Followers

Sunday, December 14, 2008

யார் இந்த அஃப்ஸல்?

இன்று சிவசேனைக் கட்சியைச் சார்ந்த சிலர் அஃப்சல் குருவின் உருவத்தை தூக்கில் தொங்க விட்டு ஆக்ரோஷமாக அடிக்கவும் செய்தனர். இன்று கூட ஒரு அனானி அஃப்சல் குருவை பற்றிய எனது அபிப்ராயத்தையும் கேட்டிருந்தார். இவற்றுக்கெல்லாம் பதிலாக நான் ஒரு வருடம் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,
Terror Over Democracy By Nirmalangshu Mukherji:
A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.

அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.

அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.

இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.

இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

-நிர்மலாங்ஷூ முகர்ஜி
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழு
Terror Over Democracy

Kashmir

கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை.

காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார்.

-Indian Express. Pune.
29-04-2006

'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'

-The Hindu
2-5-2006

கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.

ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.

ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.

இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.

5 comments:

suvanappiriyan said...

பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.

முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)

அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.

மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம்.

Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret
8:18 AM

Anonymous said...

If that is your opinion then why do the muslim organizations in Tamilnadu say that hanging Afzal Guru is not the mark of a great civilization?

Why do they appose hanging that bastard in the name of human rights?

suvanappiriyan said...

அனானி!

பதிவை படித்தீர்கள் என்றால் உண்மை உங்களுக்கு விளங்கும்.

Anonymous said...

சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தங்களுக்கு உரியதைவிட இந்தத் தேசத்தில் அதிக பங்கு கோர முடியாது."-ithu ponseka sonnathu. மொத்தத்தில் இநதியசுதந்திர போரில் மஹாத்மா காந்திக்கு இந்த அப்சல் குரு கூட இருந்து வந்தார் என்கிறீர்கள் ...நன்றி =ithu naan solvathu

suvanappiriyan said...

2006 டிசம்பரில் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு சாகசம் செய்து இரண்டு அல்பத்ர் தீவிரவாதிகளைப் பிடித்தோம் என்று கூறியது. முஹம்மது முஃரிப் கமர், இர்ஷாத் அலி ஆகியோர்தான் அந்த இரு தீவிரவாதிகள். இவர்கள் நிரபராதிகள் என்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆரம்ப விசாரணை அறிக்கை கூறுகிறது.

போலீஸின் உளவாளிகளாக வேலை செய்து வந்த இருவரும் தொடர்ந்து அப்பணியைச் செய்ய மறுத்ததினால் போலீஸ் இவர்களைப் பொய் வழக்கில் சிக்க வைத்தது என்று சி.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் கைப்பற்றப்பட்டதாக வந்த செய்தியும் போலீஸால் ஜோடிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது போல் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ கேஸ்களில் அப்பாவிகள் கைதாகி தண்டணை அனுபவிப்பது தொடர்கதையாகி வருகிறது.