Followers

Monday, March 28, 2011

குழந்தைகளின் விடுமுறை நெருங்கி விட்டது!


குழந்தைகளை பெற்று மூன்று வயது ஆரம்பிக்கு முன்னரே அவர்களை எந்த கான்வென்டில் சேர்க்கலாம் என்று திட்டம் போட்டு அவர்களை பள்ளிகளில் சேர்க்கிறோம். இங்கு ஆரம்பிக்கும் திட்டமிடல் அவர்களின் கல்லூரி படிப்பு வரை பெற்றோர்களால் தொடரப்படுகிறது. நல்ல முயற்சிதான். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சில நேரங்களில் அளவுக்கதிகமாக அவர்களை படி படி என்று கசக்கிப் பிழிவதால் மனச் சிதைவுக்கு சில குழந்தைகள் ஆளாகி விடுகின்றனர். 9 மணியிலிருந்து 5 மணி வரை பள்ளி. பிறகு ஆறிலிருந்து 10 வரை ஹோம் வொர்க். காலையில் 6 லிருந்து 8 மணி வரை படிப்பு படிப்பு என்று அந்த பிள்ளைகளை ஒரு மெஷின் வாழ்க்கைக்கு கொண்டு வந்து விட்டோம்.

தன் குழந்தை டாக்டராக வேண்டும்: தன் குழந்தை இன்ஜினியராக வேண்டும் என்ற கனவில் அதைப்படி இதைப்படி என்று அவர்களை கசக்கிப் பிழிகின்றனர். குழந்தை எதை விரும்புகிறது என்பதை பல பேர் சிந்திப்பதில்லை. பெற்றோர்கள் கொடுக்கும் மன அழுத்தத்தினால் பிள்ளைகளில் சிலர் பரீட்சை முடிவுகளைப் பார்த்து தற்கொலை வரை கூட சென்று விடுகின்றனர்.

நமது தலைநகர் டெல்லியில் போராட்டம் ஒன்றில் குழந்தைகள் பதாகைகளை ஏந்திய வண்ணம் நிற்ப்பதைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.

'பெற்றோர்களே! எங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க விடுங்கள். உங்கள் பேராசையை எங்கள் மீது திணிக்காதீர்கள்'

என்று குழந்தைகள் சொல்லுமளவுக்குத்தான் சில பெற்றோர்களின் நடவடிக்கை இருக்கிறது.

எனது உடற்பயிற்சி ஆசிரியரின் மகன் ரமேஷ் படிக்க விரும்பியது ஆர்ட்ஸ் குரூப். ஆனால் ஆசிரியர் தன் மகனுக்கு தேர்ந்தெடுத்த துறையோ பாலி டெக்னிக். தகப்பனை எதிர்த்துப் பேசவும் ரமேஷூக்கு பயம். முடிவில் மன சிதைவுக்கு ஆளாகி தற்கொலையும் செய்து கொண்டார். எங்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சி. விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்கிய அந்த பள்ளித் தோழன் இளம் வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டது துரதிஷ்ட வசமானது. எனது ஆசிரியரும் ஒரே பையனை பறி கொடுத்த துக்கத்தில் தாடியோடு எந்த நேரமும் சோகமாகவே இருப்பார். பையனின் விருப்பத்தில் தகப்பன் தலையிடாமல் இருந்திருந்தால் இன்று ரமேஷ் உயிரோடு இருந்திருப்பார் அல்லவா!

இதைத் தடுப்பது எப்படி?

பிள்ளைகளின் மனங்களை சிறை பிடித்து பெற்றோர்கள் தங்களின் எண்ணங்களை திணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் அறிவுத் திறன், அவர்கள் ஆர்வம் காட்டுவது எந்த துறைகளில் என்று கண்காணித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். இறுதி முடிவை அவர்களின் கைகளிலேயே தர வேண்டும்.

இன்னும் சில தந்தைகள் வீட்டை ஒரு சிறைச்சாலையைப் போல் வைத்திருப்பார்கள். தனக்கு குழந்தை பயப்பட வேண்டும். தன் சொல்லை மீறக் கூடாது என்பதால் சிறு வயது முதலே அவர்களை அடக்கி வைப்பதை பார்க்கிறோம். அடிமைகளை போல் நடத்தும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.

