Followers

Wednesday, April 26, 2006

அம்பேத்காரும் இஸ்லாமும்!

அம்பேத்காரும் இஸ்லாமும்!
் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'’ என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.
(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி: கீற்று
// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள்.//

உண்மைதான்! கை வைப்பதற்கு என்ன அவசியம் வந்து விட்டது? இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மனித சட்டங்கள் அல்லவே!குர்ஆன் நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்று நம்புபவர்கள் முஸ்லிம்கள். இந்த நாட்டுக்கு, இந்த மக்களுக்கு,அல்லது இந்த காலத்துக்கு குறிப்பிட்ட இந்த சட்டம் பொருந்தாது என்று ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா? பிறகு மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது? ஜீவனாம்சம்,தலாக் போன்ற பிரச்னைகள் கூட முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக பின் பற்றாததினால் வந்த கேடுதானே ஒழிய, இதிலும் குர்ஆனை குறை சொல்ல முடியாது.

// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும்.//

இதுவும் தவறாக பெரியாரால் விளங்கப் பட்டிருக்கிறது. குர்ஆனுக்கும் முகமது நபியின் போதனைக்கும் மாற்றமாக எவ்வளவு பெரிய மௌலானா தன் கருத்துக்களைச் சொன்னாலும் தங்கள் காலடியில் போட்டு மிதித்து விடுவார்கள் முஸ்லிம்கள். முகமது நபிக்குப் பிறகு ஆன்மீகத் தலைமை என்று ஒன்று கிடையாது. கிறித்துவத்துக்கு ஒரு போப், இந்துக்களுக்கு சங்காராச்சாரியார் போன்று முஸ்லிம்களுக்கும் மௌலானாக்கள் என்று தவறாக நினைத்து விட்டார் பெரியார். அன்றே அம்பேத்கார் விருப்பத்துக்கு விட்டிருந்தால் பல லட்சம் ஹரிஜனங்கள் அன்று பலனடைந்து இருப்பார்கள். அதன் முழுபலனையும் இன்று அவர்களின் பிள்ளைகள் அடைந்திருப்பார்கள்.

ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கை பிறகு மாறுதலடைந்தது.தமிழ் நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் - 63 ஆண்டுகளுக்கு முன்னால் -சீலயம்பட்டி கிராமம்தான். அரிஜனங்கள் கூட்டாக இஸ்லாத்தை தழுவிய போது அந்த கிராமத்துக்கு பெரியார் சென்றிருந்தார். அவர்களை நோக்கி 'நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்நததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கி விட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் எந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் பெட்ரோலுக்கான காசை அந்த ஊர்க் காரர்களிடம் வாங்கி விடுவேன்.ஆனால் இன்று என் சொந்த செலவில் உங்களைப் பார்க்க வந்துள்ளேன். இஸ்லாத்துக்கு மாறிய உங்கள் அனைவரையும் பார்த்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்' என்று பெரியார் சொன்னார்.

'கடவுள் இல்லை' என்ற ஒரு கொள்கை தான் பெரியாரை இஸ்லாத்திலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இந்த முடிவுக்கு வந்தது கூட தன் சொந்த மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் தான். இந்த ஒரு கொள்கையை விடுத்து மற்ற நடவடிக்கை எல்லாம் பெரியாரை ஒரு இஸ்லாமியராகவே மாற்றி விட்டது.

ஆனால் அவரின் சீடர்கள் இன்று அந்த பெரியாருக்கு ஊருக்கு ஊர் சிலைகளை எழுப்பி வருகிறார்கள். மாலைகளும் போட ஆரம்பித்தாகி விட்டது. உயிரற்ற சிலைக்கு மாலை போட்டால் அந்த சிலையால் அதை உணர முடியுமா? என்று இந்த பகுத்தறிவாளர்கள் சிந்திப்பதில்லை. இன்னும் சூடம் சாம்பிராணிதான் பாக்கி. சில நாட்களுக்குப் பிறகு அதுவும் ஆரம்பமாகி விடும். நாத்திகத்தை போதித்த புத்தர் எப்படி கடவுளாக்கப் பட்டாரோ அதே போல் பெரியாரும் நம் பேரப் பிள்ளைகளின் காலத்தில் கடவுளாக்கப் படும் அபாயம் உள்ளது. திரு கி. வீரமணி அவர்கள் இதை கவனித்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

'திருவள்ளுவர் ஒரு தத்துவ ஞானி, பொருளாதார மேதை. நான் நாத்திகனாயினும் வள்ளுவன் என்ற தெய்வத்தை ஏற்றுக் கொள்கிறேன்'
- கருணாநிதி உரை, முரசொலி, 1-1-2000

நம் நாட்டில் இத்தனை தெய்வங்கள் வந்ததன் காரணம் இப்போது விளங்குகிறதல்லவா! பகுத்தறிவாதியான கலைஞருக்கே இப்படி தடுமாற்றம் என்றால் படிக்காத பாமரனுக்கு சொல்லவா வேண்டும். வள்ளுவர் கோட்டம், அண்ணா அறிவாலயம் என்று வணங்குதற்கு ஏற்றாற்போல் வழி செய்தாகி விட்டது. இனி ஸ்டாலின் காலத்தில் சூடம்,சாம்பிராணி ஏற்ற வேண்டியதுதான் பாக்கி.

குர்ஆனில் மனிதக் கைகள் புகாததனால்தான் மேலே சொன்னது போன்ற குளறுபடிகள் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

2 comments:

மு. மயூரன் said...

//'நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்நததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கி விட்டு மனிதனாகி இருக்கிறீர்கள்.//

இஸ்லாத்தில் தாடி வைப்பதைப்பற்றி ஏதவது சொல்லியிருக்கிறதா?

ரொம்ப அசைகரிகமான அந்த தாடியை வைத்துக்கொண்டு மீசையை மாட்டும் சவரம் செய்துகொண்டு இங்கே இலங்கையில் இஸ்லாமிய ஆண்கள் இருக்கிறார்கள். இது ஒரு ஃபாஷன் போல அதி வேகமாக பரவி வருகிறது.

suvanappiriyan said...

திரு மயூரன்!

தாடி வைப்பது கட்டாய கடமைகளில் வராது. ஆனால் முகமது நபி தாடி வைக்கச் சொல்லி பணித்திருப்பதால் முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பதை விரும்புகிறார்கள். ஒரு முறை முகமது நபியின் தோழர் ஒருவர் தாடியை அதன் போக்கில் சரி செய்யாமல் விட்டு விடுகிறார். அதைப் பார்த்த முகமது நபி அவரின் தாடியை ஒழுங்கு படுத்திக் கொள்ளச் சொல்கிறார். இதன் மூலம் நாம் அறிவது தாடி வைக்கும் போது அதை அழகிய தோற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பெண்களுக்கு தாடி வளருகிறதா? இல்லையே! இது ஆண்மைக்கே உரிய அடையாளங்களில் ஒன்றல்லவா!

பெரியார் சுட்டிக்் காட்டியது அவர்களின் தலை முடியை அளவுக்கதிகமாக வளர்த்திருந்த தாழ்த்தப் பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவற்றை எல்லாம் சரி செய்திருநதனர். இதைத்தான் பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.