எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து மரங்களின் மீதும் செடி கொடிகளின் மீதும ஒரு அலாதி பிரியம். மரங்கள் அடர்ந்த தோப்புகளில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, நண்பர்களோடு கலந்துரையாட அதிகம் பசுமையான இடங்களையே நாடுவது என்று இனம் புரியாத ஒரு பற்று இந்த ஜீவன்களின் மேல்.
போன முறை தமிழகம் சென்றிருந்தபோது வீட்டுக்கு பின்பக்கம் 100 அடி நீளத்தில் 80 அடி அகலத்தில் இருக்கும் கொல்லையை பார்வையிட்டேன்.கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருக்கும் போது இடம் காடாக மண்டிக் கிடந்ததை நோட்டமிட்டேன். இரண்டு கூலி ஆட்களை கூப்பிட்டு வந்து கொல்லையை சுத்தமாக செதுக்கி களைகளை எல்லாம் தூரமாக்கி மரக்கன்றுகளை நட எவ்வளவு கேட்பீர்கள் என்று கேட்டேன். 'பெரிய கொல்லையாக இருப்பதால் வேலையும் அதிகம். 1000 ரூபாய் கொடுங்கள்' என்று கேட்டனர். பேரம் பேசி 800க்கு ஒத்துக் கொண்டாலும் இன்று வருகிறேன் நாளை வருகிறேன் என்று நாட்களை கடத்தினார்கள். கலைஞரின் '100நாள் வேலை', கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற பல இலவச திட்டங்கள் உழைக்கும் மக்களையும் சோம்பேறி ஆக்கி விட்டது. இவர்களை நம்பினால் கதை நடக்காது என்று நானே களத்தில் இறங்கி விட்டேன். தினமும் காலைத் தொழுகை முடிந்தவுடன் இரண்டு மணி நேரம் கொல்லையின் பக்கம் எனது பார்வை திரும்பியது. 'சோனி பிளே ஸ்டேஷன் வேண்டும்' என்று கேட்டிருந்த என் மகனிடம் 'தினமும் எனக்கு உதவியாக கொல்லையில் நில்; வேலை முடிந்தவுடன் வாங்கித் தருகிறேன்' என்று நான் சொன்னேன். கோடை விடுமுறையாதலால் அவனும் ஒத்துக் கொண்டான். இருவரும் தினமும் இரண்டு மணி நேரம் கொல்லையில் செலவழித்தோம்.. மௌசையும், கீபோர்டையும் பிடித்தே பழக்கப்பட்ட என் கைகளுக்கு மம்முட்டியும், கோடாளியும், கடப்பாரையும், அரிவாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
என் தாய்க்கு பேரனை வேலை வாங்குவது பிடிக்கவில்லை. ஆனால் என் மகனுக்கோ ஞாபகம் முழுவதும் பிளே ஸ்டேஷனிலேயே இருந்ததால் ஆர்வமாக கொல்லை வேலைகளை செய்தான். கொல்லை வேலைகளை முடித்து விட்டு குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட உட்கார்ந்தால் ஆஹா என்ன ருசி... என்ன ருசி.... என்றும் இல்லாத ருசி உடலை வருத்தியதால் கிடைத்தது. இறைவன் இயற்கையாகவே உடல் உழைப்பில் இந்த உடலுக்கு ஒரு சுகாதாரத்தை வைத்திருக்கிறான். ஒரு சிரமத்துக்கு பிறகு ஒரு இன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான். அதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் உணர்ந்தேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
15 நாளில் அனைத்து வேலைகளும் முடிந்து 40 தேக்கு மரங்களையும்;, 10 ரோஸ்உட் மரங்களையும் அருகில் உள்ள நர்சரியிலிருந்து வாங்கி நட ஆரம்பித்தோம். அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் இது நம் கொல்லைதானா என்று என்னையே ஆச்சிரியபட வைத்தது. இந்த முறை நான் தமிழகம் சென்ற போது அந்த மரங்களில் ஐந்து பட்டுபோய் பாக்கி அனைத்தும் சீராக வளர்ந்து கொண்டிருந்தது. நம் கைகளால் நட்ட அந்த மரங்கள் வளர்ந்து பெரிதாகி நிற்பதை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.
இப்படி மகிழ்ச்சியோடு நாம் பார்க்ககும் வேளையில் ஊருக்கு வெளியே பல விளை நிலங்கள் தோப்புகள் மனைகளாவும் தொழிற்சாலைகளாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாகவும் உருமாறிக் கொண்டிருப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டு செல்வேன். எத்தனையோ தரிசு நிலங்கள் கட்டாந்தரையாக கேட்பாறற்று கிடக்கிறது. அங்கெல்லாம் மனைகளையும் கட்டிடங்களையும் கட்டக் கூடாதா? அரசாங்கம் இதற்க்கெல்லாம் தடை போடக் கூடாதா? என்றெல்லாம் நான் சிந்திப்பதுண்டு.
