பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!
பிரியாணி... பிரியாணி.. பிரியாணி என முகநூலே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற உறுதி செய்யப்படாத வதந்தி பற்றியோ,
நம்முடைய நாட்டின் தேசிய உணவாக எழுச்சி பெற்று,
ஸ்விக்கி (ஸோமோட்டோ?) நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட எழுச்சி உணவாக பிரியாணி நிமிர்ந்து நிற்பதைப் பற்றியோ,
ஒரு அண்டா பிரியாணிக்காக ஊரையே சூறையாடி, கடைகளைக் கொள்ளையடித்து,
மாநகரத்தையே பீதியிலும் பதற்றத்திலும் உறைய வைத்த கோவை மாநகர காமெடி வில்லன்களைப் பற்றியோ நான் இங்கு சொல்லப் போவதில்லை.
பிரியாணி சாப்பிட்டதால் சத்திய இஸ்லாத்தை ஏற்ற ஒரு பிரிட்டிஷ்காரரைப் பற்றிச் சொல்லத்தான் இந்தப் பதிவு.
அவருடைய பெயர் டேவிட் ஆன்ஸன்
(David Ansen). 1920களில்
இந்தியத் துணைக் கண்டத்தையே கிலாஃபத் இயக்கம் உலுக்கிக் கொண்டிருந்த நாள்களில்
டெய்லி மிரர் என்கிற நாளிதழின் நிருபராக பம்பாயில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
அந்த வேளையில் பம்பாயில்
கிலாஃபத் இயக்கம் தொடர்பாக முஸ்லிம் வணிகர்களின் எழுச்சி மாநாடு நடக்கின்றது.
மாநாட்டுக்காக வந்திருந்த முக்கியப் பிரமுகர்களுக்காக ஹுஸைன் சோட்டானி என்பவர்
சிறப்பு விருந்து அளிக்கின்றார். இந்த விருந்தில் டேவிட்டும்
கலந்துக்கொள்கின்றார்.
அந்த விருந்தில் தான் தனது வாழ் நாளில்
முதன்முறையாக பிரியாணியைச் சுவைக்கிறார், டேவிட் ஆன்ஸன்.
மணிமணியான பாஸ்மதி அரிசி, மிதமான சூட்டில் பதமாக வெந்த
இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றுடன் கமகமவென்று மணக்க, மணக்க இருந்த பிரியாணி அந்த ஆங்கிலேயரின் இதயத்தை கொள்ளை
கொண்டது.
உடனே இஸ்லாத்தை ஏற்று
முஸ்லிமாக மாறி விட்டார். மாற்றத்துக்கான காரணம் வினவப்பட்ட போது அந்த ஆங்கிலேயர்
சொன்னார்: ‘உடலுக்கு சக்தி அளிக்கின்ற உணவே இத்துணை ருசியாக, நேர்த்தியாக, உயர்வானதாக இருக்கிறது எனில்
இவர்களின் ஆன்மாவுக்கு ஊட்டம் அளிக்கின்ற மார்க்கம் எந்தளவுக்கு மகத்தானதாக
இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்’.
டேவிட் ஆன்ஸன் தாவூத் ஆன்ஸனாகி
விட்டார். டெய்லி மிரர் நாளிதழிலிருந்து விலகி விட்டார். ‘தி முஸ்லிம் அவுட்லுக்’ (The Muslim Outlook)
என்கிற நாளிதழின் பொறுப்பை
ஏற்றார். 1941-இல் இறக்கின்ற வரை அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார்.
அல்லாமா இக்பால் இந்த
நிகழ்வைப் பதிவு செய்திருக்கின்றார். ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதி சென்னை
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் ஐஎஃப்டி வெளியிட்டிருக்கின்ற ‘அழைப்பியல் சிந்தனைகள்’
என்கிற நூலில் இது பற்றிய விவரங்கள் இருக்கின்றன.
டெய்ல் பீஸ் : இன்றும்
தமிழகமெங்கும் அண்டா அண்டாவாக பிரியாணி சமைக்கப்படுகின்றது. பிளேட் பிளேட்களாய்
பிரியாணி கோடிக்கணக்கான மக்களால் தின்று தீர்க்கப்படுகின்றது. ஆனால் டேவிட்
ஆன்ஸனைப் போன்று யோசிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்?
No comments:
Post a Comment