இன்னும் சில பெற்றோர்களோ

'இவன் எங்கே படித்து பட்டம் வாங்க போகிறான். இவன் மாடு மேய்க்கத்தான் லாயக்கு'


என்று சர்வ சாதாரணமாக பலர் முன்னிலையில் திட்டும் பல பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் திட்டினால் அவனுக்கு ரோஷம் வந்து ஒழுங்காக படிக்க ஆரம்பிப்பான் என்பது பெற்றோர்களின் எதிர்பார்பபு. ஆனால் மாறாக சில மாணவர்கள் விரக்தி வந்து படிப்பையே விட்டவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் என்று ஒன்று உண்டு என்பதை சில நேரம் நாம் மறந்து விடுகிறோம்.

விடுமுறை காலங்களில் குழந்தைகளை வெளியூர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லலாம். இது அவர்களின மனதிலே பல மாற்றங்களை உண்டு பண்ணும். எந்த நேரமும் படிப்பிலேயே நேரத்தைக் கழித்த அவர்களுக்கு இதெல்லாம் பல அறிவு சார்ந்த சிந்தனைகளை உண்டாக்கும்.

வள்ளுவர் மகன் தந்தை உறவு பற்றி சொல்லும் போது

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

என்கிறார். இந்த நிலை எப்பொழுது வரும். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவதின் மூலமாகவே வரும்.நம் குழந்தைகளை ஒரு நண்பனைப்போல் பாவிக்க வேண்டும். அதிகாரத்தினால் இத்தகைய நிலை ஏற்படாது.

இனி பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யும் கடமை பற்றி குர்ஆன் கூறுவதைக் கேட்போம்:

'உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே!அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு'

'அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!' என்று கேட்பீராக!'

-குர்ஆன் 17:23,24

ஒரு மகன் தனது பெற்றோருக்காக கேட்கும் பிரார்த்தனையே இது. சிறுவர்களாக இருந்தபோது நம் பெற்றோருக்கு எத்தனை சிரமங்களைக் கொடுத்திருப்போம். அதை எல்லாம் சகித்துக் கொண்டு எந்த அளவு பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொண்டார்களோ அது போல இறைவா! என் பெற்றொர்களுக்கு அதே போன்ற அன்பையும் பரிவையும் நீ செலுத்துவாயாக! என்று கேட்க வேண்டும் என பிள்ளைகளுக்கு கட்டளையிடுகிறது குர்ஆன்.

இனி தந்தை மகனுக்கு செய்ய வேண்டிய சில கடமைகளைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'அங்கத்தில் குறைகளற்ற குழந்தையை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'

-குர்ஆன் 7:189

நம்முடைய மூதாதயரான ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் செய்த பிரார்த்தனையே இது. இது போன்ற பிரார்த்தனையை நம்மில் எத்தனை பேர் செய்திருக்கிறோம். பிறக்கும் முன்பே பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் நாம் இது போன்ற பிரார்த்தனைகளை தவற விட்டு விடுகின்றோம்.

அடுத்து நபி லுக்மான் அவர்கள் தனது மகனுக்கு ஆற்றிய உபதேசங்களைப் பார்ப்போம்.

'என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு. நன்மையை ஏவு தீமையை தடு. உனக்கு ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள். அது உறுதி மிக்க காரியமாகும்.'

'மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் விரும்ப மாட்டான்.'

'நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைபிடி.உனது குரலைத் தாழ்த்திக் கொள். குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'

-குர்ஆன் 31:17

என்ன ஒரு அழகிய உபதேசம். இந்த உபதேசம் அவர் மகனுக்கு மட்டும் உரியதல்ல. இது உலக மக்கள் அனைவரும் தனது மகனிடம் மகளிடம் எதிர்பார்க்கும் செயல்களாகும். எனவேதான் இறைவன் இந்த உபதேசங்களை குர்ஆனிலே எடுத்துப் போடுகிறான்.