ஒரே இடத்தில் குழுவாக வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு நம் பெரும்பான்மையோரிடத்தில் இருப்பதும் இதற்கு அடிப்படை காரணம். இந்த எண்ணம் நம்மிடமிருந்து மாற வேண்டும்.
நான் வந்த புதிதில் சவுதியில் எங்கு பார்த்தாலும் பாலைவனங்களாகத்தான் தெரியும். இந்தியா,பாகிஸ்தான்,சைனா போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக மண்ணை கொண்டு வந்து பாலைவனத்தில் கொட்டுகிறார்கள். மணல் களிமண்ணாக மாற்றப்பட்டு உரங்களும் தரப்பட்டு பாலைவனம் சோலைவனமாக்கப்பட்டிருக்கிறது. கோதுமை,பேரித்தம் பழம் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்கிறது சவுதி. ஒரு ஃபார்மை பார்த்து வர பெருநாள் விடுமுறையில் சென்றிருந்தோம். எத்தனை கனிகள: எத்தனை காய்கறிகள்! நான் இந்தியாவில் பார்க்காத பழங்களெல்லாம் இங்கு பார்த்து ஆச்சரியப்பட்டேன். அல்கசீம், தபூக் போன்ற ஏரியாக்களில் எல்லாம் எங்கு திரும்பினாலும் பசுமைதான்.
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் எனது மாவட்டத்தையும் இங்கு நினைத்துப் பார்க்கிறேன். முன்பு 15 அடியில் தண்ணீர் வரும் இன்றோ 35 அடி வரை போனாலும் தண்ணீரை இழுக்க மோட்டார் சிரமப்படுகிறது. மரங்கள் இருந்தால்தானே மழை பெய்யும், மழை பெய்தால்தானே தண்ணீர் தேங்கும். இனி காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு நம் மாநிலம் வந்தாலும் ஆச்சியப்படுவதற்க்கில்லை.
76 வயது அய்யாசாமி என்ற முதியவரை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சுமார் 3000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் இந்த முதியவர். இவருக்கு முதியோர் உதவித் தொகை கூட ஒழுங்காக அரசாங்கத்தால் தரப்படுவதில்லையாம். சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையில் இவரை அழைத்து 'மரங்களின் தந்தை' என்ற பட்டத்தையும் அளித்து கௌரவித்தார்கள். விழாவின் முகப்பில் இவரது பெரிய புகைப்படம் வைத்து இவரின் கருத்தக்களையும் புத்தகமாக வெளியிட்டிருந்தார்கள். அவர் பேசும்பொது 'என்னடா..இந்த மனுஷன் நாளும் பொழுதும் இந்த மரங்களையே கட்டிகிட்டு அழுவுறானே' என்று சொன்ன என் மனைவி கூட இப்ப ரொம்ப சந்தோஷப்படறா.காலங்கடந்தாலும் நான் செஞ்ச காரியத்துக்கு நல்ல பலன் கிடைச்சுருக்கு. பலருக்கும் மரங்கள வளர்க்கனும்கிற எண்ணம் ஏற்ப்பட்டிருப்பதை பார்த்து மனசுக்கு நிறைவா இருக்கு' என்று நெகிழ்ந்தார். விழாவுக்கு வந்தோம். கொடுத்ததை வாங்கிச் சென்றோம் என்று இல்லாமல், தன்னோடு பை நிறைய கொண்டு வந்திருந்த மரங்களின் விதைகளை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவரிடமும் தானே வலியச் சென்று கொடுத்து 'உங்கள் பகுதியில் விதையுங்கள்' என்று சொன்னது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
ஏதோ வந்தோமா... படித்தோமா... என்று மட்டும் போகாமல் படிக்கும் ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நடுவோம் என்ற உறுதியை எடுப்போம். நம்முடைய இடங்களில் காலியாக இருக்கும் அனைத்து இடங்களையும் சீராக்கி மரங்களை நடுவோம். மழையை கொண்டு வருவோம். சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்போம். அப்படியே மறக்காமல் பின்னூட்டமும் இடுவோம்
12 comments:
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..கன்டிப்பா மரக் கன்றுகளை நடுவோம்..
வேடந்தாங்கல் கருன்!
//அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..கன்டிப்பா மரக் கன்றுகளை நடுவோம்.//.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மரக் கன்றுகளை நடுவதற்கும் நன்றி நண்பரே!
எனது எண்ணங்களை பிரதிபலிப்பது போல் இருந்தது உங்கள் பதிவு. மிக அருமை
மாஷா அல்லாஹ்!! இது மாதிரி நிகழ்வுகள் அறியும்போது மனம் மகிழ்கின்றது.
பொதுவாகவே இஸ்லாமியர்கள் என்றால் மார்க்க விஷயங்கள் குறித்தே அதிகம் அறிந்திருக்கவும் பேசவும் செய்கிறார்கள். இது அதிக அவசியமானது. எனினும், சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் தவிர்ப்பு, தண்ணீர் சிக்கனம், ஆரோக்கிய உணவு, அளவான எடை போன்றவை குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது. இறைவன் தந்த செல்வங்களில் இவையும் சேர்த்திதானே? இவற்றையும் முறையாகப் பயன்படுத்தி, சேமிப்பதும் முஸ்லிம்களின்மீது கடமை என்பதை அறிந்திருக்கவேண்டும்.
இதுபோன்ற பதிவுகளும் எழுதவேண்டும் நாம், இன்ஷா அல்லாஹ்.
//எனது எண்ணங்களை பிரதிபலிப்பது போல் இருந்தது உங்கள் பதிவு. மிக அருமை//
புதுக்குடி என்ற பெயர் பொதக்குடியாக மருவி இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் ஊரில் இந்த பெயரில் பல குடும்பங்கள் இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பொதக்குடியான் அவர்களே!
ஹூசைனம்மா!
//எனினும், சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் தவிர்ப்பு, தண்ணீர் சிக்கனம், ஆரோக்கிய உணவு, அளவான எடை போன்றவை குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது. இறைவன் தந்த செல்வங்களில் இவையும் சேர்த்திதானே?//
கண்டிப்பாக! உடல் ஆரோக்கியத்தில் நம்மவர்கள் அதிகம் அக்கறை காட்டுவதில்லை. தொழுகையே ஒரு சிறந்த உடற்பயிற்சி. தக்க உடல் உழைப்பு இல்லாததால் நமது சகோதர சகோதரிகளில் பலர் 40 வயதுக்கு மேல் மருத்துவமனையே கதி என்று கிடக்கிறார்கள். உடல் எடையை எக்காரணம் கொண்டும் கூட விடாமல் பார்த்துக் கொண்டு தினமும் அரை மணிநேரம், ஒருமணி நேரம் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சுவனப்பிரியன்.
மிக அவசியமான ஒரு பதிவு. பாலைவனத்தில் துவண்டால்தான் மரத்தின் அருமை புரியும். இதை நாம் உணர்ந்தது மரம் வளர்க்க ஆர்வம் கொல்ல வேண்டும்.
ஆத்ம திருப்திக்காக நான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் என்றால் அது எனக்கு... "நாம் ஒருவர் நமக்கு நால்வர்--We want more & more Green" என்ற பதிவுதான்..!
அது எப்போதுமே முகப்பில் இருக்கும்படியும்... தளத்தையே பச்சையத்தின் பின்னணியிலும், மரங்கள் அடர்ந்த கிராமிய பட தலைப்பும்...
நாம் ஒவ்வொருவரும் இனி நான்கு மரமாவது வளர்க்க வேண்டும் என்றால்... நீங்கள் பத்து என்று ஏற்றி விட்டீர்களே...! ஓகே. ஓகே. இதில் அதிகம் எல்லாமே நன்மைதானே..!
கொல்லை வேலைகளை முடித்து விட்டு குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட உட்கார்ந்தால் ஆஹா என்ன ருசி... என்ன ருசி.... என்றும் இல்லாத ருசி உடலை வருத்தியதால் கிடைத்தது.
உண்மையிலேயே அது தான் அருமையான ருசி.
நல்ல பதிவு.
வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!
//அது எப்போதுமே முகப்பில் இருக்கும்படியும்... தளத்தையே பச்சையத்தின் பின்னணியிலும், மரங்கள் அடர்ந்த கிராமிய பட தலைப்பும்...//
நல்ல எணணங்கள். பலருக்கும் இது போன்ற எண்ணங்கள் ஏற்படவே இப்பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//உண்மையிலேயே அது தான் அருமையான ருசி.
நல்ல பதிவு.//
முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ. பலினோ!
அய்யாசாமி இறந்துவிட்டார்
http://www.erodekathir.com/2011/03/3000.html
கதிர்!
வருத்தமான செய்தி. வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
Post a Comment