ஒரு ஏழைப் பெண் தனது அனாதையான தம்பியின் இரண்டு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுகிறார். கூடவே வயதான தாய். சேரி பகுதியில் வீட்டு வேலைகளை செய்து இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறார். தனது தாயையும் காப்பாற்றுகிறார் அந்த பெண். இவர்படும் கஷ்டம் பலர் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானை சென்றடைகிறது. அந்த பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும் அந்த பெண்மணியின் குடும்ப கஷ்டத்தை நீக்குவதற்காகவும் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து பதினோரு லட்சம் ரூபாயை அந்த தாய்க்கு இலவசமாக தருவதைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.
நம்மில் எத்தனையோ செல்வந்தர்கள் கோடிக் கணக்கில் பணம் புரண்டாலும் வறியவர்க்கு கொடுப்போம்: அவர்கள் சந்தோஷத்தில் பங்கு கொள்வோம் என்று சிந்திப்பது கூட கிடையாது.
ஒரு பக்கம் விண்ணை முட்டும் கோபுரங்கள். மறு பக்கம் சேரிகளில் புரண்டு கொண்டிருக்கும் குடிசைவாசிகள்: இருவரின் வித்தியாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறதேயொழிய குறைந்தபாடில்லை. அரசியல்வாதிகளை நம்பி இனி பயன் இல்லை. தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதில்தான் அவர்களின் கவனமெல்லாம் இருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் கொலை கொள்ளைகள் அதிகமாகும் வாய்ப்பிருக்கிறது. இப்பொழுதே பட்டப் பகலில் பூட்டை உடைத்து கொள்ளை என்ற செய்தி வராத நாளே இல்லை.
'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி:
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி:
பொன்னான உலகென்று பெயரும் இட்டால்:
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்'
என்ற பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.
நம்மில் உள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஒரு ஏழையை தத்தெடுத்துக் கொண்டால் இந்த பிரச்னை வெகு இலகுவாக தீர்ந்து விடும். இங்கு சவுதியில் செல்வம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஜகாத் என்ற ஏழை வரி அனைவரிடமும் கட்டாயமாக வசூலிக்கப்படுவதால் அந்த செல்வம் ஏழைகளை சென்றடைகிறது. எனது ஓனரும் ஒவ்வொரு வருடமும் ஜகாத்தைக் கணக்கிட்டு அரசாங்கத்துக்கு இவ்வளவு, தனது சொந்தங்களுக்கு இவ்வளவு என்று பணத்தை செலுத்துவதை நான் பார்க்கிறேன். வருமானத்தை அரசுக்கு குறைத்து காட்டுவதும் இல்லை. ரோடுகளில் பிச்சை எடுப்பவர்களை சவூதி அரசு சில நேரங்களில் கைதும் செய்கிறது.
நம்மில் பலரும் ஓரளவு ஏழைகளுக்கு கொடுத்து வருகிறோம். எப்படி கொடுக்கிறோம்? ஒரு ரூபாயை மாற்றி வைத்துக் கொண்டு பள்ளிவாசலிலும் கோவில்களிலும் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு வரிசையாக கொடுத்துக் கொண்டு செல்வோம். இதனால் பிச்சைக்காரர்களை நாம் மேலும் வளர்க்கிறோம். இப்படி சில்லரையாக கொடுக்கும் பணத்தை நாம் சேர்த்து வைத்து ஒரு ஏழையை தேர்ந்தெடுத்து அவன் சொந்த தொழில் தொடங்க நாம் உதவி செய்தால் அவன் வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவனாக இருப்பான். கௌரமான வாழ்க்கையையும் அவன் வாழ்வான்.
சுயமரியாதை உடையோர்!
