நாட்டார் இஸ்லாம்
கொலையில் உதிக்கும் நம்பிக்கைகள் - மேத்தப்பிள்ளை அப்பா தர்ஹா.
நண்பர் ஜி.எஸ்.தயாளனின் கவிதைத்தொகுப்பு ஒன்றின் பெயர் ‘சுவர்முழுக்க எறும்புகள் பரபரக்கின்றன’. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் இருக்கிறது தெற்கு விஜய நாராயணன் கிராமம்.
இது நடந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். தெற்கு விஜய நாராயணன் கிராமத்தில் வாழ்ந்துவந்த செய்யது முஹம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் மாடசாமித் தேவர் என்பவரால் ஊருக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தலைவேறு உடல் வேறாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலை நடந்தது ஆடிமாதம் 15- ஆம் நாள். அடக்கம் நடைபெற்றது ஆடிமாதம் 16- ஆம் நாள்.
மேத்தப்பிள்ளையின் மரணம்,தொடர்ந்து ஊரில் ஏற்பட்ட பல்வேறு துர்மரணம் இவையெல்லாம் சேர்ந்து ஊராரை அச்சத்தில் அழுத்துகின்றன தெற்கு விஜய நாராயணன் கிராமத்தில் முஸ்லிம்கள் வேறு யாரும் இல்லாத நிலையில் அருகில் இருக்கும் நெல்லை ஏர்வாடியில் இருந்து முஸ்லிம்களை அழைத்து வந்த மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளை சமாதியில் சிறப்புப் பரிகாரங்கள் செய்தார்.
அன்று தொடங்கிய இந்தப் பண்பாட்டுப் பேணுகை இரு நூறாண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்கிறது. பொதுவாக முஸ்லிம்கள் நடத்தும் சமயம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியக் காலண்டர்படி அரபு மாதங்களின் நாள் கணக்கின்படி அமைந்திருக்க மேத்தப்பிள்ளை தர்ஹா சார்ந்த பண்பாட்டு நிகழ்வுகள் தமிழ் மாதமான ஆடி மாதம் 16- ஆம் நாள் நடைபெறுகிறது
இப்போது தெற்கு விஜய நாராயணன் கிராமத்தில் முஸ்லிம் குடும்பங்கள் எதுவுமில்லை. பெரும்பாலும் தேவர் சமூகத்து மக்களே வசிக்கின்றனர். ஆண்டு தோறும் ஆடிமாதம் 16- ஆம் நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் தெற்கு விஜய நாராயணன் கிராமத்தில் குழுமுகிறார்கள்.
இவ்வாறு வந்து குழுமும் முஸ்லிம் மக்கள் தங்கிடவும், மேத்தப்பிள்ளை தர்காவில் பிரார்த்தனை செய்யவும் வசதியாக தெற்கு விஜய நாராயணன் கிராமத்தில் வாழும் தேவர் சமூகத்தவர் தங்களின் வீடுகளைக் காலி செய்து விருந்தினருக்கு வழங்குகிறார்கள்.
மேத்தப்பிள்ளை தர்காவில் வாழைப்பழம், பாயாசம் உள்ளிட்ட பல்வேறு நேர்ச்சைப் பொருட்கள் பரிமாறப்பட்டாலும் மிக முக்கியமான நேர்ச்சைப் பொருளாக இருப்பது புட்டு. குழந்தைகள் இல்லாத இல்லற வாழ்வை வாழ்ந்து முடித்த மேத்தப் பிள்ளையிடம் குழந்தை வேண்டி நேர்ச்சை வைக்கும் தாய்மைகள் அநேகம்.
அவ்வாறு குழந்தை வேண்டிய நேர்தலில் நேர்ச்சைப் பொருளாக புட்டு இருக்கிறது. புட்டு தயாரிக்கும் பச்சரிசியினைக் கொண்டு செல்லும் முஸ்லிம் பெண்கள் தாங்கள் தங்கி இருக்கும் வீடுகளில் உள்ள உரல்களில் போட்டு இடித்து மாவாக மாற்றி புட்டு தயாரித்து நேர்ச்சை செய்கிறார்கள்.
வேறெந்த தர்ஹாவிலும் இல்லாத வழமையாக அரிவாள்களும் நேர்ச்சைப் பொருளில் சேகரமாகி இருக்கிறன்றன.
