Followers

Friday, April 21, 2006

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்?

சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன.

துக்ளக் - 26.10.2005

மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம்.

பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத பொய்.

இந்து மதம் பௌத்த சமண சமயங்களோடு அறிவுப் பூர்வமாக, நளினமான முறையில் த்ததுவ அடிப்படையில் விவாதம் செய்து மேற்படி மதங்களைப் பொய்ப்பித்தது போலவும்: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களில் தத்துவ வறட்சி இருப்பதால், அறிவு பூர்வமான விவாதங்கள் மூலம் பிற மதத்தினரை ஈர்க்காமல் ஆசை காட்டி மதம் மாற்றம் செய்வது போலவும் ஒரு போலிச் சித்திரத்தைத் தீட்டுகிறது துக்ளக் சோவின் துடுக்குப் பேனா...

இந்து மதத்தின் கொள்கை எது? என்று கேட்டால் துக்ளக் சோவால் பதில் கூற முடியுமா? அப்படியே அவர் பதில் சொன்னாலும் அதை எல்லா பிரிவு இந்துக்களும் ஏற்பார்களா?

இந்து மதம் என்ற பெயரே பிற் காலத்தில் வைக்கப் பட்ட பெயர்தான். வைதீக மதங்களான சைவம் வைணவம் ஆகியவற்றோடு சிறு தெய்வ வழிபாடுகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி 'இந்து மதம்' எனப் பிற்காலத்தில் ஒரு பொதுப் பெயர் சூட்டப் பட்டது.

பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் வாதங்களின் மூலம் வீழ்த்தியது என்பதில் அணுவளவும் உண்மையில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்து மதம் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்முறையின் முலம் அழித்ததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது 'சமணமும் - தமிழும்' என்ற நூலில் வரலாற்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான பௌத்த ஊர்கள், பக்தி இயக்கம் பரப்பிய வன்முறையால் அழிக்கப் பட்டுள்ளதை மிகத் துல்லியமான ஆதாரங்களோடு புலவர் ஜெ. ஆனந்த ராசன் தமது 'பௌத்தமும், பழந் தமிழ்க் குடி மக்களும்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

குருவிக் கரம்பை வேலு எழுதிய 'சிந்து முதல் குமரி வரை' என்ற நூலும் ஆரியர்களின் அடாவடிகளை விவரிக்கிறது.

நாகப் பட்டினத்தில் இருந்த மிகப் பெரிய புத்த விகாரத்தில் தஙகத்தாலான புத்தர் சிலை இருந்துள்ளது.இதனை வைணவப் பிரிவைச் சேர்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இரவோடிரவாகச் சூறையாடினார். அப்படி சூறையாடிய தங்க புத்தர் சிலையையும் ஆபரணங்களையும் எடுத்துச் செல்லும் போது வழியிலேயே பொழுது விடிந்து விட்டது. ஆகவே பொருள்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த ஊர் தான் இப்போது சிக்கலுக்கும்- மஞ்சக் கொல்லைக்கும் இடைப் பட்ட 'பொரவச் சேரி' என்றழைக்கப் படும் முஸ்லிம் ஊராகும். பொருள் வைத்த சேரி - பொரவச்சேரி என மருவி விட்டது.

நாகை புத்த கோவிலை சூறையாடிய பணத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் புணரமைக்கப் பட்டது என்பதை 'குரு பரம்பரைப் பிரவாகம்' என்ற வைணவ நூலும் குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரத்தில் வன்முறைகள்

பௌத்த நகரமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தில் வன்முறையால் பௌத்த அடையாளங்கள் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. காஞ்சிபுரத்தின் கச்சீஸ்வர் கோவில், கைலாச நாதர் கோவில் ஆகியவை பௌத்த கோவில்களாக முன்பு இருந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

காஞ்சியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்ரவர்த்தி எழுப்பிய பிரம்மாண்டமான புத்த தூபி இருந்ததாக கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

சைவ வன்முறைகள்

சீர்காழி அருகே ஆறாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொடுமையாக கொலை செய்த பெருமை சைவத்திற்கு உண்டு.

