Followers

Monday, June 04, 2012

வாய்மையே வெல்லும்-மருத்துவத் துறை-அமீர்கான்!

நமது நாட்டில் மிகவும் புனிதமான தொழில்களில் ஒன்று இந்த மருத்துவத் துறை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மிகவும் கேவலப்பட்டுப் போன ஒரு துறை என்னவென்றால் அதுவும் மருத்துவத் துறைதான். இதில் ஏழை பணக்காரன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் என்றாவது ஒரு நாள் மருத்துவத் துறையினரால் வஞ்சிக்கப்பட்டு இருப்போம். எனது உறவினர் ஒருவருக்கு அபெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிய ஒரு இருபது நிமிடத்தில் வெளியில் வந்த மருத்துவ சிப்பந்தி '500 ரூபாய் கொடுங்கள்?' என்றார். 'எதற்கு?' என்று கேட்டோம். 'எல்லோரும் கொடுக்கிற மாமூல்தான் வேலை செய்பவர்கள் பிரித்துக் கொள்வோம்' என்று ஒரு அதிகார தோரணையில் கேட்டவுடன் எனக்கு கோபம் வந்து 'தர விருப்பமில்லை' என்றேன். 'வாங்காமல் நாங்கள் போகப் போவதுமில்லை' என்றவுடன் மேலிடம் வரை ரிப்போர்ட் சென்று அந்த சிப்பந்தியை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர். இது தனியார் மருத்துவ மனையில் தஞ்சையில் நான் கண்ட அனுபவம்.

'வாய்மையே வெல்லும்' தொலைக் காட்சி தொடரில் மருத்துவத் துறையைப் பற்றிய கலந்துரையாடலை சற்று பார்ப்போம்.



அமீர்கான்: நிறைய மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகள் வந்துள்ளீர்கள்? என்ன காரணத்தினால் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

மருத்துவ துறை மாணவர்: கிராமங்களில் மருத்துவ வசதி மிக குறைவாக உள்ளது. மருத்துவராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

மற்றொரு மாணவர்: நமது நாட்டில் பலர் தொடர் வியாதியால் துன்புறுகின்றனர். அவர்கள் நமது நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணி இதனால் தடைபடுகிறது. இது போன்ற நிலையில் உள்ளவர்களை குணமாக்கி இந்த நாட்டுக்கு அவர்களின் பங்களிப்பையும் தர என்னால் முடிந்த உதவியை செய்ய இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

அமீர்கான்: வாவ். அருமை... (கைத் தட்டல்) மருத்துவ துறையில் தற்போது நடந்து வரும் சில விரும்பத் தகாத நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். முதலில் மும்பையைச் சேர்ந்த திரு வெங்கடேஷின் அனுபவத்தைக் கேட்போம்.

வெங்கடேஷ்: எனது காலின் விரலில் சிறு பிரச்னை. எனவே ஒரு டாக்டரிடம் சென்று காட்டினேன். 'மிகவும் அபாயகரமான நிலையில் விரல் உள்ளது. உடன் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார். அபரேஷன் செய்யும் போது மறதியாக எலும்பை உள்ளே வைத்து தைத்து விட்டனர். இதனால் புரையோடிப் போய் எனது விரலை எடுக்கும் படி ஆகி விட்டது. இதற்கான செலவு எனக்கு இரண்டு லட்சம். தற்போது எனது நடையிலும் சிறு மாற்றங்கள். இந்த ஆபரேஷனுக்கு அவசியமே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மருத்துவரின் பண ஆசையால் எனது விரலும் போனது. பணமும் போனது.

அரவிந்த் ஹைதரபாத்: வாந்தியும் வயிற்று வலியினாலும் அவதிப்பட்ட நான் ஒரு மருத்தவரை அணுகினேன். உடன் என்னை ஐசி வார்டில் மூன்று நாள் வைத்து 'இப்பொழுது ஆபரேஷன் பண்ணவில்லை என்றால் இறந்து விடுவீர்கள்' என்று சொல்லவே நான் ஒத்துக் கொள்ளாமல் வேறொரு மருத்துவரிடம் காண்பித்தேன். அபண்டிக்ஸ் ஆபரேஷனுக்கு எந்த அவசியமும் இல்லை என்று அவர் சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார். இன்று நலமாக இருக்கிறேன். இரண்டு மருத்துவ மனையிலும் எனக்கு செலவான மொத்த தொகை ஒரு லட்சதத்து நாற்பதாயிரம். தற்போது மருத்துவர்களைக் கண்டாலே பயம் ஏற்படுகிறது. மருத்துவர்களை கடவுளுக்கு சமமானவர் என்கிறோம். எல்லாம் சுத்த பேத்தல்.

