ரோமப் பேரரசர் ஹெர்குலிசைப் பற்றி...
ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஹெர்குலிசைப் பற்றி நாம் வரலாறுகளில் அதிகம் படித்திருப்போம். ஹெர்குலிசுக்கும் முகமது நபிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதோடு அபு சுப்யானுக்கும் ஹெர்குலிசுக்கும் நடந்த வாதங்களும் புகாரி ஹதீது கிரந்தத்தில் பதியப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளேன். மொழி பெயர்ப்பில் ஏதும் தவறுகள் தென் பட்டால் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். இந்த விபரங்களைச் சொல்லும் அபு சுப்யான் என்ற நபித் தோழர் சம்பவம் நடக்கும் போது முகமது நபியை கடுமையாக எதிர்த்து வந்தார். முகமது நபிக்கு நெருங்கிய உறவினர்.அந்த நேரம் இஸ்லாத்தை ஏற்காதவராகவே இருந்தார்.அதன் பிறகு பல நாட்களுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இனி வரலாறைப் பார்ப்போம்.
ரோமப் பேரரசர் ஹெர்குலிஸ் அரசாங்க அலுவல் நிமித்தமாக அப்போது ரோமாபுரியின் கட்டுப் பாட்டில் இருந்த சிரியாவுக்கு வந்திருந்தார். அந்த நேரம் வியாபார நிமித்தமாக அபூ சுப்யானும் சிரியாவுக்கு வருகிறார். முகமது நபியின் பிரச்சாரத்தைக் கேள்விப் பட்ட ஹெர்குலிஸ், சில நபர்களை அபு சுப்யான் வசம் அனுப்பி அவரையும் அவரது கூட்டத்தாரையும் அழைத்து வரச் சொல்கிறார். அதன்படி அவர்களை மன்னர் வசம் அழைத்து வருகிறார்கள். இவர்களின் சந்திப்பு சிரியாவில் உள்ள இல்யா என்ற நகரில் நடைபெறுகிறது. அபு சுப்யானையும் அவரது வியாபார கூட்டத்தாரையும் நீதி மன்றத்துக்கு அழைத்த ஹெர்குலிஸ் அரபு மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டு கீழ் வரும் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
ஹெரகுலிஸ் : 'இறைவனின் தூதர் ' என்று சொல்லிக் கொண்டிருக்கும் முகமது என்ற நபருக்கு நெருக்கமானவர்கள் உங்களில் எவரும் உண்டா?
அபூ சுப்யான் : 'நான் தான் இங்குள்ளவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர்'
ஹெர்குலிஸ் : 'அவரை எனக்கு நெருக்கமாக கொண்டு வாருங்கள். மற்றவர்கள் அவருக்கு பின்னே சென்று நில்லுங்கள்'. மொழி பெயர்ப்பாளரை நோக்கி 'சொல்வீராக! இந்த மனிதரிடத்தில் (அபு சுப்யான்) இறைத் தூதர் என்று அவர்கள் நாட்டில் சொல்லிக் கொண்டிருப்பவரைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்பேன். இவர் ஏதும் அவரைப் பற்றி பொய்யாக தகவல் தந்தால், அதை எனக்கு மற்றவர்கள் தெரிவிக்க வேண்டும்'. என்று கூறி விட்டு 'அவருடைய பரம்பரை எத்தகையது?' எனற முதல் கேள்வியை அபு சுப்யானைப் பார்த்து மன்னர் ஹெர்குலிஸ் கேட்டார்.
அபு சுப்யான் : உயர்ந்த பாரம்பரியம் உடையது அவருடைய குடும்பம்.
ஹெர்குலிஸ் : அவர் சொல்லக் கூடிய உபதேசங்களை இதற்கு முன் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
அபுசுப்யான் : இல்லை.
ஹெர்குலிஸ் : அவருடைய முன்னோர்களில் எவரும் இதற்கு முன் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்களா?
அபுசுப்யான் : இல்லை.
ஹெர்குலிஸ் : அவரைப் பின் பற்றுபவர்கள் பலமுள்ள உயர்ந்த சமூகமா! அல்லது ஒடுக்கப் பட்டவர்களா?
அபுசுப்யான் : ஒடுக்கப் பட்டவர்கள்.
ஹெர்குலிஸ் : அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா?
அபுசுப்யான் : அதிகரிக்கிறது.