நபி லுக்மான் அவர்கள் எப்படிப்பட்ட குணங்களை தனது மகனிடம் எதிர்பார்த்தாரோ அது போன்ற மக்களை நம் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!

16 comments:

suvanappiriyan said...

சார்வாகன்!

//52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!.....

இறைவன் ஏன் இத்தனை சத்தியம் செய்ய வேண்டும்?.//

ஒருவர் சொல்லும் சொல்லில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால், அதை நிரூபிப்பதற்காக இரண்டு தரப்பும் நம்பும் ஒன்றின் மீது சத்தியம் செய்வது உலக இயல்பு. நாத்திகர்களான சார்வாகனும், தருமியும் கண்ணால் காணும் மலைகள்,இரவு,பகல்,சந்திரன்,கடல், போன்ற இன்ன பிறவும் எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் இறைவனின் இந்த வேதமும், இந்த வேதம் சொல்லக்கூடிய நிகழ்வுகளும் என்று இதன் மூலம் சொல்ல வருகிறான் இறைவன்.

தருமி!

//இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.//

அப்டின்னா என்னங்க..?

பின்னோக்கிச் செல்லுதல் என்றால் என்ன?

ஒரு மலையின் மீது ஏறுகிறோம். குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ஏற முடியாது என்ற நிலை வரும்போது ஏறிய வழியிலேயே பின்னோக்கி வருகிறோம். இதைத்தான் பின்னோக்கிச் செல்லுதல் என்கிறோம்.

சூரியனைச் சுற்றி நமது பூமி வருவதும் அதனால்தான் இரவு பகல் மாறி மாறி வருவதும் நமக்கு தெரியும். பூமியின் சுழற்ச்சியால் நமது இந்தியா 12 மணிநேரம் இரவால் மூடப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நமது நாடு சூரியன் உதிக்கும் இடத்துக்கு வருகிறது. இதன் மூலம் நமது நாட்டின் இரவு பின்னோக்கிச் சென்றதைக் காணலாம். எந்த திசையில் பூமி சுழன்று வந்ததோ அதே திசையிலேயே இந்தியா தொடர்ந்து முன்னேறிய போதும் இந்தியாவில் உள்ள இரவு பகுதி இந்தியா செல்லும் திசைக்கு நேர் எதிர் திசையில் பின் வாங்குவதைப் பார்க்கிறோம்.

இந்தியாவைப் பின் தொடர்ந்து பாகிஸ்தான் வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து பின்வாங்கிய இரவு பாகிஸ்தானுக்குச் செல்கிறது. ஆனால் சில வினாடிகளில் பாகிஸ்தானும் உதய எல்லைக்குள் நுழையத் தொடங்குகிறது. இப்பொழுது பாகிஸதானில் பின்வாங்கிய இரவு அடுத்து வரும் ஈரானைப் பின் வாங்கத் தொடங்குகிறது. இப்படியாக வரிசையாக ஒவ்வொரு நாடுகளாக சொல்லிக் கொண்டுப் போகலாம். சூரிய மையக் கோட்பாட்டை குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது.

இரவு என்பது பின்வாங்கும் இயல்பைக் கொண்டது என்ற இந்த உண்மை கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற அறிவியல் அறிஞர்களின் தற்கால கண்டுபிடிப்பை உணர்ந்தவர்களால்தான் சொல்ல முடியும். முகமது நபி ஒரு விஞ்ஞானியும் அல்ல. மேலே சொன்ன் அறிவியல் அறிஞர்கள் முகமது நபியை சந்திக்கவும் இல்லை. எனவே இந்த குர்ஆனின் வார்த்தை என்னையும் சார்வாகனையும் தருமியையும் படைத்த கர்த்தர், பிரம்மா, அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பது ஏக மனதாக தீர்மானிக்கப்படுகிறது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.சுவனப்பிரியன்,
ஆழமாக சிந்திக்க வேண்டிய பதிவு.
நிறைய வாழ்வியல் விஷயங்கள் இதில் உள்ளன. என் தந்தை மூலம் எனக்கு இது போன்று ஏற்படவில்லை என்பதால் இது பற்றிய ஒரு சிந்தனையே இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

தருமி said...