சீமா பங்கஜ் என்ற பெண்மணிக்கு கிட்னி பிரச்னையினால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓய்வு பெற்ற கணவர் மேஜர் பங்கஜின் அனுமதி இல்லாமல் அவர் பெண்ணிடமும் அனுமதி வாங்காமல் ஆபரேஷன் செய்து முடிவில் அவர் இறந்தும் விடுகிறார். தற்போது கோர்டில் கேஸ் நடக்கிறது.

அமீர்கான்: இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது என்ன? நம்பிக்கைத் துரோகம். அதுவும் கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து உங்களை நம்பிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளிடமா இப்படி ஒரு துரோகம்? வெட்கம்.

அடுத்ததாக ஒரு நோயாளி மருத்துவமனை சென்றவுடன் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்து வா என்று சில லேபுகளுக்கு அனுப்புவார். அப்படிப்பட்ட ஒரு லேபை நடத்தி வரும் டாக்டர் அனில் பிச்சடை சந்திப்போம்.

அனில் பிச்சட்: எங்கள் லேபுக்கு நோயாளிகள் வருவது குறைந்தால் உடன் மருத்துவர்களை சென்று பார்ப்போம். மருத்துவர் எங்களிடம் 'அதற்கு பகரமாக என்ன தருவாய்?' என்று கேட்பர். 'வரும் வருமானத்தில் 40 சதவீதம் அல்லது ஐம்பது சதவீதம் உங்களுக்கு கமிஷனாக தருகிறோம்' என்று சொன்னவுடன் மருத்துவர் எங்களுக்கு அனைத்து நோயாளிகளையும் டெஸ்ட்டுக்காக அனுப்பி விடுவார். எங்கள் வியாபாரமும் ஜோராக நடக்கும். மருத்துவருக்கும் நல்ல வருமானம். ஆனால் இவ்வாறு தவறாக சம்பாதித்ததால்தானோ என்னவோ எனது குடும்பத்தில் மிகப் பெரிய ஒரு சோகம் நடந்தது. அன்றிலிருந்து மருத்துவர்களுக்கு நான் கமிஷன் கொடுப்பதில்லை. டெஸ்ட்டுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டுமே நோயாளிகளிடம் வாங்குகிறேன். முன்பை விட தற்போது நன்றாகவே சம்பாதிக்கிறேன். நேர்மையாகவும் சம்பாதிக்கிறேன்.

அமீர்கான்: வெரிகுட். உங்கள் லேப்புக்கு பக்கத்தில்தான் எனது வீடும் அமைந்துள்ளது. எங்கள் குடும்பத்தவர் அனைவரையும் இனி உங்கள் லேபுக்கே அனுப்புகிறேன். நன்றி!

அடுத்து அமுல் பண்டிட் என்ற புற்று நோய் நிபுணரின் அனுபவத்தைப் பார்ப்போம். வெளிநாட்டில் படித்து தாய்நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று வந்த இவரிடம் நோயாளிகளை அனுப்ப சக மருத்துவர்கள் கமிஷன் கேட்டார்களாம். இதனால் வெறுத்துப் போய் தற்போது தாய் நாட்டில் பணியாற்றும் ஆசையை தூரமாக்கி தற்போது வெளிநாட்டிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார்.

ஏன் இவ்வாறு மருத்துவர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள்? என்ன தேவை வந்தது அவர்களுக்கு?

ஆந்திர பிரதேசம் கௌடிபாட்லி மேடக் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் நடந்த கொடூரம் ரொம்பவும் அநியாயமானது. அங்குள்ள பெண்களில் 75 சதவீதமான பேருக்கு பிரசவத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்கள். அத்தனை பேரும் அதிகமாக வயல் வேலை செய்பவர்கள். உடல் உழைப்பை செய்து வருபவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை நார்மலாக வந்து விடும். இந்த ஏழை மக்களிடம் கூட பணத்துக்காக இந்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளார்கள். சிலர் அபரேஷனுக்காக நிலத்தை விற்றிருக்கிறார்கள். ஆபரேஷனில் கர்ப்பப்பை எடுத்ததை தெரிந்து கொண்ட கணவன் மனைவியை விவாகரத்து செய்து விட்டானாம்.