'அவர்களைப் பற்றி அறியாதவர் அவர்களின் தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீராக! மக்களிடம் கெஞ்சி கேட்க மாட்டார்கள்.' - குர்ஆன் 2:273
நம் சொந்தங்களிலேயே சிலர் மிக வறுமையில் உழல்வார்கள். ஆனால் சுய மரியாதை காரணமாக யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இப்படிப்பட்ட உறவினர்களையும் அக்கம் பக்கத்திலுள்ளோரையும் தேடிச் சென்று நாம் உதவ வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
என் உறவினரில் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர். ஏழைகளுக்கு கொடுப்பதில் மிகவும் கராராக இருப்பார். ஆனால் தனது வீட்டை மிகவும் ஆடம்பரமாக கட்டி பல முறை ஹஜ்ஜூம் செய்திருக்கிறார். ஹஜ்ஜூக்கு போவதற்கு முன்பு ஊரில் உள்ள செல்வந்தர்களை எல்லாம் அழைத்து தடபுடலாக விருந்துகளும் கொடுப்பார். சவுதி அரசு ஒரு வெளிநாட்டவருக்கு நான்கு வருடத்துக்கு ஒரு முறைதான் ஹஜ்ஜூக்கு அனுமதிக்கிறது. இல்லை என்றால் அவர் வருடா வருடம் மக்காவுக்கு ஹஜ்ஜூ செய்ய சென்று விடுவார். செல்வந்தருக்கு வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்தாலே போதுமானது. இரண்டு மூன்று முறை ஹஜ் செய்யும் பணத்தை உறவினருக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தால் ஹஜ் செய்வதைப் போன்ற நன்மை இதிலும் கிடைக்கிறது. ஏனெனில் அந்த அளவு வறியவர்களை கொண்ட சமூகமாக நம் சமூகம் இருக்கிறது.
'தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அது நல்லதே. அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது.'-குர்ஆன் 2:271
இதன்மூலம் தர்மங்களை வெளிப்படையாகவும் கொடுக்கலாம். மறைமுகமாகவும் கொடுக்கலாம். இரண்டுக்கும் நன்மை இருக்கிறது என்கிறது குர்ஆன்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.-குறள்
ஒன்றும் இல்லாத ஏழை எளியோருக்கு கொடுப்பதே ஈகை எனப்படும். மற்றவர்களுக்கு கொடுப்பது ஈகையாகாது. சுருங்கச் சொன்னால் வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். இல்லாதவர்க்கு கொடுப்பதே கொடையாகும் என்கிறார் வள்ளுவர்.
இத்தகைய ஈகை குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு சமதர்ம சமுதாயம் படைக்க முயற்ச்சிப்போமாக!
5 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்!
வித்தியாசமான பதிவை கொடுத்திருக்கிறீர்கள். அனால் அவர் இருக்கும் சினிமா துறைதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.-ஆசிக் அன்வர், ரியாத்
dear sir,
i'm a regular reader of your articles. giving good informations. many thanks for that. regarding A.R.Rahman, i have no dought about his humanity. but same time there are lot people in tamil nadu who live for others. why do yoy want to high light only this gentle man. is this because of he conveted to Islam. if you say yes i'm not the one to accept it. for my consideration being human is more inportant then being a religious person.
dear sir,
i'm a regular reader of your articles. there are lot of peoples in tamil nadu / india who live for others. why do you want to consider only A.R.Rahman. is this because of he converted to Islam. if you say yes, i'm not the one to accept it. if you say no, please give brief explonation. for my consideration being a human is more importent than being a religios person.
kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/
வஅலைக்கும் சலாம்!
சகோ.அன்வர்!
ஏ.ஆர்.ரஹ்மான் செய்து வரும் தொழில் சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நுழைவதல்ல இந்த பதிவு. சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? யாருக்கு செலவு செய்ய வேண்டும்? என்று சிந்திப்பதற்காக எழுதப்பட்ட இடுகையே இது. இதைத்தான் நான் நேரிலும் உங்களிடம் சொன்னது.
மேலும் இஸ்லாம் என்றால் ஒரே இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு எதிலும் நாட்டமில்லாமல் இறை வணக்கம் ஒன்றே எப்பொழுதும் குறியாக இருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை.