/இந்த குர்ஆனின் வார்த்தை என்னையும் சார்வாகனையும் தருமியையும் படைத்த கர்த்தர், பிரம்மா, அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பது ஏக மனதாக தீர்மானிக்கப்படுகிறது. //

ஏக மனதாக ...?????????

சக்தி கல்வி மையம் said...

Nice.,

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்!

//என் தந்தை மூலம் எனக்கு இது போன்று ஏற்படவில்லை என்பதால் இது பற்றிய ஒரு சிந்தனையே இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.//

என் தந்தையும் இது நாள் வரை ஒரு நண்பனைப் போல்தான் பழகியிருக்கிறார். அதே அணுகுமுறையைத்தான் என் பிள்ளைகளிடமும் நான் காட்டுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//Nice.,//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ. கருன்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//சூரிய மையக் கோட்பாட்டை குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது. //

68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

நூன் என்பது பூமியை சுமக்கும் ஒரு திமிங்கலம் ஆகும்.திமிங்கலத்தின் கீழ் ஒரு எருது பெயர் பஹாமத்,அதன் கீழ் ஒரு பாறை,பாறைக்கு கீழ் தூசி,அதற்கு கீழ் என்னவென்று அல்லா மட்டுமே அறிவார் என்று கூறுகிறார்.
இந்த இபின் அப்பாஸ் பல ஹதிதுகளை(நபி மொழிகள்) உரைத்தவர்.இவரின் குரான் விளக்கம் இன்றும் மதிக்கப் படும் ஒன்று.

இதுதான் குரான் கூறுவதாக இபின் அப்பாஸ் கூறும் சூரியக் குடும்ப அறிவியல் ஆகும்.//

நகைச்சுவையாக நிறைய எழுதுகிறீர்கள். சூரிய மையக் கோட்பாட்டை உறுதி செய்யும் குர்ஆன் வசனத்தை நான் சொன்னால் அதை மறுக்க அறிவியல் பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும். அதை விடுத்து இப்னு அப்பாஸ் என்ற கதையை விக்கிபீடியாவிலிருந்து எடுத்து தருகிறீர்கள். விக்கிபீடியாவில் வருவதெல்லாம் இஸ்லாமாகாது. விக்கி பீடியாவில் நீங்களும் நானும் கூட கருத்துக்களை பதியலாம். உங்களிடம் பதில் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். இது போன்ற தனிச் சொற்களுக்கு அரபு அகராதியில் அர்த்தம் கிடையாது. முகமது நபியும் அப்படி ஒரு அர்த்தத்தைக் கொடுக்கவில்லை. எனவே அனைத்து அரபு இலக்கியங்களையும் விஞ்சி நிற்க்கின்ற திருக்குர்ஆன்! தன்னைப் போல் எவராலும் உருவாக்க முடியாது என்று அறை கூவல் விடும் குர்ஆன் அவர்களின் வழிமுறையைக் கையாண்டே அறைக் கூவல் விடுக்கிறது.

தருமி!

//அல்லா ஏன் 23 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்?
சரியான ஒரு படிப்பாளி மூலம் அவ்வப்போது அந்த 28 ஆண்டுகளில் நேரடியாக எழுதியிருக்கும்படி வசனங்களை இறக்கியிருக்கலாமே!
சுவனத்தில் உள்ள மூல நூலின் நகலைக் கூட தந்து விட வேண்டியதுதானே.//

'முஹம்மதே! வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை இறக்க வேண்டும்' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோஸேயிடம் கேட்டுள்ளனர். 'இறைவனைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் காளைக் கன்றை கடவுளாக கற்பனைச் செய்தனர்'
-குர்ஆன் 4:153

'முஹம்மதே! காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் 'இது வெளிப்படையான சூன்யத்தைத் தவிர வேறு இல்லை' என்று ஏக இறைவனை மறுப்போர் கூறியிருப்பார்கள்.
-குர்ஆன்: 6:7

இந்த கேள்வியை முகமது நபியிடமே அந்த மக்கள் கேட்டதற்கு இறைவன் தரும் பதிலைப் பாருங்கள். மறுப்பது என்ற முடிவுடன் இருப்பவர்களுக்கு எந்த சான்று வந்தாலும் 'அப்படி செய்திருக்கலாமே! இப்படி அனுப்பியிருக்கலாமே!' என்ற கேள்விகளை வைப்பது வழக்கமான ஒன்று. இதைத்தான் நீங்களும் வைத்திருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

தருமி!

