Followers

Saturday, October 18, 2014

வஹாபியத்தால் தமிழகத்தின் அமைதி கெடுகிறதா?

திரு க்ருஷ்ணகுமார்!

//நான் சொல்ல வந்ததெல்லாம் சங்க நூற்கள் தமிழர் தம் வாழ்விடங்களை ஐவகை நிலங்களாகப் பிரித்து அந்த ஐவகை நிலங்களில் ஐந்து கடவுட்களை வழிபட்டதைப் பகிர்ந்தது.//

அடடா... நான் இதனை மறுக்கவில்லையே! ஐந்து நிலங்களையுடைய மக்கள் தங்கள் கற்பனைக்கு ஒப்ப பல தெய்வங்களை வணங்கியுள்ளனர். அதே நேரம் ஏக தெய்வ கொள்கையும் அதே தமிழர்களிடத்தில் இருந்துள்ளது. ஏக தெய்வ கொள்கைக்கு மாறுமாறு சித்தர்கள் தமிழர்களை கேட்டுக் கொள்வதாக வரும் பாடல்களை நான் முதலிலேயே கொடுத்துள்ளேன். திருவள்ளுவரும் பல இடங்களில் ஏக தெய்வ கொள்கையை பறை சாற்றுகிறார். திரு மூலர் அருளிய திருமந்திரத்திலும் ஏக தெய்வ கொள்கை விரவிக் கிடக்கிறது.

குர்ஆனில் என்னதான் ஏக தெய்வ கொள்கையையை பறை சாற்றினாலும் ஒரு சிலர் தர்காக்களில் வீழ்ந்து கிடப்பது போல் தமிழ் இந்துக்களிடமும் பல தெய்வ கொள்கை புகுத்தப்பட்டது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களிலும் உபநிஷத்களிலும் ஏக தெய்வ கொள்கை பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. வேறு சில இலக்கியங்களில் பல தெய்வ கொள்கையும் வருகிறது. இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். தர்ஹாக்கள் எவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்டு சில முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறதோ அதுபோலவே இந்துக்களில் பல தெய்வ கொள்கையும் மனிதர்கள் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கிக் கொண்டனர் என்பதே எனது வாதம். இந்துக்களிலும் ,முஸ்லிம்களிலும் இந்த தவறு நிறையவே நடந்துள்ளது. அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம்.

//தமிழர் தம் வாழ்வியலின் முக்யமான கூறு பன்மை. ஆப்ரஹாமியத்தின் அரக்கக்கோட்பாடு (இறைக்கோட்பாடு) போதிக்கும் அசிங்கம் மிரட்டும் ஒருமை. அதை நெகிழ்த்தும் தன்மையதானதே தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள். மாற்று மதத்தவருடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கமாக வாழ விழையும் ஒரு கோட்பாடு தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள்.//

வஹாபியம் தமிழகத்தில் தலை எடுத்த பிறகுதான் பல நல்ல காரியங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

1. இன்று தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரத்ததானம் செய்வதில் முதலிடத்தில் இருப்பது 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பே. இதன் மூலம் பல இந்துக்களும் கிறித்தவர்களும் பலனடைகிறார்கள். இலவசமாக அவர்களுக்கு இரத்தம் போய் சேருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது ஒவ்வாரு சுதந்திர தினத்தன்றும், ஹஜ் நேரங்களிலும் இதே அமைப்பு வளைகுடாக்களிலும் 'இரத்ததான முகாம் நடத்துகிறது' ரியாத்தில் பல வருடங்களாக இந்த அமைப்பு அரசிடமிருந்து விருதுகளை பெற்று வருகிறது. தமிழனின் பெருமையை கடல் கடந்தும் கொண்டு செல்வது நீங்கள் வெறுக்கும் வஹாபியர்களே!

2. தமிழகமெங்கும் இலவச ஆம்புலன்ஸ் வசதிகளை 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற இந்த வஹாபிய அமைப்பு ஏற்படுத்தி இந்து கிறத்தவ அன்பர்களுக்கும் இலவச சேவையை செய்து வருகிறது.

3. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தி இந்துக்களை கேள்வி கேட்க வைத்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்ததும் இதே வஹாபிய இயக்கம்தான்.

4. சென்ற மாதம் பில்லி சூன்யம் என்பது வெறும் ஏமாற்று வேலை என்பதை நிரூபிக்க இந்த அமைப்பின் நிறுவனர் பி.ஜெய்னுல்லாபுதீன் தனது உயிரையே பணயமாக வைத்து 'தனக்கு யாரும் பில்லி சூன்யம் வைத்து அதில் வெற்றியடைந்து விட்டால் அவருக்கு பரிசு 50 லட்சம் என்று அறிவிப்பு செய்து ஒரு சூன்யக்காரரோடு ஒப்பந்தமும் இட்டு இன்று சூன்யம் பொய் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. முஸ்லிம்களை விட இந்துக்களே பில்லி சூன்யம் உண்மை என்று நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருந்தார்க்ள. அவர்கள் அனைவரும் 'சூன்யம் என்பது பொய்' என்பதை விளங்கிக் கொண்டு இன்று நேர் வழிக்கு வந்துள்ளதும் இதே வஹாபிய அமைப்பினால்தான்.

5. இந்த மாதத்தை 'தீவிரவாத எதிர்ப்பு மாதமாக' அனுசரித்து தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதும் இதே வஹாபிய அமைப்புதான்.

தமிழகத்தில் வஹாபியம் வேரூன்றிய பிறகுதான் இந்து முஸ்லிம் கலவரங்களே இல்லாமல் போனது. தமிழகம் என்றுமே அமைதிப் பூங்காவாக திகழும். அதற்கு ஏக இறைவனை மட்டுமே வணங்கும் நாங்கள் என்றுமே உறுதுணையாக இருப்போம்.

1 comment:

Dr.Anburaj said...

ஏக இறைவழிபாடு இந்தியாவிற்கு நன்கு தொிந்த விசயம்தான்.அது அரேபியாவில் இருந்து வரவேண்டியதில்லை