சோ குறிப்பிடும் இந்து மத வாதம் எப்படிப் பட்டதென அறிந்தால் மிரண்டு போக வேண்டும். சமணர்களோடு சைவர்கள் அனல் வாதம், புனல்வாதம் என இருவகை வாதங்களை நிகழ்த்துவார்கள்.'உண்மைக்கு அழிவில்லை' எனக் கூறும் சைவர்கள் சமண நூல்களை தீயிலிடச் சொல்வார்கள். எல்லா நூலும் தீயில் எரியும் சமண நூலும் எரியும். தீயில் எரிந்து போனதால் சமணம் உண்மையல்ல எனத் தீர்ப்பாகும். சைவர்கள் தங்கள் நூல்களைத் தீயில் போடுவதில்லை. இது அனல்வாதம்.

காட்டாற்று வெள்ளத்தில் புத்தகங்களை வீச வேண்டும். எது எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறதோ அது சத்தியம். இது புனல் வாதம். சமண நூல்களை எரிவார்கள். அவை ஆற்றோடு போய் விடும். அவை பொய்யானவை என உறுதியாகி விடும். சைவம் சமணம் இவற்றிற்கிடையேயான வாதத்தில் சமணம் பொய்யானது என நிரூபணமாகி விட்டதால் சைவத்தைப் பரிசோதிக்க அவசியமில்லை. வாதத்தில் தோல்வியடைந்த சமணர்கள் கழுமரத்தில் (கூர்மையான ஈட்டி) ஏற்றிக் கொல்லப் படுவார்கள்.

சிவத் தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை விளக்கும் பெரிய புராணம்:

'வாதில் அமணர் வலி தொலைய வண் கழுவில் தைத்த மறையோன்'

சமணர்களை வாதத்தில் வென்று, அவர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற மறையோன் திருஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகிறது.

கழுத்தை அறுக்கக் கட்டளையிடும் கவிதை

சமணர்களையும், பௌத்தர்களையும் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யுமாறு ஒரு பக்தி இலக்கியப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற வைணவ நூலில் திருவரங்கப் பதிகம் என்ற பகுதியின் 879 ஆம் பாடலைப் பாருங்கள்.

'வெறுப்பொடு சமணர், முண்டர்
விதியில் சாக்கியர் நின்பால்
பொறுப்பரி யங்கள் பேசில்
போவதே நோய தாகிக்
குறிப்பெனக் கடையு மாஇல்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்கமா நகருளானே'

'வெறுக்கத் தக்க சமணர்களும், பௌத்தர்களும் உன்னிடம் வந்து பொறுப்பற்ற செய்திகளைப் பேசினால் அவர்களின் தலைகளை அறுத்து விடுவதே நல்லது. அரங்கமா நகரில் உள்ளவனே அது உன் கடமை'

- இது ஆன்மீக வாதமா? இல்லை பயங்கர வாதமா?

தேவாரத்தில் 360 க்கும் மேற்பட்ட பாடல்கள் பௌத்த, சமண சமயத்தவரை மிகக் கீழ்த்தரமாக வர்ணிக்கின்றன.

இவை யாவும் இன்றைய தலை முறைக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் பவுத்த,சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்கிறார் சோ.

வைதீக மதம் வாதம் செய்ததா? அல்லது பிற மதத்தினரை வதம் செய்ததா? என்பதை வரலாற்றெங்கிலும் காண முடிகிறது.

இஸ்லாமும், கிறித்தவமும் இந்துக்களை மதம் மாற்றுகின்றன எனக் கூக்குரலிடும் சோ, ஏன் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை சிந்திக்கட்டும்.

-மக்கள் உரிமை - 24-18-2005

5 comments:

suvanappiriyan said...

திரு ஸ்ரீநிதி!

ஒரு நாட்டின் மீது படையெடுத்து வரும் அரசன் எதிரி நாட்டு மக்களை போரில் எதிர் கொள்வது, அந்நாட்டு ஆபரணங்களை கொள்ளையடிப்பது என்பது உலகம்முழுவதும் அன்று இருந்த நடைமுறை. ஏன் நம் தமிழ் நாட்டிலேயே சேர, சோழ, பாண்டிய, மராட்டிய மன்னர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மக்களை அழிக்கவில்லையா? இதை மதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதால்தான் வித்தியாசமாக உங்களுக்கு தெரிகிறது. ஆனால் சைவ சமண மதப் பிரச்னை என்பது திட்டம் போட்டு எப்படி ஒரு மதத்தை அழித்தார்கள் என்று பார்க்கிறோம். இதை சோ மறைப்பதைத்தான் இங்கு சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

அதிலும் இதற்கு முன் இருந்த அரசர்களை விட மொகலாயர்களின் ஆட்சி சிறப்பாக இருந்ததால் தான் நம் நாட்டு மக்கள் அவர்களை எண்ணூறு வருடங்கள் ஆள விட்டிருந்தார்கள். பெரும் பான்மையான ஹிந்துக்களை அரவணைத்து சென்றதைத்தான் நாம் வரலாறுகளில் பார்க்கிறோம்.இந்த இந்திய நாட்டில் சிறு சிறு ஊருக்கெல்லாம் மன்னர்கள் இருந்து கொண்டு மக்களை போர்களினால் சிரமப் படுத்திக் கொண்டிருந்தபோது, மொகலாயர்கள் வந்தவுடன் தான் இந்த நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உண்டாக்கி விட்டுச் சென்றார்கள்.

ரவி said...

சோ வுக்கும் இந்த பதிவுக்கும் கொஞ்சம் சம்மந்தம் இல்லாதது போல் தோன்றுகிறது...

ஆனால்

///சமணர்களை வாதத்தில் வென்று, அவர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற////

இந்த வரிகளில் தெறிக்கும் கோபம் நியாயமானது..

Sivabalan said...

Mr.சுவனப்பிரியன் Sir,

You did not mention about King Ashokar.

suvanappiriyan said...

திரு ரவி!

'இந்து மதம் வாதம் செய்து பௌத்த சமண மதங்களை வீழ்த்தியது. இஸ்லாத்திடம் அந்த திறமை இல்லை' என்ற தோணியில் சோ பதிலளித்திருப்பதை பார்க்கிறீர்கள். இந்த பொய்யை அம்பலப் படுத்தத்தான் இந்த பதிவு. சோ சொன்னதற்கு எந்த ஆதாரமும் அவரால் சமர்ப்பிக்க முடியாது. அவர் சொன்னது பொய் தான் என்பதற்கு ஆதாரங்களைத் தந்துள்ளேன. இனியாவது பொய்களை பரப்புவதை சோ நிறுத்திக் கொள்ளட்டும்.

suvanappiriyan said...

திரு ஸ்ரீநிதி!

மொகலாய ஆட்சியினால் விளைந்த நன்மைகள்:

சிறு சிறு சமஸ்தானமாக இருந்த பாரதத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்து இன்று வல்லரசாகக் கூடிய நிலைமைக்கு உயர்த்தி விட்டு சென்றது.

பிற்படுத்தப் பட் மக்கள், தாழ்த்தப் பட்ட மக்களில் அதிகமான பேர் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பிக்க வழி தேடிக் கொண்டிருந்த போது மொகலாயர்கள் கொண்டு வந்த இஸ்லாம் அந்த மக்களை கவர்ந்து பல லட்சம் பேர் இஸ்லாத்தை தழுவியது.என்னைப் போன்ற எத்தனையோ இந்த மண்ணின் மைந்தர்களுக்கு மொகலாயர்களின் ஆட்சியினால் இன்று விடுதலை கிடைத்திருக்கிறது. என் மூதாதையர்கள் எந்த ஜாதி என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. எங.கள் மூதாதையர்கள் மட்டும் இஸ்லாத்தை தழுவாமல் இருந்திருந்தால் இன்று நான் ஏதாவது ஒரு ஜாதிக் கட்சியில் அங்கத்தினராக இருந்து கொண்டு 'ஸ்ரீரங்கம் கோவிலின் கருவரைக்குள் எங்களையும் அனுமதியுங்கள்' என்று போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன்.

இந்தியாவின் கிராமங்களை நிர்வகிக்க பஞ்சாயத்து ஆட்சி முறையை அமுல் படுத்தி அன்றே நிர்வாகத்தை சீரமைத்தவர்கள் மொகலாயர்கள். பஞ்சாயத்து,தாசில்தார் போன் வார்த்தைகள் இன்றும் நம்மிடம் புழக்கத்தில்இருந்து வருகிறது.

இவர்களிடம் இருந்த ஒரே குறை ஒழுங்கான இஸ்லாமியர்களாக வாழாததுதான். இவ்வளவு செல்வம் இருந்தும் ஒரு அரசர் கூட ஹஜ் கடமையை நிறைவேற்றவில்லை. மக்களின் வரிப் பணத்தில் கோடிக் கணக்கில் செலவு செய்து தாஜ்மஹாலை கட்டியது போன்ற ஒரு சில தவறுகளும் இவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதற்கு முன்பு ஆண்ட அரசர்களை விட மொகலாயர்கள் சிறப்பாக இந்த நாட்டை கொண்டு சென்றார்கள் என்று தான் நாமும் வரலாறுகளில் படிக்கிறோம்.