கீழே படத்திலுள்ள மரம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எம்பெருமானார்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைப்பாறிய மரம்.
இந்த மரத்தைச் சுற்றிலும் பல மைல்களுக்கு அப்பாலும் ஒரு மரமும் இல்லை. ஆனால்
இந்த மரம் இன்று வரை நின்று நிலைத்திருப்பது அதிசயமன்றோ...!
இந்த மரம் ஜோர்தானில் உள்ளது. ஜோர்தான் தலைநகரம் அம்மான் நகருக்கு வெளியே
இரண்டு மணி நேர தூரத்தில் இந்த மரம் அமைந்துள்ளது. மக்காவுக்கும் ஷாமுக்கும் இடையே
இருந்த சாலை இந்த மரத்திற்கு அருகில் சென்றிருக்கிறது. இந்த மரத்தைச் சுற்றி ஓர்
அதிசய வரலாறு இருக்கிறது.
மக்காவிலிருந்து ஷாமுக்குச் சென்ற வணிகக் குழுவில் பெரிய தந்தை அபூதாலிபுடன்
சிறுவராக இருந்த நபிகளாரும் சென்றார்கள். அவர்கள் வழியில் இளைப்பாறுவதற்குத்
தங்கிய ‘புஸ்ரா’ என்ற
இடத்தில்தான் இந்த மரம் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது.
இறைத்தூதர் ஒருவர் கூடிய விரைவில் அரபுப் பகுதியிலிருந்த வருவார் என்று தங்கள்
வேதம் மூலம் அறிந்து எதிர்பார்த்திருந்த ஷாம் நாட்டுக் கிறித்தவப் பாதிரிகள் இந்த
அரபு வணிகப் பாதையில் தங்கள் மடங்களை அமைத்து வருவோர் போவோரைக் கவனித்து வந்தனர்.
பழைய ஏற்பாட்டை மட்டும் பின்பற்றி வாழ்ந்த இவர்கள் தவ்ராத்திலும் இன்ஜீலிலும்
கூறப்பட்ட இறுதி நபி வருகை பற்றிய தகவல்களில் முழு நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஒவ்வொரு கூட்டத்தினரையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த பாதிரி பஹீரா, அபூதாலிபின்
வணிகக் குழு வந்தபொழுது அவர்களையும் கவனித்தார்.
அவர்கள் இளைப்பாறிய மரத்துக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த
அற்புதத்தைக் கண்டார் பஹீரா. உடனே அவர்களில் ஒவ்வொருவர் பற்றியும் அறிந்துகொள்ள
அவர்களை மனமுவந்து விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு வந்த மக்கத்து வணிகர்களை
வரவேற்று, “அனைவரும் வந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
தாங்கள் அனைவரும் வந்துவிட்டதாகவும் தங்கள் பொருட்களையும் வாகனப்
பிராணிகளையும் கவனித்துக்கொள்வதற்காக சிறுவர் ஒருவரை மட்டும் மரத்தடியில் விட்டு
வந்ததாகவும் கூறினர் மக்காவாசிகள். “அவரையும் அழைத்து வாருங்கள்” என்றார்
பாதிரியார்.
சிறுவர் முஹம்மத் வந்தவுடன் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் பஹீரா. “மகனே! நான்
சில கேள்விகள் கேட்பேன். லாத்து, உஸ்ஸாவின் மேல் ஆணையாக, நீ அவற்றுக்கு
மறுமொழி கூறவேண்டும்” என்றார்.
பஹீரா இப்படிப் பேசி முடிப்பதற்குள் சிறுவர் முஹம்மதின் முகம் சிவந்தது. “லாத்து, உஸ்ஸாவின்
மேல் ஆணையிட்டு என்னிடம் கேட்காதீர்கள். எனக்குச் சினமூட்டுபவை இவற்றைவிட வேறு
ஒன்றுமில்லை” என்று
உறுதிபடக் கூறினார் உத்தம நபி சிறுவர்.
பதிலில் திருப்தியடைந்த பஹீரா, “அப்படியானால்
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மறுமொழி கூறுவீரா?” என்றார். “கேளுங்கள்” என்றார்
சிறுவர் முஹம்மத்.
அதன்படி, சிறுவரின்
நடையுடைகள், ஊணுறக்கம்
பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டார் பாதிரி. பின்னர் சிறுவரின் மேலாடையை நீக்கிக்
காட்டுமாறு கூறினார். சிறுவரது இரு தோள் புஜங்களுக்கிடையில் புறா முட்டை அளவுக்கு
ஒரு தடித்த பகுதியைக் கண்டார். உடன் தன்னிடமிருந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்து, அது இறுதி
நபித்துவ முத்திரைதான் என்று உறுதி செய்தார்.
உணவுண்ட மகிழ்ச்சியில் உரையாடிக்கொண்டிருந்த மக்காவாசிளைப் பார்த்து பஹீரா
கேட்டார்: “இச்சிறுவர்
யாருடைய கண்காணிப்பில் இருக்கிறார்?”
அபூதாலிப் தன் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறியவுடன், “இச்சிறுவர்
உமக்கு என்ன உறவுமுறையானவர்?” என்று கேட்டார் பஹீரா. “என் மகன்” என்றார்
அபூதாலிப். “மகனா? கண்டிப்பாக
இருக்க முடியாது. இவர் பிறப்பதற்கு முன்பே இவருடைய தந்தை இறந்திருக்கவேண்டுமே!” என்றார்
பஹீரா.
“உண்மைதான்.
நான் இவருடைய தந்தையின் உடன்பிறப்பாவேன். நான்தான் இவரை வளர்த்து வருகிறேன்” என்றார்
அபூதாலிப். உடனே பஹீரா அபூதாலிபிடம் கூறினார்: “உம்முடைய சகோதரர் மகனை உடனே மக்காவுக்குத்
திருப்பியனுப்பி விடுங்கள். இவர்தான் வேதங்களில் கூறப்பட்ட இறுதித்தூதர் என்பதை
ஷாமில் உள்ள யூதர்கள் அறிந்தால், இவருக்கு அவர்கள் மூலம் ஏதேனும் தீங்கு
நேரிடும்!”
பஹீராவின் அறிவுரையைக் கேட்டபின், தக்க துணையுடன் சிறுவர் முஹம்மதை
மக்காவுக்குத் திருப்பியனுப்பினார் அபூதாலிப்.
ஆதாரம்: அதிரை அஹ்மத் அவர்களின் “நபி (ஸல்) வரலாறு” (இலக்கியச்சோலை
வெளியீடு)
தனிப்பட்ட மரம் என்று இதற்கு புனிதத் தன்மை எதுவும் கிடையாது என்றாலும் வரலாற்று
பின்னணியை தெரிந்து கொள்வதற்காக இதனை பகிர்கிறேன்.
No comments:
Post a Comment