//ஏக மனதாக ...?????????//

முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். இதை மற்ற மதங்களில் பார்க்க முடியாது. இதற்கு காரணம் குர்ஆன். ஏனெனில் எந்த காலத்துக்கும் எந்த நாட்டவருக்கும் எந்த அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் சிக்கலில்லாத தீர்வுகளை கூறக் கூடிய ஒரே வேதம் குர்ஆன் தான் என்பது இதனை பின்பற்றும் முஸ்லிம்களால் ஏகமனதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஆளுமை செலுத்தும் குர்ஆனின் சட்டங்களே இதற்கு சாட்சி!

suvanappiriyan said...

தருமி!

//101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நரகம்’ என்ற பொருள் தரப்படுகிறது. ஆனால் அந்த சொல்லின் உண்மையான பொருள்: ‘குழந்தையற்ற நிலை’ என்பதாகும்.//

'ஃப உம்முஹூ ஹாவியா! வமா அத்ராகா மாஹியா! நாருன் ஹாமியா'


'ஃப உம்முஹூ ஹாவியா' என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்படுகிறது. தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் ஒருவன் 'என் தாய் என்னைப் பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!' என்று கூறுவது அன்றைய அரபுகளின் பழக்கம். நரகத்தில் ஒருவன் அனுபவிக்கும் வேதனையின் கொடுமையை இறைவன் வழக்கு மொழியில் சுட்டிக் காட்டுகிறான்.

'நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரிக்கும் நெருப்பு' நரகில் உள்ள நெருப்பின் அளவு மிக அதிகமானது. நாம் இந்த உலகில் இதுவரை கண்டிராத வெப்பம். இதுவரை நாம் அனுபவிக்காத வெப்பம்.

எனவேதான் 'இந்த நெருப்பின் கொடூரத்தைப் பற்றி முஹம்மதே! உனக்கு என்ன தெரியும்?' என்று இறைவன் முஹம்மது நபியைப் பார்த்து கேட்பதாக இதன் அடுத்த வசனம் வருகிறது.

நம் மொழியில் கூட எத்தனையோ கவிதைகளை படித்திருக்கிறோம். கவிதையில் அழகு இருந்தால் பொருளில் கோட்டை விட்டு விடுவார்கள். பொருள் சரியாக வந்தால் மற்ற நாடுகளுக்கு பொருந்தாதவையாக இருக்கும். சில கவிதைகள் 500 வருடங்களுக்கு பிறகு உலகோடு ஒத்துப் போகாதவையாக இருக்கும். சில கவிதைகள் கொச்சைத் தமிழில் இருக்கும். உயர்ந்த நடையில் இருக்கும் கவிதைகளோ பாமரனுக்கு விளங்காது.

ஆனால் மேலே சொன்ன அனைத்து விபரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே நுர்ல் குரஆனாகத்தான் இருக்க முடியும்.

ஹாவியா, மாஹியா, ஹாமியா என்ற மூன்று வார்த்தைகளும் கவிதை நடையில் தொடர்ந்து வருவதால் கட்டுரையாளர் குழம்பி உங்களையும் குழப்பி விட்டார். அரபு மொழியின் இந்த சாதாரண விபரத்தையே அரைகுறையாக விளங்கிய ஒருவரின் கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. இந்த நேரத்தில் கொ.ப.சே வோடு சேர்ந்து ஒரு சில உலக சினிமாக்களாவது பார்த்திருக்கலாம் :-)

suvanappiriyan said...

