Followers

Monday, April 03, 2017

தண்ணீருக்கென்று ஒரு பைசா செலவழிக்காமல் வாழும் குடும்பம்!



நாடே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் போது தண்ணீருக்கென்று ஒரு பைசா செலவழிக்காமல் வாழும் குடும்பம்!

பெங்களூரு விஞ்ஞானியின் பாடம் .

கோடை இப்போதே மிரட்டத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தண்ணீர்பற்றாக்குறைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளின் நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ' என்ன செய்யப் போகிறோம் ' எனத் தெரியவில்லை என புலம்ப ஆரம்பித்துள்ளனர். நகருக்குள் குடிநீர் லாரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோடையில் கூடுதலாக ஒரு வாளி தண்ணீரில் குளிக்க வேண்டுமென்று உடல் விரும்பினாலும் தண்ணீர் பஞ்சத்தை நினைத்து மனம் தடுக்கிறது. விஷயம் இப்படியிருக்க, பெங்களூரில் 22 வருடங்களாக ஒரு வீட்டில் குடிநீர் இணைப்பே இல்லை. மாநகராட்சிக்கு குடிநீருக்கான பில்லும் செலுத்தியது இல்லை என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இப்படி ஒரு வீட்டைப் பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், தண்ணீருக்காக யாரையும் நம்பியிருக்காமல் மழைத்தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கிறார் இந்த மனிதர். கர்நாடக மாநில அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் சிவகுமார். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு இவர் பெங்களூருவில் சொந்தமாக வீடு கட்டினார். வீடு கட்டும் போதே 'கிரீன் ஹவுஸ்'முறையில் கட்டப்பட்டது. மழை நீர் சேகரிக்கும் திட்டத்துடன்தான் வீடே கட்டப்பட்டது. வீட்டுக்குள்ளேயே 40/60 என்ற வகையில் பிரமாண்டமான தொட்டி கட்டப்பட்டது. வீட்டு மாடியிலும் மழை நீர் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதாவது இந்த வீடே சிறியத் தடுப்பணை போலத்தான் அல்லது மழை தரும் சோலைக்காடுகளாக உள்ளது.

பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 900 முதல் 1000 மி.மீட்டர் வரை மழை பொழிவு கிடைக்கிறது. கிடைக்கும் மழை நீர் அப்படியே சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. இதற்காக வீட்டின் கூரையில் சிறிய எளிமையான சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது. எந்த சமயத்தில் மழை பெய்தாலும் தொட்டியில் தண்ணீர் சேர்கிறது. இந்த தொட்டியில் அதிகபட்சமாக 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். அது மட்டுமல்ல, பயன்படுத்தப்பட்டத் தண்ணீரையும் கூட சிவகுமார் குடும்பத்தினர் வீணடிப்பதில்லை. வாஷிங் மெஷினில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீரைக் கூட வாளிகளில் பிடித்து கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீர் தனிக்குழாய் வழியாக வீட்டுக்கு வெளியே வருகிறது. அது அப்படியே சேகரிக்கப்பட்டு செடிகளுக்கு ஊற்றப்படுகிறது. மழை நீர் சேகரிப்பதிலும் தண்ணீரை சிக்கனமாக செலவழிப்பதில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் சிவகுமார். இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், '' வீட்டைக் கட்டும்போதே திட்டமிட்டுக் கட்ட வேண்டும். மழை நீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் சுத்திகரிப்பும் மறு சுழற்சியில் பயன்படுத்துவதும் முக்கியமான விஷயம். இது எங்கள் குடும்பத்தின் கூட்டு முயற்சி. எனது மனைவி சுமா, அவரது தங்கை வாமிகா, மகன் அனுப் ஆகியோர் எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அதனால்தான் என்னால் இந்த காரியத்தை செய்ய முடிந்தது.

இந்த வீட்டுக்கு வெளியே இருந்து எந்த குடிநீர் இணைப்பும் கிடையாது. வீடு கட்டியதில் இருந்து இதுவரை தண்ணீருக்கென்று பில் கட்டியதும் கிடையாது. வெளியே இருந்தும் தண்ணீர் வாங்கியதே இல்லை. பெங்களூருவைப் பொறுத்தவரை ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தால், அதில் இருந்து ஆண்டுக்கு 2.3 லட்சம் லிட்டர் தண்ணீரை நம்மால் சேகரிக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு இது மிகவும் அதிகம். இங்கு 100 நாட்கள்தான் தண்ணீருக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான் 45 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை அமைத்தேன். ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 400 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தேவையை விட 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதிகமாகவே சேகரிக்க முடிகிறது. நாங்கள் குடிப்பது கூட மழை நீர்தான். குடிநீர் கூட காசு கொடுத்து வாங்கியதே இல்லை'' என்கிறார்.

அரசாங்கத்தை நம்பாமல் இயற்கை அன்னை தரும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து இவரை நலமாய் வாழ்வோம்.

For the benefit of all, the contact mail I'd of this great man is rainmanskumar@gmail.com

1 comment:

A.Anburaj Anantha said...

Thank you very much for your article about a wise HinduMr.shivakumar.