ஹெர்குலிஸ் : அவர்களில் எவரும் மார்க்கத்தை தழுவி அது பிடிக்காமல் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியாகி இருக்கிறார்களா?
அபுசுப்யான் : இல்லை.
ஹெர்குலிஸ் : முகமது எப்போதாவது வாக்கு தவறி இருக்கிறாரா?
அபுசுப்யான் : இல்லை. ஆனால் தற்போது அவரோடு போர் நிறுத்தம் சம்பந்தமாக உடன் படிக்கை செய்திருக்கிறோம். அதை அவர் மீறுவாரா மாட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ('இது ஒன்று தான் நான் அவரைப் பற்றி மாறு பட்டு சொன்ன கருத்து' என்று பிறகு ஒரு குறிப்பில் கூறுகிறார்.)
ஹெர்குலிஸ் : நீங்கள் அவரோடு போர் புரிந்து இருக்கிறீர்களா?
அபுசுப்யான் : ஆம்.
ஹெர்குலிஸ் : அந்த போர்களின் முடிவுகள் பற்றி கூறுவீராக!
அபுசுப்யான் : அந்தப் போர்களில் சில சமயம் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். சில நேரம் நாங்கள் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.
ஹெர்குலிஸ் : உங்களுக்கு அவர் என்ன கட்டளை இடுகிறார்?
அபுசுப்யான் : 'ஒரே இறைவனை வணங்குங்கள். அந்த இறைவனோடு சேர்த்து வேறு எதனையும் வணங்காதீர்கள். உங்கள் முன்னோர்களின் தவறான வழிகளைப் பின் பற்றி வழி கெடாதீர்கள்' என்று சொல்கிறார். 'தொழுகையை நிலை நாட்டும் படியும், உண்மையே பேச வேண்டும் என்றும், நேர்மையை கடை பிடிக்க வேண்டும் என்றும், உறவினர்களின் நலம் பேண வேண்டும்' என்றும் கட்டளை இடுகிறார்.
மொழி பெயர்ப்பாளரை நோக்கி, 'அவர்களுக்கு நான் சொல்வதை மொழி பெயர்த்து சொல்வீராக!' என்று கூறிவிட்டு பின் வருமாறு மன்னர் ஹெர்குலிஸ் தொடர்ந்தார்.
'நான் உம்மிடம் அவரின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். சமூகத்தில் மதிக்கத்தக்க குடும்ப பரம்பரை என்று சொன்னீர். இதற்கு முன் வந்த இறைத் தூதர்களும் சிறந்த குடும்பத்திலுருந்தே வந்துள்ளனர்
அவர் சொல்லும் கருத்துக்களை இதற்கு முன் வேறு யாரும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு 'இல்லை' என்று சொன்னீர். நான் கேட்டதற்கு காரணம், இதற்கு முன் வேறு யாரும் அது போல் சொல்லி இருந்தால் மற்றவர்களின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம் என்பதற்க்காகவே!
அவரின் முன்னேர்களில் யாரும் அரசராக இருந்திருக்கிறார்களா? என்றதற்கு 'இல்லை' என்று சொன்னீர். ஒருக்கால் தன் தந்தையின் நாட்டைப் பிடிக்கத்தான்இதுபோல் சொல்கிறாரோ என்று நினைத்துத் தான் அவ்வாறு கேட்டேன்.
இதற்கு முன் பொய் சொல்பவராக இருந்திருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதில் சொன்னீர். எனவே முன்பு பொய் சொல்லி பழக்கம் இல்லாதவர் இறைவன் விஷயத்திலும் பொய் சொல்பவராக இருக்க மாட்டார் என்று நினைத்தே கேட்டேன்.
அவரைப் பின் பற்றுபவர்கள் சமூக அந்தஸ்து உள்ளவர்களா? அல்லது ஒடுக்கப் பட்டவர்களா? என்று கேட்டதற்கு 'ஒடுக்கப் பட்டவர்கள்' என்று பதிலளித்தீர். இதற்கு முன்னால் வந்த இறைத் தூதர்களையும் வறியவர்களும் ஒடுக்கப் பட்டவர்களும் தான் முதலில் பின் பற்றி இருக்கிறார்கள்.
அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? என்று கேட்டதற்கு 'அதிகரிக்கிறது' என்று பதிலளித்தீர். உண்மையான மார்க்கம் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.