பாதிக்கப்பட்ட பெண்: இப்போ ஆபரேஷன் பண்ணலேன்னா நீயும் உன் குழந்தையும் செத்துப் போயிடுவீங்கோ என்று டாக்டர் சொல்லும் போது நாங்க என்ன பண்றது.? 'சரி ஆபரேஷன் பண்ணுங்கோ' என்று சொல்லுவோம். சொத்தையும் விற்று இன்று உடலாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அந்த மக்கள் 'ஆபரேஷனுக்குப் பிறகு எங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை' என்று அழுதது கல் நெஞ்சையும் கரையச் செய்யும். இந்த அனுபவம் ஆந்திர பிரதேசத்தோடு அல்ல எனக்கும் உங்களுக்கும் கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.

இவ்வளவு கீழிறங்கிச் செல்லவேண்டுமா நமது மருத்துவர்கள்?

அமீர்கான்: டாக்டர் பேதி! உங்களின் 25 வருட அனுபவத்தில் எத்தனை பேருக்கு ஆபரேஷன் செய்திருப்பீர்கள்?

டாக்டர் பேதி: வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு. அதுவும் கேன்சர் போன்ற பிரச்னைகள் இருந்தாலே ஆபரேஷனுக்கு அவசியம் ஏற்படும். ஒரு கிராமமே இவ்வாறு ஒட்டு மொத்தமாக ஆபரேஷன் செய்து குழந்தை எடுப்பது சாதாரணமான ஒன்றல்ல. பணத்திற்காக திட்டமிட்டு செய்யப்படுவது.

அமீர்கான்: இவ்வளவு அநீதிகளை இழைத்து வரும் இந்த மருத்துவர்களை எவ்வாறு கட்டப்படுத்துவது? தண்டிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆம். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(Medical council of India) உள்ளது. இதன் தற்போதய தலைவர் திரு டாக்டர் தல்வார் நம்மோடு உள்ளார். உங்களை வரவேற்கிறோம் டாக்டர். காலையிலிருந்து அனைத்தையும் பார்க்கிறீர்கள். இவை எல்லாம் உண்மைதானா? இதை ஏன் உங்கள் தலைமையில் உள்ள மருத்துவ கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியவில்லை?

டாக்டர் தல்வார்: அமீர்! ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சில சட்ட சிக்கல்கள் நீங்கள் அறியாதது அல்ல. நான் தற்பொதுதான் பொறுப்பேற்று இருக்கிறேன். இனிமேல்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

அமீர்கான்: இந்திய மருத்தவ கவுன்சிலின் சட்டத்தின்படி ஒரு மருத்தவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவம் பார்க்காமல் நோயாளியின் மனநிலை அறிந்து தொண்டுள்ளத்தோடு செயல்பட வேண்டும் என்கிறது. மேலும் வேறொரு மருத்துவருக்கு பரிந்துரைக்கும் போது அதற்காக கமிஷன் வாங்குவதும் தடை செய்யப்பட்டது. அடுத்து ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் நோயை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ பணம் பண்ணும் நோக்கில் செய்வது குற்றம் என்பதை எல்லாம் சட்டமாக்கி வைத்திருக்கின்றீர்கள்? இந்த சட்டத்தின் படி பார்த்தால் நமது நாட்டில் எட்டு லட்சம் மருத்துவர்கள் உள்ளனர் இவர்களில் எத்தனை பேருடைய லைசென்ஸ் நிலைக்கும்? இது வரை எத்தனை பேருக்கு லைசென்ஸ் ரத்தாக்கப்பட்டள்ளது?

டாக்டர் தல்வார்: கவுன்சிலின் அத்தனை சட்டங்களையும் ஒன்று விடாமல் ஃபாலோ செய்வது என்பது எங்கும் இல்லாத ஒன்று. அதற்கென்று ஒரு கமிட்டியும் உள்ளது. அடுத்து எமசிஐயில் என்ன நடக்கிறது என்பதை ஜென்ரல் அழகாக எடுத்துச் சொன்னார். நான் பொறுப்பெடுத்து சில மாதங்களே ஆகிறது. இனி நிலைமையை சரியாக்க முயற்சி எடுக்கிறேன்.