நமது நபி இறை வணக்கத்திலும் ஈடுபட்டார். மனைவிகளோடு சந்தோஷமாக இருந்தார். அப்படி இல்லாத நபித் தோழரை கண்டித்தார். மனைவியோடு வெளிநாட்டு சண்டை வீரர்கள் செய்த சாகசங்களை கண்டு ரசித்தார். 'இறைத்தூதர் வீட்டில் இசைக்கச்சேரியா? என்று பாடல்ளை வாத்தியங்களுடன் பாடிக் கொண்டிருந்த சிலரை அபுபக்கர் அவர்கள் கண்டித்தபோது 'அவர்களை விட்டு விடும்' என்று தடுத்ததும் நமது இறைத்தூதர்தான். எனவே இசையில் மயங்கி அதற்கு அடிமையாவதைத்தான் இஸ்லாம் தடுப்பதாக நான் எண்ணுகிறேன். இறைவனே மிக அறிந்தவன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு கண்ணன்!
//i'm a regular reader of your articles. giving good informations. many thanks for that.//
நன்றி! தொடர்நது படித்து கருத்துக்களை கூறி வாருங்கள்.
//regarding A.R.Rahman, i have no dought about his humanity. but same time there are lot people in tamil nadu who live for others. why do yoy want to high light only this gentle man. is this because of he conveted to Islam.//
ஏதோ ஓர் மூலையில் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய கிறுக்கன் ஒரு தீவிரவாத செயலை செய்யும் போது 'முஸ்லிம் தீவிரவாதி கைது', 'முஸ்லிம் இளைஞர் பிடிபட்டார்' என்ற தலைப்புச் செய்திகளை இடுகிறது ஊடகத்துறை. சினிமாவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாமல் இவ்வாறு இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் போது அங்கும் இதே போன்ற எதிர்ப்பை உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் கருத்தை பதிய வேண்டும்.
இஸ்லாத்துக்கு சென்ற ஒருவர் மாற்று மதத்தவரின் உணர்வை அனுசரிக்க மாட்டார். இஸ்லாம் வளர்வது இந்திய நாட்டின் இறையாண்மைக்கே ஆபத்து என்ற ரீதியில் பலரும் கருத்தை கொண்டிருக்கின்றனர். இது தவறு என்பதை விளக்குவதற்க்காகவும், பணம் உடைய செல்வந்தர்கள் இவரைப் போன்று பணத்தின் தேவையறிந்து செலவு செய்ய வேண்டும் என்பதற்க்காகவும்தான் ஒரு சில பதிவுகளை இது போன்றும் இடுகிறேன்.
//for my consideration being human is more inportant then being a religious person.//
மனிதாபிமானம் என்பதை கடைபிடிக்க மதத்தை விட வேண்டும், மத அடையாளங்களை துறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு சுத்த இஸ்லாமியனாக இருந்து கொண்டு மாற்று மதத்தவர்களோடு சந்தோஷமாக வாழ முடியும். வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில இஸ்லாமியர்கள் தவறான நடத்தை கொண்டிருந்தால் அவர் இஸ்லாத்தை சரியாக விளங்கவில்லை என்றுதான் நான் சொல்வேன்.
• "எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)
• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)
• "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள், அவன் ஒரு காபிராக இருப்பினும் சரியே. அதற்கும் அல்லாஹ்வுக்கு மிடையே எத்தகைய திரையுமில்லை". (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)
• நாட்டில் சாதாரண பிரஜையான ஒரு யூதரிடம் அந்நாட்டை ஆளும் அரசரான நபி(ஸல்)அவர்கள், தன் போர்த்தளவாடங்களை அடமானம் வைத்து கடன் பெற்ற வரலாறு மிகவும் பிரபல்யமானது. (ஆதாரம்: புகாரி)
•-நன்றி சகோ.ஆஷிக்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கண்ணன்.
Post a Comment