மேத்தப்பிள்ளை தர்ஹா இப்போதும் மாடசாமித் தேவர் பரம்பரையினரால் பராமரிக்கப் பட்டுவருகிறது. மாடசாமித்தேவர் எதற்காக தன்னுடைய நெருங்கிய நண்பரான மேத்தப்பிள்ளையைக் கொலை செய்தார். சிதம்பரவடிவு இது மாடசாமித் தேவரின் தங்கையின் பெயர். தேவர் ஜமீன் பரம்பரை . ஒருநாள் தன்னுடைய சேவகன் முத்துக்கருப்பனுடன் மேத்தப்பிள்ளை குதிரையில் வந்து கொண்டிருக்கும்போது பாதையில் கிடந்த தலைமுடி சுருட்டு ஒன்று குதிரையின் காலில் சிக்கிவிட்டது. வீட்டுக்கு வந்த மேத்தப் பிள்ளை குதிரையின் காலில் சிக்கி இருந்த தலைமுடியை வெளியே எடுத்து அதனை வெளியில் வீசிடும் போதுதான் தலைமுடியின் நீளத்தைக் கவனித்தார். இத்தனை நீளமான தலைமுடி யாருக்கானது என்று வியந்தபோது முத்துக்கருப்பன் சொன்னார். அது மாடசாமித் தேவரின் தங்கை சிதம்பர வடிவுடையது என்று கூறினார்.
மேத்தப்பிள்ளை இப்படிக் கேட்டதையும் , தலைமுடியை வியந்ததையும் கொஞ்சம் கூடுதலாக முத்துக் கருப்பன் மாடசாமித் தேவரின் காதில் போட்டுவிட
கோபம் கொண்ட மாடசாமித் தேவரும் அவரின் தம்பி முத்தையாவும் மேத்தப்பிள்ளையை தந்திரமாக அழைத்து வந்து குதிரையில் ஏற்றி ஊருக்கு வெளியே கூட்டிச் சென்றனர். ஊரின் வெளியில் இருக்கின்ற நம்பி ஆற்றின் கரையில் வைத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மேத்தப் பிள்ளையின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து விடுகின்றனர் .
மேத்தப்பிள்ளைக் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதற்குப் பகரம் மாடசாமித் தேவரையும் அவரின் சகோதரரையும் பழிவாங்க வந்த மேத்தப் பிள்ளையின் நண்பர் பட்டானியார் செய்யது இபுறாகீம் ஊரின் எல்லையில் வைத்து பாம்பு தீண்டி இறந்துவிட அவரின் உடலும் மேத்தப்பிள்ளையின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது,
வெகுமக்கள் நம்பிக்கை மரபில் நியாயமற்ற முறையில் கொலை செய்யப்பட்டவர்களை வழிபடும் மரபு தொன்மையானது.சங்க இலக்கியம் சுட்டுகின்ற நடுகல் மரபு இத்தகையதே. முத்துப்பட்டன் கதை, தோட்டுக்காரி அம்மன் கதைகள் எல்லாம் இவ்வழிப் பட்டதே.சமயம் அற்ற இந்த மரபின் அடையாளமாக இருக்கிறது மேத்தப்பிள்ளை தர்ஹா.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சாதிய சமூகங்களுக்கும் இடையிலான உறவு என்பது நெருக்கமானது. உறவுமுறை சொல்லி அழைக்கும் அளவு நெகிழ்வானது. குறிப்பாக தேவர் சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் அதன் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது.
சில இடங்களில் அது ,முரண்பாடு, மோதல்களின் வழியாக( தெற்கு விஜய நாராயணம், திருமயம்) முகிழ்த்த ஒன்றாகவும் சில இடங்களில் நட்பின் வழியாக( மதுரை மேலக்கால்) உருவான ஒன்றாகவும் இருக்கிறது.முஸ்லிம்களிடம் இருக்கின்ற விருத்த சேதனம் என்னும் சமயம் சார்ந்த வழக்கம் தேவர் சமூகத்திலும் இருக்கிறது என்பதும் இங்கு கவனத்திற்குரியது.
- Thuckalayhameem
Musthafa
1 comment:
இதெல்லாம் ஒரு வித கூத்து. காலப்போக்கில் மாறி விடும்.முறையான சமயகல்வி கற்காத தேவா் சமூகம் இது போன்ற கூத்துக்களில் . . ஈடுபட்டுவருகின்றனா்.
Post a Comment