அமீர்கான்: 2008 லிருந்து தற்போது வரை ஒரு டாக்டரின் லைசென்ஸ் கூட கேன்சல் ஆக வில்லை. ஆனால் இங்கிலாந்தில் 2008ல் 42 மருத்துவர்களும் 2009ல் 68 மருத்தவர்களும் 2010ல் 73 மருத்தவர்களும் பிடிக்கப்பட்டு அவர்களின் லைசென்ஸ் ரத்தாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று பிரிட்டன் மருத்துவர்கள் மோசமானவர்கள். நமது இந்திய மருத்துவர்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள். இல்லையா டாக்டர்?

டாக்டர் தல்வார்: தவறு நடப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

அமீர்கான்: ஆந்திர பிரதேசத்தில் அநத ஏழைகள் வடித்த கண்ணீரை பார்த்தோம். உங்கள் பவரை உபயோகித்து தவறு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் டாக்டர்?

டாக்டர் தல்வார்: கண்டிப்பாக! என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.

அமீர்கான்: இந்த புரோக்ராமுக்குப் பிறகு எனக்கு இந்தியாவில் எந்த டாக்டரும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நன்றி டாக்டர் (கரகோசம்)

இந்த மருத்துவர்கள் பணத்துக்கு அலைவதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது டொனேஷனாக கல்லூரிகளில் அவர்கள் செலுத்திய பணத்தை. ஒரு மருத்தவ படிப்புக்காக 50 லட்சம் 60 லட்சம் செலவழித்து படித்து முடிக்கும் ஒரு மாணவன் தான் செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறான். அரசு நடத்தும் மருத்துவ கல்லுர்ரிகள் மிக சொற்பமே. தனியார் கொள்ளையடிக்க அரசு வசதி செய்து கொடுக்கிறது. அதன் பலனை ஏழை மக்கள் அனுபவிக்கின்றனர்.



மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படுத்தப் பட வேண்டும். தவறு செய்யும் மருத்துவர்களை தண்டிக்கும் அதிகாரம் முறைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவ கவுன்சிலின் அதிகாரம் அரசியல் தலையீடு இல்லாதிருக்க வேண்டும். போன ஆட்சியில் கொண்டு வந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இன்று ஒரு நோயாளியின் உயிரோடு பணத்துக்காக விளையாடினால் நாளை உனக்கோ உனது மனைவி மக்களுக்கோ அதே போன்ற நிலை வரும் என்ற பய உணர்ச்சி வர வேண்டும். குறைந்த செலவில் இன்சூரன்ஸ் திட்டத்தை அமுல்படுத்தினால் அதுவும் ஏழைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதை பற்றியும் மருத்துவர் அழகாக விளக்குகிறார். (ஹாவ்........தூக்கம் வருகிறது....இதற்கு மேல் உட்கார முடியாது.... மற்றதை நீங்கள் புரோக்ராமை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.) :-)

டிஸ்கி: நமது தோழர் எதிர்க்குரல் ஆஷிக் அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை அன்று பாண்டிச்சேரியில் திருமணம் இனிதே நடைபெற்றது. வரதட்சணை வாங்காமல்: மாலை போட்டுக் கொள்ளாமல்: சீர்கள் என்ற பெயரில் பெண் வீட்டாரை பிழியாமல் தேவையற்ற சடங்குகள் இல்லாமல் மணமகன் செலவில் திருமண விருந்தை கொடுத்து கல்யாணம் நபி வழியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வரும் திருமணத்தில் கலந்து கொண்டார்.மற்றொரு முக்கிய விருந்தினரான சுவனப்பிரியன்:-) ரியாத்தில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நேரத்தில் அவரை வாழ்த்துவோம்.

பாரகல்லாஹ் லக; வபாரக அலைக; வஜமஅ பைனகுமா ஃபீ ஹ்கைர்..!

இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக..! உங்கள் சந்ததிகளிலும் அருள் பொழிவானாக..! மணமக்களான உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக..!




11 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

தங்களிடமிருந்து மீண்டும் ஓர் அருமையான மொழிபெயர்ப்பு.

