் மீறி நம் மனங்களில் ஒரு சோக கீதத்தின் மெல்லிய ஓசை...!ஆம்...! தியாகங்க ளாலேயே புடம் போடப் பட்ட மகத்தான ஓர் இறைத் தூதரின் உன்னத வாழ்வை ஆண்டுதோறும் நினைவூட்டும் பெருநாள்தான் இந்தத் தியாகத் திருநாள். யார் அந்த இறைத் தூதர்?அவர்தாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைய ஈராக் அமைந்துள்ள பகுதியில், "ஊர்' எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் உயர் குலத்தைச் சேர்ந்த ஆஸர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்த ஊருக்கே தலைமைப் பூசாரியாகவும், மன்னரின் ஆஸ்தான குருவாகவும் (ராஜகுரு) விளங்கினார்.அந்தத் தலைமைப் பூசாரியின் மகனாகப் பிறந்தவர் தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள்.
இளமையிலேயே ஆழ்ந்த மதிநுட்பம் கொண்டவராகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி, தம்மைச் சூழ்ந்திருந்த சமுதாயத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.கல்லில் ஓர் உருவத்தை வடித்து, "இதுதான் கடவுள்; இதற்குச் சிரம் தாழ்த்து' என்று தந்தையும் சமுதாயப் பிரமுகர்களும் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். தந்தை, "கல்லால் அடித்து உன்னைக் கொல்வேன்' என்றார். மகன் கலங்கவில்லை. கொள்கையில் உறுதியாக நின்றார்."சூரியன், சந்திரன் உட்பட இயற்கைப் படைப்புகள் எதுவும் இறைவன் ஆக முடியாது. இந்த இயற்கைப் படைப்புகளைப் படைத்த ஓர் இறைவன் இருக் கின்றான். அவனே வானங்கள் - பூமி ஆகியவற்றின் இறைவன். மனிதனுக்கும் அவன்தான் உண்மையான அதிபதி.நான் அவனை மட்டுமே வணங்குவேன். வேறு யாருக்கும் சிரம் பணியமாட்டேன். நீங்களும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். படைப்பினங் களை வணங்காதீர்கள். படைத்தவனையே வணங்குங்கள்' என்று, வெளிப் படையாக இப்ராஹீம் நபி(அலை) பிரசாரம் செய்தார்.அவ்வளவுதான்...! ஒட்டுமொத்த சமுதாயமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. சமுதாயத் தலைவர்கள் ஒன்றுகூடி "இவருக்கு என்ன தண்டனை தரலாம்?' என்று கலந்தாலோசித்தனர். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அது மிகவும் பயங்கரமான முடிவு.

"திகுதிகு' என கொழுந்துவிட்டெரியும் நெருப்புக் குண்டம் ஒன்றைத் தயார் செய்து அதில் இப்ராஹீமை வீசி எறிந்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.நெருப்புக் குண்டம் தயார் செய்யப்பட்டது. இப்ராஹீம் இழுத்து வரப்பட்டார்.கண்ணெதிரே கனன்று எரிந்து கொண்டிருக்கும் தீக்குண்டம்; கதறக் கதற நெருப்பில் வெந்து உயிரை இழக்க வேண்டிய கொடூரம்...! யாராக இருந்தாலும் ஆடித்தான் போயிருப்பர்.ஆனால் -இப்ராஹீம் நபி(அலை) கலங்கவில்லை; கதறவில்லை. இறைவன் ஒருவனே எனும் கொள்கைக்காக - அவன் மீது வைத்திருந்த அளவிட முடியாத நேசத்திற்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகி விட்டார்.இதோ, நெருப்பில் வீசி எறியப் படுகிறார் இப்ராஹீம் நபி(அலை).உடனடியாக இறைவனிடமிருந்து கட்டளை வருகிறது: ""நெருப்பே...! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும் சாந்தமாகவும் ஆகிவிடு''(குர்ஆன் 21:69)அதற்குப் பிறகு அவர் அந்த ஊரை விட்டே வெளியேறினார். பல நாடுகளுக்கும் சென்று ஓரிறைக் கொள்கையை - ஏகத்துவத்தைப் பிரசாரம் செய்தார். கடுமையான அடக்குமுறைகளையும், சோதனைகளையும் எதிர் கொண்டார்.

இவை அனைத்தையும் விட மகத்தான ஒரு சோதனை அவருக்குக் காத்திருந்தது.இப்ராஹீம் நபி(அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தமக்கு ஒரு குழந்தையைத் தரும்படி தொடர்ந்து இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார். முதுமையை எட்டிப் பிடித்தபோது "வாராது வந்த மாமணி' போல அவருக்கு ஓர் அழகிய ஆண்மகவு பிறந்தது.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிட்டு தம் உயிரில் வைத்து வளர்த்தார். இஸ்மாயீலுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அப்பொழுதுதான் அந்தச் சோதனை தொடங்கியது.தம் ஆருயிர் மகனை இறைவனுக்காக அறுத்து பலியிடுவது போல இப்ராஹீம் கனவு கண்டார். அடுத்தடுத்த நாள்களிலும் அந்தக் கனவு தொடர்ந்தது.இப்ராஹீம் நபி சற்றும் தாமதிக்காமல் மகனை அழைத்தார். தாம் கண்ட கனவைக் கூறுகிறார்."தந்தையே, இறைவனின் விருப்பம் அதுதான் எனில் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். என்னை நீங்கள் பொறுமை உள்ளவனாகவே காண்பீர்கள்' என்றார் மைந்தர்.ஆஹா...! இப்படிப்பட்ட தந்தையையும் மகனையும் வரலாற்றில் எங்காவது நீங்கள் பார்த்தது உண்டா?"இறைவனுக்காக உன்னைப் பலியிடப் போகிறேன்' என்கிறார் தந்தை. "தயங்காமல் செய்யுங்கள்" என்கிறார் மைந்தர்.இப்ராஹீம் கத்தியை நன்கு கூர்தீட்டி மகனின் கழுத்தில் வைத்து அறுக்க முயன்றபோது இறைவனிடமிருந்து கட்டளை வந்தது.""நிறுத்து இப்ராஹீம்! நாம் வைத்த சோதனைகள் அனைத்திலும் நீர் வெற்றி பெற்றுவிட்டீர். மகனை அறுப்பதற்குப் பதிலாக ஓர் ஆட்டைப் பலியிடுங்கள்!''ஏக இறைவனின் மீது கொண்ட அன்புக்காக-அவனுடைய திருப்தியையும் உவப்பையும் பெற வேண்டும் என்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள்.அதற்குப் பிறகு அவர் தம் மகனுடன் மக்காவுக்கு வந்து இறை ஆலயத்தைக் கட்டியதும், அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு கொடுத்ததும், அந்த அழைப்பு இறையருளால் இன்று வரை செயல்வடிவம் பெற்று வருகிறது என்பதும் வரலாறு.இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர் பண்பு நம் உள்ளங்களிலும் மலரட்டும்...!வாசகர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

சிராஜுல் ஹஸன்-சமரசம் ஆசிரியர்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

No comments: