Followers

Sunday, June 08, 2014

ஆளூர் ஷாநவாஸின் ரியாத் கருத்தரங்கத்தின் சில துளிகள்!சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஆளூர் ஷாநவாஸ் பேச்சைக் கேட்க சென்றிருந்தேன். அவரது பேச்சுக்கு முன்னால் திருமாவளவன் காணொளி மூலம் தமிழகத்திலிருந்தும் பேசினார். சிறந்த பேச்சு. தற்போதய அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ற பேச்சு. ஷாநவாஸின் பேச்சில் நமக்கு ஒரு தனி சேனல், மற்றும் பத்திரிக்கை அவசியம் தானா என்ற ரீதியில் அமைந்த சில கருத்துக்களை பகிர்ந்தார். அந்த கருத்துக்களை ஒட்டி நானும் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஷாநவாஸ் தனது பேச்சில் 'அதிமுக எம்பி மைத்ரேயனை நமக்கு தெரியும். அவர் அடிப்படையில் ஒரு இந்துத்வாவாதி. முன்பு பிஜேபியில்தான் இருந்தார். அவர் பிஜேபியை விட்டு அதிமுகவில் ஐக்கியமாகிய போது பிஜேபியினர் அவரை தூற்றவில்லை. அதிமுகவில் அமர்ந்து கொண்டு இந்துத்வ பணிகளை செய்து கொண்டிருப்பார் என்று அவர்களே அனுப்பி வைத்துள்ளனர். அதிமுக என்பது ஜெயலலிதாவின் விரல் அசைவில் நடக்கும் ஒரு கட்சி. பல தலைகள் அரசியல் மாற்றங்களினால் அவ்வப்போது மந்திரி பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டாலும் மைத்ரேயனின் நிலையானது கடந்த 10 வருட காலமாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதை கவனியுங்கள். இந்துத்வாவினருக்கு அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் நமக்காக அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சிந்திக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களாகிய நாமோ ஒருவர் ஒரு இயக்கத்தில் முறுகல் வந்து மற்றொரு இயக்கத்தில் ஐக்கியமானால் அவரை ஃபேஸ் புக் முதற் கொண்டு கலாய்த்து ஒரு வழி பண்ணி விடுவோம். இதுதான் நமக்கும் இந்துத்வாவினருக்கும் உள்ள வேற்றுமை.

அதே போல் தினமலர் பத்திரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நாடார் அதன் நிறுவனர். ஆனால் தற்போது அதன் ஆசிரியர் ஒரு பீஹார் பார்பனர். சென்ற தேர்தலில் கிட்டத்தட்ட பிஜேபியின் ஊது குழலாகவே தினத்தந்தி மாறியிருந்ததை நாம் கவனித்திருப்போம். பட்டி தொட்டி எல்லாம் சலூன் கடை வரை ஆக்கிரமித்துள்ள பத்திரிக்கை தினத்தந்தி. அங்கு சென்று ஒரு பார்பனரை லாகமாக உள்ளே புகுத்துகிறது இந்துத்வா. தந்தி டிவியாகட்டும், தந்தி பத்திரிக்கையாகட்டும் இன்று பிஜேபியின் புகழ் பாடும் ஒரு ஊடகமாக அது மாற்றப்பட்டு விட்டது.

இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று நாம் ஒதுங்குவதுதான் பிரச்னையே. திறமையிருந்தால் எங்கும் நம்முடைய முத்திரையை பதிக்கலாம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியை நாம் எடுப்பதே இல்லை. விகடனில் ஒரு காலத்தில் மதனின் கார்ட்டூன்தான் பிரபலமாக இருக்கும். இன்று அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளவர் ஹாசிஃப்கான் என்ற இஸ்லாமிய இளைஞர். அவரால் எப்படி பார்பனர் நிறைந்த சபையில் உள்ளே புக முடிந்தது. தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இன்று அவரைத் தேடி வாய்ப்புகள் வருகிறது. விகடன் நடத்தும் மாணவர் பயிற்சி பட்டரையில் எத்தனை இஸ்லாமியர்கள் சேர்கின்றனர்? உங்களை அவர்கள் ஒதுக்கவில்லையே? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வளைகுடாவில் 15 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் 'எப்போ சார் வருவீங்க..' என்று பல சேனல்களிலிருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் நம்மை தேடி வராது. நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

அடுத்து முஸ்லிம்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவது? தொடங்கி அதனை யார் படிப்பது? படிக்கும் திறனை முதலில் நாம் வளர்த்துக் கொண்டல்லவா தினப்பத்திரிக்கை தொடங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும்? நாம் எழுதும் செய்தியானது இந்து மக்களையும் கிறித்துவ மக்களையும் சென்றடைய வேண்டும். அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது'

என்று மிகவும் சுவாரஸ்யமாக பல்வேறு தலைப்புகளை தொட்டு பேசினார். அவர் சொன்னதில் பத்திரிக்கை ஆரம்பிப்பது பற்றிய கருத்தானது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று. முன்பு தினமணியில் ஒரு ஓரத்தில் முதல் பக்கத்தில் தினமும் ஒரு குர்ஆன் வசனம் வரும். அதனை படித்து விட்டு பல இந்து நண்பர்கள் 'எனக்கு ஒரு தமிழ் குர்ஆன் குடுடா' என்று நான் படிக்கும் காலங்களில் என்னிடம் கேட்டுள்ளனர். இது போல் பொதுவான பத்திரிக்கைதான் தற்போது நமக்கு அவசியமாகிறது. மணிச்சுடர் தினமும் வந்து கொண்டுதானிருக்கிறது. எத்தனை பேர் அதனை படிக்கிறோம். நாமே படிப்பதில்லை எனும் போது அதனை இந்துக்கள் எப்படி வாங்குவார்கள்? எனவே தினமலர், தினமணி, இந்து போன்ற ஒரு பொது ஊடகம்தான் நமக்கு இப்போதய தேவை. கேரளாவில் மாத்யமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மலையாளிகளில் பத்திரிக்கை படிக்காதவர்களை பார்ப்பது வெகு அரிது. அதனால்தான் அவர்களால் அன்று முதல் அரசியலில் மிக சிறந்த இடத்தைப் பெற முடிகிறது. அரசியல் வாதிகளும் சுரண்ட முடிவதில்லை. ஒரு ஊழலில் தலைவர் மாட்டினால் அவரை உண்டு இல்லை என்று கிழித்து விடுவார்கள் மலையாளிகள். ஆனால் நாமோ 2ஜி ஆகட்டும், சொத்து குவிப்பு வழக்காகட்டும் எது செய்தாலும் அவர்களுக்கு 200 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்து விடுகிறோம். :-)

இன்றைய தேவை இந்துக்களையும், கிறித்தவர்களையும் சென்றடையக் கூடிய வகையில் ஒரு பொது ஊடகம் தேவை. அதனை ஒரு இந்து செல்வந்தர், ஒரு கிருத்தவ செல்வந்தர், ஒரு இஸ்லாமிய செல்வந்தர் என்று மும்மதங்களும் சேர்ந்து ஒரு ஊடகத்தை ஆரம்பிக்கலாம். அல்லது தினமலர், தினமணி, இந்து போன்ற பத்திரிக்கைளின் ஒரு பக்கத்தை நாம் பணம் கொடுத்து நமக்கான செய்திகளை வெளியிடச் செய்யலாம். தனிப்பத்திரிக்கை தொடங்கும் வரை இந்த அமைப்பில் செயல்படலாம். உண்மையை தயங்காமல் எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக வாங்க ஆட்கள் இருக்கின்றனர். முயற்சிதான் நம்மிடம் இல்லை. வருங்காலம் மிகவும் அபாயகரமாக இருக்கும். இப்பொழுதே ஒரு சிறந்த ஊடகத்தை கட்டியெழுப்ப ஆர்வம் கொள்வோம். 'வெட்டுவேன், குத்துவேன்' என்று முக நூலில் ஸ்டேடஸ் இடும் காகித புலிகளாக இல்லாமல் சட்டத்தின் துணையால் எதிரிகளை வெருண்டோடச் செய்யும் உண்மை புலிகளாக வலம் வருவோம்.

2 comments:

ஆனந்த் சாகர் said...

//அதனை ஒரு இந்து செல்வந்தர், ஒரு கிருத்தவ செல்வந்தர், ஒரு இஸ்லாமிய செல்வந்தர் என்று மும்மதங்களும் சேர்ந்து ஒரு ஊடகத்தை ஆரம்பிக்கலாம். அல்லது தினமலர், தினமணி, இந்து போன்ற பத்திரிக்கைளின் ஒரு பக்கத்தை நாம் பணம் கொடுத்து நமக்கான செய்திகளை வெளியிடச் செய்யலாம்.//

அதாவது ஹிந்துக்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பணம் போட்டு பத்திர்க்கை தொடங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வேண்டும் அல்லது உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பிரபல பத்திரிக்கைகள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள். அது நடக்க போவதில்லை.

Abu Faheem said...

அந்த கூட்டரங்கில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன், அங்கு பேசப்பட்ட பேச்சுக்கள் அனைத்தும் தமிழகத்தில் பல இயக்கங்களால் முன்மொளியப்படுபவையே செயல்பாட்டில் உள்ளவையே, ஆனால் இங்கு அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் முழு பூசனியையும் சோற்றில் மறைப்பதுபோல இருந்தது காரணம் இன்று தமிழகத்தில் பல அமைப்புக்களும் சமூக மாற்றத்திற்காக, இயற்கையை காப்பதற்காக, மனித உரிமை மீறலுக்காக போராடி வருகின்றன இதை குறித்த முழு விபரமும் தெரிந்திருந்தும் அளூர் ஷானவாஸ் ஏன் மறைக்கவேண்டும் இது யாரை திருப்திபடுத்த என்பதே எமது கேள்வி?