தமக்கு கிடைத்த வாய்ப்பினை செம்மையாக பயன்படுத்தி பலரை சிந்திக்க வைக்கிறார் ஆமிர்கான். இதை செய்ய சமூக அக்கறை மட்டும் போதாது; தைரியமும் வேண்டும்..! ஆமிரிடம் இரண்டும் உள்ளது..!

நடிகர்கள் மீதும் ஒரு வித நல்லெண்ணம் பிறக்கிறது... அவர்கள் நடிக்காமல் இருக்கும்போது..!

எனக்கு பல கசப்பான அனுபவம் உண்டு மருத்துவர்களோடு..! சில இனிப்பான விஷயமும் உண்டு..!

மொத்தத்தில் எனக்கு பிடிக்காத மூன்று முக்கிய இடங்களில் ஒன்று மருத்துவமனை..! (மற்றவை காவல் நிலையம் & நீதி மன்றம்)

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மொத்தத்தில் எனக்கு பிடிக்காத மூன்று முக்கிய இடங்களில் ஒன்று மருத்துவமனை..! (மற்றவை காவல் நிலையம் & நீதி மன்றம்/)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சென்னை : ""நாங்கள் வைத்த கோரிக்கை நாளை (இன்று) மாலைக்குள் ஏற்க மறுத்தால், நாளை மறுநாள் (நாளை) முதல் அனைத்து அரசு டாக்டர்களும் முழுவேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்'' என, பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கூறினார். கடந்த சனிக்கிழமை அன்று, சென்னை அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியிலிருந்த பயிற்சி டாக்டரை, நோயாளி உடன் வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல், தாக்கவும் முற்பட்டனர். இது போன்ற சம்பவம் கடந்த மூன்று மாதங்களில், மூன்று முறை நடந்துள்ளதால், பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவு : இந்தப் போராட்டம் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கிறது. இவர்களுக்கு, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்களும் ஆதரவு அளித்து, அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தவிர, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

இது குறித்து, பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது: தாக்கியவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு நோயாளிக்கு ஒரு உறவினர் மட்டுமே இருக்க வேண்டும். இதை, அவசர அறுவை, அவசர மருத்துவம், அவசர எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து அவசர சிகிச்சை பிரிவிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக, இரட்டை கதவு கொண்ட வாசல் மற்றும் அனுமதி சீட்டுப் பெற்ற உறவினர் மட்டுமே உள்ளே வரவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

தொடரும் : உடனடியாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றம் உபகரண வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் நவீனமயமாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, அரசு ஆணையாக வெளியிட வேண்டும் அல்லது இவையனைத்தும் செயல்படுத்தப்படும் என்று உயர் அதிகாரியோ, அமைச்சரோ உறுதியளிக்க வேண்டும். அதுவரை, போராட்டம் தொடரும். இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

மதுரை மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் ஜேம்ஸ் கூறும் போது,""சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக இன்று (நேற்று)கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தோம். நாளை, பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் என, அனைவரும் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இது தவிர, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்,'' என்றார்.

சென்னை அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறும் போது,""பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்திற்கு, நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். அதனால், நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவோம். நாளை (இன்று) மாலைக்குள் கோரிக்கை ஏற்கவில்லை எனில், நாளை மறுநாள் (நாளை) முதல் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.

பாதுகாப்பு அவசியம் : கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடப்பதால், சென்னை அரசு பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகள் பாதிப்படைந்தன. பயிற்சி மருத்துவர்கள் இல்லாததால், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் புறநோயாளிகள் பிரிவை கவனித்தனர். இருந்தாலும், அதிக நோயாளிகள் வருவதால் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க தாமதமானது. இதனால், நேற்று புறநோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.....

suvanappiriyan said...

.........இது குறித்து பயிற்சி டாக்டர் ஒருவர் கூறும் போது,""நோயாளிகள் பெருமளவு பாதிப்படையவில்லை. பேராசிரியர்கள் இருப்பதால், அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இருந்தாலும், பாதிப்பு என்பது இருக்கும். ஆனால், எங்களுக்கு பாதுகாப்பு என்பது அவசியம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாங்கள் எவ்வாறு சிகிச்சை அளிப்பது,'' என்றார்.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட முடிவு : பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று அவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தினர். மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு மருத்துவர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த வாரத்தில் மட்டும், நோயாளிகளின் உறவினர்களால், பயிற்சி மருத்துவர்கள் இரண்டு முறை தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று, மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தினர்.