சார்வாகன்!
//1.சத்தியம் என்கிற வார்த்தை மூலத்தில் இல்லை. குரான் வசனங்கள் அர்த்தம் இல்லாமல் போகின்றது என்பதாலேயே தமில் மொழி பெயர்ப்பில் சத்தியமாக என்ற வார்த்தையை இணைத்து உள்ளனர்.//

மொழிக்கு மொழி வார்த்தைகளை கையாளும் விதத்தில் பல வித்தியாசங்களை நாம் பார்க்க முடியும். ஒரு வாக்கியம் தொடங்கும் போது நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம். வானம், அல்லது சூரியன் என்று தனியாக போட்டாலே அங்கு அதன் மீது சத்தியம் செய்து சொல்வதாக அரபுகள் புரிந்து கொள்வர். ஆனால் அதே போன்று தமிழிலும் மொழி பெயர்த்தால் படிப்பவர்களுக்கு புரியாது. எனவேதான் மொழி பெயர்ப்பாளர்கள் சத்தியமாக என்ற வார்த்தையை சேர்ப்பார்கள்.

அரபு நாடுகளில் வேலை செய்து வரும் நம் நாட்டவர்கள் 'வல்லாஹி' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுவர். இதை நேரிடையாக நாம் மொழி பெயர்த்தால் 'இறைவன் மீது' என்று மட்டுமே தமிழ்ப்படுத்த முடியும். அரபு மொழி தெரிந்தவர்கள் 'இறைவன் மீது சத்தியமாக' என்றே பொருள் கொள்வர். இங்கு சத்தியமாக என்ற வார்த்தை மறைந்துள்ளது. யாரும் அரபு நாடுகளில் நண்பர்கள் இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.

//2.இபின் அப்பாஸின் தஃப்சீரில் அவர் கூறிய கதை இருக்கிறது. குரான் என்பது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.அதற்கு நீங்கள் அறிவியல் கூறும் வகையில் பொருள் கொள்வதும்,அதே காலத்தில் எழுதப்பட்ட ஒரு குரான் விளக்கம் நீங்கள் சொல்லும் அர்த்தம் தருகிறதா என்று பார்ப்பது அவசியமாகும்.//

குர்ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்தாலும் அதற்கு முகமது நபியின் ஆதாரபூர்வமான விளக்கமும் சேர்ந்து வர வேண்டும். நபித் தோழர்களின் பெயரில் பல கட்டுக் கதைகள் இஸ்லாமிய விரோதிகளால் கட்டப்பட்டு அது தோல்வியிலும் முடிந்தது. முகமது நபி இவ்வாறு அர்த்தப் படுத்தியுள்ளார் என்று ஆதாரத்துடன் தாருங்கள் பரிசீலிப்போம்.

குர்ஆனுக்கு மாற்றமாக ஜனாதிபதி உமர் மஹர் விஷயமாக ஒரு கட்டளை பிறப்பித்த போது ஒரு மூதாட்டி அதை சுட்டிக் காட்டி உமரை திருத்துகிறார். எனவே மனிதர் என்ற வகையில் இப்னு அப்பாஸ் அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். அல்லது அவர் பெயரில் இட்டுக்கட்டப் பட்டிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

//3.இன்னும் ஆதமில் இருந்து முகமது வரை வம்ச வரலாறு இருக்கிறது(மொத்தம் 30 தலைமுறைதான்). இபின் அப்பாஸின் தஃப்சீர் இந்த இணைப்பில் காணலாம்.இபின் அப்பாஸ் தவறு என்றால் அவர் நம்பிக்கை அற்றவர் என்றால் அவர் கூறிய ஹதிதுகள் அனைத்தையும் தறு என்று கூறிவிடலாம்.//

குர்ஆனுக்கு மாற்றமாக முகமது நபி சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் சொன்னாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. அது அவர்களின் சொந்த கருத்தாகவே கொள்ள முடியும்.

///உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //
ஒரு எடுத்துக்காட்டு தரவும்.//
குர்ஆன் இறங்கிய காலங்களில் உடனே நபித் தோழர்கள் 'அந்த வசனம் ஏன் இறங்கியது. இந்த வசனத்திற்கு என்ன பொருள்' என்று ஒன்று விடாமல் கேட்டு அவை எல்லாம் வரலாறாக பதியப்பட்டுள்ளது. குர்ஆனில் நூன், அலீஃப, லாம் என்று பல இடங்களில் வந்தாலும் அதைப்பற்றி எந்த நபித் தோழரும் முகமது நபியிடம் சந்தேகம் கேட்கவில்லை. ஏனெனில் அது அன்றைய அரபுகளின் வழக்கமாக இருந்தது. எனவெ அது பற்றி அவர்களுக்கு சந்தேகமும் வரவில்லை.

//குரானின் வசங்களுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஒன்று இரவு பின் வாங்குகின்றது(திரும்பி செல்கிறது).இது அந்தக் கால அறிவியல் என்றால் 6ஆம் நூற்றாண்டில் அவ்வளவுதான் சொல்ல முடியும்//
இந்து மத வேதங்களைப் போல் குர்ஆன் மொழி பெயர்க்காமல் ஒளித்து வைக்கவில்லை. எல்லோரிடமும் இருப்பதும் ஒரே வசன எண்கள்தான். இந்த கருத்து இந்த அறிவியல் கண்டு பிடிப்போடு மோதுகிறது என்று எடுத்துக் காட்ட வேண்டியதுதானே!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


வித்தியாசமான ஆய்வு கண்ணொட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

சில நேரங்களில் உண்மைகள் ரொம்ம்ப
சுடுகிறது

suvanappiriyan said...

சார்வாகன்!

//நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழக்கண்ட புஹாரி ஹதிதை படித்தால் தெரியும்//

//குரானில் புரியாத வாக்கியங்களும் உள்ளன என்று குரானே கூறுகிறது..

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.//

எல்லா மொழிகளிலும் எல்லா மனிதர்களின் சொற்களிலும் இரு பொருள் தரும் வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ளன. நேரிடையான பொருளில் கூறப்ட்டவை எவை? உவமையாக இலக்கிய நயத்துடன் கூறப்பட்டவை எவை? என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

'நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ!' என்று கவிஞர் பாடினால் ஒரு நிலவு பெண்ணாக உருமாறியதாக நாம் அர்த்தம் எடுப்பது இல்லை. இது இலக்கிய நயத்தில் சொல்லப்பட்டது என்று விளங்கிக் கொள்வோம். மனிதர்களின் பேச்சு வழக்கிலேயே குர்ஆன் அருளப்பட்டதால் இது போன்ற உவமைகளும், நேரடி அர்த்தங்களும் நிறைய நாம் பார்க்க முடியும்.

ஒரு இடத்தில் முகமது நபியை 'ஒளி' என்று இறைவன் கூறுகிறான். 'முகமது நபி அறியாமை என்ற இருளைப் போக்க வந்த ஒளி(வெளிச்சம்) என்றுதான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

முஸ்லிம்களிலேயே சிலர் 'முகமது நபி இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும். முகமது நபி மனிதர் இல்லை. அவர் கடவுள் அம்சம் பொருந்தியவர்' என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

'முஹம்மதே! அவனே இவ்வேதத்தை உமக்கு அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகிற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும் அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.' -குர்ஆன் 5:7

இதில் இறைவனும் கல்வியில் தேர்ந்தவர்களும் அது போன்ற வசனங்களை விளங்கிக் கொள்வார்கள் என்று விளக்கப்பட்டள்ளது. மனிதனுக்கு புரியாத வசனங்களை குர்ஆனில் இறைவன் கூற வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி தெரிந்த யாருமே யாருடைய உதவியும் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளலாம். சார்வாகனாகிய நீங்களே எவ்வளவு அழகாக குர்ஆனைப' புரிந்துணர்ந்து அதற்கு விளக்கமும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?' - குர்ஆன் 54:17 என்று இறைவன் பல இடங்களில் கேட்பதிலிருந்து குர்ஆனில் புரியாத விளங்காத வார்த்தைகளே இல்லை. அப்படி உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் வசன எண்ணைக் குறிப்பிடுங்கள். பரிசீலிப்போம்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! திரு ஹைதர் அலி!

தனது கட்சி வேட்பாளரை பல பேர் முன்னிலையில் விஜயகாந்த் அடித்த காட்சியை சற்று நேரம் முன்பு பார்த்தேன். கலைஞர் விஜயகாந்துக்கு ஒரு சபாஷ் போட்டிருப்பார். இந்த குடிகாரரை நம்பி ஆட்சியை எப்படி ஒப்படைப்பது!

மக்களாட்சி வாழ்க!

suvanappiriyan said...

சார்வாகன்!

//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம்//
அல்லா ஒரு அரபியரா?//

இறங்கிய இறை வசனத்தை மறுத்தவர்கள் அரபியர்கள் அல்லவா!

//இந்த இரவு பின் வாங்கியதிற்கு நீங்கள் அளித்த விள்க்கமும் முகமது அளித்ததாக ஆதாரதுடன் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்.//

இத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட காலத்திலேயே வானியலைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாக கிட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இறைவன் உதவியால் முகமது நபி விளக்கியிருந்தால் அந்த மக்களுக்கு புரிய வேண்டுமே! மக்கள் நேர் வழி பெற வேண்டும் என்பதற்க்காகத்தானே இந்த வேதமே அருளப்பட்டது! புரியாத உபதேசத்தால் என்ன பயன்?

மேலும் 'பின் வாங்கும் இரவு' என்ற வாக்கியத்தை மொழி பெயர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. முகமது நபி காலத்திலிருந்து இன்று வரை உள்ள குர்ஆனும் எந்த மாறுதலுக்கும் உள்ளாகவில்லை. சந்தேகம் இருந்தால் தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் உள்ள அன்றைய குர்ஆனை எவரும் பார்வையிடலாம்.

முகமது நபி ஒன்றை அறிவித்து அதற்கு மாற்றமாக வேறொருவர் குர்ஆனிலிருந்து விளக்கமளிக்க முடியாது. முகமது நபி சொல்லாத ஒரு செய்தியை நம் அறிவுக்கு ஏற்ப விளக்கம் பெறுவதில் தவறில்லை. ஏனெனில் குர்ஆனைப் பற்றி இறைவன் சிந்திக்கச் சொல்கிறான்.

நான் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். நீங்கள் சொல்வதை நான் மறுக்கலாம். இப்னு அப்பாஸ் சொல்வதை நாம் மறுக்கலாம். ஆனால் குர்ஆன் சொல்வதையும் மார்க்க விஷயமாக முகமது நபி சொன்ன ஆதாரபூர்வமான சொற்களையும் இஸ்லாமியர் எவரும் மறுக்க முடியாது. மறுக்க கூடாது இதுதான் இஸ்லாத்தின் நிலை.

'அவர்கள் சிந்திப்பதற்க்காக இந்த குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.' - குர்ஆன் 17:41

//பாவம் திரு முகமதின் வளர்ப்புத்தந்தை அபு தாலிப்,நரகத்தில் இருக்கிறார்.மறுமை நாளில் முகமதுவின் சிபாரிசு எடுபடும் போல் தெரிகிறது.//

அபுதாலிபுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும். உங்களையும் என்னையும் தருமியையும் பற்றி கவலைப் படுவோம் தோழரே!.

Issadeen Rilwan said...

//பெற்றோர்களே! எங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க விடுங்கள். உங்கள் பேராசையை எங்கள் மீது திணிக்காதீர்கள்// எல்லாப் பெற்றோர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

ஹுஸைனம்மா said...

//'பெற்றோர்களே! எங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க விடுங்கள். உங்கள் பேராசையை எங்கள் மீது //

உண்மைதான். இருப்பினும், சில மாணவர்களுக்குச் சரியான பாதையைத் தேர்வு செய்யுமளவு தெளிவு இருக்கலாம். அவர்களுக்குப் பெற்றோர் வழிகாட்டவேண்டும். பெற்றோருக்கும் தெளிவில்லையெனில் (படிக்காதவர்கள் அல்லது அனுபவமில்லாதவர்கள்) கவுன்சிலிங் போகச் சொல்லலாம். பெற்றோருக்கும் பொறுப்பிருக்கிறதே!! :-)))