அவர்களில் எவரும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்களா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலளித்தீர். உண்மையான நம்பிக்கை ஒரு உள்ளத்தில் புகுந்து விட்டால் பிறகு எப்படி மாறுவதற்கு மனம் வரும்.
அவர் உங்களிடம் வாக்கு தவறி இருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலுரைத்தீர். ஆம். இறைத் தூதர்கள் எவ்வாறு வாக்கு தவற முடியும்.
அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார் என்று கேட்டதற்கு 'ஒரே இறைவனை வணங்கச் சொல்வதாகவும், தொழுகை,உண்மை,நம்பிக்கை,நேர்மை,உறவினர்களைப் பேணுதல் போன்றவற்றை வாழ்க்கையில் செயல் படுத்தக் கட்டளை இடுகிறார் என்று சொன்னீர். நீர் சொன்ன அனைத்து விபரங்களும் உண்மையாய் இருந்தால் என்னைக் கட்டுப் படுத்தக் கூடியவராக உங்கள் முகமது இருப்பார். இறைத் தூதர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன்.உங்கள் நாட்டில் வந்திருப்பவர் அந்த இறைத் தூதர் தானா என்று நான் இன்னும் சரியாக அறியவில்லை.நான் அவரை சந்திக்க விரும்புகிறேன்.எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் அவரைக் கண்டிப்பாக சந்திப்பேன்.அவர் உண்மையாளராக இருந்தால் அவருடன் நானும் இருப்பேன்.அப்போது அவரின் கால்களைக் கழுவக் கூடிய சேவகனாகவும் இருப்பேன்.' என்று கூறினார்.
சில நாடகளில் முகமது நபியிடம் இருந்து ஹெர்குலிஸ் மன்னருக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்டது. பஸ்ராவை ஆட்சி செய்து வந்த திஹ்யா என்பவர் மூலமாக இக் கடிதம் ஹெர்குலிசுக்கு அனுப்பப் பட்டது. அக் கடிதத்தில்
'அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனைப் போற்றி புகழ்ந்ததன் பின், இறைவனின் தூதராகிய முகமது ரோமாபுரியின் ஆட்சியாளரான ஹெர்குலிசுக்கு எழுதிக் கொள்வது.நேர் வழியைப் பின் பற்றுவோர் மீதுசாந்தி உண்டாகட்டுமாக! நான் உங்களை தூய இஸ்லாத்தின் பால் வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் இறைவனின் பாதுகாவலில் வந்து விடுவீர்.இதற்கான மகத்தான கூலியும் இறைவன் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை விடுத்து வேறு மார்க்கத்தை பின் பற்றினால் நஷ்டமடைந்தோரில் நீரும் ஒருவராக ஆகி விடுவீர்.' என்று வேறொரு நபரால் எழுதப் பட்டு முகமது நபியின் மோதிர முத்திரை கடிதத்தில் பதிக்கப் பட்டு மன்னரிடம் அளிக்கப் பட்டது. இந்த கடிதம் இன்றும் கூட அருங் காட்சி அகத்தில் வைக்கப் பட்டு பாதுகாக்கப் படுகிறது.
புகாரி ஹதீது கிரந்தத்தில் 2978 வது ஹதீஸில் நபித் தோழர் அபூ சுப்யான் அவர்கள் அறிவிப்பதாவது
'நாங்கள் ஈலியா (ஜெருசலம்) நகரில் இருந்தபோது ரோம (பைசாந்தியப்) பேரரசர் ஹெர்குலிஸ் எங்களை கூப்பிட்டனுப்பினார். பிறகு இறைவனின் தூதர் முகமது நபி அவர்களுடைய கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்துக் காட்டி முடித்தவுடன் மன்னரிடம் இருந்த பிரமுகர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. குரல்கள் உயர்ந்தன. நாங்கள் அரசவையிலிருந்து வெளியேற்றப் பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், 'அபூ கப்ஸாவின் மகனுடைய (முகமது நபியுடைய)அந்தஸ்து உயர்ந்து விட்டது. மஞ்சள் நிறத்தவரின் (கிழக்கு அய்ரோப்பியர்களின்) அதிபரே கூட அவருக்கு அஞ்சுகிறார்', என்று கூறினேன்';.
No comments:
Post a Comment