300 பேர் புறக்கணிப்பு : ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், நேற்று, பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வாயிலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், அரசு மருத்துவர்கள் சங்க மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். யார் தவறு செய்தாலும், அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதல் சம்பவம் தொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் மருத்துவர்கள், பணி பாதுகாப்பின்றி, உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பணியாற்றும் நிலை உள்ளது. இது தொடர்பாக போலீசார் பாரபட்சமற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், விரைவில் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒருவர் மட்டுமே : போராட்டம் குறித்து, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் மோசஸ் கூறியதாவது: தாக்குதல் சம்பவத்தால், பயிற்சி மருத்துவர்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்விவகாரத்தில் உடனடியாக சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, கோரிக்கை வைக்கிறோம். நோயாளியுடன் வரும் பாதுகாவலர்கள், ஒருவருக்கு மேல் இருக்கக்கூடாது. பயிற்சி மருத்துவரை தாக்கிய, சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனையிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வேலைநிறுத்த போராட்டத்தில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மாற்று ஏற்பாடாக மருத்துவர்கள் போதிய அளவில் மருத்துவமனையில் பணியில் இருந்தனர்.

-Dina Malar
4-6-2012

அதிரை சித்திக் said...

சுவனப்பிர்யன் வாவ் ...

உங்கள் புனை பெயர் சுவனபிரியர் ..தங்களின்

பிரியத்தின் படி சுவனம் கிடைக்கும் ...இன்ஷா அல்லாஹ்

மருத்துவ துறையில் புரையோடி கிடக்கும் பல விசயங்களை

நடிகர் அமீர் கான் அப்பட்டமாக படம் பிடித்து காட்டியுள்ளார்

அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்கம் காரணகர்த்தாக்கள்

தொலைகாழ்ச்சி நிறுவனத்தார் அனைவருக்கும் நன்றிகள் பல ..நான்

மாத இதழ் நடத்திக்கொண்டு இருக்கும் சமயம் இது சம்மந்தமான

தொடர் எழுத ஆசைப்பட்டிருந்தேன் ..சூழ்நிலை ..முடியாமல்

போயிற்று ..தங்களுக்கு வாய்ப்பிருந்தால் உங்களுக்கு தெரிந்த

டாக்டர்களிடம் பேட்டிஎடுக்க முடிந்தால் எடுத்து போடலாமே

இந்திய டாக்டர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்

என்ன ..அடிப்படையான சில ஆப்றேசங்களுக்கு ..குறைந்த பட்சம்

எவ்வளவு பணம் தேவை ..மக்களுக்கு வெளிப்படையான விழிப்புணர்வு

கிடைக்க செய்யுங்கள் ..,

ஆசிக் ..அவர்களை எளிமையான நபி வழி திருமணம் நடந்தேறியது

குறித்து மிக்க மகிழ்ச்சி ..பல்லாண்டு காலம் சீறு சிறப்புடன்

ஒத்த கருத்துடன்...அன்புடன் ..என்றென்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

அன்பும் அறனும் உடைத்தாயின் ..என்ற குரலும் ஞாபகத்திற்கு வருகிறது

வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//உங்கள் புனை பெயர் சுவனபிரியர் ..தங்களின்

பிரியத்தின் படி சுவனம் கிடைக்கும் ...இன்ஷா அல்லாஹ்//

உங்கள் வாக்கு பலிக்கட்டும். பிரார்த்தனைக்கு நன்றி!

//நான்

மாத இதழ் நடத்திக்கொண்டு இருக்கும் சமயம் இது சம்மந்தமான

தொடர் எழுத ஆசைப்பட்டிருந்தேன் //

. ஓ......இதழின் பெயர் என்ன?

//பல்லாண்டு காலம் சீறு சிறப்புடன்

ஒத்த கருத்துடன்...அன்புடன் ..என்றென்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்//

ஆஷிக்கின் வாழ்த்துக்கும் நன்றி!

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

இதழின் பெயர் தமிழூற்று ..வளைகுடா வாழ் தமிழர்களுக்கு

தமிழக செய்தி மற்றும் வளைகுடா வாழ் தமிழர்களின்

உணர்வுகள் ,அவர்களுக்கு உற்ற துணையாய் செய்தி

வெளியிடல் என பல தரப்பட்ட சுவையான படைப்புகளுடன்

வெளியிட்டேன் பஹ்ரைன் தமிழ் மன்றத்தின் துணை நாடினேன்

அவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி காசு பார்ப்பதில் தான் குறியாக

இருந்தார்களே தவிர இது போன்ற முயற்சிக்கு ஒத்துழைக்க வில்லை

அனால் தமிழகத்தில் இளம் இலக்கிய வட்டத்தில் நல்ல வரவேற்பு

ஆரம்ப கால கட்டத்தில் சென்னையில் அலுவலக வாடகை

போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளுக்கும் வருமானத்திற்கும்

அதிக வித்யாசம் ..ஆர்வத்தில் துவங்கிய முயற்சி .

பொருளாதார சூழல் சரி இல்லாதலால் நிறுத்தி விட்டேன் ..

தாகங்களை தீர்த்து கொள்ள இப்பொழுது

வலைதளங்கள் உதவுகின்றன

தாள் தேவையில்லை தலமே போதும் ..நல்ல முயற்சி தொடர்ந்து

எழுதுங்கள் ..நல்ல படைப்புகளை நுகர்ந்து வெளியிடுங்கள் வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!அமீர்கான் பற்றி ஏற்கனவே பதிவு போட்டாயிற்று.வடமாநிலங்களுக்கு அமீர்கானின் மாறுபட்ட விவாதக்களம் ஒரு ப்து அனுபவமே.நாம் தமிழகத்தில் பட்டிமன்றங்கள்,அரட்டை அரங்கம்,லியோனி,சாலமன் பாப்பையா என நிறைய பார்த்து விட்டோம்.அரசு இயந்திரங்கள் மட்டுமே தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கின்றன.

எனக்கும் அலர்ஜியான மூன்று துறைகள் மருத்துவம்,காவல்,வழக்காடு மன்றம்.மருத்துவத்தையும்,வழக்காடு மன்றத்தையாவது ஒரு வழியா சேர்த்துக்கலாம்.இந்த காவல்துறை இருக்குதே!வழியில் டிராபிக் போலிசை இடது பக்கம் கண்டாலே நான் வலது பக்க ட்ராக்குக்கு ஓடிவிடுவேன்:)

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//எனக்கும் அலர்ஜியான மூன்று துறைகள் மருத்துவம்,காவல்,வழக்காடு மன்றம்.மருத்துவத்தையும்,வழக்காடு மன்றத்தையாவது ஒரு வழியா சேர்த்துக்கலாம்.இந்த காவல்துறை இருக்குதே!வழியில் டிராபிக் போலிசை இடது பக்கம் கண்டாலே நான் வலது பக்க ட்ராக்குக்கு ஓடிவிடுவேன்:)//

இந்த மூன்று துறைகள்தான் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஹிந்தி தெரியாதவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்றுதான் தமிழ்படுத்தினேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் சத்யமேவ ஜெயதே எனும் பெயரில் ரியாலி ட்டி ஷோ எனப்படும் சமூக விழிப்புணர்வை தூண்டும் நி கழ்ச்சியை நடத்தி வருவது மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் நடிகர்கள் கலை நிகழ்ச்சி, குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளையே நடத்துவார்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு அமீர்கான் சமூக தீமைகளை தோலுரிக்கும் வகையில் பெண் குழ ந்தைக் கொலை உள்ளிட்ட
பல்வேறு சமூக தீமைகளை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொன்றாய் நடத்தி வருவது பல்வேறு மட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரில் சென்ற வாரம் சிறு பிரச்னைகளுடன் வரும் நோயாளிகளிடம் பல்வேறு இல்லாத வியாதிகளை சொல்லி பணம் கறக்கும் மருத்துவர்களை பற்றியும் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் தன்னுடைய நிகழ்ச்சியில் அமீர்கான் படம் பிடித்து காட்டியிருந்தார்.இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம் மருத்துவதுறையை அமீர்கான் கேவலப்படுத்துவதாகவும் உடன் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள அமீர்கான் மருத்துவ துறையின் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் நல்ல மருத்துவர்களை தாம் கேவலப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் வழக்கை சந்திக்க தயார் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். உண்மையில் இத்தகைய முறைகேடான மருத்துவர்கள் தாம் மருத்துவதுறையை கேவலப்படுத்துவதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.