Followers

Monday, October 13, 2014

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.

மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.

பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஒரு பொருள் பூமியில் நிலையாக நிற்க வேண்டுமானால் நான்கு கால்கள் அல்லது குறைந்த பட்சம் மூன்று கால்களாவது தேவைப்படும். ஆனால் மனிதர்களாகிய நாம் இரண்டு கால்களைக் கொண்டு எவ்வாறு நிற்கிறோம்? நாம் கீழே விழ வேண்டிய தருணத்தில் நம் உடல் சமன் செய்து புவி ஈர்ப்பு விசைக்கு தோதாக கனத்தை சமன் செய்வதாலேயே நாம் நிலையாக பூமியில் நிற்க முடிகிறது. ஒரு காலை முன் எடுத்து வைக்கும் போது மற்ற காலை எந்த கோணத்தில் வைக்க வேண்டும் என்று காலின் அனைத்து மூட்டுக்ககளுக்கும், தசைகளுக்கும் மூளையானது கட்டளையை பிறப்பிக்கிறது. உடலில் உள்ள 300க்கும் மேற்பட்ட தசைகள் இந்த கட்டளையை ஏற்று பூமியின் ஈர்ப்பு விசையையும் காற்றின் அழுத்தத்தையும் சமன் செய்து நாம் கீழே விழுந்து விடாமல் ஒரு தாயைப் போல் அரவணைக்கிறது இந்த பூமி. எனவே தான் நமது நாட்டில் பூமியை தாயாக வர்ணிப்பதையும் பார்க்கிறோம். நம் மேல் எவ்வளவு அக்கறை இருந்தால் இறைவனானவன் இத்தகைய ஏற்பாட்டுகளை நமக்காக செய்திருக்க முடியும் என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? இதுவும் இறைவனின் விந்தைகளில் ஒன்றல்லவா?

ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணையே கருணை.

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

No comments: